"வெள்ளிக்கிழமை அன்று ஜி20 மாநாட்டு தலைவர்களை வரவேற்பதற்காக தில்லி நகரம் ஜொலிக்கையில், தில்லியின் விளிம்புகளில் வாழ்பவர்களின் உலகம் இருளானது. யமுனா ஆற்றின் வெள்ள அகதிகளாக வெளியேறிய விவசாயிகள் தற்போது யார் பார்வையும் படாதபடிக்கு அகற்றப்பட்டிருக்கிறார்கள். கீதா காலனி மேம்பாலத்துக்குக் கீழே அவர்கள் தங்கியிருந்த தற்காலிக குடில்களிலிருந்து வெளியேற்றப்பட்டு ஆற்றின் ஓரங்களில் இருக்கும் காட்டுப் பகுதிகளில் விடப்பட்டு, யார் கண்ணிலும் படாமல் மூன்று நாட்கள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
"எங்களில் சிலரை போலீஸ் கட்டாயப்படுத்தி வெளியேற்றியது. 15 நிமிடங்களில் வெளியேறவில்லை எனில் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்படுவோம் என்றார்கள்," என்கிறார் ஹிராலால்.
காட்டுப் பகுதியில் உயர்ந்து நிற்கும் புற்களுக்குள் பாம்புகளும், தேள்களும் பிற ஆபத்துகளும் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. "நீரும் மின்சாரமுமின்றி எங்களின் குடும்பங்கள் இருக்கின்றன. யாரையாவது தேளோ பாம்போ கொட்டியோ கொத்தியோ விட்டால், மருத்துவ உதவி கூட கிடையாது," என்கிறார் விவசாயியான அவர்.
*****
குடும்பத்துக்கான எரிவாயு சிலிண்டர் எடுத்து வர விரைகிறார் ஹிராலால். 40 வயதுக்காரரான அவர், சுற்றி தண்ணீர் ஏறிக் கொண்டிருக்கும்போதும், தில்லியின் ராஜ்காட்டருகே இருக்கும் பெலா எஸ்டேட்டிலுள்ள வீட்டுக்கு செல்கிறார்.
அது ஜூலை 12, 2023. கனமழையால் யமுனை ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்தது. அதன் கரைகளில் வாழ்ந்து கொண்டிருந்த ஹிராலால் போன்றவர்களுக்கு நேரம் கடந்து விட்டது.
60 வயது சமேலி (கீதா என்றும் அழைக்கப்படுபவர்) யமுனா புஷ்டா பகுதியின் மயூர் விகாரில் வசித்தவர். பக்கத்து வீட்டுக்காரரின் ஒரு மாத குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடுகிறார். பயத்தில் இருக்கும் ஆடுகளை படகுகளில் வைத்து மக்கள் தள்ளிக் கொண்டு செல்கின்றனர். வெறித்து பார்க்கும் நாய்கள், தோள்களில் இருக்கின்றன. பல, வழியில் விழுகின்றன. நீர் மேலும் உயர்ந்து எல்லாவற்றையும் அடித்து செல்வதற்கு முன்பு, பாத்திரங்களையும் ஆடைகளையும் எடுத்துக் கொள்ள முயலுகின்றனர் மக்கள்.
“காலையில் நீர் சூழ்ந்து விட்டது. எங்களை காப்பாற்ற படகுகள் வரவில்லை. பாலங்களை நோக்கியும் நிலம் தென்படும் இடங்களை நோக்கியும் மக்கள் ஓடினார்கள்,” என சொல்கிறார் பெலா எஸ்டேட்டில் ஹிராலாலுக்கு அருகே வசித்த 55 வயது ஷாந்தி தேவி. “குழந்தைகளை பாதுகாக்க வேண்டுமென்பதுதான் முதல் எண்ணமாக இருந்தது. அழுக்கு நீரில் பாம்புகளும் பிற உயிரினங்களும் இருட்டில் தெரியாமல் இருக்கலாம்.”
உணவுப்பொருட்களும் குழந்தைகளின் பாடப்புத்தகங்களும் நீரில் அடித்து செல்வதை ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். “25 கிலோ கோதுமையும் உடைகளும் நீரில் அடித்து செல்லப்பட்டுவிட்டது…”
சில வாரங்கள் கழித்து, கீதா காலனி மேம்பாலத்துக்கு கீழ் அவர்கள் இருந்த தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்தவர்கள் பாரியிடம் பேசினார்கள். “அங்கிருந்து கிளம்பும்படி அதிகாரிகள் எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எங்களின் உடைகளை கட்டிக் கொண்டு, முடிந்தளவு ஆடுகளை எடுத்துக் கொண்டு படகுக்கு கேட்டோம். ஆனால் வரவில்லை,” என்கிறார் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் பேசிய ஹிராலால்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஹிராலால் மற்றும் ஷாந்தி தேவி குடும்பங்கள் கீதா காலனி மேம்பாலத்துக்கு கீழ் வாழ்ந்த் வருகின்றன. இரவில் விளக்கு எரியவும் பிற அடிப்படை தேவைகளுக்குமான மின்சாரத்தை தெருவிளக்குகளில் எடுக்கும் கட்டாயத்தில் இருக்கின்றனர். 4லிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தார்யாகஞ்சின் தண்ணீர் குழாயிலிருந்து சைக்கிளில் 20 லிட்டர் குடிநீரை நாளொன்றுக்கு இரு முறை கொண்டு வருகிறார் ஹிராலால்.
வாழ்க்கையை மீட்பதற்கான நிவாரணம் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒரு காலத்தில் யமுனைக் கரையின் பெருமைக்குரிய விவசாயியாக இருந்த ஹிராலால், தற்போது கட்டுமானத் தொழிலாளராக பணிபுரிகிறார். அண்டை வீட்டு ஷாந்தி தேவியின் கணவரான 58 வயது ரமேஷ் நிஷாத், முன்னாள் விவசாயி. சாலையோரம் தின்பண்டம் விற்கும் நெடிய வியாபாரிகளின் வரிசையில் ஒருவராக நிற்கிறார்.
இந்த நிலையும் கூட அரசாங்கத்தால் குலைக்கப்பட்டு விட்டது. ஜி20 மாநாட்டுக்காக தில்லி தயாராகி வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு வியாபாரிகள் அங்கிருக்கக் கூடாதென சொல்லப்பட்டிருக்கிறது. “கண்ணில் படக் கூடாது,” என அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். “எப்படி நாங்கள் சாப்பிடுவது?” எனக் கேட்கிறார் ஷாந்தி. “உலகத்துக்கு சிறப்பாக தெரிய வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் மக்களின் வாழ்க்கைகளையும் வீடுகளையும் அழிக்கிறீர்கள்.”
ஜூலை 16ம் தேதி தில்லி அரசாங்கம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.10,000 நிவாரணம் அறிவித்தது. தொகையை கேட்டதும், முதலில் ஹிராலால் நம்பவில்லை. “என்ன மாதிரியான நிவாரணம் இது? என்ன அடிப்படையில் அவர்கள் இந்த தொகையை தீர்மானித்தார்கள்? எங்களின் உயிர்களுக்கு வெறும் 10,000 ரூபாய்தான் மதிப்பா? ஒரு ஆட்டின் விலையே 8,000லிருந்து 10,000 ரூபாய் வரை இருக்கும். ஒரு தற்காலிக வீடு கட்டவே 20,000-லிருந்து 25,000 ரூபாய் வரை ஆகும்.”
இங்கு வாழும் பலரும், தாங்கள் விளைவித்துக் கொண்டிருந்த நிலத்தை இழந்து, தற்போது தினக்கூலி வேலைகளும் ரிக்ஷா இழுக்கும் வேலைகளும் வீட்டு வேலைகளும் செய்து கொண்டிருக்கின்றனர். “எவ்வளவு இழப்பு என கணக்கெடுத்தார்களா?” எனக் கேட்கின்றனர்.
ஆறு வாரங்களில் நீர் வடிந்து விட்டது. ஆனால் எவருக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை. நிறைய ஆவண நடைமுறைகள் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர் மக்கள். “முதலில் அவர்கள் ஆதார் அட்டை, வங்கி ஆவணங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை கொண்டு வரச் சொன்னார்கள். பிறகு குடும்ப அட்டைகள் கேட்டார்கள்,” என்கிறார் கமால் லால். மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்றே கூட அவருக்கு தெரியவில்லை.
விவசாய நிலங்களை அரசு திட்டங்களுக்கு பறிகொடுத்த 700 குடும்பங்கள், நிவாரணம் பெறுவதற்கான முந்தைய முயற்சிகள் எதுவும் நகரவில்லை. அவர்களை வெளியேற்ற விரும்பும் அதிகாரிகளுடன் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. வளர்ச்சியோ வெளியேற்றமோ, பேரிடரோ, கண்காட்சியோ பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். பெலா எஸ்டேட்டின் மஸ்தூர் பஸ்தி சமிடி குழுவில் கமாலும் இருக்கிறார். நிவாரணத்துக்கு அந்த அமைப்பு கோரி வந்த போதும், “வெள்ளங்கள் எங்கள் போராட்டங்களுக்கு தடையாகி விட்டன,” என்கிறார் 37 வயது நிறைந்த அவர், வியர்வையை துடைத்துக் கொண்டே.
*****
45 வருடங்களுக்கு பிறகு தில்லி மீண்டும் மூழ்குகிறது. 1978ம் ஆண்டில் 1.8 மீட்டர் உயரத்துக்கு யமுனா ஆறு உயர்ந்து 207.5 மீட்டரை தொட்டது. இந்த வருட ஜூலையில் அது 208.5 மீட்டர் உயரத்தையும் தாண்டியுள்ளது. ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச குறுக்கணைகள் நேரத்தில் திறக்கப்படாததால், நீர் அதிகரித்து தில்லியில் ஆறு பெருக்கெடுத்துவிட்டது. விளைவாக உயிர்களும் வீடுகளும் வாழ்க்கைகளும் பறிபோயின. பயிர்களும் பிற நீர் நிலைகளும் கூட கடுமையான பாதிப்பை சந்தித்தது.
1978ம் ஆண்டின் வெள்ளப்பெருக்கின்போது, ‘கிட்டத்தட்ட 10 கோடி அளவுக்கு இழப்பு நேர்ந்தது. 18 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்,’ எனக் குறிப்பிடுகிறது Irrigation and Flood Control Department of the Government of NCT of Delhi
ஜூலையில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகு ஒரு பொது நல மனு, கிட்டத்தட்ட 25,000 பேர் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறது. யமுனா ஆறு திட்ட த்தின்படி, புது தில்லியின் நகரச் சூழலியலில், வெள்ளப்பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்பு, தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டிருக்கிறது. “தாழ்வான பகுதிகளிலும் கிழக்கு தில்லியிலும் உள்ள கட்டடங்கள் மூழ்கும்.”
யமுனை ஆற்றங்கரையில் கிட்டத்தட்ட 24,000 ஏக்கர் விளை நிலமாக இருந்து நூற்றாண்டுக்கும் மேலாக விவசாயம் நடந்து வந்திருக்கிறது. ஆனால் கோவில், மெட்ரோ ஸ்டேஷன், காமன்வெல்த் விளையாட்டு கிராமம் போன்ற காங்க்ரீட் கட்டுமானங்கள் வந்த பிறகு வெள்ள நீர் நிலத்தடிக்கு செல்லும் வாய்ப்பின்றி போனது. மேலும் படிக்க: பெருநகரம், சிறு விவசாயிகள் மற்றும் அழிந்து வரும் ஒரு நதி
“நாம் என்ன செய்தாலும் இயற்கை தனக்கான பாதையை வகுத்துக் கொள்ளும். முதலில் மழைகளும் வெள்ளங்களும் குறைவாக பரவும். தற்போது குறைவான இடம் இருப்பதால், அது உயர்ந்து வெள்ளப்பெருக்காக மாறுகிறது. அது நமக்கு அழிவாகிறது,” என்கிறார் பெலா எஸ்டேட்டின் கமால். 2023ம் வெள்ளங்களில் பாதிக்கப்பட்டோரில் அவரும் ஒருவர். “அவர்கள் யமுனையை சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் எங்களை அனுப்பி விட்டார்கள்.!”
“யமுனை அருகே இருக்கும் சமவெளி மேம்படுத்தப்படக் கூடாது. அது ஏற்கனவே வெள்ளம் வரும் பகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு கட்டுமானமோ அக்ஷர்தாம் கோவிலோ மெட்ரோ ஸ்டேஷனோ அங்கு அமைந்திருப்பது, இயற்கையுடன் விளையாடுவது போலாகும்,” என்கிறார் கமால்.
“தில்லியை யார் மூழ்கடித்தது? தில்லி அரசாங்கத்தின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, ஒவ்வொரு வருடமும் ஜுன் 15-25 வரை தயார் நிலையில் இருக்க வேண்டும். குறுக்கு அணைகளை அவர்கள் நேரத்தில் திறந்து விட்டிருந்தால், ஆற்றில் இப்படியொரு வெள்ளம் ஏற்பட்டிருக்காது. நீதிபதியை கேள்வி கேட்பது போல் நீர் உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டது,” என்கிறார் ராஜேந்திர சிங்.
அல்வாரை சேர்ந்த சூழலியலாளர், தில்லி வெள்ளங்கள் குறித்த கருத்தரங்கில் பேசுகையில், “இது இயற்கை பேரிடர் அல்ல. கடுமையான மழை முன்பும் ஏற்பட்டிருக்கிறது,” என்கிறார். கருத்தரங்கு தில்லியில், மாசிலிருந்து யமுனையை காக்க உருவாக்கப்பட்ட அமைப்பான யமுனா சன்சத்தால் நடத்தப்பட்டது.
“யமுனையில் இந்த வருடம் நடந்த சம்பவத்துக்காக பல தலைகள் உருண்டிருக்க வேண்டும்,” என்கிறார் கருத்தரங்கில் டாக்டர் அஷ்வனி கே. கொசாயின். தேசிய பசுமை தீர்ப்பாயம் 2018ம் ஆண்டில் அமைத்த யமுனா கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக அவர் இருக்கிறார்.
“நீருக்கு வேகமும் உண்டு. கரைகள் இல்லையென்றால், நீர் எங்கே போகும்?” எனக் கேட்கிறார் கொசாயின். குறுக்கணைகளுக்கு பதிலாக நீர்த் தேக்கங்களை கட்டும்படி அறிவுறுத்தி வருகிறார் அவர்.தில்லியின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் சிவில் பொறியியல் கல்வி பேராசிரியராக இருக்கும் அவர், 1,500 காலனிகள் இருப்பதையும் தெருதோறும் இல்லாத கழிவுநீர் வசதியும் காரணங்கள் என்கிறார். “இது நோய்களையும் கொண்டு வரும்.”
*****
விவசாயம் தடைப்பட்டு, நிவாரணம் இன்றி, வெளியேற்றத்துக்கான மிரட்டல்களுடன் காலநிலை மாற்ற சிக்கலை எதிர்கொண்டு ஆபத்தான சூழலில் பெலா எஸ்டேட் விவசாயிகள் வாழ்கின்றனர். படிக்க. ’தலைநகரத்திலேயே விவசாயிகள் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர்’ . சமீபத்திய வெள்ளங்கள், தொடர் இழப்புகளின் அடுத்த கட்டம்தான்.
”4-5 பேர் கொண்ட ஒரு சிறு குடும்பம் 10 X 10 தற்காலிக அறையில் வசிக்க, 20,000-25,000 ரூபாய் தேவைப்படுகிறது. நீர் வராமல் தடுக்கும் ஷீட்டுக்கே 2,000 ரூபாய் செலவாகும். வீடு கட்ட தொழிலாளர்களை அமர்த்த, நாளொன்றுக்கு 500-700 ரூபாய் ஒருவருக்குக் கொடுக்க வேண்டும். நாமே செய்தால், நமக்கு கிடைக்கும் தினக்கூலியை இழந்துவிடுவோம்,” என்கிறார் ஹிராலால். மனைவி மற்றும் 17,15,10, 8 வயதுகளை கொண்ட நான்கு குழந்தைகள் ஆகியோருடன் வாழ்கிறார் அவர். மூங்கில் கழிகள் கூட ஒவ்வொன்றும் 300 ரூபாய் ஆகும். 20 கழிகளேனும் தேவைப்படும் என்கிறார் அவர். வெளியேறிய குடும்பங்கள் தங்களுக்கான நிவாரணத்தை யார் தருவாரென தெரியாமல் தவிக்கின்றனர்.
வெள்ளத்தில் தொலைந்த கால்நடைகளுக்கு ஈடாக கால்நடைகளை வாங்கும் செலவும் இருக்கிறது. “ஒரு எருமையின் விலை 70,000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. அது உயிரோடு இருக்கவும் பால் கொடுக்கவும் தீவனம் கொடுக்க வேண்டும். எங்களின் குழந்தைகளின் தினசரி பால் தேவைக்காக நாங்கள் கொண்டிருக்கும் ஆடுகளில் ஒன்றின் விலை 8,000லிருந்து 10,000 ரூபாய் வரை ஆகும்,” என்கிறார் அவர்.
அவரின் பக்கத்து வீட்டுக்காரர் ஷாந்தி தேவி, யமுனாக் கரையில் உரிமையாளராக இருந்ததாக தொடுத்த மனுவில் தோற்றுப் போய், அவரின் கணவர் தின்பண்டங்களை சைக்கிளில் வைத்து விற்கும் வேலையை செய்வதாகக் கூறுகிறார். நாளொன்றுக்கு 200-300 ரூபாய்தான் கிடைக்கிறது. “மூன்று நாட்கள் விற்பீர்களோ 30 நாட்கள் விற்பீர்களோ, எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு சைக்கிளிடமிருந்து மாதந்தோறும் போலீஸ் 1,500 ரூபாய் வாங்கிக் கொள்ளும்,” என்கிறார் அவர்.
வெள்ளநீர் வடிந்துவிட்டது. ஆனால் அடுத்த பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கின்றன. மலேரியா, டெங்கு, காலரா டைஃபாய்டு போன்ற நோய்கள் தோன்றியிருக்கின்றன. நிவாரண முகாம்களின்றி தினந்தோறும் 100 பேருக்கு கண் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ஹிராலாலுக்கும் கண் கோளாறு இருந்தது. அவரை சந்திக்கும் போது கண்ணாடி அணிந்திருந்தார். “இவற்றின் விலை ரூ.50. ஆனால் தேவை அதிகமாக இருப்பதால் 200 ரூபாய்க்குதான் கொடுத்தார்கள்.”
குறைவான
நிவாரணமேனும் கிடைக்கட்டும் என காத்திருக்கும் குடும்பங்களை குறித்து பேசுகையில் அவர்
வறண்ட புன்னகையை உதிர்த்து, “இது ஒன்றும் புதுக் கதை அல்ல, அடுத்தவரின் வலியிலிருந்துதான்
லாபமெடுக்கிறார்கள் இவர்கள்,” என்கிறார்.
இக்கட்டுரை செப்டம்பர் 9, 2023 அன்று மேம்படுத்தப்பட்டது.
தமிழில் : ராஜசங்கீதன்