“நான் உங்களிடம் பந்தயம் கட்டுகிறேன். இங்கு வரும் வழியில் நீங்கள் மாடுகள், கழுதைகள் மற்றும் சில நாய்களை மட்டுமே பார்த்திருக்க முடியும்“ என்று செரிங் அங்சுக் நம்மிடம் கூறுகிறார். அவருக்கு வயது 62. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்னேமோ கிராமத்தில் நாம் அவரைச் சந்தித்தோம். அப்போது அவர் கூறியவைதான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் ஜம்மு காஷ்மீர் லடாக்கின் லே நகரத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

குளிர்காலத்தையொட்டி, இந்த சிறிய கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் மூடிக்கிடக்கின்றன. 2011ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு கிட்டத்தட்ட 1,100 பேர் இருந்தார்கள். மைனஸ் 13 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பநிலை சரிந்தவுடன், இங்கு வசிப்பவர்கள் சண்டிகர், ஜம்மு, டெல்லி அல்லது லே என்று தட்பவெப்ப நிலை சூடாக உள்ள இடங்களுக்கு தங்கள் குடும்பத்தினருடன் இடம்பெயர்கிறார்கள். “என்னைப்போன்ற ஒரு சிலரும், எங்களுக்கு துணையாக விலங்குகளுமே இங்கு இருக்கின்றன“ என்று செரிங் கூறுகிறார். அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வெகு தொலைவில் வசிக்கின்றனர். அவர் மட்டும் இங்கு அவரது உறவினர் இல்லத்தில் கால்நடைகளை பராமரித்துக்கொண்டு இருக்கிறார். அவை பசுக்கள் மற்றும் டிசோஸ் எனப்படும் உயர்ரக பசுக்கள் மற்றும் எருதுகள் ஆகும்.

காணொளி: எத்தனை வித்தியாசமான முறைகளில் அவரது தறியைப் பயன்படுத்தி நெய்ய முடியும் என்பதை விளக்குகிறார்

செரிங் கொஞ்சம் லாடக்கி தேநீரை (குர்-குர் தேநீரை) ஊற்றி எனக்குக் கொடுக்கிறார். மரக்கிண்ணத்தில் உள்ளூரில் பார்லியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பீரை தனக்கு எடுத்துக்கொள்கிறார். அவர் அமர்ந்த உடனே அவரது மடியில் சில பூனைக்குட்டிகள் வந்து அமர்கின்றன. குளிர்காலத்தில் அவர் தனியாக இருப்பதை விரும்புகிறார். இதனால், அவருக்கு அவர் விரும்பும் நெசவு வேலையையும் செய்வதில் கவனம் செலுத்த முடிகிறது.

PHOTO • Stanzin Saldon

செரிங், லடாக்கின் ஸ்னேமோ கிராமத்தில் அவரது வீட்டிற்கு வெளியே தனது தறியை எடுத்து வைக்கிறார்

லடாக்கில் குளிர்காலம் என்பது எனக்கு ஸ்னேமோயில் பனிக்கட்டிகளுடன் கொண்டாடும் குழந்தைப்பருவ நினைவுகள், எனது தாயின் சொந்த ஊர், குடும்பங்களின் கூடுகை மற்றும் புகாரி எனப்படும் உலோக நெருப்பு பாத்திரத்தை சுற்றி அமர்ந்து பாட்டியின் இரவுநேர கதைகள் கேட்பது ஆகியவற்றை நினைவுபடுத்துகிறது. ஏழாண்டுகளுக்குப் பின்னர், ஸ்னேமோவை நோக்கி மேலே நடந்து செல்லும்போது, லடாக்கின் கிராமங்களில் எத்தனை மாற்றங்கள் என்பதை என்னால் காண முடிகிறது. ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த  தெருக்களும், வயல்வெளிகளும் தற்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன. கிராமங்கள் பாலைவனமாகிவிட்டன. இவை குளிர்காலங்களில் மட்டுமல்ல, லே மற்றும் மற்ற நகரங்களில் நிரந்தரமாகவே மக்கள் குடியேறிவிட்டனர். அந்த நாள் நான் மேல்நோக்கி நடந்து செல்லும்போது, நிலங்கள் உயிரற்றதாகவும், தரிசாகவும் கிடக்கின்றன.

செரிங்கும், அவரது மனைவியும் விவசாயிகள். கோடை மாதங்களின்  பெரும்பாலான நேரம் அவர்கள் வயல்களில் செலவிடுவார்கள். லடாக்கில் பிரதானமாக பார்லி பயிரிடுகிறார்கள். கால்நடைகளை பராமரிக்கிறார்கள்.

PHOTO • Stanzin Saldon

இடது : தறியின் முக்கிய பாகங்களுடன் காலில் மிதிக்கும் துடுப்புப் பகுதியை அவர் இணைக்கிறார். வலது : அவர் அவற்றை இணைப்பதற்கு தேவைப்படும் பொத்தான்களையும், கயிறையும் காட்டுகிறார்

PHOTO • Stanzin Saldon

மரத்துடுப்புகள் தற்போது தறியுடன் உறுதியாக இணைக்கப்பட்டுவிட்டது

விவசாயம் செய்ய முடியாத காலத்தில், செரிங்க் நெசவு செய்கிறார். அவர் ஒரு திறமையான மற்றும் புகழ்பெற்ற நெசவாளர். அவரை பல கிராமங்களில் அவரின் பிரத்யேக ஸ்னாம்பு எனப்படும் கம்பளித் துணி நெசவு செய்து கொடுப்பதற்காக அழைப்பார்கள். அவர்களின் பாரம்பரிய உடையான கோஞ்சாவை நெய்வதற்கு ஒரு பெரிய கம்பளி நூல் கண்டு தேவைப்படும். நெசவு எங்களுக்கு குடும்பத் தொழில் என்கிறார் அவர். “எனக்கு நெசவு கற்றுக்கொடுக்கும்போது எனது தந்தை என்னிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. மற்றக் குழந்தைகள் வெளியே பனிக்கட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, நான் மட்டும் கம்பளி நூலைத் தறியில் கட்டிக்கொண்டிருப்பேன். அதில் குத்தி வலியோ, ரத்தமோ வரும்போது  அழுகையில் என் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடும். இப்போது நான் இந்தத் தொழிலின் மதிப்பை உணருகிறேன். இது எங்களுக்கு கூடுதல் வருமானத்தையும் கொடுக்கிறது.“

செரிங் அவரது மகனுக்கு நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுக்க முயற்சி செய்தார். அவர் 30 வயதுகளின் துவக்கத்தில் உள்ளார். சில நேரங்கள் நெசவு வேலைகள் செய்வார். அவர் இதில் சிறந்தும் விளங்கினார். ஆனால், அவருக்கு அவரது தந்தையைப்போல் ஆர்வம் இல்லை. “இந்த காலங்களில் நீங்கள் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது“ என்று செரிங் கூறுகிறார். “அவர்கள் லே சந்தையில் எவ்வித குறிக்கோள்களுமின்றி செல்பேசிகளை வைத்துக்கொண்டு சுற்றித் திரியவே விரும்புகின்றனர்“

காணொளி: ‘செங்குத்தாக உள்ள 384 நூல் சட்டகம் உடையும்போது, அது எந்த இடத்தில் எப்போது உடைந்துள்ளது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் ‘ என்று செரிங் கூறுகிறார்

செரிங்கின் தந்தை 40 அடி நீளம் அளவுள்ள நூல்கண்டை நெய்வதற்கு ரூ.20 முதல் ரூ.40 வரை வாங்குவார். தற்போது செரிங் அதே அளவு நெய்வதற்கு தற்போது ரூ.800 முதல் ரூ.1000 வரை பெறுகிறார். “வரும் நாட்களில் இத்தொழிலுக்கான தேவை அதிகம் உள்ளது என்று நான் என் மகனிடம் கூறுவேன். கலாச்சாரத்தை பாதுகாப்பது தற்போது அனைவரும் பின்பற்றும் நடைமுறையில் உள்ளது. சந்தேகமேயின்றி பள்ளி மற்றும் கல்வி குழந்தைகளுக்கு மிக முக்கியமான ஒன்று. ஆனால், நீங்கள் நல்ல முறையில் வாழ்வதாரத்திற்கு பொருள் ஈட்டுவதற்கும், உங்களுக்கான ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் திறன்களும் தேவையான ஒன்றாகும்“ என்றார்.

அவர் தனது பாரம்பரியத் தறியைக் காட்டுகிறார். அதற்குத் தேவையான அனைத்துப்பொருட்களும் உள்ளூரிலிருந்தே வாங்கப்பட்டது. இதை உள்ளூர் தச்சர்களே செய்தனர். தறி மரத்தாலானது. பழைய ராணுவ மேலாடைகளிலிருந்து எடுக்கப்பட்ட பொத்தான்கள், நூலுக்கான உருளை இழுவையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

PHOTO • Stanzin Saldon

மரத்தாலான நூல்கண்டு  நூல்வட்டாக மாறிக் கிட்டத்தட்ட தறி முற்றிலும் மாற்றி வடிவமைக்கப்பட்டது

PHOTO • Stanzin Saldon

படகு போன்ற அமைப்புடைய ரும்பு, (வலது) சுழன்று நூல்கண்டுடன் தறிக்கு அருகே தரையில் கிடக்கிறது

“உள்ளூரில் கிடைக்கும் மரக் கட்டைகளே தறியின் சட்டகங்கள், படகு போன்ற அமைப்புடைய நூல் வைக்கும் அமைப்பு, சுழன்று நூலை திரித்து கிடைமட்டமாக உள்ள நூலை துணியாக நெய்யும் வேலையை செய்யும் குழாய்கள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது“ என்று செரிங் விளக்குகிறார். “சிறிய மூங்கில் போன்ற குழாய்கள், நன்னீர் ஓடைகளுக்கு அருகில் உள்ள பகுதிகளிலிருந்து கிடைக்கும் ஒருவித புற்களில் இருந்து செய்யப்படுகிறது.“

நெசவு செய்வது இருவகைப்படும். “எளிமையான ஒன்று துணியின் வெளிப்புறம் மட்டுமே வடிவம் அச்சிடப்பட்டிருக்கும். மற்றொன்றான் கயாலோக் சற்று கடினமான ஒன்று. இருபுறமும் அணிந்துகொள்ளும் வகையில் வடிவம் இருபுறத்திலும் அச்சடிப்பட்டிருக்கும். காலில் உள்ள துடுப்புகளை  பயன்படுத்துவதில்தான் இந்த இரண்டு வகைகளும் வேறுபடுத்தப்படுகின்றன“

PHOTO • Stanzin Saldon

செரிங், அவர் நெசவு செய்த ஆடையை நம்மிடம் காண்பித்து உள்புறம் எது, தைக்கப்படும் ஆடையில் எது வெளிப்பகுதியாக இருக்கும் என்று காட்டுகிறார்

நெசவு செய்யப்பட்ட துணியின் மொத்த நீளம் 40  துவும் ( ஒரு து என்பது கிட்டத்தட்ட ஒரு அடி), அகலம் ஒரு அடியும் இருக்கும்.  சாயமேற்றப்படும்போது, சிறிது சுருங்கும்.

“வேறு வேலைகள் இல்லாதபோது, ஒரே நாளில் நான் 40 அடி நீளத்தை நெய்வேன். ஆனால், சில நேரங்களில் நான் செய்யும் வேலையின் நேரம் மற்றும் காலக்கெடுவைப்பொருத்து இதற்கு 3 அல்லது 4 நாட்கள் கூட நேரமெடுக்கும்“ என்று செரிங் கூறுகிறார். பனிக்காலங்களில் அவர் கோடைக்காலங்களை விட நெசவு தொழிலில் அதிகம் சம்பாதிக்கிறார். கோடைக் காலங்களில் விவசாயத் தொழில் அவரது பெரும்பாலான நேரம் மற்றும் ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. ஆண்டில் ஒவ்வொரு மாதமும் அவரது வருமானம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வேறுபடுகிறது.

PHOTO • Stanzin Saldon

அவர் பயன்படுத்தும் சக்கரம் குழந்தைகளின் பழைய சைக்கிளில் இருந்து எடுக்கப்பட்டது

செரிங் சிறிய மரத்தின் நிழலில் விரிக்கப்பட்ட கோணிப்பையில் அமர்ந்திருக்கிறார். மண் சுவரில் சாய்ந்திருக்கிறார். “எனது தறியில் வேலை செய்யும்போது, எது எனக்கு சவாலான ஒன்று என்று தெரியுமா? செங்குத்தாக உள்ள 384 நூல் சட்டகம் உடையும் தருணம் தான். அது எந்த இடத்தில் எப்போது உடைந்துள்ளது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதை சரிசெய்ய வேண்டும். அழகாக துணியை நெசவு செய்வதற்கு நீங்கள் துணிக்கு முடிச்சுகள் போடுவதில் தேர்ந்தவராக இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று.

PHOTO • Stanzin Saldon

பயணிக்கும் நெசவாளர்: அவர் தனது சிறிய தறியுடன் பயணம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறார்

செரிங் தான் செல்லும் இடங்களுக்கு எப்போதும் தறியை தனது பின்புறத்தில் சுமந்துகொண்டு செல்கிறார். “எனது பயணத்தின் அர்த்தத்தை எனது தறி கொடுக்கிறது. நான் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முன்பின் தெரியாதவர்கள் என்று அனைவரையும் சந்தித்து, அவர்களுடன் பழகுவதுடன், சம்பாதிக்கவும் செய்கிறேன். நவீன மற்றும் சிக்கலான தறிகளில் சிலர் நெசவு செய்வதை நான் பார்க்கிறேன். அவர்கள் அழகான வடிவங்களை நெசவு செய்கிறார்கள். ஆனால், எனக்கு இந்த கையடக்க தறியே மகிழ்ச்சியைக்கொடுக்கிறது. எனக்கு ஓரிடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது சோர்வை ஏற்படுத்தும். நெசவுத்தொழில் எனக்கு விருப்பமான ஒன்று மற்றும் நான் இந்த தறியை நேசிக்கிறேன். நெசவு என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது. இது எனது முன்னோர்களின் பாரம்பரியம் மற்றும் வரும் தலைமுறைக்கான எனது மரபுமாகும்.“

இந்த எளிய மனிதரின் வாழ்க்கை தத்துவங்கள் இந்த மலையில் காவியமாகிறது. நான் திரும்பும்போது, வாழ்வின் பாதைகள் வேகமாக மறைகிறது என்று நினைத்தேன்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Stanzin Saldon

ஸ்டான்சின் சால்டன், 2017ம் ஆண்டு பாரியின் நல்கையைப்பெற்றவர். லடாக்கின் லேவைச் சேர்ந்தவர். கல்வி தலைமைக்கான பிரமாள் அறக்கட்டளையின் மாநில கல்வி மாற்ற திட்டத்தின் தர உயர்வு மேலாளர். இவர் இந்திய அமெரிக்க அறக்கட்டளையின் W.J.கிளின்டன் (2015 – 16) நல்கையைப்பெற்றவர்.

Other stories by Stanzin Saldon
Translator : Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Other stories by Priyadarshini R.