“ஒரு ஜுத்தி வாங்கிக் கொடுங்கள்
முக்சாரின் பூத்தையல் கொண்ட ஜுத்தி.
என் கால்களில், அன்பே, அது பார்க்க அற்புதமாக இருக்கும்.”
ஹன்ஸ் ராஜ், பருத்தி நூலை இறுக்கப் பிடிக்கிறார். கூர்மையான இரும்பு ஊசியில் நூலேற்றி, காலணி செய்வதில் அனுபவம் பெற்ற அவர், கடுமையான தோலில் நுட்பமாக 400 முறை குத்தியெடுத்து ஒரு ஜோடி பஞ்சாபி ஜுத்திகளை (மூடிய காலணிகள்) கையால் தைக்கிறார். அதை செய்கையில் அவர் விடும் பெருமூச்சுகளை தொடர்ந்து ‘ம்ம்’ சத்தங்கள் நிறைகின்றன.
பஞ்சாபின் ஸ்ரீ முக்சார் சாகிப் மாவட்டத்தின் ருபானா கிராமத்தில், பாரம்பரிய முறையில் ஜுத்திகளை செய்யும் ஒரே கலைஞர் ஹன்ஸ் ராஜ்தான்.
“பஞ்சாபி ஜூத்திகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றியும் யார் தயாரிக்கிறார்கள் என்பது பற்றியும் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. தயாரிப்பிலிருந்து தையல் வரை, எல்லாமுமே கையால்தான் செய்யப்படுகிறது,” என்கிறார் அரை நூற்றாண்டாக ஜுத்திகளை தயாரித்து வரும் 63 வயது கலைஞர். “நீங்கள் முக்சார், மலோத், கித்தெர்பாஹா அல்லது படியாலா என எங்கு சென்றாலும் யாரும் நான் செய்வது போல நுட்பமாக ஜுத்தியை செய்ய மாட்டார்கள்,” என்கிறார் ஹன்ஸ் ராஜ்.
அன்றாடம் அதிகாலை 7 மணிக்கு, வாடகை பட்டறையின் வாசலருகே பருத்தி படுக்கையில் அமர்வார். அந்த பட்டறையின் ஒரு பகுதி சுவரில், ஆண்களுக்கு பெண்களுக்குமான பஞ்சாபி ஜுத்திகள் இருக்கின்றன. ஒரு ஜோடியின் விலை 400 ரூபாயிலிருந்து 1,600 ரூபாய் வரை இருக்கும். இதிலிருந்து மாதத்துக்கு 10,000 ரூபாய் ஈட்டுவதாக அவர் சொல்கிறார்.
சுவரில் சாய்ந்தபடி அடுத்த 12 மணி நேரத்தை ஷு தயாரிப்பதில் அவர் செலவழிக்கிறார். வலியெடுக்கும் முதுகை அவர் சாய்க்கும் சுவரில் சிமெண்ட் உரிந்து செங்கற்கள் தெரிகின்றன. “உடல் வலிக்கிறது, குறிப்பாக கால்கள்,” என்கிறார் ஹன்ஸ் ராஜ் தன் மூட்டுகளை அழுத்தியபடி. கோடைகாலத்தில், “வியர்வைக் கொப்பளங்கள் முதுகில் வந்து வலி கொடுக்கும்,” என்கிறார் அவர்.
15 வயதாக இருக்கும்போது ஹன்ஸ் ராஜ் இக்கலையை கற்றுக் கொண்டார். அவரின் தந்தை கற்றுக் கொடுத்தார். “வெளிப்புறங்களுக்கு செல்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. சில நாட்கள் கற்கவென நான் அமர்வேன். சில நாட்கள் செல்ல மாட்டேன்.” ஆனால் அவர் வளரும்போது வேலை பார்ப்பதற்கான கட்டாயம் அதிகரித்தது. எனவே அமர்ந்திருக்கும் நேரமும் அதிகரித்தது.
பஞ்சாபி மற்றும் இந்தி மொழி கலந்து பேசும் அவர், “இந்த பணியில் துல்லியம் முக்கியம்,” என்கிறார். கண்ணாடி அணியாமல் பல வருடங்களாக ஹன்ஸ் ராஜ் வேலை பார்க்கிறார். “ஆனால் என் பார்வையில் மாற்றம் தெரிகிறது. பல மணி நேரங்கள் வேலை பார்த்தால், கண் வலி எடுக்கிறது. எல்லாம் இரண்டிரண்டாக தெரிகின்றன.”
ஒரு வழக்கமான வேலை நாளில் அவர் தேநீர் குடிக்கிறார். செய்தி, பாடல்கள், கிரிக்கெட் வர்ணனை போன்றவற்றை ரேடியோவில் கேட்கிறார். ஃபர்மாயிஷி தான் அவருக்கு பிடித்த நிகழ்ச்சி. பழைய இந்தி மற்றும் பஞ்சாபி பாடல்களை கேட்டு ஒலிபரப்பப்படும் நேயர் விருப்ப நிகழ்ச்சி அது. அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எந்த பாட்டும் கேட்டதில்லை. “எண்கள் எனக்கு புரியாது. என்னால் டயல் செய்யவும் முடியாது.”
ஹன்ஸ் ராஜ் பள்ளிக்கு போனதே இல்லை. ஆனால் அவரது கிராமத்தில் பல புதிய இடங்களை தேடிச் செல்ல பிடிக்கும். குறிப்பாக பக்கத்து கிராமத்தில் சாமியாராக அவரது நண்பருடன் செல்வார். “ஒவ்வொரு வருடமும் நாங்கள் பயணம் செல்வோம். அவரிடம் சொந்தமாக கார் இருக்கிறது. பயணங்களின்போது உடன் வரும்படி அவர் எப்போதும் என்னை அழைப்பார். ஒன்றாக, இன்னும் ஓரிருவருடன் ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் அல்வார் மற்றும் பிகானெர் போன்ற பகுதிகளுக்கு செல்வோம்.”
*****
மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டது. ருபானா கிராமம், நவம்பர் மாத வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஹன்ஸ் ராஜின் வாடிக்கையாளர் ஒருவர், பஞ்சாபி ஜூத்தி வாங்க நண்பருடன் வந்திருந்தார். “நாளைக்கும் இவருக்கு ஒரு ஜூத்தி நீங்கள் செய்து கொடுக்க முடியுமா?,” என அவர் ஹன்ஸ் ராஜை கேட்கிறார். அந்த நண்பர், 175 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹரியானாவின் டொஹானாவிலிருந்து வந்திருக்கிறார்.
வாடிக்கையாளரின் வேண்டுகோளுக்கு புன்னகையுடன் நட்பாக பதிலளிக்கும் வகையில், “அடேயப்பா.. நாளை வாய்ப்பில்லையே!,” என்கிறார் ஹன்ஸ் ராஜ். ஆனாலும் அந்த வாடிக்கையாளர் விடுவதாக இல்லை. “பஞ்சாபி ஜூத்திகளுக்கு பெயர் பெற்ற இடம் முக்சார்தான்.” பிறகு வாடிக்கையாளர் நம் பக்கம் திரும்பி, “நகரத்தில் ஆயிரக்கணக்கான ஜூத்தி கடைகள் இருக்கும். ஆனால் இங்கு ருபானாவில், இவர் மட்டும்தான் கையால் செய்கிறார். இவரின் வேலையை நாங்கள் பார்த்திருக்கிறோம்.”
மொத்தக் கடையும் தீபாவளி வரை ஜூத்திகளால் நிரம்பியிருக்கும் என்கிறார் வாடிக்கையாளர். ஒரு மாதம் கழித்து நவம்பரில், 14 ஜோடிதான் மிஞ்சியிருந்தது. ஹன்ஸ் ராஜின் ஜூத்திகள் சிறப்பாக இருக்கக் காரணம் என்ன? “இவர் தயாரிக்கும் செருப்புகள் நடுவே தட்டையாக இருக்கும்,” என்கிறார் வாடிக்கையாளர் சுவரில் தொங்கும் ஜூத்திகளை சுட்டிக் காட்டி. “செய்பவரின் நிபுணத்துவம் அது.”
ஹன்ஸ் ராஜ் தனியாக பணிபுரிவதில்லை. சில ஜூத்திகளை, 12 கிமீ தொலைவில் இருக்கும் அவரின் சொந்த ஊரான குனான் குர்தை சேர்ந்த திறன்வாய்ந்த சாந்த் ராமை வைத்து தைக்க வைக்கிறார். தீபாவளி அல்லது நெல் விளைச்சல் ஆகிய காலங்களில் தேவை அதிகமாக இருக்கும்போது, வேலையை அவர் வெளியே கொடுத்து வாங்குகிறார். ஒரு ஜோடிக்கு 80 ரூபாய் ஊதியம் கொடுக்கிறார்.
நிபுணருக்கும் பணியாளருக்கும் இருக்கும் வித்தியாசத்தை அவர் சொல்கிறார். “ஜூத்தியின் மேற்பகுதி நுனியிலிருந்துதான் எப்போதும் நான் தைக்கத் தொடங்குவேன். ஜூத்திகளை தயாரிப்பதில் சவாலான கட்டம் இதுதான். இதை சரியாக செய்பவர்தான் நிபுணர். மற்றவர்கள் அல்ல.”
அவர் அக்கலையை சுலபமாக கற்றுக் கொள்ளவில்லை. “தொடக்கத்தில் நூல் கொண்டு செருப்பு தைப்பது எனக்கு சிரமமாக இருந்தது,” என நினைவுகூருகிறார் ஹன்ஸ் ராஜ். “ஆனால் அதை கற்பதென உறுதி கொண்டதும் இரு மாதங்களில் கற்றுக் கொண்டேன். மிச்சவற்றை நான் காலவோட்டத்தில் கற்றுக் கொண்டேன். முதலில் தந்தையைக் கேட்டும் பிறகு அவர் செய்வதை பார்த்தும் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர்.
இத்தனை வருடங்களில் ஜூத்தியின் இரு பக்கங்களிலும் சிறு தோல் துண்டுகளை வைத்து தைத்து அவற்றை ஒன்றிணைக்கும் ஒரு புது உத்தியை உருவாக்கியிருக்கிறார். “ஜூத்திக்கு இந்த சிறு துண்டுகள் வலிமை சேர்க்கின்றன. எளிதாக அவர் அறுந்து போகாது,” என்கிறார் அவர்.
*****
ஹன்ஸ் ராஜும் மணம் முடித்த மகள், இரு மகன்கள் மற்றும் மனைவி வீர்பால் கவுர் ஆகியோர் கொண்ட குடும்பம் குனான் குர்திலிருந்து ருபானாவுக்கு 18 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்தனர். அச்சமயத்தில்அவரின் மூத்த மகன், இங்கிருந்த காகித ஆலையில் பணிபுரிய தொடங்கினார்.
“குனான் குர்தில் வீட்டிலிருந்து ஜூத்திகளை தயாரித்தது பெரும்பாலும் தலித் குடும்பங்கள்தான். காலவோட்டத்தில், அக்கலையை அடுத்த தலைமுறை கற்றுக் கொள்ளவில்லை. தெரிந்தவர்களும் காலமாகி விட்டார்கள்,” என்கிறார் ஹன்ஸ் ராஜ்.
இன்று, அவரின் கிராமத்தில் மூன்று பேர்தான் இக்கலையை செய்கின்றனர். அவரின் ராம்தாசி சமார் (பட்டியல் சாதி) சமூகத்தை சேர்ந்த அவர்கள்தான் இன்னும் பஞ்சாபி ஜூத்தி செய்யும் வேலையில் இருக்கின்றனர். ருபானாவில் ஹன்ஸ் ராஜ் மட்டும்தான் இருக்கிறார்.
“குனான் குர்தில் எங்களின் குழந்தைகளுக்கு எதிர்காலமே இல்லை. எனவே சொத்துகளை விற்றுவிட்டு, இங்கு வந்து வாங்கி விட்டோம்,” என்னும் வீர்பால் கவுரின் குரலில் நம்பிக்கை தொனிக்கிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய இடங்களிலிருந்து புலம்பெயர்ந்து காகித ஆலையில் பணிபுரிய வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவருக்கு இந்தி சரளமாக வருகிறது.
ஹன்ஸ் ராஜின் குடும்பம் புலம்பெயர்ந்தது இது முதன்முறையல்ல. “என் தந்தை பஞ்சாபுக்கு , நமாலிலிருந்து (ஹரியானா) சென்று ஜூத்திகள் செய்யத் தொடங்கினார்,” என்கிறார் ஹன்ஸ் ராஜ்.
ஸ்ரீ முக்சார் சாகிப் மாவட்டத்தின் குரு நானக் பெண்கள் கல்லூரி 2017ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி , ஜுத்தி தயாரிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் 1950களில் பஞ்சாபுக்கு ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தவையென அறியப்பட்டிருக்கிறது. ஹன்ஸ் ராஜின் பூர்விக கிராமமான நமால், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் எல்லையில் இருக்கிறது.
*****
“இந்த வேலையை நான் தொடங்கியபோது, ஒரு ஜோடியின் விலை ரூ.30. தற்போது பூத்தையல் போடப்பட்ட ஒரு ஜூத்தியின் விலை ரூ.2500 வரை இருக்கும்,” என்கிறார் ஹன்ஸ் ராஜ்.
பட்டறையில் சிதறி கிடக்கும் சிறிய பெரிய தோல் துண்டுகளில், ஹன்ஸ் ராஜ் நமக்கு இரு வகைகளை காட்டுகிறார்: பசுத்தோல் மற்றும் எருமைத் தோல். “செருப்பு தைக்க எருமைத் தோல் பயன்படுத்தப்படும். மேற்பகுதிக்கு பசுத்தோல் பயன்படுத்தப்படும்,” என விளக்குகிறார் செருப்பின் மூலப்பொருளான அந்த தோலை தடவியபடி.
பசுத்தோலை கையில் வைத்துக் கொண்டு, தோலை தொடுவதில் நமக்கு பிரச்சினை இல்லையா எனக் கேட்கிறார். எங்களின் விருப்பத்தை நாங்கள் தெரிவித்ததும் தோலில் உள்ள வேறுபாட்டையும் அவர் அவதானிக்கிறார். 80 தாள்கள் ஒன்றாக அடுக்கியதை போன்ற அடர்த்தியை எருமை தோல் கொண்டிருந்தது. ஆனால் பசுத்தோல் மெலிதாக 10 தாள்களுக்கான அடர்த்தியை கொண்டிருந்தது. எருமைத்தோல் மென்மையாகவும் பசுத்தோல் சற்று கடினமாக, எளிதில் வளைக்கும்படியும் இருந்தது.
தோல் விலை அதிகரிப்பும் ஷூக்களுக்கும் ஸ்லிப்பர்களுக்கும் மாறுவதும், இந்த தொழில் செய்வோரின் எண்ணிக்கையை குறைத்துவிட்டது.
உபகரணங்களை கவனமாக கையாளுகிறார் ஹன்ஸ் ராஜ். ஜூத்திக்கு வடிவம் கொடுக்கவும் தோலை சீவவும் அவர் ரம்பி பயன்படுத்துகிறார். அடித்து உறுதியாக்க மரச்சுத்தியை பயன்படுத்துகிறார். மரச் சுத்தியல் அவரின் தந்தை பயன்படுத்தியது. தந்தை வைத்திருந்த மான் கொம்பை கொண்டு ஷூக்களின் உள் நுழைத்து முனைகளுக்கு வடிவம் கொடுக்கிறார்.
தோல் வாங்க 170 கிமீ தொலைவில் இருக்கும் ஜலந்தரின் ஷூ சந்தைக்கு பயணிக்கிறார். மண்டிக்கு செல்ல, அவர் மோகாவுக்கு பேருந்தில் செல்கிறார். பிறகு மோகாவிலிருந்து ஜலந்தருக்கு செல்கிறார். ஒரு வழி பயணிக்க 200 ரூபாய் செலவாகும்.
தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன் அவர் மேற்கொண்ட பயணத்தில், 20,000 ரூபாய் மதிப்பிலான 150 கிலோ தோல் வாங்கினார். தோலை கொண்டு செல்வதால் ஏதேனும் பிரச்சினையை சந்தித்திருக்கிறாரா எனக் கேட்டோம். “பதப்படுத்தப்படாத தோலை கொண்டு செல்வதுதான் சிரமம். பதப்படுத்தப்பட்ட தோலை கொண்டு செல்வதில் பிரச்சினை இருக்காது,” என தெளிவுபடுத்துகிறார்.
தோலை தேர்ந்தெடுக்க அவர் மண்டிக்கு செல்கிறார். பக்கத்து நகரமான முக்சாருக்கு தோலை கொண்டு செல்ல, வணிகர்கள் போக்குவரத்து ஏற்பாடு செய்கின்றனர். அங்கு அவர் அதை பெற்றுக் கொள்கீறார். “இத்தனை கனமான பொருளை தனியாக பேருந்தில் கொண்டு செல்வது முடியாத காரியம்,” என்கிறார் அவர்.
இத்தனை வருடங்களில், ஜூத்திகளை தயாரிக்கும் பொருள் மேம்பட்டிருக்கிறது. மலோத்தின் குரு ரவிதாஸ் காலனியை சேர்ந்த மகிந்தெர் குமார் மற்றும் ராஜ் குமார் ஆகிய இளைஞர்கள் ரெக்சின் மற்றும் நுண்ணிய தாள்கள் போன்ற போலி தோல் தற்போது இயல்பாக பயன்படுத்தப்படுவதாக கூறுகின்றனர். நாற்பது வயதுகளில் இருக்கும் ராஜும் மகிந்தெரும் தலித் ஜாதவ் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
”ஒரு நுண் தாள் விலை கிலோவுக்கு ரூ.130 ஆகிறது. பசுத்தோலோ ரூ.160-லிருந்து 200 வரை கிலோவுக்கு ஆகிறது,” என்கிறார் மகிந்தெர். தோல், அப்பகுதியில் அரிதான பொருளாக மாறிவிட்டதாக கூறுகின்றனர். “தொடக்கத்தில், காலனி முழுக்க தோல் பதனிடும் ஆலைகள் இருந்தன. பதனிடப்படாத தோலின் நாற்றம் காற்றில் நிரம்பியிருக்கும். காலனி விரிவடையத் தொடங்கியதும் ஆலைகள் மூடப்படத் தொடங்கின,” என்கிறார் ராஜ்.
இத்தொழிலை செய்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என சொல்லும் அவர், குறைவான வருமானமும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார். “தோலின் நாற்றம் ஆடைகளையும் தொற்றும்,” என்கிறார் மகிந்தெர். “சில நேரங்களில், அவர்களின் நண்பர்கள் கைகுலுக்கக் கூட மாட்டார்கள்.”
“என் சொந்த குடும்பத்தில் குழந்தைகள் ஜூத்திகள் செய்வதில்லை,” என்கிறார் ஹன்ஸ் ராஜ். “என் மகன்கள் கடைக்குள் நுழைந்தது கூட இல்லை. கைவினைத் தொழிலை புரிந்து கொண்டதும் இல்லை. அவர்கள் எப்படி அதை கற்பார்கள்? இந்த திறன் அறிந்த கடைசி தலைமுறை நாங்கள்தான். நானும் கூட அடுத்த ஐந்து வருடங்களுக்கு செய்ய முடியும். எனக்கு பிறகு யார் செய்வார்கள்?” எனக் கேட்கிறார் அவர்.
இரவுணவுக்கு காய்கறிகள் வெட்டியபடி வீர்பால் கவுர், “ஜூத்திகள் மட்டும் செய்து வீடு கட்ட முடியாது,” என்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன் வீட்டை அக்குடும்பம் கட்டி முடித்தது. காகித ஆலையில் பணிபுரியும் மூத்த மகன் ஆலையில் பெற்ற கடனில் அந்த வீடு கட்டப்பட்டது.
“பூத்தையல் போட கற்றுக் கொள்ள அவளிடம் சொன்னேன். அவள் கற்கவில்லை,” என்கிறார் மனைவியை சீண்டும் வகையில் ஹன்ஸ் ராஜ். இருவரும் மணம் முடித்து 38 வருடங்களாகிறது. “எனக்கு ஆர்வம் இல்லை,” என்கிறார் வீர்பால். மாமியாரிடமிருந்து கற்றுக் கொண்ட பூத்தையலை ஜரிகை நூல் கொண்டு ஒரு ஜோடிக்கு அவர் ஒரு மணி நேரத்தில் போட்டுவிட முடியும்.
மூவரை கொண்ட மூத்த மகனின் குடும்பத்துடன் அவர்கள் வசிக்கும் வீட்டில் இரண்டு அறைகளும் ஒரு சமையலறையும் ஒரு வரவேற்பறையும் வெளிப்புறத்தில் கழிவறையும் உண்டு. அறைகளில் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் துறவி ரவிதாஸ் படங்கள் இருக்கின்றன. துறவியின் படம் ஹன்ஸ் ராஜின் பட்டறையிலும் இருக்கிறது.
“கடந்த 10-15 வருடங்களாக மக்கள் மீண்டும் ஜூத்திகள் அணிய ஆரம்பித்திருக்கிறார்கள்,” என்கிறார் வீர்பால். ”அதற்கு முன், ஷூ தயாரிப்பவர்களை எவரும் பொருட்படுத்தவே இல்லை.”
அச்சமயத்தில், ஹன்ஸ் ராஜ் ஒரு விவசாயத் தொழிலாலராக பணிபுரிந்தார். அவ்வப்போது வாடிக்கையாளர் கிடைத்தால், ஓரிரண்டு நாட்களில் ஜூத்திகளை வடிவமைத்தார்.
”இப்போது கல்லூரி செல்லும் இளைஞர்களும் பெண்களும் ஜூத்திகளை அணிய ஆர்வம் காட்டுகிறார்கள்,” என்கிறார் வீர்பால்.
ஜூத்திகளை லூதியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு இடங்களுக்கு வாடிக்கையாளர்கள் கொண்டு சென்றனர். கடைசியாக எட்டு ஜோடி ஜூத்திகளை செய்ய ஓர் ஆலைப் பணியாளர் கொடுத்த ஆர்டரை சந்தோஷமாக நினைவுகூருகிறார் ஹன்ஸ் ராஜ். உத்தரப்பிரதேசத்திலுள்ள உறவினர்களுக்காக ஆலைப் பணியாளர் அந்த ஜூத்திகளை வாங்கினார்.
வசிப்பிடத்திலேயே அவரின் நிபுணத்துவத்துக்கு தொடர்ச்சியான தேவை இருப்பதால், “ஒவ்வொரு நாளும் தீபாவளி போல் எனக்கு இருக்கிறது,” என்கிறார் ஹன்ஸ் ராஜ் சந்தோஷமாக.
இக்கட்டுரை வெளியான சில வாரங்கள் கழித்து நவம்பர் 2023-ல் ஹன்ஸ் ராஜுக்கு லேசான மாரடைப்பு வந்தது. இப்போது அவர் மீண்டு வருகிறார்.
இக்கட்டுரை, மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை (MMF)-ன் ஆதரவில் எழுதப்பட்டது
தமிழில் : ராஜசங்கீதன்