வெப்பத்தில் தகிக்கும், வியர்வை கசகசக்கும் ஒரு மே மாதப் பகல் பொழுது. ஆனால், மொஹாவில் உள்ள ஹஸ்ரத் சையது ஆல்வி (ரெஹ்மதுல்லா அலைஹ்) தர்கா கூட்டம் நெரிகிறது. ஒஸ்மானாபாத் மாவட்ட கலம்ப் வட்டாரத்தில் உள்ள, 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தர்கா அது. ஆண்டுதோறும் நடக்கும் கந்தூரி வழிபாடும் விருந்தும் தடபுடலாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் பங்கேற்கும் நாற்பது குடும்பங்களில் பெரும்பாலானவை இந்து குடும்பங்கள்தான். தோபலே குடும்பம் அதில் ஒன்று. நானும் எனது குடும்பமும் இங்கே விருந்தினர்கள்.
விவசாயக் குடும்பங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் கோடை காலத்தில், மரத்வாடா பகுதியின் ஒஸ்மனாபாத், லத்தூர், பீட், ஜல்னா, ஔரங்காபாத், பர்பனி, நான்டெட், ஹிங்கோலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள, பீர்கள் என அழைக்கப்படும் புனிதர்களின் தர்காக்களில் திருவிழா பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அங்கு வருகிறவர்கள், ஆட்டுக் கிடாய் பலியிட்டு, சமைத்த இறைச்சியை படையல் வைத்து, திருவருள் வேண்டி, ஒன்றாக உணவு பறிமாறி, ஒன்றாக சாப்பிட்டு மகிழ்வார்கள்.
“பல தலைமுறைகளாக கந்தூரி செய்கிறோம்,” என்கிறார் 60 வயது பகீரதி கடம் என்கிற எங்கள் உறவினர். இவர், ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள யேத்ஷி என்ற பகுதியைச் சேர்ந்தவர். மரத்வாடா பகுதி 600 ஆண்டுகாலம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்தது. 224 ஆண்டுகால ஹைதராபாத் நிஜாம் ஆட்சியும் இதில் அடக்கம். இது போன்ற இஸ்லாமிய ஆலயங்கள் மீதான நம்பிக்கையும், இங்கே நடக்கும் வழிபாடும் மக்களின் மனங்களிலும், சடங்குகளிலும் ஒன்று கலந்து ஒத்திசைவு வாழ்வாக பரிணமிக்கிறது.
“கட் தேவதாரியில் நாங்கள் வழிபடுகிறோம். தவராஜ் கேடாவைச் சேர்ந்தவர்கள் இங்கே மொஹாவுக்கு வருகிறார்கள். லத்தூர் மாவட்டம் போர்காவன் பி.கே. என்ற உங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் ஷெரா செல்வார்கள்,” என்று பல நூற்றாண்டுகளாக எந்த ஊர் எந்த தர்காவில் வழிபடுகிறது என்ற மரபை விவரிக்கிறார் நாங்கள் அன்போடு பாகா மவ்ஷி என்று கூப்பிடும் பகீரதி.
இங்கே மொஹாவில் உள்ள ரெஹமதுல்லா தர்காவில் உள்ள ஒவ்வொரு மரத்தடியிலும், ஒவ்வொரு தகரம் அல்லது தார்ப்பாய் கொட்டகையிலும் மக்கள் அடுப்பு கூட்டி உணவு சமைத்து, தர்காவில் படைக்கிறார்கள். ஆண்களும், பெண்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் விளையாடித் தீர்க்கிறார்கள். காற்று வெக்கையாக வீசுகிறது. புளியமரக் கிளைகள் அளிக்கும் நிழலைப் போலவே, மேற்கு வானில் திரண்ட மேகங்களும் கொஞ்சம் நிழலைத் தருகின்றன. தர்காவில் உள்ள 90 அடி ஆழமுள்ள, கல் பாவிய பழைய கிணறு காய்ந்து கிடக்கிறது. மழைக் காலத்தில் இதில் நீர் நிரம்பிவிடும் என்கிறார் ஓர் உறவினர்.




















