“யாக் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. பீடபூமியின் கீழ்ப்புறத்தில், சுமார் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் வெகு சில யாக் மாடுகளையே பார்க்க முடிகிறது,” என்கிறார் பத்மா துமோ. இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக யாக் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்
சன்ஸ்கர் வட்டாரத்தில் உள்ள அப்ரன் கிராமத்தைச் சேர்ந்தவரான பத்மா, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 120 மாடுகளுடன், வானுயர்ந்த, உறைபனித் தட்பவெட்பம் நிலவும் லடாக் மலைகளின் வழியாக பயணம் செய்கிறவர். அந்த மலைகளில் தட்பவெட்பம் மைனஸ் 15 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லும்.
இத்தகைய உறைபனி நிலைமைகளில் யாக் மாடுகள் எளிதாக தகவமைந்து வாழ்கின்றன. ஆனால், வெப்பநிலை 13 டிகிரி செல்ஷியசுக்கு மேலே போனால், அவற்றால் வாழ முடியாது.
ஆனால், கடந்த சில பத்தாண்டுகளில் சன்ஸ்கர் பள்ளத்தாக்கில், பீடபூமியின் கீழ்ப்புறத்தில், கோடைக்காலத்தில் வெப்ப நிலை 25 டிகிரிக்கு மேல், சில நேரங்களில் 32 டிகிரி செல்ஷியஸ் வரையில் கூட செல்கிறது. “கோடை காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் இடையில் தட்பவெட்ப நிலையில் பெருத்த வேறுபாடு நிலவுகிறது,” என்கிறார் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஓட்டுநர் டென்சின் என்.
வழக்கத்துக்கு மாறான வெப்ப நிலை, யாக் மாடுகளின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி 2012 – 2019 காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் இவற்றின் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்தது (20-வது கால்நடை கணக்கெடுப்பு) .
சங்தங் பீடபூமியில் பெருமளவில் யாக் மேய்ச்சல்காரர்கள் உள்ளனர். ஆனால், ஒப்பீட்டளவில் மிக குறைவானவர்களே சன்ஸ்கர் பள்ளத்தாக்கில் உள்ளனர். சன்ஸ்கர்பாக்கள் என்று அறியப்படும் அவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். கார்கில் மாவட்டத்தைச் சேர்ந்த அப்ரன், அக்ஷோ,. சாஹ் கிராமங்களைச் சேர்ந்த சில குடும்பங்கள் மட்டுமே யாக் மந்தைகள் வைத்துள்ளன.
நோர்ப்பல் ஒரு மந்தை மேய்ப்பவராக இருந்துவந்தார். ஆனால், 2017ல் அவர் தனது யாக் மாடுகளை விற்றுவிட்டு, அப்ரன் கிராமத்தில் குறிப்பிட்ட பருவத்தில் நடக்கும் கடை ஒன்றைத் தொடங்கிவிட்டார். மே மாதம் முதல் அக்டோபர் வரை திறந்திருக்கும் அவரது கடையில் தேனீர், பிஸ்கட்டுகள், பேக் செய்த உணவுகள், மண்ணெண்ணெய், பாத்திரங்கள், மசாலாப் பொருள்கள், சமையல் எண்ணெய், உலர் இறைச்சி உள்ளிட்ட பொருள்கள் விற்கும். மாடு மேய்க்கும் தொழில் கடும் உழைப்பைக் கோருவதாகவும், லாபம் குறைவானதாகவும் இருந்ததை அவர் நினைவுகூர்கிறார். “முன்பு நானும் யாக் மாடுகள் வைத்திருந்தேன். இப்போது என்னிடம் பசுக்கள்தான் உள்ளன. என்னுடைய கடையில் இருந்துதான் என்னுடைய வருவாயில் பெரும்பகுதி வருகிறது. கடை மூலம் மாதம் மூன்றாயிரம், நான்காயிரம் கிடைக்கும். இதைவிடவும் யாக் மேய்ப்பதில் குறைவாகதான் கிடைக்கும்,”
அப்ரன் கிராமத்தைச் சேர்ந்தவர்களான, சோனம் மோட்டப், செரிங் அங்மோ ஆகியோர் கடந்த சில பத்தாண்டுகளாக மேய்ப்பர்களாக இருக்கிறார்கள். சுமார் 120 யாக் மாடுகளை இவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். “ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் (மே முதல் அக்டோபர் வரையிலான காலம்) இதைவிட உயரமான மலைப்பகுதிக்கு புலம் பெயர்ந்து செல்வோம் (அங்கே இதைவிடக் குளிராக இருக்கும்). அங்கே தோக்சாவில் நான்கைந்து மாதம் வசிப்போம்,” என்கிறார் செரிங்.
கோடைக்காலத்தில் புலம் பெயர்ந்து வரும் குடும்பங்களுக்காக பல அறைகளோடும், சில நேரம் ஒரு சமையலறையோடும் இருக்கும் குடியிருப்பே தோக்சா என்று அழைக்கப்படுகிறது. கோத், மணி என்றும் அழைக்கப்படும் இந்த வீடுகள், எளிதாக கிடைக்கும் கல், மண் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டவை. ஒரு கிராமத்தில் இருந்து வரும் மேய்ப்பர்கள் ஒரு தோக்சாவில் சேர்ந்து வாழ்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மந்தையைப் பார்த்துக்கொள்வார்கள். “இந்த விலங்குகளை நான் மேய்க்கிறேன்; பார்த்துக்கொள்கிறேன். ஒரே வேலையாகத்தான் இருக்கும்,” என்கிறார் சோனம்.
இந்த மாதங்களில், சோனம், செரிங் ஆகியவர்களின் பொழுது அதிகாலை 3 மணிக்குத் தொடங்கும். அப்போது தூக்கத்தில் இருந்து எழும் இவர்கள் சுர்பி என்னும் உள்ளூர் பாலாடைக் கட்டி செய்வார்கள். அவற்றை அவர்கள் விற்பார்கள். “விடிந்தவுடன், மந்தையை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்வோம். பிற்பகலில் ஓய்வெடுப்போம்,” என்கிறார் சோனம். அவருக்கு வயது 69.
“இங்கே (சன்ஸ்கர் பள்ளத்தாக்கில்) உள்ள மேம்ய்ப்பர்கள் பெரும்பாலும் பெண் ‘சோமோஸ்’களை (dzomos) நம்பியே இருக்கிறோம்,” என்கிறார் செரிங். யாக், கோட்ஸ் ஆகியவற்றின் கலப்பின விலங்கே சோமோஸ். இவை பெண்ணினம். இவற்றில் உள்ள ஆணினத்தை சோ என்பார்கள். சோக்கள் இனப்பெருக்கம் செய்வதில்லை. “இனப்பெருக்கம் செய்வதற்காகவே நாங்கள் யாக் மாடுகளை வைத்திருக்கிறோம். சோமோஸ்களிடம் பால் கறந்து நெய், சுர்பி ஆகியவை தயாரிக்கிறோம்,” என்கிறார் செரிங்.
முந்தைய தசாப்தத்தில் கிடைத்த வருவாய், தற்போது மூன்றில் ஒரு மடங்காக குறைந்துவிட்டதாக இந்த இணையர் குறிப்பிடுகிறார்கள். இந்த வேலையை சார்ந்திருப்பது கடினமாகி இருப்பதாக இவர்களைப் போல பலரும் கூறுகிறார்கள். பாரி சார்பில் இவர்களை 2023 ஆகஸ்ட் மாதம் சந்தித்தபோது, குளிர் காலத்தில் தீவனம் கிடைப்பது கடினமாக இருப்பதாக கூறினர். போதிய நீர் இருந்தால்தான் தீவனங்கள் கிடைக்கும். ஆனால், லடாக்கில் பனிப்பொழிவு குறைவதாலும், பனிப்பாறைகள் தேய்வதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும்தான் இந்த வானுயர்ந்த பனிப்பாலைவனத்தில் நீராதாரங்கள்.
அப்ரன் கிராமம் இன்னும் பாதிக்கப்படவில்லை என்றாலும் சோனம் கவலை கொண்டிருக்கிறார். “இங்கே பருவநிலை மாறி குடிப்பதற்கு தண்ணீரோ, மாடுகளுக்கு புல்லோ இல்லாமலே போய்விட்டால் என்ன நடக்கும் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்,” என்கிறார் அவர்.
சோனம், செரிங் இணையருக்கு 5 குழந்தைகள். எல்லோரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் கூட இந்த தொழிலில் இறங்கவில்லை. அதற்குப் பதில் அவர்கள் தினக்கூலித் தொழிலையே விரும்புகிறார்கள்.
“இளைய தலைமுறை, பாரம்பரியத் தொழிலை செய்வதைவிட நகரங்களில் குடியேறுவதையே விரும்புகிறது. அவர்களில் பெரும்பாலோர் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் என்கிற நிறுவனத்தில் ஓட்டுநர்களாகவும் தொழிலாளர்களாகவும் வேலை செய்கிறார்கள்,” என்கிறார் சோனம்.
பத்மா துமோ ஒப்புக்கொள்கிறார். “இனி இந்த தொழில் (யாக் மாடு மேய்ப்பது) நீடித்து நிலைபெறும் தொழில் அல்ல,” என்கிறார் அவர்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்