“ஒரு வார காற்றாடி பறக்கும் போட்டிகளை பாட்னா நடத்தியிருக்கிறது. லக்நவ், டெல்லி மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து காற்றாடி விடுபவர்கள் அழைக்கப்படுவார்கள். அது ஒரு விழா,” என்கிறார் சையது ஃபைசான் ரஜா. கங்கை ஓரத்தில் நடந்தடி அவர் பேசுகிறார். நீரில் பிரதிபலிக்கும் வானத்தை காட்டி, ஆயிரக்கணக்கான காற்றாடிகள் அங்கு ஒரு காலத்தில் பறந்ததாக சொல்கிறார்.
பாட்னா ஆற்றின் கரையில் இருக்கும் தூலிகாட்டை சேர்ந்த மூத்தவரான ரஜா சொல்கையில், அரசர்கள் தொடங்கி ட்வாய்ஃப்கள் வரை எல்லா மக்களும் இந்த விளையாட்டை கொண்டாடுவார்கள் என்றார். பெயர்களை பட்டியலிடுகிறார் - “பிஸ்மில்லா ஜான் (டவாய்ஃப்) விளையாட்டுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். மிர் அலி ஜமீன் மற்றும் மிர் கெஃபாயத் அலி ஆகியோர் காற்றாடி செய்ய தெரிந்த சில உஸ்தாத்கள் (வல்லுநர்கள்) என்கிறார்.
விளையாட்டுக்கு விற்பதற்கென பாட்னாவின் குர்ஹாட்டா தொடங்கி அஷோக் ராஜ்பத்திலுள்ள க்வாஜாகலன் வரை (700-800 மீட்டர் தொலைவு) ஒரு காலத்தில் காற்றாடி விற்பவர்கள் நிறைந்திருந்தார்கள். அவர்களின் வண்ணமயமான காற்றாடிகள் கடைகளுக்கு வெளியே படபடக்கும். “பாட்னாவின் காற்றாடி நூல், வழக்கமான நூலை விட அடர்த்தியாக இருக்கும். பருத்தி மற்றும் பட்டை சேர்த்து செய்யப்படும் நூல் நாக் என அழைக்கப்படுகிறது,” என்கிறார் ரஜா.
பல்லொவின் 1868ம் ஆண்டு மாத இதழ், காற்றாடிகளுக்கு பிரபலமான இடமாக பாட்னாவை குறிப்பிடுகிறது. “பெரியளவில் சம்பாதிக்க விரும்பும் எவரும் பஜாரில் ஒரு காற்றாடி கடை திறக்க வேண்டும். மொத்த மக்களும் காற்றாடி விடுவார்களோ என்கிற எண்ணம் கூட உங்களுக்கு தோன்றும். காற்றாடி வைர வடிவில் இருக்கும். இறகை போல மெலிதாகவும் வாலின்றி இருக்கும். பட்டு நூல் பறப்பது போல இலகுவாக பறக்கும்.”
நூறு வருடங்களுக்கு பிறகு, பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால் பாட்னாவில் திலாங்கிகள் மட்டும் அவற்றின் தனித்துவத்தை தக்க வைத்திருக்கின்றன. வாலில்லா காற்றாடிகள் என்கிற தனித்துவம். “நாய்களுக்குதான் வால்கள் இருக்கும், காற்றாடிகளுக்கு அல்ல,” என்கிறார் காற்றாடி செய்த ஷபினா சிரித்தபடி. எழுபது வயதுகளில் இருக்கும் அவர் திலாங்கிகள் செய்வதை கொஞ்ச காலத்துக்கு முன், பார்வை மங்கியதும் நிறுத்தி விட்டார்.




















