லக்ஷ்மிபாய் கலே ஒவ்வொரு வருட விளைச்சலிலும் ஒரு பகுதியை இழக்கிறார். அதீத மழையினாலோ பஞ்சத்தினாலோ அல்ல. “எங்களின் பயிர்கள் அழிக்கப்பட்டன,” என்கிறார் 60 வயது லஷ்மிபாய். “நிலத்தில் விலங்குகள் மேய ஊர் பஞ்சாயத்து அனுமதிக்கிறது. நாங்கள் அடைந்த நஷ்டத்துக்கு கணக்கே இல்லை.”
நாசிக் மாவட்டத்தின் மொகதி கிராமத்தை சேர்ந்த லஷ்மிபாய் மற்றும் அவரின் கணவர் வாமன், ஊரின் பொது மேய்ச்சல் நிலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் முப்பது வருடங்களாக விவசாயம் பார்த்து வருகின்றனர். துவரை, கம்பு, நெல் முதலிய பயிர்களை அங்கு வளர்க்கிறார்கள். “ஊர்க்காரர்களின் கால்நடைகளை எங்கள் நிலத்தில் மேயவிடவில்லை எனில் எங்கள் மேல் வழக்கு போடப் போவதாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் சொல்கிறார்கள்,” என்கிறார் அவர்.
1992ம் ஆண்டிலிருந்து லஷ்மிபாயும் அவர் கிராமத்தை சேர்ந்த பிற விவசாயிகளும் நிலவுரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். “மூன்றாம் தலைமுறையாக இந்த நிலத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறேன், இன்னும் எங்களுக்கு இந்த நிலம் சொந்தமாகவில்லை,” என்கிறார் அவர். “2002ம் ஆண்டில் சத்தியாகிரகப் போராட்டமும் சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தினோம்.” அதிகமான பெண்களை உள்ளடக்கிய 1500 விவசாயிகள் நாசிக் மத்திய சிறையில் 17 நாட்களை அப்போது கழித்ததாக நினைவுகூர்கிறார்.
நிலவுரிமையின்றி லோகர் என்கிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த லஷ்மிபாய்க்கு பயிர் அழிவில் உதவ எவருமில்லை. “நிலம் எங்கள் பெயரில் இல்லாததால், கடனோ பயிர் காப்பீடோ எங்களுக்கு கிடைப்பதில்லை,” என்கிறார் அவர். நஷ்டங்களை விவசாயக் கூலியாக 16 மணி நேரமெல்லாம் வேலை பார்த்து ஈடு கட்டிக் கொள்கிறார்.
பழங்குடி விவசாயியும் விதவையுமான 55 வயது விஜாபாய் கங்குர்டேவும் இதே போன்ற சூழலில்தான் இருக்கிறார். மொகதியில் இருக்கும் நிலத்தை கொண்டு அவரால் வாழ்ந்துவிட முடியவில்லை. “என் இரண்டு ஏக்கர் நிலத்தில் எட்டு மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, அடுத்த எட்டு மணி நேரம் வேறோருவர் நிலத்தில் விவசாயக் கூலியாக வேலை பார்க்கிறேன்,” என்கிறார் விஜாபாய். அவரின் நாட்கள் இரண்டு எட்டு மணி நேர வேலைதினங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. காலை 7 மணிக்கே வேலையை துவங்கி விடுவார்.
“ஆனால் யாரிடமும் நான் கடன் வாங்கியதில்லை,” என்கிறார். “100 ரூபாய்க்கு பத்து ரூபாய் வட்டி கேட்கிறார்கள். அதுவும் மாதக்கடைசியிலேயே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.”லஷ்மிபாயும் கடன்காரர்களிடமிருந்து தூர விலகியே இருக்கிறார். “பக்கத்து ஊர்களில் விதவைகளை கடன்காரர்கள் அச்சுறுத்தியிருக்கிறார்கள்,” என்கிறார் அவர்.







