“இதுதான் பள்ளி,” என்னும் அதுல் போசலேவின் விரல், மகாராஷ்டிர குண்டேகாவோன் கிராமத்தின் பொட்டல் வெளிக்கு நடுவே நிற்கும் இரு அறைகளை கொண்ட ஒரு சிறு கட்டடத்தை சுட்டிக் காட்டுகிறது. கிராமத்தை நோக்கி செல்லும் வழியில் அக்கட்டடத்தை நீங்கள் தவறவிட முடியாது. மண் சாலையில் சென்றால் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பார்தி குடியிருப்பு வரும்.
வெளிர் மஞ்சள் பூச்சில் நீல நிற ஜன்னல்களையும் வண்ணமய கார்ட்டூன்களையும் சுவர்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் முகங்களையும் கொண்டிருக்கும் அப்பள்ளி உங்களின் கவனத்தை ஈர்க்கும். தார்ப்பாய் கூரை மண் வீடுகளை கொண்டு 20 பார்தி குடும்பங்கள் வசிக்கும் அப்பகுதியில் அது தனித்து நிற்கும் கட்டடமாக இருக்கிறது.
“வளர்ச்சி என எங்கள் ஊரில் நடந்த ஒரே விஷயம் இதுதான்,” என்கிறார் 46 வயது அதுல் போசலே பெளத்காவஸ்தியை பற்றி. அகமதுநகர் மாவட்ட நாகர் தாலுகாவிலூள்ள அந்த கிராமத்துக்கு அதுதான் பெயர்.
“வேறொன்றும் இல்லை. சாலைகள் இல்லை. நீர், விளக்கு, காரவீடு எதுவும் இல்லை. இந்தப் பள்ளி அருகே இருக்கிறது. எனவே எங்களின் குழந்தைகள் குறைந்தபட்சம் படிக்கவும் எழுதவும் முடியும்,” என்கிறார் அவர். அதுல் இந்த சிறு கட்டடம் பற்றி பெருமிதம் கொண்டிருக்கிறார். இங்குதான் அவரது குழந்தைகளான சாஹில் மற்றும் ஷப்னம் ஆகியோர் ஏழு பெண் குழந்தைகள் மற்றும் ஒன்பது ஆண் குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கின்றனர்.
இந்தப் பள்ளியைதான் மாநில அரசாங்கம் அப்புறப்படுத்தி வேறு பள்ளியுடன் இணைக்க விரும்புகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் இந்த மக்களுக்கு அது அதிர்ச்சி தரும் செய்தி. மேய்ச்சல் குழுவும் சீர் மரபினராகவும் இருக்கும் பார்திகள் மகாராஷ்டிராவில் பட்டியல் பழங்குடியினராக இருக்கின்றனர்.
ஒன்றரை நூற்றாண்டுகளாக இம்மக்கள் கடும் பாரபட்சத்தையும் வறுமையையும் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். 1871ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி ‘குற்றப்பழங்குடி சட்டத்தை’ கொண்டு வந்தது. அச்சட்டம் கிட்டத்தட்ட 200 பழங்குடி சமூகங்களையும் பிற சாதிகளையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஏற்காத காரணத்தால் ஒடுக்கியது. பார்திகளும் அதில் இடம்பெற்றிருந்தனர். இச்சட்டத்தின்படி, இக்குழுக்களை சேர்ந்தவராக இருந்தால் நீங்கள் பிறப்பால் குற்றவாளி என அர்த்தம். இச்சட்டம் 1952ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் ரத்து செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சமூகத்தினர் சீர்மரபினர் என அறிவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீதான களங்கம் மட்டும் போகவே இல்லை. வழக்கமான வேலைகள் பெறுவதென்பது பார்திகளுக்கு அசாத்தியமான காரியம். பள்ளிக்கு செல்ல முயலும் அவர்களது குழந்தைகள் கேலி கிண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டு தாக்கப்படவும் நேர்வதுண்டு.
















