மார்ச் 23 ஆம் தேதி அன்று தெற்கு பெங்களூருவில் உள்ள கட்டிட தளத்திற்கு தங்களது புதிய வேலைக்கு வந்த போது அமோதாவுக்கும் ராஜேஷுக்கும் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதைப் பற்றி தெரியாது.
ஜே.பி நகர் சுற்றுப்புறத்தில் உள்ள கட்டுமான தளத்தில் பணிகளை துவங்குவதற்கான அவர்களது திட்டம், கோவிட் 19யை முன்னிட்டு ஊரடங்கு அறிவித்ததால் பாதிக்கப்பட்டது. அவர்கள் கொரோனாவைப் பற்றி அறிந்திருக்கவில்லை - இப்பொழுதும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. "யாரோ எங்களிடம் கவனமாக இருக்கும்படி கூறினர், ஆனால் எதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்று கூட எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் எங்களுக்கு வேலை இல்லை என்பது தான்", என்று ஏப்ரல் மாதத் துவக்கத்தில் நாங்கள் அவர்களை முதலில் சந்தித்தபோது அமோதா கூறினார்.
23 வயதே ஆகும் அமோதா மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், மூன்று வயதாகும் ரக்ஷிதா மற்றும் ஒரு வயதாகும் ரக்ஷித். இவர்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதற்காக, வழக்கமாக இவர்கள் பெங்களூருவில் இருக்கும் கட்டுமான தளத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த இளம் குடும்பம் ஜே.பி நகரிலுள்ள கட்டுமான தளத்தில் மார்ச் 23ஆம் தேதி முதல் எந்த வேலையும் இல்லாமல், ஊதியமும் இல்லாமல், மிகக்குறைந்த உணவினை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர் கூட இவர்களுக்கு ஒழுங்காக கிடைப்பதில்லை. "ஒப்பந்ததாரர் தான் மீண்டும் வருவதாக கூறி செல்கிறார், அவர் நாளை வருவார் என்று எங்களிடம் கூறினார். அவரும் வந்து சென்று கொண்டுதான் இருக்கிறார். எங்களுக்கு அவரை பற்றி அவ்வளவு தெரியாது அவர் யார், என்ன செய்கிறார், அவரது பெயர் கூட எங்களுக்கு தெரியாது", என்று அமோதா கூறுகிறார்.அவரும் ராஜேஷும் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் இருந்து பலமுறை புலம் பெயர்ந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு முதல் கட்டுமான தளத்தில் வேலைக்காக புலம்பெயர்ந்து வரும் தனது கணவருடன் சேர்ந்து அந்த ஆண்டு அமோதா பெங்களூருக்கு வந்தார். அவர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு குக்கிராமமான கண்ணமூரில் இருந்து வருகிறார், அங்கு தான் இவர்கள் இருவரும் பிறந்துள்ளனர், அது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பார்கூர் வட்டத்தில் இருக்கும் ஒப்பத்தாவடி பஞ்சாயத்தில் உள்ள ஒரு கிராமம். அவர்கள் இருவரும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் இச்சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜேஷ் தனது பெற்றோருடன் பெங்களூருவுக்கு வந்த போது அவருக்கு 13 வயது தான், அவர்கள் நகரத்தில் பெருகிவரும் கட்டுமானத்துறையில் வேலை தேடி வந்தனர். "நகரத்தில் தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று அனைவரும் அறிந்ததே, எனவே எல்லோரும் இங்கு வருகிறார்கள்", என்று அவர் கூறினார்.
இந்நகரில் ஒரு தசாப்தம் வாழ்ந்துள்ள போதிலும் ஊரடங்கு காலத்தில் அவருக்கு ரேஷன் மற்றும் பிற நிவாரண பொருட்களை பெற உதவக்கூடிய எந்த ஒரு அரசு வழங்கிய அடையாள அட்டையும் அவரிடம் இல்லை, அதனால் நிவாரணப் பொருட்களை அவரால் பெற முடியவில்லை.
அவரிடமும் அல்லது அமோதாவிடமோ ரேஷன் அட்டை, ஆதார் அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ்கள் அல்லது நிரந்தர முகவரி கூட இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கான அரசாங்க திட்டங்களின் பலன்களை பெறுவதற்கு தேவையான அடையாள அட்டைகளை பெற முடியும் என்று அவர்கள் நம்பினர். நகரத்தில் உள்ள யாரோ ஒருவர் தங்களுக்கு ரேஷன் அட்டை அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர் என்ற அட்டை பெற உதவுவார்கள் என்று அவர்கள் நம்பினர், ஆனால் இதுவரையில் அவ்வாறு நடக்கவில்லை. அதனை போய் அலைந்து பெறுவதற்கு என்னிடம் நேரம் இல்லை. ஊரடங்கிற்கு முன்பு வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் எங்களுக்கு வேலை இருந்தது. ஒருநாள் வேலைக்கான சம்பளத்தை விட்டுவிட்டு சென்று அடையாள அட்டை வாங்கும் அளவிற்கு நாங்கள் இல்லை", என்று ராஜேஷ் கூறினார்.ராஜேஷை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அமோதா பார்கூரில் உள்ள ஜவுளி ஆலையில் பணிபுரிந்தார் - அது கண்ணமூரில் இருந்து ஒரு மணிநேர பயண தொலைவில் இருந்தது, இவர் ஷேர் ஆட்டோவில் சென்று வந்தார். இவர் பார்கூரில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளார். அவர் தான் அங்கு கணக்கு மற்றும் அறிவியல் ஆகியவற்றை பயின்றதை நினைவு கூறுகிறார். ராஜேஷ் பள்ளிக்கே சென்றதில்லை. ராஜேஷும், அவரும் மொழி மீது ஆர்வம் கொண்டவர்கள் அவர்கள் இருவரும் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பேசக்கூடியவர்கள், ஏனெனில் பார்கூர் ஆந்திரப் பிரதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ராஜேஷ் பெங்களூருவில் பரவலாக பேசப்படும் மொழியான தக்கிணியையும் பேசக்கூடியவர்.
வேலை இருக்கும் காலத்தில் அமோதா மற்றும் ராஜேஷ் ஆகியோர் ஒரு நாள் ஊதியமாக 350 ரூபாய் சம்பாதிப்பர், ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். "கிராமத்தில் வேலை கிடைப்பது மிகவும் கடினம். சின்ன வேலையாக இருந்தால் கூட - வர்ணம் பூசுவது, கட்டுமானப்பணி - எல்லாவற்றிற்கும் பார்கூர் செல்ல வேண்டியிருக்கிறது. கண்ணமூரிலிருந்து போய் வருவதற்கு மட்டுமே 30 ரூபாய் செலவாகும். பெரும்பாலான மக்கள் எங்களது கிராமத்தை விட்டு வெளியேறி பெங்களூருவிற்கு வேலைக்கு வருகிறார்கள்", என்று அமோதா கூறினார்.
அவர் பெங்களூருவுக்கு புலம்பெயர்ந்த பிறகு அவரது பெற்றோரும் கிராமத்தில் எந்த நிலமும் இல்லாததால் கட்டுமான தளங்களில் வேலை செய்வதற்காக இங்கு வந்து இருக்கின்றனர். ஆனால் அமோதா மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் தங்களது பெற்றோருடன் தொடர்பில் இல்லை. அவர்கள் அனைவரும் ஒரே நகரத்தில் வசித்து வருகிறார்கள் என்றாலும், "அவர்களிடம் தொலைபேசி இல்லை. எப்போதுமே தொலைபேசி இருந்ததுமில்லை", என்று ராஜேஷ் கூறுகிறார்.
ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று ஜே.பி நகர் கட்டுமான தளத்தில் ஒப்பந்ததாரர் வந்தபோது எப்போது வேலை தொடங்கும் என்று அவரிடம் கேட்டார்கள். அவர் எல்லாம் திறக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். அதனால் அத்தம்பதியினர் தளத்தில் கிடைக்கின்ற பொருட்களை வைத்து வேலையை துவங்கினர் - கொஞ்சம் சிமென்ட், செங்கல் மற்றும் மரங்கள் அங்கு இருந்தது. "ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு பதிலாக இங்கு கிடைக்கின்ற பொருளை வைத்து ஏதாவது வேலையை முடித்து வைப்போம், அதற்கு ஊதியமே கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை", என்று சுவரில் இருக்கும் விரிசலை சிமென்ட் கொண்டு பூசியபடி அமோதா கூறுகிறார்.
"ஒவ்வொரு தளத்திலும் நாங்கள் தங்குவதற்காக ஒரு தற்காலிகமான அறையை உருவாக்குவோம். அது தான் எங்களது வீடு", என்று அவர் பிரதான கட்டுமான தளத்தின் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய அறையை சுட்டிக்காட்டியபடி கூறினார். அங்கு அவர்கள் மட்டுமே வசித்து வந்தனர். அவர்களின் 6×10 அடி வீடு செங்கல், சிமென்ட் மற்றும் தகரக் கூரை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருந்தது. கூரையிலிருந்து தொங்கும் ஒரு சிறிய விளக்கு மங்கலான ஒளியை எல்லா இடத்திலும் பரப்பிக்கொண்டிருந்தது.அமோதாவும் ராஜேஷும் ஊரடங்கு காலம் முழுவதிலும் தங்களை பரபரப்பாக வைத்திருந்தனர். அமோதா சமைப்பது, சுத்தம் செய்வது என்று வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தார். ராஜேஷ், அவர் வேலை செய்யும் போது குழந்தைகளை கவனித்துக் கொண்டார். "இன்று காலை நாங்கள் வெறும் சோற்றை சாப்பிட்டோம். இப்போதெல்லாம் வெறும் சோற்றையோ அல்லது மிளகாயுடனோ தான் எங்களது சாப்பாடு செல்கிறது", என்று தற்காலிகமாக உருவாக்கப்பட்ட விறகு அடுப்பில் சப்பாத்தியை சுட்டபடி அமோதா கூறினார்.
"எங்களது முந்தைய வேலையிலிருந்து நாங்கள் சேமித்து வைத்த பணம் எங்களிடம் இருந்தது, ஆனால் அது எங்களுக்கு ஒரு வாரத்திற்கான உணவிற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அதன்பிறகு சாலையில் சென்றவர்கள் எங்களுக்கு கொடுத்ததையும், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எங்களது கொடுத்த உணவையும் நாங்கள் நம்பி இருந்தோம். எங்களுக்கு சாப்பிட எதுவுமே இல்லாத நாட்களும் இருந்தது", என்று அமோதா கூறினார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு உணவும், சிறிது பணமும் கொடுத்த பிறகு நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறுகிறார்.
கர்நாடக அரசாங்கம் முதலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இங்கேயே தங்குமாறு கேட்டுக் கொண்டாலும், மே 5 ஆம் தேதி அன்று சார்மிக் ரயில்களை ரத்து செய்தது, பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது மோசமான வாழ்க்கை நிலைமைகளை மற்றும் ஊதியம் இல்லாத நிலையைப் பற்றி ஊடகத்தினரிடம் பேசினார் மேலும் அதுவே தாங்கள் வெளியேறுவதற்கான காரணம் என்றும் கூறினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு சார்மிக் ரயில்களை நிறுத்தியது திரும்பப் பெறப்பட்டது. ஆனால் நாங்கள் அவர்களை கடைசியாக சந்தித்த மே 18ம் தேதி வரை அமோதா மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு அவர்களது தளத்தில் வேலை எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்த எந்தவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
கண்ணமூருக்குத் திரும்புவது இத்தம்பதியினருக்கு ஒரு வழியே இல்லை. ஊருக்குச் செல்வதா? திரும்பி செல்வதில் ஒரு பலனும் இல்லை! கிராமத்தில் எங்களுக்கு என்று நிலமும் இல்லை, அங்கு எங்களுக்கு வேலையும் இல்லை. அப்படியே இருந்தாலும் குறைந்த அளவே எங்களால் வருமானம் பெற முடியும்", என்று அமோதா கூறுகிறார். "எங்களுக்கு எங்குமே வேலை இல்லை. ஒன்று இங்கேயே தங்கி எந்த வேலையும் செய்யாமல் இருப்பது அல்லது அங்கு சென்று எந்த வேலையும் செய்யாமல் இருப்பது இது இரண்டு தான் எங்களுக்கு இருக்கும் வாய்ப்பு. இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை", என்று அவர் கூறினார்.
தமிழில்: சோனியா போஸ்