“நான் எதையுமே கேட்கவில்லை. நான் நாட்டுக்காகப் போராடினேன். எந்தச் சன்மானத்தையும் எதிர்பார்க்கவில்லை. என் குடும்பத்துக்கு என்று எதையும் அரசிடம் கேட்டதில்லை. இப்போதாவது என்னுடைய பங்களிப்பை அரசு அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன்.”
சில வருடங்களுக்கு முன்னால் உடல்நலக்குறைவு, வறுமை அவரைப் புரட்டிப்போட்டன. அப்போது ஜெய்பூரை சேர்ந்த இளம் பத்திரிகையாளர் பரேஷ் ரத் இவரின் கதையைக் கட்டுரையாக்கினார். பரேஷ் அவரைக் குடிசைப்பகுதியை விட்டு ஒரு அறை உள்ள இந்த இடத்திற்குத் தன்னுடைய சொந்த செலவில் இடம் மாற்றினர். லட்சுமியின் மருத்துவச் செலவுகளையும் பரேஷ் பார்த்துக் கொண்டார். இப்போது உடல்நலமில்லாமல் தன்னுடைய மகனின் வீட்டில் லட்சுமி இருக்கிறார். தன்னுடைய மகனின் குடிப்பழக்கம் குறித்துக் கவலைகள் இருந்தாலும் அவருடனே தங்கியிருக்கிறார். பரேஷ் ரத்தின் கட்டுரையைத் தொடர்ந்து பலரும் இவரைப் பேட்டி கண்டார்கள். ஒரு தேசிய பத்திரிகையின் அட்டைப்படத்தில் இவர் இடம்பிடித்தார்.
“நான் முதல் கட்டுரையை எழுதிய போது ஓரளவுக்கு உதவி கிடைத்தது. அப்போது கோராபுட்டின் ஆட்சியராக இருந்த உஷா பதி கரிசனத்தோடு நடந்து கொண்டார். செஞ்சிலுவை சங்க நிதியில் இருந்து பத்தாயிரம் ரூபாயை மருத்துவச் செலவுக்கு வழங்கினார். அதோடு நில்லாமல் அரசாங்க நிலத்தை ஒதுக்குவதாகவும் சொன்னார். அதற்குள் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். வங்கத்தைச் சேர்ந்த சிலர் ஓரளவுக்கு நிதியுதவி செய்தார்கள். இவை எல்லாம் வெகு சீக்கிரமே நின்று போயின. மீண்டும் கொடும் வறுமைக்குத் தள்ளப்பட்டார் லட்சுமி.” என்கிறார் பரேஷ் ரத். “இனிமேல் மத்திய அரசின் ஓய்வூதியம் கிடைத்தாலும் அவர் என்ன வாழ்ந்து விடப்போகிறார். மத்திய அரசு அவரை அங்கீகரித்தால் மட்டும் போதும். வெறும் பெருமை சார்ந்த ஒன்று மட்டுமே இந்தக் கோரிக்கை.” என்று சொல்கிறார் பரேஷ் ரத்.
பல்வேறு ஓயாத முயற்சிகளுக்குப் பிறகு லட்சுமிக்கு துண்டு நிலம் பஞ்சியாகுடா கிராமத்தில் ஒதுக்கப்பட்டது. அதில் அரசாங்கமே வீடு கட்டித்தருமா என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார். இப்போதைக்கு முன்னர் இருந்த அறையை விட மேம்பட்ட அறையில் லட்சுமி வாழ வசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறார் பரேஷ்.
இப்போது ஓரளவுக்கு மக்கள் அவரை அங்கீகரிக்கிறார்கள். சில அமைப்புகள் அவருக்காகப் போராடுகின்றன. “நாளைக்குப் பக்கத்தில் இருக்கும் தீப்தி பள்ளியில் கொடியேற்ற போகிறேன்.” என்று பெருமிதம் பொங்க ஆகஸ்ட் பதினான்கு அன்று எங்களிடம் சொல்கிறார் லட்சுமி. ஆனால், “விழாவுக்கு அணிந்து கொள்ள ஒழுங்கான உடுப்பு சேலை இல்லை.” என்று இயல்பாகப் பேசுகிறார்.
அதே சமயம், வயதாகி கொண்டிருக்கும் இந்த இந்திய தேசிய ராணுவ வீரர் தன்னுடைய அடுத்தப் போருக்கு ஆயத்தம் ஆகிறார். ‘டெல்லிக்கு போ’ என்கிற நேதாஜியின் முழக்கத்தோடு டெல்லிக்குப் போகத் திட்டமிட்டுள்ளார். “என்னை மத்திய அரசு அங்கீகரிக்காமல் போனால் நாடாளுமன்றத்தின் முன்னால் ஆகஸ்ட் 15-க்குப் பின்னால் தர்ணாவில் அமர்வேன். டெல்லி நோக்கி போகத்தான் போகிறேன்,,
அறுபது ஆண்டுகாலம் கழித்து டெல்லிக்கு போகும் கனவை அவர் நிஜம் ஆகலாம். அவர் ‘ஒவ்வொரு அடியாக ஒற்றுமையோடு எடுத்து வைப்போம்.’ என்று பாட ஆரம்பிக்கிறார்.
புகைப்படங்கள்: பி சாய்நாத்