அவர்களும் விவசாயிகள் தான். டெல்லியில் போராட கடலென திரண்டுள்ள விவசாயிகளில் அவர்களும் அடங்குவர். ஆனால் அவர்களின் நெஞ்சில் பதக்கங்களை வரிசையாக அணிந்துள்ளனர். அவர்கள் முன்னாள் இராணுவ வீரர்கள். 1965, 1971 காலகட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிரான போர்களிலும், 1980களில் இலங்கையிலும் பணி புரிந்தவர்கள். போராடும் விவசாயிகளை சமூக விரோதிகள், தீவிரவாதிகள், காலிஸ்தானிஸ் என்று அரசும், ஊடகத்தின் சக்தி வாய்ந்த பிரிவினரும் சொல்லி வருவது அவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் லூதியானா மாவட்டம் கில் கிராமத்திலிருந்து வந்துள்ள பிரிகேடியர் எஸ்.எஸ். கில் (ஓய்வு) என்னிடம் பேசுகையில், “அமைதியாகப் போராடும் விவசாயிகளிடம் அரசு அடக்குமுறைகளைக் கையாள்வது துயரமானது. அவர்கள் டெல்லி செல்ல விரும்பினார்கள், அரசு அவர்கள் தடுத்து நிறுத்தியது தவறானது, அராஜகமானது. தடுப்புகள், சாலைகளை தோண்டுதல், தடியடி பிரயோகம், பீரங்கிகளைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சுவது என விவசாயிகள் மீது அரசு தாக்குதல் நடத்துகிறது. எதற்காக? ஏன்? இப்படி செய்வதற்கு என்ன காரணம்? விவசாயிகளின் உறுதியால் இதுபோன்ற அனைத்து தடைகளும் உடைபட்டுள்ளன.”
பணியில் இருந்தபோது 13 பதக்கங்களை வென்ற 72 வயது முன்னாள் இராணுவ வீரர் 16 பேர் கொண்ட குடும்பத்திலிருந்து வந்துள்ளார். அவருக்கு என கில்லில் சில ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. 1971 போர், பிற இராணுவ நடவடிக்கைகள், 1990களில் பஞ்சாபில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் சேவையாற்றி உள்ளார்.
“இச்சட்டங்களைக் குறித்து விவசாயிகளிடம் எவ்வித ஆலோசனையும், கருத்தும் கேட்கவில்லை,” என்கிறார் பிரிக். கில். “டெல்லியின் வாயில்களில் தற்போது நடப்பது உலகின் மிகப்பெரும் புரட்சி. ஏன் அரசு இச்சட்டங்களை திரும்பப் பெற மறுக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு 2020 ஜூன் 5ஆம் தேதி அவசரச் சட்டமாகக் கொண்டு வந்தது. செப்டம்பர் 14ஆம் தேதி இவற்றை மசோதாக்களாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. அதே மாதம் 20 ஆம் தேதி சட்டமாக இயற்றியது. அந்த மூன்று சட்டங்களும் பின்வருமாறு: விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020.










