குழந்தையாக இருக்கும்போது, தந்தையும் தாத்தாவும் சிறுவர்களுக்கு பயிற்சி அளிப்பதை ஜன்னல் வழியாக ரஜிதா பார்த்திருக்கிறார். ஏன் தன்னால் பங்குபெற முடியவில்லை என அவருக்கு தெரிந்திருக்கவில்லை. குறிப்பாக பொம்மைகள் சிறுமியின் கவனத்தை ஈர்த்தது. பாடலின் இசையும் அவரின் செவிகளுக்கு ஈர்ப்பாக இருந்தது.
“பொம்மலாட்டத்தின் மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பை என் தாத்தா கவனித்தார்,” என்கிறார் 33 வயது ரஜிதா. “பாடல்களை சொல்லிக் கொடுக்க முன் வந்தார்.”
ரஜிதா புலவர் ஷொர்னூரில் குடும்பத்த்துக்கு சொந்தமாக இருக்கும் ஸ்டுடியோவிலுள்ள ஒரு மரபெஞ்சில் அமர்ந்து கொண்டு தோல்பாவைக்கூத்து பொம்மை ஒன்றுக்கு முகத்தை செதுக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னிருக்கும் மேஜையில் குத்தூசிகள், உளிகள் மற்றும் சுத்தியல்கள் போன்ற கருவிகள் இருந்தன.
அது ஒரு மதியப்பொழுது. ஸ்டுடியோவில் அமைதியாக இருந்தது. பொம்மைகள் செய்யப்படும் கொட்டகையில் ரஜிதாவுக்கு அருகே உள்ள ஃபேன் எழுப்பும் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே, திறந்த மாடியில், பொம்மை செய்ய பயன்படும் தோல் பாய்கள் வெயிலில் காய வைக்கப்பட்டிருக்கின்றன.
“நவீன கருப்பொருட்களை கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கான பொம்மைகள் இவை,” என்கிறார் ரஜிதா, அவர் செய்து கொண்டிருக்கும் பொம்மையை காண்பித்து. தோல்பாவைக்கூத்து, இந்தியாவின் மலபார் கரையோரத்தின் பாரம்பரியக் கலை. பத்ரகாளிக்கு கொண்டாடப்படும் வருடாந்திர விழாவில் கோவில்களில் நடத்தப்பட்ட கலை இது
ரஜிதாவின் தாத்தாவான கிருஷ்ணன்குட்டி புலவர், இக்கலையை நவீனப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். அவர் இக்கலையை கோவில்களிலிருந்து வெளியே கொண்டு வந்து, ராமாயணத்தையும் தாண்டிய பல கதைகளை கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தினார். (வாசிக்க: விரிவாக்கப்படும் தோல்பாவைக்கூத்து )
அவரின் பேத்தி அவரது காலடித் தடங்களை பின்பற்றி, பொம்மலாட்டக் குழுவில் இணைந்த முதல் பெண் கலைஞரானார். சொந்தமாக 2021ம் ஆண்டில் பெண்கள் மட்டுமே இருக்கும் ஒரு குழுவையும் முதன்முதலாக தோல்பாவைக்கூத்தில் உருவாக்கினார்.
இதுவரையிலான பயணம் நீண்ட பயணம் ஆகும்.
பாடல் வரிகள் தமிழில் இருந்ததால் அவற்றை கற்பது கடினமாக இருந்தது. மலையாளம் பேசும் ரஜிதாவுக்கு தமிழ் தெரியாது. ஆனால் அவரின் தந்தையும் தாத்தாவும் பொறுமையாக இருந்து அவளுக்கு அர்த்தத்தையும் உச்சரிப்பையும் கற்றுக் கொடுத்தனர்: “தமிழ் எழுத்துகளை என் தாத்தா கற்றுக் கொடுக்க தொடங்கி பிறகு பாடல் வரிகளை கற்றுக் கொடுத்தார்.”
“குழந்தைகளை ஈர்க்கக் கூடிய பாடல் வரிகளை அவர் தேர்ந்தெடுத்தார்,” என்கிறார் ரஜிதா. அவர் கற்றுக் கொண்ட முதல் பாடல் வரிகள், ராமாயணத்தில் ராவணனிடம் அனுமன் சவால் விடும் காட்சி ஆகும்.
ஏ
ராவணா
தீமைகள் செய்பவனே
பூமாதேவி மகளை சிறைப்பிடித்தவனே
இலங்கை முழுவதையும் என் வாலால் அழிப்பேன்
அழிந்து போடா ராவணா!
குடும்பத்திலுள்ள சிறுவர்கள் அவரை ஆர்வத்துடன் வரவேற்றனர். குறிப்பாக அவரது சகோதரர் ராஜீவ் ஊக்கமளித்ததாக ரஜிதா சொல்கிறார். “பெண்களுக்கான குழுவை தொடங்க அவர் எனக்கு ஊக்கமளித்தார்.”
கோவில்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் (இன்னுமே கூட) பெண்கள் கலந்து கொள்ள முடிவதில்லை. எனவே அவர், தன் குடும்பக் குழுவுடன் இயங்கத் தொடங்கினார். தொடக்கத்தில் அவர் திரைக்கு பின்னால்தான் இயங்க விரும்பினார்.
“சீதா போன்ற பெண் பாத்திரங்களுக்கான வசனங்களை (ராமாயணத்தின் தற்காலப் பிரதியில்) நான் பேசினேன். ஆனால் பொம்மைகளை ஆட்டி பார்வையாளர்களுடன் பேசும் நம்பிக்கையை நான் பெற்றிருக்கவில்லை,” என்கிறார் அவர். தந்தை நடத்திய குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறைகளில் பங்குபெற்றது அவருக்கு நம்பிக்கையை உருவாக்கியது. “பட்டறையின்போது நான் பலருடன் இயங்கும் வாய்ப்பு இருந்தது. மக்களை எதிர்கொள்ள நம்பிக்கையும் பெற முடிந்தது.”
பொம்மை தயாரிக்கும் கலையையும் ரஜிதா கற்றுக் கொண்டார். “பேப்பரில் பொம்மைகள் செய்யத் தொடங்கினேன். என் பெற்றோரும் சகோதரரும்தான் என் ஆசிரியர்கள்,” என்கிறார் அவர். “தோலில் வடிவங்களை வரைவது எப்படியென மெல்ல கற்றுக் கொண்டேன். அவற்றுக்கு வண்ணங்கள் அளிக்கவும் கற்றுக் கொண்டேன்.” ராமாயண பொம்மைகளின் முகங்களில் அதீத தன்மைகள் இருப்பது போல், தற்கால நிகழ்ச்சிகளின் பொம்மைகள் இருப்பதில்லை. யதார்த்தத்துக்கு நெருக்கமாக அவை இருக்கும். “உடைகள் கூட பெண்ணின் வயதை பொறுத்து மாறும். வயதில் மூத்தவர் எனில் பொம்மைக்கு புடவை அணிவிக்கப்படும். வயது குறைவு எனில், ஒரு மேற்சட்டையும் ஜீன்ஸும் அணிவிக்கப்படும்,” என்கிறார் ரஜிதா.
குடும்பத்தில் இருந்த ஆண்கள் மட்டும் ரஜிதாவுக்கு ஊக்கத்தை கொடுக்கவில்லை, பெண்களும்தான். தோல்பாவைக்கூத்தில் பாலின பேதத்தை அகற்றுவதற்கான முதல் வேலையை தாத்தாவின் குழுவில் ரஜிதா இணைவதற்கும் பல வருடங்களுக்கு முன்பே அவரின் தாய் ராஜலஷ்மி செய்துவிட்டார்.
ரஜிதாவின் தந்தையான ராமச்சந்திராவை 1986ம் ஆண்டில் மணம் முடித்தபிறகு, குடும்பத்தில் உள்ளவர்கள் பொம்மைகள் தயாரிப்பதற்கு ராஜலஷ்மி உதவினார். எனினும் அவர் எப்போதும் நிகழ்ச்சியில் பங்குபெற்றதில்லை. “ரஜிதாவின் பயணத்தை நான் பார்க்கையில், மனம் நிரம்பியிருக்கிறது. நான் சாதிக்க முடியாததை அவள் சாதித்திருக்கிறாள்,” என்கிறார் ராஜலஷ்மி.
*****
சொந்தமாக பெண் பாவைக்கூத்து எனக் குழு தொடங்குவதென முடிவெடுத்தவுடன் ரஜிதா செய்த முதல் விஷயங்களில் ஒன்று, தாயையும் மைத்துனி அஸ்வதியையும் அழைத்ததுதான்.
அஸ்வதி முதலில் கலையில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. பொம்மலாட்டக்காரராவார் என அவர் கற்பனை செய்திருக்கக் கூடவில்லை. பொம்மலாட்டக்காரரின் குடும்பத்துக்கு மணம் முடித்து வந்த பிறகு, “இக்கலையை நான் ரசிக்கத் தொடங்கினேன்,” என்கிறார். ”ஆனால் சடங்குப்பூர்வமாக நடத்தப்படும் பொம்மலாட்டம் மெதுவாக இருக்கும். பாடல் உச்சரிப்பதிலும் பெரிய பொம்மை செயல்பாடுகள் இருக்காது. எனவே அவருக்கு கற்றுக் கொள்ள ஆர்வம் இல்லை. ஆனால் கணவர் ராஜீவ் நடத்திய தற்கால பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை பார்த்த பிறகு ஆர்வம் கொண்டார். கலையை கற்க ரஜிதாவின் குழுவில் இணைந்தார்.
இத்தனை வருடங்களில், ராமச்சந்திராவும் பல பெண்களை குழுவில் இணைத்திருக்கிறார். அந்த ஊக்கத்தில் ரஜிதா பெண்களுக்கான குழுவை உருவாக்க பக்கத்து வீட்டு பெண்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்தார். முதல் குழுவில் நிவேதிதா, நித்யா, சந்தியா, ஸ்ரீநந்தா, தீபா, ராஜலஷ்மி மற்றும் அஸ்வதி ஆகிய எட்டு உறுப்பினர்கள் இருந்தனர்.
“தந்தையின் வழிகாட்டலில் பயிற்சிகளை நாங்கள் தொடங்கினோம். பெரும்பாலான பெண்கள் பள்ள்யில் இருந்ததால், விடுமுறை மற்றும் விடுப்பு நேரங்களில் நாங்கள் பயிற்சிகளை திட்டமிட்டோம். பெண்கள் பொம்மலாட்டம் நடத்த முடியாதென பாரம்பரியம் சொன்னாலும், குடும்பங்கள் ஊக்கம் கொடுத்தன,” என்கிறார் ரஜிதா.
நிகழ்த்துக் கலையில் ஒன்றாக இயங்குவதால் பெண்களும் சிறுமிகளும் நல்ல பிணைப்பு கொண்டு விட்டனர். “நாங்கள் ஒரு குடும்பத்தை போல,” என்னும் ரஜிதா “பிறந்தநாட்களையும் குடும்ப விழாக்களையும் ஒன்றாகதான் கொண்டாடுவோம்,” என்கிறார்.
அவர்களின் முதல் நிகழ்ச்சி டிசம்பர் 25, 2021 அன்று நடந்தது. “கடினமாக உழைத்தோம். தயாரிப்புக்கு நிறைய நேரம் செலவழித்தோம்,” என்கிறார் ரஜிதா. ஒரு முழு பெண்கள் குழு தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியை முதன்முதலாக நடத்தியது அப்போதுதான். பாலக்காட்டிலுள்ள ஓர் அரங்கத்தில், கேரள அரசாங்கத்தின் ‘சமம்’ என்கிற திட்டத்தின் கீழ் நடந்தது.
குளிர்காலத்தில் கூட, எண்ணெய் விளக்குகளின் வெப்பம் நிகழ்த்து கலைஞர்களுக்கு கடினமாக இருக்கும். “எங்களில் சிலருக்கு கொப்பளங்கள் வந்தன,” என்கிறார் ரஜிதா. “திரைக்கு பின் மிகவும் வெப்பமாக இருக்கும்.” ஆனாலும் அவர்கள் அனைவரும் உறுதியுடன் இருந்தனர். “நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது.”
சமம் நிகழ்ச்சி, பெண் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் பாலக்காடின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்பம் ஆகியவற்றில் பெண்களின் போராட்டங்களும் தம் உரிமைகளுக்கான வாய்ப்புகளையும் குறித்து ரஜிதா குழுவின் நிகழ்ச்சி அமைந்திருந்தது.
“அசமத்துவத்தை கலை கொண்டு நாங்கள் எதிர்க்கிறோம். நிழல்கள் எங்களின் போராட்டங்களை பிரதிபலிக்கிறது,” என்கிறார் ரஜிதா. “புது கருத்துகளையும் கருப்பொருட்களையும் நாங்கள் முயற்சிக்க விரும்புகிறோம். குறிப்பாக சமூகப் பிரச்சினைகள். ராமாயண கதையாடலை பெண்களின் பார்வையில் கொடுக்கவும் விரும்புகிறோம்.”
சொந்தமாக குழுவை உருவாக்கியதும், ரஜிதா பொம்மலாட்டத்தையும் தாண்டி திறன்களை கற்கத் தொடங்கினார். மொத்த நிகழ்ச்சியையும் அவர் உருவாக்கியிருக்கிறார். திரைக்கதை, குரல் பதிவு, இசை, பொம்மை தயாரிப்பு, பொம்மையாட்டல் மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி ஆகியவற்றை கையாண்டிருக்கிறார். “ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நாங்கள் நிறைய தயாரிக்க வேண்டும். உதாரணமாக பெண்கள் மேம்பாடு என்கிற தலைப்பிலான நிகழ்ச்சிக்காக, பெண்களுக்கென இருக்கும் திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய தரவுகளை பெண்கள் மற்றும் குழந்தைநலத்துறைக்கு சென்று பெற்று வந்தேன். பிறகு திரைக்கதை மற்றும் இசைக்கான வேலைகளை வெளியிலிருந்து பெற்றேன். ஒலிப்பதிவு முடிந்ததும், பொம்மைகள் தயாரித்து, பொம்மையாட்டலுக்கான ஒத்திகை பார்த்தோம். இங்கு, ஒவ்வொரு உறுப்பினரும் பங்களிக்கலாம். பொம்மைகள் செய்யலாம். மேடை இயக்கத்தில் பணிபுரியலாம்.”
அவர்களின் நிகழ்ச்சிகள் 40-க்கும் மேல் நடந்திருக்கிறது. குழுவில் தற்போது 15 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தாய்க்குழுவான கிருஷ்ணன்குட்டி தோல்பாவைக்கூத்து கலாகேந்திரத்துடன் இணைந்து இயங்குகின்றனர். 2020ம் ஆண்டில் ரஜிதாவுக்கு கேரள நாட்டுப்புற அகாடமி யுவா பிரதிபா விருது வழங்கியது.
அவர்கள் தொடங்கியபோது, ஆண்களின் குழுவுக்கு வழங்கப்பட்டது போல பெண்கள் குழுவுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்கிறார் ரஜிதா. ஆனால் மெல்ல நிலைமை மாறியது. “பல குழுக்கள், குறிப்பாக அரசு சார்ந்த குழுக்கள் எங்களை சமமாக நடத்துகிறது. ஆண் கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் எங்களுக்கும் தரப்படுகிறது,” என்கிறார் அவர்.
இன்னொரு முக்கியமான விஷயமாக, கோவில் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. “சடங்குத்தனமான நிகழ்ச்சியாக இருந்தாலும், கோவிலிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது எங்களுக்கு சந்தோஷம்தான்,” என்கிறார் ரஜிதா. தற்போது அவர் கம்பராமாயண பாடல்களை கற்று வருகிறார். சடங்கு தோல்பாவைக்கூத்துக்காக அவர் கற்கும் அப்பாடல்களை பிறகு குழு உறுப்பினர்களுக்கும் கற்று கொடுப்பார். எதிர்காலத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. “பெண்கள் கம்பராமாயண பாடல்களை கோவில்களுக்கும் புனித கோவில் தோப்புகளிலும் பாடும் காலம் நிச்சயம் வரும். அதற்குதான் நான் பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.”
இக்கட்டுரை மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளை (MMF) ஆதரவில் எழுதப்பட்டது
தமிழில் : ராஜசங்கீதன்