தேங்கி நிற்கும் சாக்கடையை கடந்து விறகுக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட இரண்டு குடிசை வீடுகளுக்கு இடையேயான புழுதி நிறைந்த பாதைக்குள் நுழைகிறார் நல்லம்மா. நீல நிற சிஃபான் புடவையணிந்த அந்த 35 வயது பெண்மணி தொடர் புழக்கத்தில் இருக்கும் அப்பாதையில் வெறும் காலில் நடந்து செல்கிறார்.

புதர்கள், காய்ந்த புற்கள், குப்பைகள் நிறைந்த திறந்தவெளியை நாங்கள் அடைந்தோம். “திறந்தவெளி எங்கும் நாங்கள் அமர்கிறோம் [மலம் கழிப்பதற்கு],” எனும் நல்லம்மா நாங்கள் கடந்து வந்த குடிக்கால் கிராம வீடுகளை சுட்டிக்காட்டுகிறார். “யாருடைய வீட்டிலும் கழிப்பறைகள் கிடையாது. அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் [சிசேரியன் சிகிச்சை], கர்ப்பிணியாக இருந்தாலும், மாதவிடாய் நாட்களிலும் இங்கு தான் நாங்கள் வரவேண்டும்,” என்கிறார் தீர்க்கமாக.

காலப்போக்கில், இன்டி வேனுகா [வீட்டின் பின்புறம்] என்பதே திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு என்றாகிவிட்டது. “எங்கள் பகுதி பெண்கள் எல்லோரும் இங்கு தான் வருகின்றனர். சந்துக்கு அந்த பக்கம் ஆண்களுக்கென ஒதுக்கப்பட்ட திறந்தவெளி ஒன்று உள்ளது,” என விளக்குகிறார் நல்லம்மா.

கர்னூல் மாவட்டம் எம்மிகானூர் வட்டாரத்தில் உள்ள குடிக்கால் கிராமத்தில் 11,213 பேர் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) வசிக்கின்றனர். “திறந்தவெளி மலம் கழிக்காத கிராமம்” என்று மத்திய அரசாலும், பிறகு 2019ஆம் ஆண்டு மாநில அரசாலும் இக்கிராமம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நல்லம்மா வசிக்கும் குடிக்காலின் மூன்றாவது வார்டில் கண்டிப்பாக கழிப்பறைகள் கிடையாது என்கின்றனர் அக்குடியிருப்புவாசிகள். மொத்தமுள்ள 8 வார்டுகளில்  ஆறு வார்டுகளில் கழிப்பறைகள் கிடையாது என்கிறார் நல்லம்மா. (20 வார்டுகள் என அலுவல் தரவுகள் தெரிவிக்கின்றன, ஆனால் உள்ளூர் செயலர் மற்றும் அவரது உதவியாளர் போன்ற உள்ளூர் அரசு அதிகாரிகள் எட்டு வார்டுகள் என்கின்றனர்.)

குடிக்காலில் தோராயமாக 25 சதவிகித குடியிருப்புவாசிகள் தினக்கூலி வேலை செய்பவர்கள். கிராம மக்களில் பாதி பேர் விவசாயிகள். பெரும்பாலான விவசாயிகள் மிளகாய், பருத்தி போன்ற வணிகப் பயிர்களை பயிரிடுகின்றனர். இப்பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, மழையை நம்பி 1,420 ஹெக்டேர் பாசன நிலங்கள் உள்ளன.

வன்னி மரத்தடி நிழலில் படுத்திருக்கும் நான்கு காட்டுப் பன்றிகளை நல்லம்மா சுட்டிக்காட்டுகிறார். காட்டுப்பன்றிகளுடன், “வெள்ளை நாரைகளையும் பாம்புகளையும்” இங்கு சாதாரணமாக காணலாம். “காலையில் இங்கு நாங்கள் வரும்போது கும்மிருட்டாக இருக்கும். இப்போது வரை அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை, பயம் மட்டும் உள்ளது,” என்கிறார் அவர்.

The area where the residents of Gudikal use to defecate (left) and an open sewer (right) in Gudikal’s ward three
PHOTO • Kruti Nakum
The area where the residents of Gudikal use to defecate (left) and an open sewer (right) in Gudikal’s ward three
PHOTO • Kruti Nakum

குடிக்கால் குடியிருப்புவாசிகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பகுதி(இடது), குடிக்காலின் மூன்றாவது வார்டில் ஓடும் சாக்கடை(வலது)

மூன்று பிள்ளைகளுக்கு தாயான அவருக்கு வீட்டுவேலைகளுடன் அன்றாட காலைப் பொழுது கழிகிறது. கிராமத்தில் உள்ள பெரும்பாலானோரைப் போன்று அவரும் இருட்டு வேளையில் அதிகாலை 4 மணிக்கு இங்கு வருகிறார். கட்டுமானத் தொழிலாளியான அவர் வேலைக்காக சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எம்மிகானூர் நகரத்திற்கு காலை 8 மணிக்கு புறப்படுகிறார். “நான் வேலை செய்யும் கட்டுமான பணியிடத்திலும் கழிப்பறைகள் கிடையாது,” என்றார். “அங்கும் நாங்கள் பொதுவாக [இயற்கை உபாதைக்கு] மரத்தடி அல்லது திறந்தவெளிக்கு தான் செல்ல வேண்டும்.”

*****

“மலா, மடிகா, சக்கலி, நெட்கனி, போயா, பத்மாசலி என ஒவ்வொரு சமூகத்தினருக்கும் வெவ்வேறு இடங்கள்,” எனும் ஜனகம்மா இங்கு வசிக்கும் ஆந்திர பிரதேசத்தின் பட்டியலினத்தவர் (SC), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற பல்வேறு சமூகத்தினர் குறித்து இப்படி சொல்கிறார். “ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அவரவர் வெவ்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.” குடிக்காலின் ஐந்தாவது வார்டில் வசிக்கும் அவர் 60 வயதுகளில் உள்ளவர். ஓபிசி பிரிவின் கீழ் வரும் போயா சமூகத்தைச் சேர்ந்தவர்.

குடியிருப்புவாசிகள் பலருக்கும் சொந்தமாக நிலம் இல்லாததால் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். “வயதான காலத்தில் எங்களால் மலையேறவோ, குன்றுகளுக்கு செல்லவோ முடியாது. அருகில் உள்ள இடத்திற்குதான் நாங்கள் செல்ல வேண்டும்,” என்கிறார் ரமணம்மா.  ஐந்தாவது வார்டின் சமூகக்கூடத்தில் 60களில் உள்ள அஞ்சம்மா, எல்லம்மா போன்ற பிற பெண்களுடன் அமர்ந்திருக்கிறார்.

ஹனுமன் மலை அடிவாரத்தில் எங்கள் போயா குடியிருப்பு அமைந்துள்ளது. குடிக்கால் ஏரிக்கரைகள் சில மாதங்களுக்கு முன்பு வரை திறந்தவெளி மலம் கழிப்பதற்கான இடமாக இருந்தது. ஆனால் ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் அதை வாங்கிவிட்டார். ஏமாற்றமடைந்த குரலில் ரமணம்மா சொல்கிறார், “இப்போது நாங்கள் வயல்களுக்கு அருகே குடிசைகளை அமைக்க வேண்டும்,” என.

Left: Roughly 53 per cent of Gudikal’s residents earned their primary source of income from cultivation.
PHOTO • Kota Adarsh Venkat
Right: The banks of the village lake was an open defecation space until a few months ago, when someone from a dominant caste bought this land and it became inaccessible for others
PHOTO • Kruti Nakum

இடது: 53 சதவிகித குடிக்கால் மக்கள் விவசாயத்தையே முதன்மை வருவாய் ஆதாரமாக கொண்டுள்ளனர். வலது: கிராம ஏரிக்கரைகள் சில மாதங்கள் முன்பு வரை திறந்தவெளி மலம் கழிக்கும் இடமாக இருந்தது. ஆதிக்க சாதியை சேர்ந்தவர் அந்த இடத்தை வாங்கியதால் மற்றவர்கள் அங்கு செல்ல முடியாமல் போனது

எல்லம்மா ஒப்புக் கொள்கிறார், “மலையேறி பாறையின் மறைவில் அமர்வது அல்லது மலையேறுவது என்னைப் போன்ற வயதானவர்களுக்கு இயலாதது. எனவே மறைவிடத்திற்கு நான் முன்னுரிமை அளிப்பதில்லை,” என.

சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறாவது வார்டில் வசிக்கும் பர்வதம்மா சொல்கிறார், “எஸ்சி காலனியில் கழிப்பறைகள் கிடையாது, சாக்கடை வடிகால் கூட கிடையாது. திறந்த சாக்கடையிலிருந்து வரும் துர்நாற்றத்தால் சில சமயம் [உணவு] சாப்பிடக் கூட முடியாது.”

தேர்தல் நேரங்களில் கிராமத்திற்கு பரப்புரைக்கு வரும் அரசியல் தலைவர்களிடம் இது குறித்து தானும், பிற பெண்களும்  எண்ணற்ற முறை பேச முயன்றதை அந்த 38 வயது பெண்மணி நினைவுகூருகிறார். பெண்களின் சொற்கள் அம்பலம் ஏறுவதில்லை என்கிறார் அவர்: ”சுற்றியுள்ள ஆண்கள் எங்களை பேச விடுவதில்லை. அவர்களும் நீங்கள் சொல்வது எங்களுக்கு புரியவில்லை என்கின்றனர்.”

உள்ளூர் நிர்வாகமான கிராம சபை சச்சிவாலயம் அல்லது கிராம வார்டு செயலகம் (அரசுத் துறைகளின் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்வதன் மூலம் நிர்வாகத்தைப் பரவலாக்குவதற்காக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள செயலகங்கள்) மீது பர்வதம்மாவிற்கு சிறிது நம்பிக்கை உள்ளது. குடிக்காலில் 3 சச்சிவாலயங்களில் 51 சச்சிவாலய தன்னார்வலர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் 50 வீடுகளை நிர்வகிக்கின்றனர்.

“மூன்றாண்டுகளுக்கு முன் குடிக்காலில் சில வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கான இடங்களை சச்சிவாலயம் தன்னார்வலர்கள் தேர்வு செய்து சென்றனர். எங்கள் வீடுகளில் அவர்கள் குறியீடு இட்டனர். ஆனால் பிறகு வரவே இல்லை,” என்கிறார் 49 வயது நரசம்மா. “தன்னார்வலர்கள் நிறைய பேர் இருந்தும், கவனம் செலுத்துவதில்லை. வெல்லகி கொம்முலு மொலிச்சாயி[அவர்களுக்கு மண்டை கணம் வந்துவிட்டது].”

குடிக்கால் ஊராட்சி செயலரும், அனைத்து சச்சிவாலயங்களின் தலைவருமான 43 வயது குலாம் ஜமீலா கழிப்பறை கட்டுவதற்கான அளவுகோல்களை பட்டியலிடுகிறார்: “கழிப்பறை இருக்கக் கூடாது, வீட்டின் உரிமையாளராக இருக்க வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழுள்ளவருக்கான (BPL) அட்டை மற்றும் ஆதார் ஆவணப்படுத்தல் போன்றவை வேண்டும்.” இதன் அடிப்படையில் கிராம வருவாய் அலுவலர் (VRO) பட்டியல் தயார் செய்து ‘ஸ்வச் ஆந்திரா மிஷன்‘ திட்டத்தின் கீழ் இலவசமாக கழிப்பறைகள் கட்டுவதற்கான அனுமதியை அளிக்கிறார், “ என்கிறார் அவர்.

Narsamma indicates the spot marked with rocks (left), where a toilet was to be built three years ago by local officials, but nothing has happened. 'There are no toilets in this SC colony, not even a drain’
PHOTO • Kruti Nakum
Narsamma indicates the spot marked with rocks (left), where a toilet was to be built three years ago by local officials, but nothing has happened. 'There are no toilets in this SC colony, not even a drain’
PHOTO • Kruti Nakum

மூன்றாண்டுகளுக்கு முன் உள்ளூர் அதிகாரிகள் கழிப்பறைகள் கட்டுவதற்கு பாறைகள் கொண்டு அடையாளப்படுத்திய இடத்தை காட்டிய நரசம்மா, எதுவும் நடக்கவில்லை என்கிறார். ‘எஸ்சி காலனியில் கழிப்பறைகள் கிடையாது, வடிகாலும் கிடையாது’

பெரும்பாலான வீடுகள் இதற்கு தகுதிபெற்றாலும், குடிக்காலில் ஒன்பது கழிப்பறைகள் மட்டுமே அப்படி கட்ட முடியும் என்கிறார் குலாம். 2019ஆம் ஆண்டின் YSRCP (யுவஜனா ஸ்ரமிக்கா ரிதூ காங்கிரஸ் கட்சி) தேர்தல் அறிக்கையை நம்மிடம் கொடுத்து அவர் கூறுகையில், “இங்குள்ள அனைத்து திட்டங்களும் ஜகன்[முதலமைச்சர்] செயல்படுத்துவதற்கான திட்டங்கள். இதில் எங்கும் கழிப்பறைகள் கட்டுவது பற்றி இடம்பெறவில்லை.”

தாழ்வான பகுதியாக விளங்கும் நான்காவது வார்டின் முனையில் இருக்கும் நரசம்மாவின் வீடு 2019ஆம் ஆண்டு கழிப்பறை கட்ட அனுமதிபெற்றது. இப்பகுதியில் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலான மழைக் காலங்களில் இரண்டு அடிக்கு தண்ணீர் வீடுகளில் தேங்கி வெள்ளப் பெருக்கும் ஏற்படும்.

4 x 4 அடி சதுர அளவில் சுற்றி பாறைகளால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பகுதிக்கு அருகே அவர் நிற்கிறார். மூன்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி கழிப்பறை கட்ட குறிக்கப்பட்டது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை என்கிறார் அவர்.

நரசம்மா வீட்டின் அருகே 51 வயது பத்ரம்மா வசிக்கிறார். அவர் மழைக்காலங்களில் குடிக்காலின் பல்வேறு பகுதி குப்பைகளையும் மழைநீர் கொண்டு வந்து இங்கு சேர்த்துவிடுவதாகவும், பாதையில் நீர் தேங்கி, தாங்க முடியாத துர்நாற்றத்தை வீசச் செய்வதாக சொல்கிறார். அந்த இடத்தை குறிப்பிட்டு அவர்,“ இங்கு தான் கோடைக்காலங்களில் ஜாத்ரா[சமய கூட்டம்] நடைபெறும்,” என்றபடி தெரு முனையில் இருந்த புகழ்பெற்ற கோயிலை குறிப்பிட்டார். “கிராம மக்கள் அனைவரும் திரண்டு ஊர்வலத்தை [இப்பாதை வழியாக] நடத்தி கொண்டாடுவார்கள். ஆனால் மழைக்காலம் வந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி யாருக்கும் கவலையில்லை.”

வாசலில் குளியலறை கொட்டகை போடப்பட்ட கான்கிரீட் வீட்டில் ராமலட்சுமி வசிக்கிறார். ஆனால் வீட்டிற்குள் கழிப்பறை கிடையாது. மூன்றாண்டுகள் முன் திருமணமாகி இங்கு வந்தவர் அந்த 21 வயது பெண். “என் கணவரின் பெற்றோர், கணவர் மற்றும் நான் அப்பகுதியை [திறந்தவெளியில் மலம் கழிக்குமிடம்]  பயன்படுத்துவோம்.” அவரது இரண்டு சிறு பிள்ளைகளும் வீட்டின் அருகே பயன்படுத்துகின்றனர்.

இக்கட்டுரையில் இடம்பெறும் குடிக்கால் கிராம ஊராட்சி செயலர் குலாம் ஜமீலா பீ தவிர மற்ற அனைத்து பெண்களும் பெயர் வெளியிட விரும்பாமல் தங்கள் அனுபவங்களை மட்டும் நம்முடன் பகிர்ந்து கொண்டவர்கள்.

தமிழில்: சவிதா

Student Reporter : Kasturi Kandalam

கஸ்தூரி கண்டலம் பெங்களூர் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதலாண்டு முதுநிலை பொருளாதாரம் படிக்கும் மாணவி.

Other stories by Kasturi Kandalam
Student Reporter : Kruti Nakum

க்ருதி நகும் பெங்களூர் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதலாண்டு முதுநிலை பொருளாதாரம் படிக்கும் மாணவி

Other stories by Kruti Nakum
Editor : Riya Behl

ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Other stories by Riya Behl
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha