அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வியாழக்கிழமை காலை 10 மணி இருக்கும். உத்திரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தின் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே லல்தி தேவி பஸ்வான் மற்றும் ஷோபா பாரதி ஆகியோர் பிளாஸ்டிக் பெஞ்சில் அமர்ந்தபடி காத்திருந்தனர். அந்த பெண்கள் அமைதியாக இருந்தனர். இதை அவர்கள் பலமுறை செய்திருக்கின்றனர்.
லல்தி தேவி மற்றும் அவரது கணவர் ஷியாம்லால் ஆகியோர் மீது 20 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமத்தில் சிலர் தன்னை பற்றி வதந்திகளை பரப்புகின்றனர் - அவரது நம்பகத் தன்மையையும் அவரது தொழிற்சங்கத்தின் பணியையும் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள் - அவரை ஒரு தயான், சூனியக்காரி என்றும் அழைக்கிறார்கள். இவையெல்லாம் அவரது வாழ்க்கையை மேலும் கடினமாக்குகிறது என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதற்காக வந்துள்ளார். "மாவட்ட ஆட்சியரை சந்திப்பது மிகவும் முக்கியம். அவர் எங்களது குரல்களைக் கேட்க வேண்டும் மற்றும் எங்களை பார்க்க வேண்டும், அப்போது தான் சில விஷயங்களை மாற்றுவதற்கு நாங்கள் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்", என்று தனது 60 களில் இருக்கும் லல்தி கூறுகிறார்.
"நான் நீதிக்காக காத்திருக்கிறேன்", என்று தனது 50 களில் இருக்கும் ஷோபா கூறுகிறார். "இழப்பீடு கோரி எனது விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வந்திருக்கிறேன். (பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு) உள்ளூர் அரசாங்கம் இந்த ஆதரவை வழங்க வேண்டும், ஆனால் மாவட்ட ஆட்சியர் எனது கோப்புகளை முன்னோக்கி நகரத்தாமல் வைத்திருக்கிறார்". ஷோபா மற்றும் அவரது கணவர் ஆகியோர் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதாக வனத் துறையினரால் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர் மற்றும் அவர்களின் பெயர்கள் பிற குழு நிகழ்வுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் செய்யாத குற்றத்திற்காகவே சேர்க்கப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த இவ்விரு பெண்களும் மாவட்ட ஆட்சியர் பிரமோத் உபாத்யாயின் அலுவலகத்திற்கு செல்ல ஒரு மணி நேரம் காத்திருக்கின்றனர். அவர்களுடன் அகில இந்திய வன தொழிலாளர்கள் சங்கத்தின் (AIUFWP) பொதுச் செயலாளர் ரோமா மாலிக் மற்றும் ராபர்ட்ஸ்கஞ்சில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தைச் சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். மாலிக் அவர்கள் சோன்பத்ரா மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். போலீஸ்காரர்களின் கொடுமைகளைப் பற்றிய பல வழக்குகளை நாங்கள் நிர்வாகத்தினருடன் விவாதிக்க விரும்புகிறோம்", என்று அவர் கூறுகிறார்.
AIUFWP (வன மக்கள் மற்றும் வன தொழிலாளர்களின் தேசிய மன்றம் என்ற பெயரில் 1996 இல் முதலில் துவங்கப்பட்டது) 2013 ஆம் ஆண்டு உறுவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது உத்தரகாண்ட், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் உட்பட சுமார் 15 மாநிலங்களில் சுமார் 1,50,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் சுமார் 10,000 உறுப்பினர்களுடன் 18 மாவட்டங்களில் இத்தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர்களில் சுமார் 60% பேர் பெண்கள் மேலும் அவர்களின் முக்கிய கோரிக்கை கிராம சபைகளின் அதிகாரத்தை அங்கீகரிப்பதன் மூலமும், வன சமூகங்களுக்கு சுயராஜ்யத்திற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும் வன உரிமைகள் சட்டத்தை (FRA) செயல்படுத்த வேண்டும் என்பதே.
மற்ற தொழிற்சங்க உறுப்பினர்களுடன் லல்தி மற்றும் ஷோபா ஆகியோர் பல ஆண்டுகளாக வன உரிமைகள் சட்டத்தின் கீழ் நில உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். இதற்காக அவர்கள் சில சமயங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம் வனத்தில் வசிக்கும் சமூகங்களுக்கு எதிரான பல பத்தாண்டு கால 'வரலாற்று அநீதிகளை' அங்கீகரித்தது. ஏனைய நடவடிக்கைகளுடன், வன ஆக்கிரமிப்புகளையும் மற்றும் வன சமூகங்களின் பாரம்பரிய வாழ்வாதார நடவடிக்கைகளான விறகு, பழங்கள் அல்லது பூக்கள் சேகரித்தலை குற்றமற்றதாக ஆக்குவதை இச்சட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
மற்ற தொழிற்சங்க உறுப்பினர்களுடன் லல்தி மற்றும் ஷோபா ஆகியோர் பல ஆண்டுகளாக வன உரிமைகள் சட்டத்தின் கீழ் நில உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். இதற்காக அவர்கள் சில சமயங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம் வனத்தில் வசிக்கும் சமூகங்களுக்கு எதிரான பல தசாப்தகால 'வரலாற்று அநீதிகளை' அங்கீகரித்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்கும் பெண்கள் உள்ளே செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். உள்ளே சென்றதும் உபத்யாய் "நீங்கள் அங்கு சற்று சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறீர்களா?" என்று கேட்கிறார். அவர் ரோமா மாலிக்குடன் மட்டுமே உரையடுகிறார். எந்தவித உத்திரவாதமும் அவர் அளிக்கவில்லை தவிர அவர்களை 5 நிமிடங்களில் வெளியேறச் சொல்லிவிட்டார். "மாவட்ட ஆட்சியர் அவர்களே சோன்பத்ராவில் உள்ள அனைத்து சட்ட ஒழுங்கிற்கும் பொறுப்பு", என்று ரோமா பின்னர் கூறுகிறார். "ஏதாவது அட்டூழியம் நடந்தால் அதை நீங்கள் எங்காவது கூற வேண்டும்... வன உரிமைகள் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், அதை செயல்படுத்த அதிகாரிகள் விரும்புவது இல்லை", என்று கூறினார்.
உத்திரப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான சோன்பத்ரா அதன் அனல் மின் நிலையங்கள் மற்றும் சுண்ணாம்பு சுரங்கத்திற்குப் பெயர் பெற்றது. இது மாநிலத்தின் மிகவும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றாகும் என்று உத்திரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் பாதரச மாசுபாடு மற்றும் அதன் சுகாதார பாதிப்புகள் என்ற தலைப்பில் தில்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இங்குள்ள சில நீர்நிலைகளின் பாதரச அளவு மனித நுகர்வுக்கு அல்லது விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது - ஆனால் அது வேறு கதை.
லல்தியின் கதை
வனப் பிரச்சினைகள் குறித்து ராபர்ட்ஸ்கஞ்சில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு லல்தி தேவி 2004 ஆம் ஆண்டு இத்தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். அவரது கிராமமான ராம்கரில் அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை பிற நில உரிமையாளர்கள் வாங்க விரும்புவதை எதிர்த்தார். எனவே அவரது மருமகனிடமிருந்து தொழிற்சங்கத்தை பற்றி கேள்விப்பட்ட போது அதில் சேர்வதற்கு ஆர்வமாக இருந்தார். மூன்று வருடங்களுக்கு பிறகு அவரும் ஷியாம்லாலும் ஹர்ரா - பிரவுலா கிராமத்தில் நிலத்தை மீட்க ஒரு இயக்கத்தை வழி நடத்தினர் - சுமார் 150 தலித் மற்றும் ஆதிவாசி குடும்பங்கள் 135 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி அதை விவசாய நிலமாக மாற்றினார்.
"எங்களது மூதாதையர்களால் எந்த நேரமும் காட்டிற்குள் செல்ல முடிந்தது", என்று ஷியாம்லால் விளக்குகிறார். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது ஒரு குற்றமாக மாறிவிட்டது. அவர்கள் மறுசீரமைப்பை திட்டமிட இரண்டு ஆண்டுகள் ஆனது நில வரைபடங்களைப் படித்தல், மக்களை ஒருங்கிணைத்தல், நிலத்தை அழித்தல் மற்றும் மரங்களை நடவு செய்தல் ஆகியவற்றிற்காக.
லல்தி அந்த நாட்களை நினைவு கூர்கிறார்: "பாதுகாவலர்கள் எங்களை எண்ணுவதற்கு வசதியாக ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு எழுவோம், பின்னர் கூட்டித் துடைப்போம். அதன் பின்னர் குளித்து விட்டு ரொட்டி மற்றும் பருப்பு அல்லது ஒரு காய்கறியை சாப்பிடுவோம், அதன் பிறகு மீண்டும் அடைக்கப்படுவோம்", என்று கூறி அவர் நிறுத்துகிறார். "நான் எனது குழந்தைகளின் பிரிவால் வாடினேன். அழக் கூட செய்தேன் ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறையில் அவர்களை நாங்கள் சந்திக்க முடிந்தது. நாங்கள் இவ்வளவு பெரிய அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறோம் - அதனால் நாங்கள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது", என்று கூறினார். லல்தி மற்றும் ஷியாம்லாலின் ஐந்து குழந்தைகளும் இப்போது வளர்ந்துவிட்டனர்; அவர்கள் விவசாயம் மற்றும் தினக்கூலியாகவும் வேலைகளைச் செய்து வருகின்றனர்.
2010 ஆம் ஆண்டு, லல்தி தேவி மற்றும் ஷியாம்லால் ஆகியோர் நில சீர்திருத்தங்களைக் கோரி ஒரு பேரணியில் இருந்து திரும்பிச் செல்லும் வழியில் ஓப்ரா நகரில் (அவர்களது கிராமத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள) போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். "காவல்துறையினர் எங்களை அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் எங்களை காவல் நிலையத்திற்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல முயற்சித்தனர், ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். பின்னர் எங்களது கைகள் பின்னால் இழுத்துக் கட்டப்பட்டது. அவர்கள் எனது தலைமுடியைப் பிடித்து இழுத்தார்கள் நாங்கள் மோசமாக தாக்கப்பட்டோம் - அது மிகவும் பயமாக இருந்தது", என்று அவர் கூறுகிறார்.
"அவர்கள் எங்களை கைது செய்து, காவல்துறை வாகனத்தில் வைத்து மிர்சாபூர் சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றனர். நான் மிகவும் காயமடைந்து இருந்தேன். அதனால் சிறையில் எனது உடல்நலம் குன்றி இருந்தது. என்னால் நகரக் கூட முடியவில்லை - உணவு உண்பதற்கோ அல்லது குளிப்பதற்கோ கூட. சிறையில் எந்த மாற்றமும் இல்லை அதே நடத்தும் முறை ஆனால் இந்த முறை போராடுவதற்கு என்னிடம் திராணி இல்லை. மற்றொரு பெண் என்னை நோயாளியாக கருதி என்னை நன்கு கவனித்துக் கொண்டதால் நான் பிழைத்தேன்", என்று கூறினார்.
லல்தியும், ஷியாம்லாலும் ஹர்ரா - பிரவுலா கிராமத்தில் நிலத்தை மீட்க ஒரு இயக்கத்தை வழி நடத்தினர் - எங்களது மூதாதையர்களால் எந்த நேரமும் காட்டிற்குள் செல்ல முடிந்தது", என்று ஷியாம்லால் விளக்குகிறார். எங்களைப் பொறுத்தவரை, அது ஒரு குற்றமாக மாறிவிட்டது
லல்தி ஒவ்வொரு முறையும் ராபர்ட்ஸ்கஞ்சில் உள்ள நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவருக்கு எதிரான வழக்குகளில் தொழிற்சங்கத்தின் வழக்கறிஞர் வினோத் பதக்கின் உதவியுடன் தொடர்ந்து போராடி வருகிறார். இந்த வழக்குகளில் குற்ற அத்துமீறல் மற்றும் கலவரம் ஆகியவையும் அடங்கும். "நாங்கள் எங்களது பெரும்பாலான நேரத்தை வழக்கறிஞரை சந்திக்க, நீதிமன்றத்தில் ஆஜராக, கூட்டங்களுக்குச் செல்ல மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முயற்சித்துக் கழிக்கிறோம். எங்களுக்கு எதிராக பல பொய்யான வழக்குகள் உள்ளன. சில நேரங்களில் நாங்கள் செய்வது காகித வேலைகள் மட்டுமே என்று கூடத் தோன்றும். எங்களது பணம் மற்றும் ஆற்றல் ஆகிய அனைத்தும் இதற்காக செலவழிந்து விட்டது. எங்களுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை வாழ, பணம் சம்பாதிக்க அல்லது வெறுமனே வாழகூட நேரம் இல்லாமல் போய்விட்டது", என்று அவர் கூறுகிறார். லல்தி மற்றும் ஷியாம்லாலின் மகன்கள் நிதி உதவி செய்கின்றனர். தவிர லல்தி தனது தொழிற்சங்க வேலைக்கு ஈடாக சிறிது தொகையைப் பெறுகிறார்.
இவை எல்லாம் அவரை தடுக்கவில்லை. “நான் சில நேரங்களில் சோர்வடைகிறேன்தான். எப்போது நிம்மதியாக இருக்க முடியும் என்பதை நான் அறிய விரும்புகிறேன், ஆனால் நாங்கள் இதையெல்லாம் எங்களது குழந்தைகளுக்காகச் செய்கிறோம். நாங்கள் சிறையைக் கண்டு அஞ்சுவதில்லை. எங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எங்களது நிலத்தை எடுத்துக் கொள்வதை விட அதுவே சிறந்தது", என்று கூறுகிறார்.
ஷோபாவின் கதை
பெரும்பாலும் பெண்களே நில உரிமை இயக்கங்களில் முன்னணியில் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் பொதுவாக அங்கீகரிக்கப்படுவதில்லை. அரசியல் மற்றும் பொது கொள்கைக்கான தி ஹிந்துவின் மையம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்படக் கூடிய சமூகங்களில் இத்தகைய இயக்கங்களை வழி நடத்தும் பெண்கள் எவ்வாறு வன்முறை மற்றும் சிறை வாசத்திற்கு ஆளாகின்றனர் என்பதை விவரிக்கிறது - குறிப்பாக லல்தி மற்றும் ஷோபாவை போன்ற போராட்டத்தில் குரல் கொடுப்பவர்களின் நிலையையும் அது விவரிக்கிறது.
ஷோபா மற்றும் அவரது கணவர் ராம் கரிப் பாரதியும் ராபர்ட்ஸ்கஞ்ச் தாலுகாவிலுள்ள சோபன் வட்டத்தில் இருக்கும் பாடி கிராமத்தில் அவர்களது நான்கு பைக்கா நிலத்திற்காக (சுமார் ஒரு ஏக்கர் நிலம்) 20 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அது லல்தியின் கிராமத்தில் இருந்து சுமார் இரண்டு மணி நேர பேருந்து பயணம் தூரத்தில் இருக்கிறது. சோபன் சுண்ணாம்பு, பளிங்கு மற்றும் இரும்பு தாது போன்ற தாதுக்கள் நிறைந்துள்ள இடம்.
பாடியிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு கல் நொறுக்குபவர்களாக பணிபுரிந்த அவர்கள் மெதுவாக ஒரு சிறிய நிலத்தை தங்கள் பயன்பாட்டிற்காக சுத்தப்படுத்த துவங்கினர். இது அங்கு பாரம்பரியமாக நிலம் வைத்திருக்கும் சமூகங்களை கோபப்படுத்தியது. அவர்கள் ஏன் அந்த நிலத்தை விட்டு வெளியேறவில்லை என்று கேட்ட போது, "ஆனால் நாங்கள் எங்கு செல்வது? எல்லா இடத்திலும் இதே மாதிரிதான் இருக்கிறது", என்று ஷோபா பதிலளித்தார்.
2006 ஆம் ஆண்டு நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அவரை தனது கடைக்கு வரச் சொன்னார், என்று ஷோபா கூறுகிறார். அங்கு அந்த கடைக்காரர் அவரை அடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். "அது இறப்பதை விட மோசமாக இருந்தது", என்று கூறி அமைதியாக அவர் அத்தாக்குதலை நினைவு கூர்கிறார். "என் கணவர் அவனை கொல்ல விரும்பினார். நான் நீதியை விரும்பினேன். எனது கருப்பையில் அறுவை சிகிச்சை கூட செய்ய வேண்டியிருந்தது", என்று கூறினார்.
சம்பவம் நடந்த உடனேயே ஷோபா 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோபன் காவல் நிலையத்திற்கு சென்றார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. காவல்துறையினரிடம் அறிக்கை தாக்கல் செய்யவே அவருக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பிடித்தது. “நான் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டேன், லகாபாத்துக்குச் சென்றேன், வெவ்வேறு அமைச்சகங்களுக்காக தில்லிக்கு கூட சென்றேன். கடைசியாக நான் வழக்கறிஞரான வினோத் பதக் என்பவரை சந்தித்தேன், அவர் இந்த வழக்கை எடுத்துக் கொண்டார், அவரின் மூலமாக நான் ரோமாடியை சந்தித்தேன்.”
"இப்போது விசாரணை நடப்பதாக நாங்கள் நம்புகிறோம்", என்று பதக் கூறினார். "சில நேரங்களில் கோப்புப் பணிகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் நீதிபதியின் மனதில் சந்தேகம் தோன்றலாம். ஆனால் இந்தக் குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறைக்குச் சென்றார் (ஜாமீன் வழங்கப்படுவதற்கு முன்பு சுமார் இருபது நாட்கள்) நாங்கள் அவருக்கு அது நிரந்தரமாக வேண்டும் என்று விரும்புகிறோம்", என்று கூறினார்.
ஷோபா 2010 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். நிலமற்ற மற்ற பெண்களை சந்திக்க துவங்கினார். ரேஷன் கார்டுகளை பற்றி பேசினார். காவல் துறையினர் செய்யும் கொடுமைகளைப் பற்றி பேசினார். அவர்கள் வழக்கமான கூட்டங்களை நடத்தினர். ஒன்றாக வேலை செய்தனர் மற்றும் நில வரைபடங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளையும் பார்த்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, பாடியில் இருந்து கொஞ்சம் தொலைவிலேயே இருந்த 150 பைகா விவசாய நிலங்களையும் (சுமார் 38 ஏக்கர்) மற்றும் ஒட்டு மொத்தமாக காடுகள் உட்பட 500 பைகா நிலங்கள் (சுமார் 124 ஏக்கர்) குறித்தும் அவர்கள் முடிவு செய்தனர். அதை அவர்கள் துர்கா தோலா என்று அழைத்தனர். "அதற்கு காரணம் அவர்கள் துர்கா மாதாவை வணங்குவதே. எல்லாப் பெண்களும் துர்காவின் வலிமையை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் தான்!" என்று ஷோபா கூறுகிறார்.
"எங்களை நாங்களே ஒருங்கிணைக்க எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன. ஆனால் பெண்கள் ஒன்று கூடி வந்தனர். நாங்கள் ஒன்றாக இருந்தோம். நாங்கள் காட்டை சுத்தம் செய்தோம், மரங்கள் வாங்கினோம், அவற்றை நடவு செய்தோம் மேலும் மெதுவாக வீடுகள் கட்டினோம். இப்போது நாங்கள் அங்கு விவசாயம் செய்கிறோம்", என்று கூறினார்.
"துர்கா தோலா மற்றும் ஹர்ரா - பிரவுலா ஆகியவை தனித்தனி நிகழ்வுகள் அல்ல", என்று ரோமா கூறுகிறார். “நாங்கள் சோன்பத்ரா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வன மற்றும் நிலப் பிரச்சனைகளுக்காக பணியாற்றி வருகிறோம். சமூகங்களை ஒன்றிணைக்கவும் முயற்சி செய்கிறோம். மக்கள் தங்கள் நிலத்தை மீட்டெடுக்கத் துவங்கினர். இந்த இயக்கம் அப்படிதான் வளர்ந்தது. பண்ணைகளில் வேலை செய்வதன் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவை சம்பாதிக்க முடியவில்லை. நாங்கள் இன்னமும் வனத்துறை மற்றும் காவல்துறையினருடன் போராடி வருகிறோம்", என்று கூறினார்.
2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி, துர்கா தோலாவின் வெற்றிக்குப் பிறகு, ஷோபாவின் வீடு தாக்கப்பட்டது. காலை 11 மணியளவில் டஜன் கணக்கான மக்கள் அவரின் வீட்டுக் கதவை உடைக்க முயன்றனர், இறுதியில் அவரின் வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. உள்ளே, ஷோபா, அவரது 3 மகள்கள் மற்றும் பிற 18 பெண்கள் இருந்தனர். அவர்கள் வெளியே ஓடியபோது ஏற்கனவே அங்கு இருந்த போலீசாரால் பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு 110 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிர்சாபூரில் உள்ள மாவட்ட சிறைச் சாலைக்கு பேருந்தில் கொண்டு செல்லப்பட்டனர். “நாங்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பது பற்றி எங்களிடம் தெரிவிக்கவில்லை", என்று சோபா கூறுகிறார்.
மிர்சாபூர் சிறையில் 30 பெண்களுக்கு மட்டுமே தங்குவதற்கான இடவசதி உள்ளது, ஷோபா அங்கு சென்றபோது ஏற்கனவே 100 பெண்கள் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா வெளியிட்ட அறிக்கையின்படி நீதிக்கான விசாரணைக்காக சுமார் 63,000 பேர் உத்திரப் பிரதேசத்தில் உள்ள 62 சிறைச் சாலைகளில் இருக்கின்றனர் - மேலும் அவர்களின் ஆக்கிரமிப்பு சதவீதம் 162 சதவீதமாக உள்ளது. இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் பூர்வாங்க விசாரணைக்காக காத்திருக்கின்றனர்.
"அவர்கள் எங்களது தொலைபேசிகளை எடுத்துக் கொண்டனர். எங்களது பணத்தையும் (நாங்கள் எவ்வளவு சிறிய தொகையை வைத்திருந்தாலும்) எடுத்துக் கொண்டனர்", என்று ஷோபா கூறுகிறார். "நாங்கள் குளியலறைக்கு அருகில் தூங்க வேண்டியிருந்தது. அங்கு மிகவும் குளிராக இருந்தது, போர்வைகளோ கிழிந்து இருந்தன. எங்களது தட்டுக்கள் கோபாரால் (மாட்டின் சாணத்தில் இருந்து) செய்யப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு நாங்கள் அதை விட்டுவிட்டோம், பின்னர் அதை எதிர்த்துப் போராடினோம். எங்கள் கோரிக்கைகளான - நல்ல தூங்கும் இடம், போர்வைகள், நல்ல உணவு ஆகியவை நிறைவேறும் வரை நாங்கள் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம்", என்று கூறினார்.
சிறையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்பத்ராவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய பின்னர் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி அன்று பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.
"எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது", என்று ஷோபா கூறுகிறார். "நாங்கள் எங்களது உரிமைகளுக்காகவே சென்றோம். எதையும் திருடவில்லை, எந்த தவறும் செய்யவில்லை, எனவே சிறைக்கு செல்வது பற்றி நான் வருத்தப்படவில்லை", என்று கூறினார்.
அவர்களின் போராட்டம் தொடர்கிறது. 2018 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி அன்று சோன்பத்ராவில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2500 பேருடன் ஷோபா மற்றும் லல்தி ஆகியோர் சமூக வள உரிமைகளை (வன உரிமைகள் சட்டத்தின் கீழ் வருவது) கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். கிராம சபை தீர்மானங்கள், இச்சமூகத்தினரால் பாரம்பரியமாக அணுகப்பட வனம், நதி மற்றும் மலைகளின் வரைபடம் ஒன்று மற்றும் வனத்துறையினரின் 'செயல் திட்டத்தின்' படியான உரிமைகளின் பட்டியல் போன்ற ஆவணங்களை அவர்கள் ஒன்றாக இணைத்து கொடுத்திருந்தனர். இப்போது அவர்கள் அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர்.
இந்தக் கட்டுரை இந்திய ஊடக விருதுக்கான தேசிய அறக்கட்டளை திட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்டது; இதன் ஆசிரியர் 2017 இந்த விருதினைப் பெற்றவர்.
தமிழில்: சோனியா போஸ்