நாடாளுமன்ற உறுப்பினராகும் வேட்பாளர்களுக்கு வீட்டில் அரைத்த மாவு கொண்டு சுட்ட பக்ரி ரொட்டியும் குழந்தைகள் பறித்து வந்த சரோலி பழங்களையும் கொடுத்து உபசரிக்கும் வாய்ப்பை நிச்சயமாக அம்பாபானிவாசிகள் விரும்பவே செய்கின்றனர்.
ஆனால் அரசியல்வாதி என அவரும் அவர்களது ஊருக்கு வந்ததே இல்லை. மூங்கில், மண், மாட்டுச்சாணம் கொண்டு முதல் வீடு அங்கு கட்டப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகி விட்டன. ஒருவரும் வரவில்லை. கற்கள் நிறைந்த, கரடுமுரடான மலைப்பகுதியின் சரிவில் அமைந்திருக்கும் அந்த குக்கிராமத்திலிருந்து, போக்குவரத்துக்கான சாலையை சென்றடையவே 13 கிலோமீட்டர் தூரம் ஆகும்.
818 பேர் (கணக்கெடுப்பு 2011) வசிக்கும் அம்பாபானியில் சாலை கிடையாது. மின்சார வசதி, குடிநீர் இணைப்பு, செல்ஃபோன் இணைப்பு, நியாயவிலைக் கடை, ஆரம்ப சுகாதார மையம், அங்கன்வாடி என எதுவும் கிடையாது. மாநிலத்தில் பட்டியல் பழங்குடியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் பவாரா சமூகத்தை சேர்ந்த மக்கள்தான் அங்கு வசிக்கின்றனர். 120 குடும்பங்களில் பெரும்பாலானோர், மத்தியப்பிரதேசத்தின் பெரிய நான்கைந்து சமூக இனக்குழுக்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களாக இருக்கின்றனர்.
இணையவசதி இல்லாத அப்பகுதியில் தொலைக்காட்சியும் இல்லை, செல்பேசிகளும் இல்லை. தாலியை பறித்துக் கொள்வது பற்றிய மோடியின் பேச்சோ அரசியல் சாசனத்தை காக்க வேண்டுமென பேசும் காங்கிரஸின் நோக்கம் பற்றியோ அந்த கிராமத்துக்கு தெரியாது. 2024ம் ஆண்டின் மக்களவை பிரசாரம் அம்பாபானி வாக்காளர்களை எட்டவே இல்லை.
மக்கள் விரும்பும் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, “சாலை” என பதிலளிக்கிறார் உங்க்யா குர்ஜா பவாரா. 56 வயதான அவர், குக்கிராமத்தின் பூர்வக்குடிகளின் வம்சாவளியை சேர்ந்தவர். பத்து வருடங்களுக்கு முன், வீட்டுக்கு ஓரு உலோக அலமாரி அவர் வாங்கியபோது, நான்கு பேர் அந்த 75 கிலோ அலமாரியை, “மருத்துவ ஸ்ட்ரெச்சர்” போல மலைக்கு தூக்கி வந்தனர்.
விவசாய விளைச்சல், மலைக்குக் கீழ் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொஹ்ராலே சந்தைக்கு இரு சக்கர வாகனங்களில் ஒவ்வொரு குவிண்டாலாக கொண்டு செல்லப்படும். அந்த பாதை தூசு நிறைந்து செங்குத்தான சரிவுகளையும் மேடுகளையும் கூர்மையான திருப்பங்களையும் ஓடைகளையும் கரடிகளையும் கொண்டது.
“அதே நேரத்தில், சாலை வந்தால் மரம் வெட்டு சட்டவிரோதமாக கடத்தப்படுவது அதிகரிக்குமோ என்ற பயமும் இருக்கிறது,” என்கிறார் உங்க்யா.
அவரின் மனைவியான பத்பாய், விறகு வெட்டும்போது கோடரி விழுந்து காலின் பெருவிரல் காயம் பட்டதிலிருந்து தள்ளாடி நடக்கிறார். வெட்டுக்காயம் ஆழமாக இருக்கிறது. ஆனால் அதை அவர் பெரிதாக கவனிக்க முடியவில்லை. “மொஹ்ராலே அல்லது ஹரிபுராவுக்கு நான் செல்ல வேண்டும்,” என்கிறார் அவர், ஏன் காயத்தை கவனிக்கவில்லை என்பதை விளக்க. “ஒரு நல்ல மருத்துவ மையத்தை இங்கு ஏதேனும் கட்சி எங்களுக்கு உருவாக்கிக் கொடுக்குமா?” என சிரிக்கிறார் அவர்.
அம்பாபானி குடும்பங்களில் ஒரு குழந்தையேனும் சத்துகுறைபாட்டில் இருப்பார். ஆனால் குழந்தையின் சத்துக் குறைபாடு எந்தளவுக்கு தீவிரமாக இருக்கிறது என்பது குடும்பத்துக்கு தெரியாது. கிராமத்தில் அங்கன்வாடி கிடையாது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே அங்கன்வாடிக்கான அனுமதி கிடைத்து விட்டதாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.
அதற்கு பதிலாக, மொஹ்ராலேவின் அங்கன்வாடி பணியாளருக்கு அம்பாபானியை கவனிப்பதற்கான கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு தேவையான சத்துணவையும் கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச்சத்து, ஃபோலிக் மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டு சில வாரங்களுக்கு ஒருமுறை, அங்கன்வாடி பணியாளர் அந்தச் சிரமமான பயணத்தை மேற்கொள்கிறார். “இங்கு ஒரு அங்கன்வாடி இருந்தால், சிறுவர்களேனும் அங்கு சென்று ஏதேனும் கற்றுக் கொள்வார்கள்,” என்கிறர பதிபாய். ஆறு வயதுக்குள்ளான குழந்தைகள் 50 பேர் இருப்பதாக உங்க்யா சொல்கிறார். ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாடு சேவை திட்டம் (ICDS), அங்கன்வாடி மையங்களின் வழியாக செயல்படுத்தப்படுவதற்கான குழந்தைகளின் வயது அது.
பாரம்பரியமாக குழந்தைகள் வீட்டுப் பிரசவத்தில்தான் பிறக்கின்றன. சமீபகாலமாக சில இளம்பெண்கள், 13 கிலோமீட்டர் பயணித்து மொஹ்ராலே அல்லது ஹரிபுரா மருத்துவ மையங்களுக்கு பிரசவங்களுக்காக செல்கின்றனர்.
உங்க்யாவுக்கும் பதிபாய்க்கும் ஐந்து மகன்களும் இரு மகள்களும் உண்டு. நிறைய பேரக் குழந்தைகளும் உண்டு. படிப்பறிவு இல்லாத இருவரும் மகன்களை பள்ளிக்கு அனுப்ப முயற்சித்தனர். ஆனால் சாலையின்றி அது சாத்தியப்படவில்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பள்ளிக் கட்டிடம் உருவானது. மூங்கில் மற்றும் ஓலை வேயப்பட்ட அறையாக, அந்த ஊரிலேயே மோசமான நிலையில் உருவாகியிருந்த கட்டிடம் அதுதான்.
“ஒரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டார். ஆனால் தாலுகாவின் வேறு பகுதியிலிருந்து ஓர் ஆசிரியர் அன்றாடம் இங்கு வந்து செல்ல முடியுமா?” எனக் கேட்கிறார் அம்பாபானியில் வசிக்கும் ரூப்சிங் பவாரா. அம்பாபானியில் பூர்விகமாக வந்து தங்கிய பஜ்ரியா கண்டல்யா பவாராவின் மகன் அவர். இரண்டு மனைவிகளை கொண்ட அவருக்கு 15 குழந்தைகள் என்கின்றனர் உள்ளூர்வாசிகள். இந்த 40 நிமிட பயணத்தை உள்ளூர்வாசிகளும் திறன்படைத்த பைக் ஓட்டுபவர்களும் மட்டும்தான் மேற்கொள்ள முடியும். பயந்த சுபாவம் கொண்டவர்களால் பயணத்தை மேற்கொள்ள முடியாதென்கிறார் அவர். வனத்துறை அதிகாரிகள் கூட, பாதை தவறி விடுவார்கள் என்கிறார் அவர்.
பதிபாயின் பேரக்குழந்தைகளில் ஒருவரான பார்க்யா, சோப்தா தாலுகாவின் தனோராவிலுள்ள ஆசிரமப் பள்ளியிலிருந்து (பட்டியல் பழங்குடி மற்றும் மேய்ச்சல் பழங்குடி குழந்தைகளுக்காக மாநில அரசு நடத்தும் விடுதிப் பள்ளி) கோடை விடுமுறைக்கு வந்திருக்கிறார். இன்னொரு பேரன் வேறொரு ஆசிரமப்பள்ளிக்கு செல்கிறார்.
அம்பாபானியில் ஆற்று நீர் ஸ்டீல் தம்ளர்களிலும் கட்டஞ்சாயா பீங்கான் கோப்பைகளிலும் எங்களுக்கு வழங்கப்பட்டது. அவற்றை எங்களுக்குக் கொடுத்த நான்கு சிறுமிகளும் பள்ளிகளுக்கு சென்றதில்லை எனக் கூறினார்கள்.
பதிபாயின் மகளான ரெஹெந்தி மணம் முடித்து சென்றிருக்கும் வீடு ஒன்றிரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அங்கு செல்லவென, ஒரு மலைச்சரிவை குறுக்காக வெட்டி பவாரா மக்கள் ஒரு பாதை போட்டிருக்கின்றனர்.
சாதி சான்றிதழ் பெறுவதற்கான அரச முறைகள் எளிமையாக்கப்பட சில வாக்காளர்கள் விரும்புவதாக ரெஹெந்தி சொல்கிறார். 20-லிருந்து 25 சதவிகித கிராமவாசிகளிடம் குடும்ப அட்டைகள் இல்லை என்கின்றனர் அவரைச் சுற்றி நிற்பவர்கள்.
நியாயவிலைக் கடை, கொர்பாவலி கிராமத்தில் இருக்கிறது. 15 கிலோமீட்டர் தொலைவில், மொஹ்ராலேவையும் தாண்டி அது இடம்பெற்றிருக்கிறது. ஆறு வயது குழந்தைகளுக்கு கூட பிறப்பு சான்றிதழ் இல்லை. மருத்துவமனை பிரசவங்கள் இல்லாததால், இந்த சான்றிதழ்கள் இன்றி, ஆதார் அட்டைகளை இளையோருக்கு பெற குடும்பங்கள் சிரமப்படுகின்றன. ஆதார் அட்டைகள் பெற்றால்தான் குடும்ப அட்டை பயனாளியாக முடியும்.
குடிநீர் இணைப்புக்கு அரசியல்வாதிகளிடம் முக்கியமாக கேட்க வேண்டும் என்கின்றனர் பெண்கள்.
கிணறுகளோ ஆழ்துளைக் கிணறுகளோ கிராமத்தில் கிடையாது. அடிகுழாய்களும் கிடையாது. மழைக்கால ஓடைகள் மற்றும் மேற்கில் ஓடும் தபி ஆற்றின் துணை ஆறுகளையும்தான் குடிநீருக்கும் பாசனத்துக்கும் கிராமவாசிகள் நம்பியிருக்கின்றனர். கடுமையான நீர் பஞ்சம் அரிதுதான். ஆனாலும் கோடையில் நீர் வரளும்போது கிடைக்கிற நீரின் தன்மை மோசமாக இருக்கிறது. “சில நேரங்களில் நாங்கள் ஆண்களை பைக்குகளில் அனுப்பி நீர் கொண்டு வருவோம்,” என்கிறார் ரெஹெந்தி. பெரும்பாலும் பெண்களும் சிறுமிகளும் நீரை வீட்டுக்கு ஒருநாளில் பலமுறை வெறுங்காலில் அந்த கடினமான பாதையில் சென்று கொண்டு வருவார்கள்.
மலையிலுள்ள பள்ளிக் கட்டிடம் நோக்கி செல்லும் தூசு நிறைந்த பாதையிலிருந்து கண்களை சுருக்கி குங்கிலிய மரத்தை கூர்ந்து கவனித்து ஒரு உலோக கோப்பை கொண்டு சுரண்டி கொண்டிருக்கிறார் கமல் ரஹாங்கியா பவாரா. மூன்று கிலோ குங்கிலிய மரமெழுகு கொண்டிருக்கும் ஒரு பை அவரின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. முற்பகலான அந்த நேரத்தில் 44 டிகிரி வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.
கூர்ந்து கவனித்து மரமெழுகை சேகரித்துக் கொண்டிருக்கும் கமல், ஒரு கிலோ மெழுகுக்கு ரூ.300 ஹரிபுரா சந்தையில் கிடைக்குமென நம்புகிறார். ஐந்து மணி நேரமாக மெழுகு சேகரித்துக் கொண்டிருக்கும் அவர், நான்கு நாட்களில் அந்தப் பையை நிரப்பியிருக்கிறார். உள்ளூர்வாசிகள் அந்த மெழுகை ‘டிங்’ என குறிப்பிடுகின்றனர். மகாராஷ்டிராவின் பிரபலமான ‘டிங்’ லட்டுகளில் இருக்கும் உண்ணத்தக்க மெழுகு அல்ல அது. இதில் கத்தூரி மணம் இருப்பதால், ஊதுபத்தி தயாரிப்பவர்களால் அதிகம் வாங்கப்படுகிறது.
மெழுகு சேகரிக்கும் பணியில், தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் இருக்கும் மரப்பட்டையை கவனமாக சுரண்டி விட்டு, அதில் மெழுகு வர சில நாட்கள் காத்திருக்க வேண்டும். பிறகு மீண்டும் அதையே செய்ய வேண்டும்.
மெழுகு சேகரிப்பதற்கென மரத்தின் அடியில் தீ வைக்கும் முறை - மெழுகு உருவாக வைக்கும் முறை - ஒரு பிரச்சினையாகி இருப்பதாக அரசு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால் அம்பாபானியின் மெழுகு சேகரிப்பவர்கள், பட்டை உரித்து சேகரிக்கும் பாரம்பரிய முறையைத்தான் பின்பற்றுவதாக கமல் சொல்கிறார். “எங்கள் வீடுகளும் அதே பகுதியில்தான் இருக்கின்றன,” என காரணம் சொல்லும் அவர், “எனவே தீ மூட்ட மாட்டோம்,” என்கிறார்.
மரமெழுகு சேகரிப்பு, குங்கிலிய இலை சேகரிப்பு, பேரிக்காய், இலுப்பை பூக்கள் சேகரிப்பு போன்ற வன உற்பத்தி சேகரிப்பால், வருடம் முழுவதற்கும் தேவையான வருமானம் கிடைப்பதில்லை. கமல் போன்றவர்கள் தோராயமாக 15,000-லிருந்து 20,000 ரூபாய் வரை வருடத்துக்கு மெழுகில் வருமானம் ஈட்டுகின்றனர். பிற வன உற்பத்திகளிலிருந்தும் அதே அளவு வருமானத்தை ஈட்டுகின்றனர்.
அம்பாபானியின் இருபத்து நான்கு குடும்பங்கள், பட்டியல் பழங்குடி மற்றும் பிற பாரம்பரிய வன வசிப்பாளர்கள் அங்கீகரிப்பு சட்ட த்தின் கீழ், நில ஆவணம் பெற்றிருக்கின்றனர். பாசனம் இன்றி, நிலம் வறண்டு போய் கிடக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன், குடும்பங்கள் பெருத்து, விவசாயத்தை மட்டுமே சார்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டபோது, கரும்பு வெட்டும் வேலைகளுக்காக அம்பாபானியின் பவாராக்கள் வருடந்தோறும் புலம்பெயரத் தொடங்கினர். “ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 15-லிருந்து 20 குடும்பங்கள் கர்நாடகாவுக்கு புலம்பெயர்கிறது,” என்கிறார் கெலார்சிங் ஜாம்சிங் பவாரா. தொழிலாளர் ஒப்பந்ததாரராக இருக்கும் அவர், அறுவடைப் பணிக்கு அனுப்பும் ஒவ்வொரு ‘கொய்தா’வுக்கும் 1,000 ரூபாய் பெறுவார்.
கதிர் அறுக்கும் அறுவாளை குறிக்கும் ‘கொய்தா’ என்பது, கணவரும் மனைவியுமாக சேர்ந்து மகாராஷ்டிராவின் கரும்பு வயல்களில் செய்யும் உழைப்புக் கூட்டை குறிப்பதாகும். அனுபவமற்ற கரும்புத் தொழிலாளர்கள் என்பதால் பவாராக்களுக்கு குறைவான முன் தொகைதான் கொடுக்கப்படுகிறது. ஒரு ‘கொய்தா’வுக்கு ரூ.50,000.
“வேறு வேலை கிடையாது,” என்கிறார் கெலார்சிங். 10,000 ரூபாய் மாத வருமானத்துக்கு ஒரு ஜோடி, 12-16 மணி நேரங்கள் நாளொன்றுக்கு வேலை செய்கிறது. கரும்புகளை வெட்டி, சீவி, கட்டாக கட்டி, ட்ராக்டர்களில் ஏற்றி, கரும்பு ஆலைக்கு கொண்டு செல்லும் வரை அவர்கள் செய்யும் வேலை சமயங்களில் அதிகாலை வரை கூட நீளும்.
கரும்பு அறுவடைக்கு சென்ற இரு தொழிலாளர்களை அம்பாபானி பறிகொடுத்திருக்கிறது என்கிறார் ரூப்சிங். “முன்பணம் சில நாட்களில் கரைந்து விடும்,” என்கிறார் அவர். மருத்துவ உதவியோ காப்பீடோ விபத்து மற்றும் உயிரிழப்பு நிவாரணமோ கிடையாது.
ஊருக்கருகே வேலை கிடைத்திருந்தால், கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றிருக்க மாட்டோம் என்கின்றனர் ரெஹெந்தியின் வீடருகே திரண்டிருப்பவர்கள். கரும்பு வயல்களுக்கு அருகே கூடாரங்களில் தங்க வேண்டிய சூழலில் இருக்கும் மொழிப் பிரச்சினைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிரமங்கள் ஆகியவற்றைக் காரணங்களாக சொல்கின்றனர். “சூழ்நிலை மோசமாக இருக்கும். ஆனால் வேறு எந்த வேலையில் முன்தொகை கொடுப்பார்கள்?” எனக் கேட்கிறார் கெலார்சிங்.
அம்பாபானியின் 60 சதவிகித ஆண்கள் கரும்பு வெட்டும் வேலை பார்த்திருப்பதாக சொல்கிறார் அவர்.
கணிசமான தொகை முன்னதாக கொடுக்கப்படுவதால் வீட்டு கட்டுமானப் பழுதை நீக்க முடியும். இரு சக்கர வாகனம் வாங்கலாம். முக்கியமாக, மணம் முடிக்க விரும்பும் பெண்களின் வீட்டாருக்கு, பவாரா பஞ்சாயத்தால் பேசி தீர்மானிக்கப்படும் பணத்தை மணமகன்கள் கொடுக்க அந்த முன்தொகை உதவுகிறது.
பவாரா பழங்குடியினரின் சமூக, திருமண உறவுகளுக்கான விதிகள் தனித்துவமானவை என்கிறார் ரூப்சிங், திருமண மோதல்களை பஞ்சாயத்து எப்படி தீர்க்குமென்பதை விளக்கி. இரு தரப்பினரும் சில டஜன் அடிகள் தூரத்தில் உட்காருவார்கள். அந்தப் பேச்சுவார்த்தைக்கு பெயர் ஜகாதா. எப்போதாவது, திருமணம் முடிந்த சில நாட்களில் மணப்பெண், அவளின் பெற்றோருக்கு ‘இஜாத்’ எனப்படும் கட்டணத்துடன் திருப்பிக் கொடுக்கப்படுவார். ஆனால் மணபெண் வேறொருவருடன் ஓடி விட்டால், மணப்பெண்ணின் விலையாக பெற்ற பணத்தை இரு மடங்காக பெண்ணின் குடும்பம் திரும்பக் கொடுக்க வேண்டும்.
”அம்பாபானி உண்மையிலேயே வித்தியாசமான கிராமம்,” என்கிறார் ஜல்காவோனின் ஆட்சியரான ஆயுஷ் பிரசாத். அவர்தான் முதன்முதலாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு மலையேறி வந்து ஊருக்கு வந்த ஆட்சியர் என்கிறார் உள்ளூர்வாசிகள். டிசம்பர் 2023-ல் அவர் ஊருக்கு சென்றிருக்கிறார். “இந்த கிராமம் அமைந்திருக்கும் இடத்தை சார்ந்து வித்தியாசமான சவால்கள் இங்கு இருக்கின்றன. சேவைகளை இவர்களுக்கு வழங்குவதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறோம்.” முக்கியமான சட்டப்பூர்வ பிரச்சினை ஒன்று இருக்கிறது. இந்த கிராமம் தொடக்கத்தில் காட்டு நிலத்தில் இருந்ததால், இந்த ஊரை வருவாய்த்துறை அங்கீகரிக்கவில்லை. “அம்பாபானியை கிராமமாக அங்கீகரிக்கும் வேலைகள் தொடங்கி விட்டன. இனி அரசு திட்டங்களும் வந்து சேரும்,” என்கிறார் பிரசாத்.
தற்போதைய நிலையில், பள்ளி அறையிலும் உடைந்த கழிவறை வெளிப்புறத்தில் இருக்கும் பகுதியிலும்தான் 300 வாக்காளர்கள் மே 13ம் தேதி வாக்களிப்பார்கள். ஜல்காவோன் மாவட்டத்தின் ரவேர் மக்களவை தொகுதிக்குள் அம்பாபானி வருகிறது. வாக்கு இயந்திரம் உள்ளிட்ட வாக்குப்பதிவு பொருட்கள் யாவும் மலை வழியாக அந்த கிராமத்துக்கு கால்நடையாகவோ இரு சக்கர வாகனத்திலோ கொண்டு செல்லப்படும்.
தேர்தல்களில் இந்த பூத்தில் 60 சதவிகித வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. அம்பாபானி தன் ஜனநாயகக் கடமையை ஆற்றிடத் தேவையான எல்லா விஷயங்களும் இருப்பதாக அதிகாரிகள் சொல்கின்றனர். ஜனநாயகத்தின் விளைபயன்கள்தான் கிடைக்க தாமதமாகிறது.
தமிழில் : ராஜசங்கீதன்