இந்த வருட ஜுன் மாதத்தின் மூன்றாவது வெள்ளி அன்று தொழிலாளர் உதவி எண் அடித்தது.
“எங்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை. நீங்கள் உதவி செய்ய முடியுமா?”
ராஜஸ்தானில் குஷால்கரிலிருந்து பக்கத்து தாலுகாக்களில் வேலை பார்க்க சென்ற 80 தொழிலாளர்கள் கொண்ட குழு அது. இரண்டு மாதங்களாக அவர்கள் இரண்டடி அகலமும் ஆறடி ஆழமும் கொண்ட குழிகளை தொலைத்தொடர்பு ஃபைபர் கம்பித் தடங்கள் பதிக்க அவர்கள் தோண்டியிருந்தார்கள். அவர்கள் தோண்டும் குழியின் ஒவ்வொரு மீட்டருக்கென ஊதியம் வழங்கப்படும்.
இரண்டு மாதங்கள் கழித்து, மொத்த ஊதியத்தை அவர்கள் கேட்டபோது, வேலை சரியாக இல்லையென சொன்ன ஒப்பந்ததாரர் எண்களில் குளறுபடி செய்து, இறுதியில், “கொடுக்கிறேன், கொடுக்கிறேன்,” எனக் கூறி ஆசுவாசப்படுத்த முயன்றார். ஆனால் கொடுக்கவில்லை. இன்னொரு வார காத்திருப்புக்கு பிறகு, அவர்கள் கொடுக்க வேண்டிய 7-8 லட்ச ரூபாய் ஊதியம் கொடுக்கப்படாததால், காவல்துறைக்கு தொழிலாளர்கள் செல்ல, அவர்கள் தொழிலாளர் உதவி எண்ணை அழைக்கக் கூறினர்.
தொழிலாளர்கள் தொடர்பு கொண்ட போது, “ஏதேனும் ஆவணம் இருக்கிறதா எனக் கேட்டோம். பெயர்களையும் ஒப்பந்ததாரர்களின் எண்களையும் பதிவேட்டின் புகைப்படங்களையும் கொடுக்க முடியுமா எனக் கேட்டோம்,” என்கிறார் மாவட்டத் தலைநகரான பன்ஸ்வாராவை சேர்ந்த சமூகப் பணியாளரான கமலேஷ் ஷர்மா.
அதிர்ஷ்டவசமாக செல்பேசியில் பரிச்சயம் கொண்ட சில இளம் தொழிலாளர்கள் கேட்ட எல்லா ஆவணங்களையும் கொடுக்க முடிந்தது. கூடுதலாக பணியிடங்களின் புகைப்படங்களையும் கொடுத்தார்கள்.























