“கோரல் மான்!” எனக் கத்துகிறார், அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமேங் மாவட்டத்தில் சிங்சுங் டவுன் நோக்கி செல்லும் அமைதியான சாலைகளில் வண்டியோட்டியபடி டாக்டர் உமேஷ் ஸ்ரீநிவாசன்.
சற்று தூரத்தில் குட்டையான, பருத்த ஆடு போன்ற ஒரு விலங்கு, மலையிலிருந்து இறங்கி சாலையைக் கடந்து மேற்கு இமயமலையின் காடுகளுக்குள் செல்கிறது.
“இதற்கு முன் இப்படி நீங்கள் பார்த்திருக்க முடியாது,” என்கிறார் ஆச்சரியத்தில் இருக்கும் அந்த வன உயிரியலாளர். மேற்கு காமேங்கின் காடுகளில் அவர் 13 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.
சாம்பல் நிற கோரல் கால்நடை வகையை சேர்ந்த பாலூட்டி இனம் ஆகும். இமயமலையின் பூட்டான், சீனா, வட இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற இடங்களில் காணப்படுபவை. ஆனால் 2008-ம் ஆண்டில் , இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் (IUCN), வாழ்விட இழப்பால் அருகி வரும் இனமாக அவற்றை வரையறுத்திருக்கிறது.
“அவை எப்போதும் அடர்ந்த காடுகளுக்குள்தான் இருக்கும். வெளியே வர அஞ்சும்,” என்கிறார் உமேஷ், மனித நடமாட்டம் அதிகம் இருக்கும் இமயமலையின் கீழ்ப்பகுதி மற்றும் வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் அந்த விலங்குகளை குறித்து.
கோரல் மானை பார்த்த சற்று நேரத்துக்குப் பிறகு, சிங்சுங்கில் வசிக்கும் விவசாயியான நிமா செரிங் மோன்பா, தேநீர் தந்து, இன்னொரு விலங்கை பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். “சில வாரங்களுக்கு முன், நான் விவசாய நிலத்தில் சிவப்பு பாண்டாவை பார்த்தேன்.” அழிந்து வரும் இனமான சிவப்பு பாண்டா சீனா, மியான்மர், பூட்டான், நேபாள் மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் எண்ணிக்கை கடந்த மூன்று தலைமுறைகளில் 50 சதவிகிதம் குறைந்திருக்கிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் இன்னும் மோசமாகும் என எச்சரிக்கிறது IUCN .
சிங்சுங் அருகே வன விலங்குகள் தென்படுவது யதேச்சையானதல்ல என்கின்றனர் உள்ளூர்வாசிகள். 2017ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிலைத்து நீடிக்கும் பாதுகாப்பு முயற்சியின் விளைவாக அதை நினைக்கிறார்கள். இங்கு வாழும் பழங்குடிகளான பூகுன் மக்களுடன் அருணாச்சலப் பிரதேச காட்டிலாகா துறை இணைந்து, வரையறுக்கப்படாத காடுகளை ஒருங்கிணைத்து உருவாக்கிய சிங்சுங் பூகுன் கிராம சமூக காட்டுப்பகுதியால்தான் (SBVCR) அது சத்தியமானது என்கின்றனர்.
இந்த சமூக பாதுகாப்பு மண்டலப் பகுதியின் கதை, அழிந்து வரும் பறவை யான பூகுன் பாடும்பறவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. சிங்சுங்கை சுற்றியிருக்கும் காடுகளின் சிறு சுற்றளவில்தான் இப்பறவை காணப்படுகிறது.
அரிதாக காணக் கிடைக்கும் ஆலிவ் பச்சை நிற பறவை, அழகிய கறுப்பு தலையும் வெளிர் மஞ்சள் புருவங்களும் சிவப்பு முனை கொண்ட இறக்கைகளும் கொண்டது. 2006ம் ஆண்டு பறவையினமாக கண்டறியப்பட்டு, அது இருக்கும் காட்டுப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனத்தின் பெயரான பூகுன் என்ற பெயரே அதற்கு சூட்டப்பட்டது.
“உலகெங்குமிருந்து வரும் மக்களுக்கு இப்பறவையை தெரியும்,” என்கிறார் சிங்சுங்கில் வசிக்கும் ஷலீனா ஃபின்யா தன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்தபடி. சுற்றிலும் அப்பகுதியின் மலைக்காடுகளின் புகைப்படங்கள் இருக்கின்றன.
ஐந்து வருடங்களுக்கு முன், பூகுன் பாடும்பறவை இருப்பதே தெரியாது என்கிறார் ஃபின்யா. சிங்சுங்கின் பூகுன் கிராம காடுகளின் (SBVCR) முதல் பெண் ரோந்து அதிகாரியான அவருக்கு வயது 24. கிழக்கு இமயமலைக் காடுகளை ஆவணப்படுத்தும் பட இயக்குநரும் ஆவார்.
அருகும் இனங்கள் அதிகம் காணப்படத் தொடங்கியிருப்பது, 2017ம் ஆண்டில் சிங்சுங் பூகுன் கிராம பாதுகாப்பு மண்டலப் பகுதி தொடங்கப்பட்டதன் விளைவு ஆகும்
1996ம் ஆண்டில் முதன்முதலாக பறவையை கண்டுபிடித்த ரமணா ஆத்ரேயா, சமூகக்குழுவுக்கு பொறுப்புணர்வு இருப்பதை உறுதிப்படுத்தும் வண்ணம், “SBVCR பல்லுயிர் சூழலை பாதுகாத்து, மக்கள் அப்பகுதியை தாங்கள் வாழும் விதம் கொண்டு மேம்படுத்த உதவுகின்றனர்,” என்கிறார்.
இங்கு வசிக்கும் பூகுன்களின் பெயரை பறவைக்கு சூட்ட அவர் வலியுறுத்தினார். அந்த வகையில் பாதுகாப்பு முயற்சி, இந்த மக்கட்குழுவையும் உள்ளடக்க முடியும். உள்ளூர்வாசிகளும் அப்பறவை மற்றும் அதற்கான வாழ்விடம் சார்ந்து ஓர் உறவையும் பேண முடியும்.
அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்திலுள்ள ஈகுள்நெஸ்ட் வன உயிர் சரணாலயத்துக்கு கீழே இருக்கும் SBVCR, வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. உருவான ஐந்து வருடங்களில் 17 சதுர கிலோமீட்டர் சமூக பாதுகாப்பு மண்டலம், இயற்கை பாதுகாப்பில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது.
பூகுனான ஃபின்யா போன்ற உள்ளூர்வாசிகள், இக்காடுகளையும் இங்குள்ள வன உயிர்களையும் பாதுகாப்பதில் முக்கியமான பங்காற்றுகின்றனர். அவருடன் 10 காட்டிலாகா அதிகாரிகள் இயங்குகின்றனர். இப்பகுதியில் ரோந்து சென்று வேட்டைக்காரர்களை வரவிடாமல் தடுப்பதுதான் அவரின் வேலை.
SBVCR-ன் இன்னொரு ரோந்து அதிகாரியான லெகி நோர்பு, மரம் வெட்டுதல், வேட்டையாடுதல், பொறி வைத்தல் போன்ற சட்டவிரோத வேலைகள் நடக்காமல் இருக்க கண்காணிக்கிறார். “மரம் வெட்டினால் 1,00,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். வேட்டைக்கு அபராதம் இன்னும் அதிகம்,” என்கிறார் 33 வயது பூகுன் பழங்குடி.
மனித நடமாட்டம் இல்லாததால், விலங்குகள் உணவு தேடி அடர்காடுகளிலிருந்து வெளியேறி SBVCR-க்கு வருகின்றன. இந்திய காட்டெருமைதான் பெரிய பாலூட்டி கால்நடை வகையாகும். ஆனால் SBVCR-ல் அவற்றை அதிகமாக பார்க்க முடிகிறது. முன்பு, தனியாக ஒரு விலங்கைத்தான் பார்ப்போம். இப்போது அவற்றை குழுவாக பார்க்க முடிகிறது,” என்கிறார் லெகி.
பிற விலங்குகளும் குழுக்களாக தென்படுகின்றன. “காட்டுநாய்களின் எண்ணிக்கையும் நடவடிக்கைகளும் கடந்த 3-4 வருடங்களில் SBVCR-க்குள் அதிகரித்திருக்கிறது,” என்கிறார் சிங்சுன்னில் வாழும் பூகுன் பழங்குடியான காண்டு க்ளோ. SBVCR கமிட்டியின் தலைவராகவும் அவர் இருக்கிறார்.
சிங்சுங் டவுனுக்கும் ஈகுள்நெஸ்ட் வன உயிர் சரணாலயத்துக்கும் இடையில் பாதுகாப்பு மண்டலம் இருக்கிறது. படைச்சிறுத்தைகள், பளிங்கு பூனைகள், ஆசியப் பொன்னிறப் பூனைகள், சிறுத்தைகள் போன்றவை இருக்கின்றன. அருகி வரும் தொப்பித் தலை குரங்கு, கோரல் மான், சிவப்பு பாண்டா, ஆசிய கருங்கரடி, அருணாச்சல மக்காக்கள், எருதுகள் போன்றவையும் இக்காடுகளில் இருக்கின்றன. உலகிலேயே 3,250 மீட்டர் உயரத்தில் யானைகள் இருக்கும் ஒரே பகுதியும் ஈகுள்நெஸ்ட் மட்டும்தான்.
ஆனால் உலகெங்கிலும் இருந்து சுற்றுலாவாசிகளை இங்கு ஈர்ப்பது பறவைகள்தான். கிட்டத்தட்ட 600 வகை பறவையினங்கள் இருக்கின்றன. அரிய வகைகளான ( அருகும் நிலையிலுள்ள ) கருஞ்சிவப்பு தீக்காக்கையும், பாதிக்கப்படக்கூடிய பெருஞ்செம்போத்து கோழியை போன்ற சாம்பல் வயிற்றுக் கோழி மற்றும் ( பாதிப்படையக்கூடிய ) நீலச்சாம்பல் நிற பசையெடுப்பான் குருவியும் இருக்கின்றன.
ஈகுள்நெஸ்டுடன் சேர்ந்து தற்போது சிங்சுங்கும் பறவையியலாளர்களின் பிரபலமான இலக்காக இருக்கிறது. இங்கு வருபவர்கள் இப்பகுதியில் நிறைந்து, அருகும் நிலையிலுள்ள பூகுன் பாடும்பறவையின் மெய்மறக்கும் கூவல்களை கேட்பார்கள். உலகிலேயே வெறும் 14-20 இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் அந்த இனத்தில் இருக்கும் நிலையில், பறவை பார்க்க வருபவர்கள், தங்களை அதிர்ஷ்டசாலிகளாக எண்ணுகின்றனர்.
பூகுன் பாடும்பறவைகள் வழக்கமாக ஜோடியாகவோ சிறு குழுவாகவோ தென்படும். கிழக்கு இமயமலையின் கீழ்ப்பகுதி (கடல் மட்டத்திலிருந்து 2,060 - 2,340 மீட்டர் உயரத்திலுள்ள) அடர்காடுகள்தான் அவற்றின் ஒரே வசிப்பிடம்.
“ஈகுள்நெஸ்ட் மற்றும் (அருணாச்சல பிரதேசத்தின்) நம்தஃபா தேசியப் பூங்கா மற்றும் அசாம் ஆகிய இடங்களில் பல பறவைகள் இருக்கின்றன. ஆனால் பூகுன் பாடும்பறவை சிங்சுங்கில் மட்டும்தான் இருக்கிறது. ”இப்பறவை இங்கு இல்லையெனில், மக்கள் யாரும் வர மாட்டார்கள்,” என்கிறார் இண்டி க்ளோ. லாமா கேம்ப் என்னும் தங்குமிடத்தை நடத்துபவர் அவர். “பறவைகளை பார்க்க முடியவில்லை எனில் இன்னும் அதிக நாட்கள் கூட மக்கள் தங்குவார்கள்,” என்கிறார் க்ளோ.
நூற்றுக்கணக்கானோர் இங்கு சுற்றுலா வருவதன் மூலமாக இந்த ஊருக்கு ஆதாயம் கிடைக்கிறது. க்ளோ சொல்கையில், “சிங்சுங்குக்கு வருடந்தோறும் 300-லிருந்து 400 சுற்றுலாவாசிகள் வருகிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது,” என்கிறார். மழைக்காலத்துக்கு முந்தைய ஏப்ரலிலிருந்து ஜூன் மாதம் வரை அதிக எண்ணிக்கையில் சுற்றுலாவாசிகள் வருவார்கள்.
பணம் கொடுக்கும் சுற்றுலாவாசிகள் வருவது உதவிகரமாக இருப்பதாக கருதும் ஆத்ரேயா, விமர்சனங்களை பொருட்படுத்தாமல், “இங்கு பணம் தேவை. பாதுகாப்பு முயற்சிக்கான வேலைகளுக்கு வருடந்தோறும் வெறும் 15 லட்சம் ரூபாய்தான் கொடுக்கப்படுகிறது,” எனிறார். ரேடியோ வானியலாளராக பணிபுரியும் ஆத்ரேயா, அருணாச்சல பிரதேசத்தின் இயற்கை பாதுகாப்பு முயற்சிகளில் இணைந்து இயங்குகிறார். “பூகுன்கள் இம்முயற்சியை எடுத்து தொடர்வது அற்புதமாக இருக்கிறது. என் எதிர்பார்ப்பை எல்லாம் அவர்கள் தாண்டி விட்டார்கள்.”
இயற்கை சுற்றுலாக்களையும் ரோந்துகளையும் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கூட இச்சமூகக் குழு ஒருங்கிணைக்கிறது. பட்டியல் பழங்குடியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் பூகுன்கள், 2013ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி மொத்தம் 1,432 பேர் இருக்கின்றனர். அவர்களை பொறுத்தவரை உண்மையில் இதைவிட இரு மடங்கு எண்ணிக்கை இருப்பதாக சொல்கிறார்கள்.
மேற்கு காமெங் பள்ளி மாணவர்களுக்கு காடுகள் மற்றும் பல்லுயிர் சூழல் ஆகியவற்றின் அவசியத்தை புரிய வைக்கும் வகையில், ஃபின்யா போன்ற உள்ளூர்வாசிகள் ‘வன உயிர் வாரம்’ நடத்துகின்றனர். பால்யகாலத்தில் அவர் கண்ட சம்பவத்தால் இந்த விஷயம் மிகவும் முக்கியமானதாக அவருக்கு இருக்கிறது. “என் நண்பர்கள் காடுகளுக்கு சென்று, பறவைகளை கொன்று சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். எனக்கு கஷ்டமாக இருந்தது. அவர்களிடம், ‘உணவுக்காக வளர்க்கப்படும் சிக்கன் போன்ற பறவைகளை உண்ணும் நீங்கள் ஏன் காட்டுக்கு தொந்தரவு கொடுக்கிறீர்கள்?,’ எனக் கேட்பேன்.
அவருடன் பணிபுரியும் நோர்பு சொல்கையில், “படிப்பதில் எங்களுக்கு பெரிய ஆர்வம் இருந்ததில்லை. குழுக்களாக நாங்கள் காட்டுக்கு செல்வோம். வேட்டையாடியவற்றுடன் திரும்புவோம். குரைக்கும் மான், காட்டுப்பன்றி, பசையெடுப்பான் குருவி போன்றவற்றை வேட்டையாடுவோம்,” என்கிறார் படிப்பை முக்கியமான விஷயமாக கருதாமல், வேட்டையை பொழுதுபோக்காக செய்த காலத்தை நினைவுகூர்ந்து.
“சில நேரங்களில் சாப்பிட வேட்டை ஆடுவோம். சில நேரங்களில் செய்ய வேறு விஷயங்களின்றி வேட்டையாடுவோம்,” என்னும் நோர்பு, வன உயிரை அழிக்கக்கூடிய சட்டவிரோத நடவடிக்கைகள் நடக்காமல் கண்காணிக்கும் வேலையை செய்கிறார்.
பாதுகாப்பு மண்டலம் இயங்குவதற்காக முக்கியமான உந்து சக்தியாக இருப்பவர், மேற்கு காமெங் மாவட்டத்தின் காட்டிலாகா அதிகாரியாக எட்டு வருடங்கள் இருந்த மிலோ டாஸ்ஸெர். “உள்ளூர்வாசிகளும் இணையவில்லை எனில் SBVCR நேர்ந்திருக்காது,” என்கிறார் டாஸ்ஸெர். ஜிரோ பள்ளத்தாக்கில் தற்போது காட்டிலாகா அதிகாரியாக இருக்கிறார் அவர். “நேரடியாகவும் மறைமுகமாகவும் அது வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் உள்ளூர்வாசிகளின் உதவியின்றி SBVCR உருவாகியிருக்காது,” என அவர் வலியுறுத்துகிறார்.
பல குடும்பங்களில் ஒருவரேனும் சமையலர்களாகவும் காட்டு பணியாளர்களாகவும் ஓட்டுநர்களாகவும் பிற சேவைப் பணியாளர்களாகவும் வேலை பெற்றிருக்கின்றனர். முன்னணி பணியாளர்கள் அரசின் நிதியிலிருந்து பெறும் ஊதியங்கள் அடிக்கடி தாமதமாகிறது. சுற்றுலா மூலமாக வரும் வருமானம் அவர்களுக்கு மிகவும் முக்கியம்.
ஆனால் பூகுன்கள், இந்த டவுனின் மாற்றத்துக்கான காரணமாக சிறு பறவையை சொல்கின்றனர். “பாடும்பறவை இல்லையென்றால், சிங்சுங் இப்படி மாற்றம் பெற்றிருக்காது,” என்கிறார் க்ளோ.
*****
சமூகத்தின் பெயரை பாதியாக கொண்ட பறவையின், “மிச்சப் பாதி ஆங்கிலப்பெயரான லியோசிச்லா, (Liocichla) ரொமானிய மொழியிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. மென்மையான பறவை என அர்த்தம்,” என்கிறார் உமேஷ் SBVCR சுற்றி நாம் நடந்து கொண்டிருக்கும்போது. அடர்ந்த காடுகளும் பசுமையான மலைகளும் பள்ளத்தாக்குகளும் கொண்டிருக்கும் பேரமைதி அவ்வப்போது எழும் பல பறவை சத்தங்களால் இன்னும் ஆழம் பெறுகிறது.
இந்த சொர்க்கத்தில் சில பிரச்சினைகள் இருப்பதும் எங்களுக்கு தெரிய வந்தது.
ஈகுள்நெஸ்ட் வன உயிர் சரணாலயத்தில் பறவையியலாளர் ஸ்ரீநிவாசன் நடத்திய ஆய்வு, வெப்பம் உயர்ந்து கொண்டிருக்கும் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறது. வெள்ளை வால் சிட்டு, பச்சை மக்பை போன்ற சிறு பறவைகள், வெப்பத்தை தவிர்க்க அதிக உயரங்களுக்கு நகர்ந்திருக்கின்றன.
”பிரபலமான இப்பறவை, கடல்மட்டத்திலிருந்து 2,000-2,300 மீட்டர் உயரத்தில் வெறும் 2 சதுர கிலோமீட்டருக்குள்ளாகதான் காணப்படுகிறது,” என்கிறார் அவர். ”ஆனால் பூகுன் பாடும்பறவை இடம்பெயர வேண்டியிருக்கும். இடம்பெயரும்போது அது மேலே போகும்.” இதை மனதில் வைத்துக் கொண்டு இக்குழுவினர், பெரிய உயரத்திலுள்ள பகுதியை பராமரிக்கின்ற்னார். “SBVCR 1,300லிருந்து 3,300 மீட்டர் வரை இருக்கிறது,” என்கிறார் ஸ்ரீநிவாசன். மேலே நோக்கி பறவைகள் இடம்பெயரும் விதத்தை குறித்து சுரங்கத்தில் கேனரி பறவை கட்டுரையில் படிக்கவும்.
இத்தகைய பாதுகாப்பு மண்டலம் உருவாக்கியதில் விமர்சனமும் வைக்கப்படுகிறது.
”எங்களின் நிலத்தின் மீதான உரிமையை நாங்கள் தொலைத்து விடுவோம். இதனால்தான் இத்தகைய பாதுகாப்பு மண்டலம் உருவாக தொடக்கத்தில் நானும் எதிர்ப்பு தெரிவித்தேன்,” என்கிறார் உள்ளூர் ஒப்பந்ததாரரான சேங் நோர்பு சராய். “நிலத்தை காட்டிலாகா எடுத்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் திரும்ப தராது,” என்கிறார் சிங்சுங்கில் வசிக்கும் பூகுன் பழங்குடியான அவர்.
ஆனால் SBVCR-ன் ஆற்றுப்பள்ளத்தாக்குதான் அவருக்கும் பிற எதிர்ப்பாளர்களுக்குமான திருப்பு முனை. “சிங்சுங், நீர்நிலையின் வடிகால் பகுதியில் இருக்கிறது. அங்கிருந்துதான் டவுனுக்கு நீர் கிடைக்கிறது. நீர்நிலையை நாம் பாதுகாக்க வேண்டுமெனில், காட்டை பாதுகாக்க நமக்கு தெரிந்திருக்க வேண்டும். மரம் வெட்டுவதை தடுப்பதும் காட்டை அழிப்பதை தடுப்பதும் முக்கியம்,” என்கிறார் ஓய்வு பெற்ற உள்ளூர் ஒப்பந்ததாரரான சராய். “எதிர்கால தலைமுறைகளுக்கு நீர் கிடைத்து பாதுகாக்கப்பட வேண்டுமென நாங்கள் விரும்பினோம்.” அந்த திசை பயணத்துக்கான நகர்வுதான் SBVCR.
அசாமின் தெஸ்பூரிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஈகுள்நெஸ்ட் வரை பூகுன் பாடும்பறவையின் படங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. பூகுன் மக்களின் முயற்சிகளின் சான்றாக அது விளங்குகிறது. “இன்று எங்களுக்கென உலகளவில் ஒரு பெயர் இருக்கிறது. எங்களுக்கு புகழ் இருக்கிறது,” என்கிறார் சராய். “இதற்கு மேல் என்ன வேண்டும்?”
தமிழில் : ராஜசங்கீதன்