"மக்களின் ரசனை மாறி விட்டது, ஆனால் நாங்கள் மாறவில்லை", என்று பெருமூச்சு விடுகிறார் மங்களா பன்சோட். இப்போது பிரபலமான ஹிந்தி பாடல்களையே பார்வையாளர்கள் எங்களிடம் விரும்பி கேட்கின்றனர், என்று அவர் கூறுகிறார். " சிவாஜி மஹாராஜாவின் அறிமுகத்திற்குக் கூட நாங்கள் ஒரு (பாலிவுட்) வெற்றிப் பாடலை பயன்படுத்திய வேண்டிய ஒரு காலம் வரக்கூடும்", என்று கூறி அவர் சிரிக்கிறார்.
மங்களாத்தாய் பார்வையாளர்களின் ரசனை மாற்றத்தை கவனித்ததோடு மட்டுமல்லாமல், அரை நூற்றாண்டு காலமாக தமாஷாவுடன் இருந்து, அது எப்படி 10 ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட மாட்டு வண்டியில் செல்லும் இசைக்குழுவில் இருந்து, இன்று விரிவடைந்து அவரது குழு கவனித்துக் கொள்ளும் பெரிய தயாரிப்பாக மாறியது என்பதையும் கவனித்திருக்கிறார்.
66 வயதான மங்களா பன்சோட் தனது 7 வயதிலிருந்தே இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தமாஷாவின் புனிதமான மைதானமாக கருதப்படும் புனே மாவட்டத்தில் உள்ள நாராயண்கவுனில் வசிக்கும் பழம்பெரும் கலைஞரான விதாபாய் நாராயண்கவுன்காரின், மூத்த மகள் இவரே. தற்போது சதாரா மாவட்டத்தில் உள்ள கரவாடி கிராமத்தில் வசிக்கும் மங்களாத்தாய், சுமார் 170 பேரை கொண்ட, தனது சொந்த பாட் (குழுவினை) 1983 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். 'மங்களா பன்சோட் மற்றும் நிதின் குமார் தமாஷா மண்டல்' ( நிதின் குமார் இவரது இளைய மகன், பாடகர் - நடிகர் - நடன கலைஞர் மற்றும் இக்குழுவின் நட்சத்திரம்) மகாராஷ்டிராவின் கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் மே மாதம் வரை தமாஷா நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.(காண்க ' தமாஷா நான் தங்க விரும்பும் சிறை போன்றது' .)
அவர்கள் செல்லும் கிராமங்களில் எல்லாம் மங்களாத்தாயின் குழுவிலுள்ள தொழிலாளர்கள் அமைக்கும் மேடையில் அவர்களது குழுவினைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியை நடத்துவார்கள். நிகழ்ச்சிகள் டிக்கெட் பெற்று நடக்கும் போது வழக்கமாக ஒரு கூடாரத்தின் கீழ் நடைபெறும், அதுவே கிராம குழுவினர் ஏற்பாட்டில் நடைபெறுமானால் திறந்த வெளியில் நடைபெறும் .1,000 முதல் 2,000 பேர் வந்து கண்டு களிப்பர், அதுவே டிக்கெட் இல்லாத நியமிக்கப்பட்ட அல்லது சுபாரி நிகழ்ச்சியாக இருக்குமானால் பார்வையாளர்களின் எண்ணிக்கை 10,000 - 15,000 வரை இருக்கும்.
1970 களில் ஒரு ரூபாயாக இருந்த ஒரு நுழைவு சீட்டின் விலை, இப்போது 60 ரூபாயாக உயர்ந்திருக்கிறது, ஆனால் லாபத்தின் அளவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது, என்று குழுவின் உரிமையாளர்கள் கூறுகின்றனர். சம்பளம் பல மடங்கு அதிகரித்துவிட்டது, மேலும் தயாரிப்புச் செலவுகளும் அதிவேகமாக அதிகரித்துவிட்டது, லாரிகள், பேருந்துகள், வில் விளக்குகள் மற்றும் பிற உபகரணங்களும் பயணக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது, என்று மங்களாத்தாய் கூறுகிறார். தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அதற்கு ஒரு காரணம். இப்போது பலர் திரைப்படங்களை தொலைக்காட்சிகளிலோ அல்லது தங்கள் தொலைபேசிகளிலோவே பார்த்துக் கொள்கின்றனர். நாாராயண்கவுனில் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதம் ஜத்தாராவின் போது நடத்தப்படும் நிகழ்ச்சிகள் அனைத்து உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப் படுகின்றது. "பிறகு யார் தங்கள் வீடுகளை விட்டு 3 மணி நேரம் ஒரு தமாஷா பார்க்க வெளியே வர விரும்புவார்கள்?" என்று மங்களாத்தாய் கேட்கிறார்.
1970 களில் ஒரு ரூபாயாக இருந்த ஒரு நுழைவு சீட்டின் விலை, இப்போது 60 ரூபாயாக உயர்ந்திருக்கிறது, ஆனால் லாபத்தின் அளவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சம்பளம் பல மடங்கு அதிகரித்துவிட்டது, மேலும் தயாரிப்பு செலவுகளும் அதிவேகமாக அதிகரித்துவிட்டது.
தமாஷா நிகழ்ச்சி நடைபெறும் இடம் இப்போது கிராமப்புறத்தில் மட்டும் நடைபெறுவதாக சுருங்கிவிட்டது. கடந்த காலங்களில் பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் வழியில், தூலே, ஜல்கவுன், நாசிக், சதாரா, சங்லி, கோல்ஹாபூர், சோலப்பூர், பர்பானி, நாந்தேட், உஸ்மானாபாத் மற்றும் பீட் உள்ளிட்ட மகாராஷ்டிராவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பான்சோட் குழு நிகழ்ச்சிகளுக்காக நிறுத்தப்பட்டு இருக்கிறது. புனே நகரில் கூட அவர்களது நிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கின்றன. அனைத்தும் இப்போது மிகக் குறைவானதாகவோ அல்லது முற்றிலும் நடைபெறாததாகவோ ஆகிவிட்டது. "முன்னர் நாங்கள் ஜில்லா (மாவட்ட தலைமையகம்) நகரங்களில் கூட நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தோம்; ஆனால் இப்போது வெவ்வேறு தாலுகாக்களையே நாங்கள் சுற்றி வருகிறோம்", என்கிறார் மங்களாத்தாயின் மூத்த மகனும், பாட்-டின் மேலாளரும் ஆன அனில் பன்சோட்.
தமாஷா பிரபலமாக இருந்த நாட்களில், அதாவது 1990 கள் வரை, தமாஷா மும்பை நகரிலும் நடத்தப்பட்டது, குழுக்கள் நகரின் புறநகர் பகுதிகளுக்குச் சென்று, செப்டம்பர் முதல் மே வரை உள்ள பருவத்தில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வந்தனர். பிரபலமான தமாஷா கலைஞரும் மேலும் இக்குழுவின் உரிமையாளருமான ரகுவீர் கேட்கர், தனது குழு கடைசியாக இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு மும்பையில் நிகழ்ச்சியை நடத்தியதாகக் கூறுகின்றார். ஜவுளித் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், மராத்தி பேசக்கூடிய பார்வையாளர்கள் - முன்னாள் மில் தொழிலாளர்கள் - குறைந்ததும் அல்லது நகரை விட்டு வெளியேறியதும், இதற்கு ஒரு காரணியாக அமைந்தது, என்று அவர் கூறுகிறார். ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் தாலுகாவைச் சேர்ந்த சின்ச்கார் கிராமத்தைச் சேர்ந்த 56 வயதான கேட்கர், 1970 இல் தனது 9 வயதில் மேடையில் வேலை செய்யத் துவங்கினார். இவரது குழுவான 'ரகுவீீீர் கேட்கர் ஷா காந்தாபாய் சதர்கர் லோக்நாட்டிய தமாஷா மண்டல்' இவரது தாயார் காந்தாபாயால் 1969 இல் துவங்கப்பட்டது.
அரசாங்க விதிமுறைகளும் தமாஷாவைக் கட்டுப்படுத்தியது என்று குழு உரிமையாளர்கள் கூறுகின்றனர். "முன்னர் எங்களது நிகழ்ச்சிகள் (இரவு 11 மணி அளவில் துவங்கி மேலும்) காலை 6 மணி வரை நடைபெறும், அதுவரை மக்கள் முழு கவனத்துடன் அதை கண்டு ரசிப்பார்கள்", என்று அனில் பன்சோட் கூறுகிறார். சத்தம் தொடர்பான விதிமுறைகள் (ஒலி மாசு ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் 2000 தில் துவங்கி) வரத் துவங்கிய பின்பு, அது தமாஷாவை கிராமப்புறங்களுக்குள் மட்டுப்படுத்திவிட்டது, என்று அவர் கூறுகிறார். இந்த விதிமுறைகள் இரவு 10 மணிக்குப் பிறகு குழுக்கள் நிகழ்ச்சி நடத்துவதை புறநகர் பகுதியாக இருந்தாலும் அனுமதிப்பது இல்லை. இது தமாஷாவின் கட்டமைப்பே மாற்றியுள்ளது, ஏனெனில் குழுவின் உரிமையாளர்கள் நிகழ்ச்சியின் நேரத்தைக் குறைக்க நிகழ்ச்சியின் சில பகுதிகளை குறைக்கின்றனர், என்கிறார்.
"இனி இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அதிக இடங்கள் இல்லை", என்று கேட்கர் கூறுகிறார். "ஆனால் தமாஷா இப்போது பெரிய ஒலிப்பெருக்கி அமைப்புகளுடன் உருவாக்கும் சத்தம் அருவருப்பாக இருக்கிறது. இது ஆரோக்கியமானது அன்று. இதில் அதிகமான கத்தலும் பெரிய ஒலிபெருக்கிகளும் இருக்கின்றன. இப்படியே இது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு 3000 பார்வையாளர்களுக்கு ஒரு சில இசைக் கருவிகளே இருந்தன. இப்போது இருப்பதைப் போல மக்கள் அப்போது ரவுடிகளாகவோ இல்லை சத்தம் போடுபவர்களாகவோ இல்லை, அவர்கள் அமைதியாக அமர்ந்து இருந்தனர்", என்கிறார்.
ஆனால் தமாஷாவில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றம் அதன் உள்ளடக்கத்திலும் மற்றும் செயல் திறனிலுமே ஏற்பட்டிருக்கிறது. ஒரு பாரம்பரிய தமாஷாவின் பொதுவான பகுதிகள் என்பது கான் (விநாயகருக்கான துவக்க பிரார்த்தனை), கவ்லான் (கிருஷ்ணருக்கும் கோபியர்களுக்கும் இடையிலான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடனம்), பட்டாவ்னி (நகைச்சுவை வரிசை), ரங்பாஸி (நடனத் தொகுப்பு) மற்றும் வாக் நாட்டியா ( நாட்டுப்புற நாடகம், பொதுவாக சமூக பிரச்சினைகளைைப் பற்றியோ அல்லது புராணக் கதைகளையோ சித்தரிக்கும்). பாரம்பரிய நிகழ்ச்சி மற்றும் இசையில் பல சடங்குகளைச் செய்வது போல இந்த உட்கூறுகள் மற்றும் வரிசை முறையும் இப்போதும் வழக்கில் இருக்கின்றன (எடுத்துக்காட்டாக டால், துன்துனா, டோலக்கு மற்றும் ஹல்கி ஆகிய வாத்திய கருவிகள் கானில் இன்றும் பயன்படுத்தப் படுகிறது), ஆனால் காலப்போக்கில் செயல்படுத்தும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது தமாஷா 'பல்வேறு பொழுதுபோக்கு' நிகழ்ச்சிகளின் தொகுப்பாக - வரம்பற்ற நடன - நாடக களியாட்டமாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது.
தமாஷா சமூகத்தைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதிய புனேவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் சந்தேஷ் பண்டாரே கூறுகையில், குடிப்பழக்கம் அல்லது வரதட்சணை கோரிக்கைகள் போன்ற சமூகப் பிரச்சினைகள் குறித்த வாக் நாட்டியாவின் சிறு நாடகப் பகுதியை குழுக்கள் நீக்கி வருகின்றன, அதே நேரத்தில் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஹிந்தி மற்றும் மராத்தி பாடல்களை அடிப்படையாகக் கொண்ட ரங்பாஸியை தக்க வைத்துக் கொள்கின்றனர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொங்கன், மராத்வாடா மற்றும் விதர்பா ஆகிய மாவட்டங்களுக்கு சென்று அங்கு நடைபெற்ற தமாஷாவை புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார் பண்டாரே, மேலும் அவர் இந்த வருடம் அங்கெல்லாம் மீண்டும் சென்று தமாஷாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனித்திருக்கிறார்.
கேட்கரின் குழு மின்னணு கருவிகளையும் (ட்ரம் செட், ரிதம் மெஷின் மற்றும் டிஜிட்டல் ஆர்கன் போன்றவை), ஒளியமைப்பு, ஆடம்பர உடைகள் மற்றும் அலங்காரம் செய்வதற்கான பல்வேறு வழி முறைகளையும் கொண்டு வந்திருக்கின்றனர். தமாஷாவில் இருந்து இளைஞர்கள் விலகி சென்று விட்டனர் ஏனெனில் அதில் இன்னும் பெண்கள் பாரம்பரிய நவ் - வாரி ( ஒன்பது கஜம்) புடவையைக் கட்டி வருகின்றனர் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். நாங்கள் இளைஞர்கள் விரும்பும் பாடல்களை பாடத் துவங்கினோம் என்கிறார் அவர். (பார்வையாளர்கள் பெரும்பாலும் ஆண்களே; சில நேரங்களில் சில பெண்கள் சிறு எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர், அவர்கள் பொதுவாக பின்புறத்தில் அமர்ந்திருப்பார்கள்). "தமாஷா என்பது ஒரு வகையான பொழுதுபோக்கு, காலத்தின் போக்கிற்கு ஏற்ப மாறக் கூடியது. சினிமா மாறுவதைப் போல, தமாஷாவும் மாறுகிறது", என்று கேட்கர் மேலும் கூறுகிறார்.
அவர் செய்த மாற்றங்களை மற்ற குழுக்களை சேர்ந்தவர்களும் பயன்படுத்தத் துவங்கினர், ஆனால் இந்த மாற்றம் அழிவிற்கு இட்டுச் செல்லும் என்பதும் இறுதியில் நிரூபனம் ஆனது. மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்று கேட்கர் நினைத்தாலும், "முன்னர் பார்வையாளர்கள் முழு உடை அணிந்த பெண்களை பாராட்டினர், ஆனால் இப்போது பெண்கள் ஆபாசமாக, வெளிப்படுத்தும் விதமாக உடை அணிகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். இப்போது பொதுமக்கள் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை, என்னுடைய நேரம் கடந்து விட்டது. வந்திருக்கும் புதிய தலைமுறை தான் இதை சரி செய்ய வேண்டும். தமாஷா ஆபத்தில் உள்ளது", என்கிறார் அவர்.
மேலும் மங்களாத்தாய் இப்போது மேடை ஏறினாலும், அவருடன் கலையின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டு வருகிறார் , மேலும் வில் விளக்குகள், அவரது ஜொலிக்கும் ஆடை, அலங்காரம் மற்றும் வெளிப்படுத்தும் திறன் ஆகியவை அவரது வயதான முழங்கால்கள் அவர் சுற்றி வளைத்து ஆடுவதை தடுக்கின்றன என்கிற உண்மையை மறைக்கின்றன. அதன் பின்னர் அவருக்கு 66 வயது என்பதை மறந்துவிடுவது எளிதாகிறது, மேலும் இவர் தமாஷாவின் கடைசி பழம்பெரும் கலைஞர்களுள் ஒருவராகவும் இருக்கக்கூடும்.
தமிழில்: சோனியா போஸ்