எங்களை போலவே அவரும் ஆச்சரியத்தில் இருந்தார்.

எங்களை பீடித்த கேள்வி இதுதான்: ஒரு சைக்கிளை அத்தனை உயரத்தில் அந்த வைக்கப்போரில் தொங்கவிட எப்படி அவரால் முடிந்தது? அவருக்கு அநேகமாக இந்த கேள்வி தோன்றியிருக்கும்: கார் கண்ணாடி வழியாக பாதி உடலை வெளியே சாலைக்கு குறுக்காக நீட்டிக் கொண்டு என்னை புகைப்படம் (ஐஃபோன் 3எஸ்ஸில்) எடுக்க முயலும் இந்த முட்டாள் யார்?

2009ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஒருநாள் ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களுக்கிடையே இருக்கும் ஏதோவொரு இடத்தை நோக்கி நாங்கள் விரைந்து கொண்டிருந்தோம். முதலில் அவரை தூரத்திலிருந்து பார்த்ததும் ஏதோ விசித்திரமாக தெரிந்தது. ஒரு சைக்கிள் அங்கு தொங்கிக் கொண்டிருந்தது. அதற்கும் மேல் ஒரு மனிதர் விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வைக்கப்பட்டிருக்கும் வண்டி கூட தெரியாத அளவுக்கு வைக்கோலின் அளவு பெரிதாக இருந்தது. அது ஒரு ட்ராக்டர் இழுத்து சென்று கொண்டிருந்த இழுவை வண்டி.

அருகே நெருங்கும்போது நீங்கள் புகைப்படத்தில் பார்ப்பது போல் எங்களாலும் கண்டறிய முடிந்தது. வலிமையான மூங்கில் ஒன்றின் சிறுபகுதி வைக்கோல்போரில் இருந்து நீட்டிக் கொண்டிருந்தது. அதில் எப்படியோ ஒரு சைக்கிள் தொங்கிக் கொண்டிருந்தது. கயிறு எதுவும் எங்கள் கண்ணில் படவில்லை. ஏதோவொரு கிராமத்து சாலைக்குள் அந்த வாகனம் திரும்புவதற்குள் அக்காட்சியை படம்பிடிப்பதற்கு ஒரே வழிதான் இருந்தது. அபத்தமாக தெரியும் கோணத்தில் காருக்குள்ளிருந்து ஜன்னல் வழியே வெளியே நீண்டு படம் பிடிக்க வேண்டியிருந்தது. ஒரு பாலத்தை கடந்தபின் இரு வாகனங்களும் இரு வழிகளில் திரும்பி விட்டோம். புகைப்படம் சரியாக கிடைத்ததா என நாங்கள் பார்த்தோம். ட்ராக்டர் ஆடி திரும்புகையில் அநேகமாக அவர் சைக்கிளை விடுத்து வைக்கோலை இறுகப் பிடித்திருப்பார்.

தமிழில்: ராஜசங்கீதன்

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan