உலகமே அவருடைய கிராமமாக இருந்தது. ஐந்தாவது வரையில் மட்டுமே படித்து பின்னர் பெரிய இலக்கியவாதியாக உருவாகியிருந்த அவரை நான் முதன்முதலில் 1993ல் புதுக்கோட்டையில்தான் சந்தித்தேன். பின்னர் ஒரு நாள் அப்போதைய காமராஜர் மாவட்டத்திலுள்ள (இப்போது விருதுநகர்) மேலாண்மைறை நாட்டில் இருந்த அவரது வீட்டில் சந்தித்தேன். அக்டோபர் 30ந் தேதி 66 வயது மேலாண்மை பொன்னுச்சாமி மறைந்த போது இந்தியா மிக அசலான ஒரு கிராமத்து இலக்கிய குரலை இழந்துவிட்டிருந்தது. பொன்னுச்சாமி இலக்கிய வாதி மட்டுமில்லை, நுட்பமான அரசியல் அறிவு கொண்டவர் அவர். பொன்னுச்சாமியின் பூர்வீகமான ராமநாதபுரத்தில் நிலவும் வறுமைக்கும் இல்லாமைக்கும் பின்னாலுள்ள காரணங்களையும் அதன் தன்மைகளையும் கூர்மையாக அலசி வெளிப்படுத்தக்கூடிய அரசியல் அறிவோடு அவர் இருந்தார்.
அவர் கிராமத்தில் மட்டுமே கவனம் கொண்டிருந்தார். அதன் மூலமே உலகத்தை புரிந்து கொண்டார். வேளாண் நெருக்கடி என்கிற பதம் பரவலாக அறியப்படுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே புதிய வகை விதைகள் அவரது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்போகும் அழிவுகளைப் பற்றி பேசினார். “இந்த விதைகளை பயன்படுத்தத் தொடங்கியிருப்பவர்களுக்கு உற்பத்தி செலவு மிக அதிகமாகியிருக்கிறது” என்றார். இதை அவர் சொன்னது 1993ல்.
சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை வென்ற மிக பிரபலமான இலக்கியவாதியாய் இருந்தும் அவரது கிராமத்திலிருந்து வெளியேறி இன்னும் பெரிய மேடையமைக்க கூடிய மதுரைக்கோ சென்னைக்கோ குடியேறுவதை பொன்னுச்சாமி விரும்பவில்லை. ராமநாதபுரத்திலுள்ள (இப்போது விருதுநகரில்) உள்ள கிராமத்தில் வாழ்வதன் மூலமே ஒரு எழுத்தாளராக அவருடைய நம்பகத்தன்மையை பெற்றுக் கொண்டிருப்பதாக அவர் கருதினார். உடல் நலம் குன்றியிருந்த கடைசி மூன்று, நான்கு வருடங்களில் மட்டுமே மகனுடன் தங்குவதற்கும், மருத்துவராகிய மகளுக்கு அருகில் இருப்பதற்கும் சென்னைக்கு குடி பெயர்ந்தார்.
எவ்வளவு மகத்தான எழுத்தாளர்! என்ன அற்புதமான மனிதர்! எவ்வளவு மோசமான இழப்பு இது. Everybody Loves A Good Drought என்கிற எனது புத்தகத்தில் அவர் பற்றிய வந்த கட்டுரை இங்கே மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.எழுத்தாளரும் ஒரு கிராமமும் ...
மேலாண் மறை நாடு, விருதுநகர் மாவட்டம் (தமிழ்நாடு): அவர் ஐந்தாம் வகுப்போடு பள்ளி இடைநின்றவர். இப்போது அவரது சில சிறுகதைகள் பல்கலைக் கழக அளவில் அவசியம் வாசிக்க வேண்டியவையாக உள்ளன. இத்தகைய முரண்கள் - மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்துகளில் வலிமையான ஒரு அம்சம் அவை - எப்போதும் அவரைத் துரத்திய வண்ணம் இருக்கின்றன. பிற மாவட்டங்களின் பல்கலைக் கழகங்களில் அவரது கதைகள் பாடத்திட்டமாக இருக்கின்றன. ஆனால் அவருக்கு சொந்தமான ராமநாதபுரத்தில் ஒரு பல்கலைக் கழகம் கூட இல்லை.
ஒரு மாலை பொழுதில் புதுக்கோட்டையில் இருந்த ஒரு அரங்கத்தில் மக்கள் நிறைந்திருந்த பொது நிகழ்ச்சியில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது அவரை முதலில் பார்த்தேன். மேசையின் மீது சாய்ந்தபடி நின்றிருந்த அவர் வளைகுடா யுத்தம் ராமநாதபுரத்தில் ஏற்படுத்திய விளைவுகளை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். டிராக்டர் போன்றவற்றின் பெயரால் தமக்கான நவீனமயத்தை கண்டுகொண்டு விட்டதாக சில விவசாயிகள் நம்பிக்கொண்டிருந்தார்கள். போர் தொடங்கியது. பெட்ரோல் விலையும் பிற முக்கிய பொருட்களின் விலையும் உயர்ந்து அவர்களது திட்டங்களை முடக்கியிருந்தது.
அந்த நேரம் பார்த்து அரங்கில் மின்சாரம் தடைபட்டது. பொன்னுசாமி ஒரு நிமிடமும் தாமதிக்கவில்லை. அவர் மேசையின் முன்னே வந்து தன் உரையைத் தொடர்ந்தார். தொடக்கத்தில் கொஞ்சம் கூச்சல் தவிர வேறு இடையூறுகள் இல்லை, பார்வையாளர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இருளிலும் அவர்கள் அமைதியாக கேட்டபடி இருந்தார்கள். அது நடந்து ஒரு மாதம் இருக்கும். அவரின் குரலை இருட்டில் இருந்தபடி கேட்கும் சூழல் மீண்டும் வாய்த்தது. பல மணி தேடி எங்கேயோ தனியாய் இருந்த அவரது கிராமத்தை அடைந்தபோது நள்ளிரவு மணி 2 இருக்கும். வழியில் நான் எனது காலை வேறு உடைத்துக் கொண்டிருந்தேன். வலி உச்சத்தில் இருந்தது. பல மைல் தூரங்களுக்குக் கேட்கும்படி நாய்கள் ஊளையிட்டன. அந்த நேரத்தில் தொந்தரவு செய்ய நேரிட்டதற்காக மன்னிப்புக் கேட்டபடி உள்ளே நுழைந்தோம்.
அவர் ஆச்சர்யமடைந்தார். "பேச இதுவல்லவா நல்ல நேரம்?" எனக்
கேட்டார். சில கணங்களில் நாங்கள் தீவிரமான
விவாதத்தில் ஆழ்ந்திருந்தோம்.
மிகவும் மதிக்கப்படும் எழுத்தாளர் என்பதைத் தாண்டி, பொன்னுச்சாமி அந்த மாவட்டத்தின் பின் தங்கிய நிலைமையை அறிந்த நிபுணராகவும் இருந்தார். ஒதுங்கியிருந்த அந்த சிறு கிராமம் "மேலாண்மறைநாடு". ராமநாதபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின், காமராஜர் மாவட்டத்தின் பகுதியாக அது இருந்தது. கடந்த 21 ஆண்டுகளாக அவர் எழுதிய ஒவ்வொரு சிறுகதையும் ராமநாதபுரத்தைப் பற்றியோ அல்லது அங்கு நடப்பதாகவோ இருக்கும். கல்கி விருது பெற்ற எழுத்தாளராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னணி தலைவராகவும் இருந்த போதிலும், பொன்னுசாமி தன் ஒதுங்கியிருந்த கிராமத்தில் வாழவே முடிவு செய்தார். ஏன் எந்த பெரிய நகரத்திற்கும் மாறிச் செல்ல முயற்சிக்கவில்லை? என்றுகேட்டபோது "அது எனது எழுத்துக்களின் நேர்மையை பாதிக்கும்” என்கிறார். அதனாலேயே அவர் மேலாண்மறை நாட்டிலேயே தொடர்ந்து வாழ்கிறார். கண்டுபிடிக்கவே மிக சிரமமான அந்த இடத்தை ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஆறு மணி நேரம் தாமதமாக அடைந்தேன்.
ராமநாதபுரத்தின் வறுமை குறித்து ஒரு நிபுணராக என்னை நேர்காணல் செய்யவுள்ளீர்கள், எழுத்தாளராக இல்லையா? என்று தெளிவாக கேட்டார் பொன்னுச்சாமி. அவருக்கு அது சுவாரஸ்யமாக இருந்தது.
"ராமநாதபுரம் மாவட்டம் 1910ல் உருவாக்கப்பட்டது. இன்றுவரை இந்த மாவட்டத்தில் ஒரு பல்கலைகழகமும் இல்லை. மூன்று மாவட்டங்கள் இதிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டன, இரண்டு அமைச்சர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் ஒரு மருத்துவக் கல்லூரியும் இல்லை” என்றுப் பொன்னுச்சாமி சொன்னார். அரசு பொறியியல் கல்லூரியும் அங்கு இல்லை. அங்குள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியும் இந்த ஆண்டோடு மூடப்படலாம். புதிய மாவட்டத்தில் மூன்றே மூன்று கல்லூரிகள்தான் இருந்தன அங்கு முதுநிலை பிரிவுகள் இரண்டு மட்டும் இருந்தன.
"பின்தங்கிய நிலை என்பது அதன் மனநிலையிலேயே இருக்கிறது. ராமநாதபுரத்தில் ஒரு பல்கலைகழகம் வேண்டும் என்ற கோரிக்கை அரிதாகவே எழுப்பப்படுகிறது. மிக சமீபத்தில்தான் அரசியல் கட்சிகள் அதுபற்றி பேசத்தொடங்கின. அடிப்படைக் கல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை வர இன்னும் இரண்டு தலைமுறைகள் எடுக்கும்."
"கோரிக்கைகள் வைப்பதும் அதற்கான விண்ணப்பம் செய்வதும் கூட ராமநாதபுரம் மக்களிடையே மிகச் சுலபமாக நிகழ்ந்து விடுவதில்லை. கடந்த 83 ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் தலைமையகம், இன்னொரு மாவட்டத்தில், அதாவது மதுரையில்தான் இருந்தது. எங்களின் நீதிமன்றங்கள் கூட அங்கே தான் அமைந்திருந்தன. 1985 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபோதுதான் இந்த நிலை மாறியது."
"மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையிலான இடைவெளியைத்தான் இது காட்டுகிறது" என்கிறார் பொன்னுச்சாமி. எந்த தயக்கமுமின்றி தன்னை இடதுசாரி என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார் அவர். "மிகவும் தொலைவில் இருந்த அரசு அதிகாரிகள் மக்கள் பிரச்சனைகளை குறைவாகவே அறிந்திருந்தார்கள். இந்தப் பகுதியின் சிக்கலான நிலைமைகள் அவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. இப்போது எங்களுக்கு நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் பிற கட்டமைப்புகள் கிடைத்துள்ளன. என்றாலும் பழைய நடைமுறைகள் தொடர்கின்றன. எங்கள் அடிப்படைப் பிரச்சனைகளை யாரும் தொடவில்லை என்பதுதான் காரணம்."
தமிழ்நாட்டிலேயே குறைவான வருவாய் கொண்ட மாவட்டம், ராமநாதபுரம்தான். தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களோடு ஒப்பிடும் போது கட்டாயமாக குறைந்தபட்சம் 20 சதவிகிதமாவது பின் தங்கியிருக்கிறது ராமநாதபுரம். "இதுவொரு முன்னாள் ஜமீந்தாரிப் பகுதி. பெரும்பாலும் சாதி அடிப்படையில் செயல்படும், பலவிதமான குறுநிலப் பரப்புகளை உள்ளடக்கியது. இந்தப் பகுதியின் பின்தங்கிய நிலைக்கு மிகப்பெரிய அளவில் சாதி காரணமாக அமைந்துள்ளது."
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அந்த வாழ்க்கைமுறையிலும் ஒரு சலனம் ஏற்பட்டது. வருமானத்திற்கும் வேலைவாய்ப்புக்கும் இருந்த ஒரு சில வழிகளையும் அடைத்துவிட்டது. "இதனால் நிறைய பேர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பிழைப்பிற்கான பிற வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. இன்றுவரை ராமநாதபுரத்தில்தான் மிக அதிகமான சாதி அடிப்படையிலான வன்முறைகளும் குற்றங்களும் நடக்கின்றன."
"இங்கு நடைபெற்ற நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் அர்த்தமற்றவை. பொதுவாக நிலவும் நம்பிக்கைக்கு நேர்மாறாக, இந்த மாவட்டத்தில் விவசாயத்திற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், யார் அதனை மனதில் வைத்து செயல்பட்டார்கள்?"
இங்குள்ள நிலவுடைமையாளர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள், அந்த நிலத்திலும் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களில் மிகப்பெரியது, பாசன வசதியின்மை.
"வேலைவாய்ப்பும், வேலையின் தன்மையும் மனிதர்களின் பண்புகளை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரு சிமெண்ட் தொழிற்சாலை ஏற்படுத்தினால் உங்களுக்குக் கிடைப்பது சிமெண்ட் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட தன்மையிலான வேலைகளும் உருவாகின்றன. அப்படிப்பட்ட ஆலையை அமைக்க நாம் சரியான இடத்தையும், ஆதார வளங்களையும் கண்டறிய வேண்டும். ராமநாதபுரத்தில் உள்ள ஆதார வளங்கள் குறித்த வரைபடம் எதுவும் இல்லை. நிரந்தரமான
வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சிகளும் எடுக்கப்படவில்லை."
பொன்னுச்சாமி சொல்வது முக்கியமானது. "ஆண்டு முழுவதும் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை" ராமநாதபுர மாவட்டத்தில் மிகக் குறைவாக, 40 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. மிகப்பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பல மாதங்கள் கிடைக்கும் கூலிக்கு வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அதன் உட்பொருள். "ஒருபக்கம் நீர்வளம் முறையாக பயன்படுத்தப்படாததன் காரணமாக விவசாயம் குறைந்த விளைச்சலையே கொடுத்தது, மற்றொரு பக்கம் தொழில் வளர்ச்சி ஏதுமில்லை." சுருக்கமாகச் சொன்னால், "வேலைவாய்ப்பை உருவாக்கும் அக்கறை" யாருக்கும் இல்லை. மாநிலத்தில் ஒரு தொழிலாளியின் உற்பத்தித் திறனின் சராசரியை விட இங்கு 20 சதவீதம் குறைவாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பொருளாதார அடிப்படையில் பலவீனமானவர்களின் எண்ணிக்கையே பெரும்பான்மையாகும். தாழ்த்தப்பட்டவர், பழங்குடிகள் சுமார் 20 சதவீதம் உள்ளனர். அது தவிர இந்த மாவட்டத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பிற்பட்ட சாதியினர் உள்ளனர். அவர்கள் மத்தியில் வேலையின்மை சதவீதம் மாநிலத்திலேயே மிகவும் மோசமானதாகும். "அதிக சுரண்டலை ஏற்படுத்தும் உறவுமுறைகள் மாவட்டத்தில் பரவலாக காணப்படுகின்றன"ராமநாதபுரத்தில் காணப்படும் வித்தியாசமான வட்டிக்காரர்கள், மிளகாய் வியாபாரிகளின் பெருந்துன்பங்கள் என எல்லாவற்றையும் மேலாண்மை பொன்னுச்சாமி தனது படைப்புகளில் ஆவணப்படுத்துகிறார். அதிகரித்துவரும் வறட்சி, நீண்ட கால இடம்பெயர்வு அல்லது வேலையின்மையின் விளைவுகள் என எதுவும் அவரது பார்வையிலிருந்து தப்பவில்லை .
அவரது சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்தபடியே, கீழிருந்து மேல்நோக்கிய பார்வையால் அவர் பெற்றிருக்கும் புரிதல்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பெரும்பாலும் அவை ஒரு நல்ல ஆய்வின் முடிவுகளை ஒத்து இருக்கின்றன. "மிளகாய் விவசாயிகள் புதிய வகை விதைகளை பயன்படுத்துகின்றனர். அவை எங்கிருந்து வருகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவை விவசாயிகளின் பொருளாதாரத்தை சீரழிக்கின்றன. அந்த விதைகள் தற்காலிகமாக அதிக விளைச்சலைக் கொடுக்கலாம். ஆனால் அதற்காக விவசாயிகள் மேலும் மேலும் அதிகம் செலவு செய்து உரமும், பூச்சிக்கொல்லியும் வாங்குகின்றனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் விளைச்சல் வீழ்ச்சியடைகிறது. அந்த விதைகளை பயன்படுத்தத் தொடங்கியவர்களின் உற்பத்திச் செலவும் கடுமையாக உயர்ந்துவிட்டது."
ஆனால் அவரது ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் ஒற்றை நாவலும் அளவிலடங்காத நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. (ஒரு தொகுப்பின் தலைப்பு 'மானுடப் பிரவாகம்.).
"இங்குள்ள மக்களிடம் போராடும் உணர்வு உள்ளது, அவர்கள் ராமநாதபுரத்தை மாற்றியமைப்பார்கள். அதற்காக நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது. உழைக்க வேண்டும்". அப்போது அவர் ராமநாதபுரத்தைப் பற்றி மட்டும்தான் தொடர்ந்து எழுதுவாரா?
"நான் என் எழுத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும். என் கிராமத்தில் நிலவும் சூழல்களுக்கு நேர்மையாக இருப்பதன் மூலம், நான் உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் இன்னொரு கிராமத்திற்கு பொருந்தும் எதையாவது எழுதியிருப்பேன். நாம் யாருடைய பிரச்சனையை எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். இல்லையா?"
தமிழில்: ஆர்.செம்மலர்