”குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு ஓவியம் பிடிக்கும். 1ம் வகுப்பு படிக்கும்போது ஆரஞ்சு அல்லது பூசணிக்காய் வரையும்படி ஆசிரியர் கூறுவார். நானும் வேகமாக வரைந்து விடுவேன்,” என்னும் ரமேஷ் தத்தாவின் முகத்தில் புன்னகை மின்னி மறைகிறது. “இப்படித்தான் எல்லாமும் தொடங்கியது.”
மஜூலியில் இருக்கும் கராமூர் சாரு சத்ரா என்கிற வைணவ மடத்தில் நடக்கும் நிகழ்த்துக் கலை நிகழ்ச்சிகளில் முகமூடி செய்பவராகவும் அரங்க வடிவமைப்பாளராகவும் இன்று அவர்தான் திகழ்கிறார். 52 வயதாகும் ரமேஷ், அதிகம் பேசாதவர். ஆனால் அவரின் அபரிமிதமான திறமைகள்தாம் உள்ளூர் நாடகம், கலை மற்றும் இசை ஆகியவை மஜூலியில் தொடர்ந்திருக்கக் காரணங்கள்.
“குழந்தைப்பருவத்தில் பொம்மலாட்டங்களை பார்க்க எனக்கு பிடிக்கும்,” என அவர் நினைவுகூருகிறார். “பொம்மைகள் செய்வதை பார்த்து, கலையைக் கற்றுக் கொண்டேன். அநேகமாக அச்சமயத்தில் 2ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பொம்மைகள் செய்து பள்ளிகளில் சென்று காட்டுவேன்.”
இப்போது அவர் உருவாக்கும் கலை, மஜூலியின் மேடைகளுக்கு செல்லாத நேரங்களில் வீட்டுக்கு பின் இருக்கும் ஒரு திறந்த கொட்டகையில் வைக்கப்படுகின்றன. அவரை நாம் பார்க்கச் சென்றபோது ஒரு படகு உள்ளே செய்யப்பட்டிருந்தது. ப்ரஷ்களும் பெயிண்ட் கேன்களும் ரமேஷின் முகமூடிகளுக்கு அருகே வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ராஸ் மகோற்சவத்துக்காக (உடன் வாசிக்க: மஜூலியின் பல முகமூடிகள்) செய்யப்பட்டிருந்த ஒரு கொக்கு முகமூடியும் இருந்தது.






















