"ஏதே ரொட்டி கத் மில்தி ஹை, சிட்டா சாரே ஆம் மில்தா ஹை [இங்கு உணவுக்கு தட்டுப்பாடு, ஆனால் ஹெராயின் மட்டும் எளிதாகக் கிடைக்கிறது]".
ஹர்வன்ஸ் கோரின் ஒரே மகனும் போதைக்கு அடிமையானவர். "நாங்கள் அவரைத் தடுக்க முயற்சிக்கிறோம், ஆனால் அவர் இன்னும் போராடி, எல்லா பணத்தையும் எடுத்துச் சென்று போதைப்பொருளுக்கு செலவழிக்கிறார்" என்று 25 வயதில் புதிதாக தந்தையானவரின் மகிழ்ச்சியற்ற தாய் கூறுகிறார். சிட்டா (ஹெராயின்), ஊசி மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் மாத்திரை வடிவில் தங்கள் கிராமத்தில் எளிதாகக் கிடைக்கின்றன என்று அவர் கூறுகிறார்.
அரசு நினைத்தால் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த முடியும். இதேநிலை நீடித்தால், இன்னும் ஏராளமானோரை இழக்க நேரிடும்," என்று கூறும் ஹர்வன்ஸ் கோர் ஒரு கூலித் தொழிலாளி. அவர் ரோக்கேகலன் கிராமத்தில் உருளைக்கிழங்கு சேமிப்பு கிடங்கில் வேலை செய்கிறார். மூட்டை கட்டும் வேலைக்கு ஒரு பைக்கு 15 ரூபாய் சம்பாதிக்கிறார். அவரால் ஒரு நாளுக்கு 12 மூட்டை வரை கட்ட முடிகிறது. இதன் மூலம் ஒரு நாளுக்கு சுமார் ரூ.180 அவர் சம்பாதிக்கிறார். அவரது கணவர் சுக்தேவ் சிங், 45, நங்கல் கிராமத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிஹால் சிங் வாலாவில் ஒரு கிடங்கில் கூலி வேலை செய்கிறார். கோதுமை அல்லது அரிசி மூட்டைகளையும் அவர் கட்டுகிறார். வேலை கிடைக்கும் போது ஒரு நாளுக்கு ரூ.300 வரை அவர் சம்பாதிக்கிறார். அவர்களின் வருமானத்தை குடும்பமே நம்பியுள்ளது.
பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் வசிக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் கிரண் கோர், "எங்கள் கிராமத்திலிருந்து போதைப்பொருளை ஒழிப்பதாக வாக்குறுதி அளிக்கும் எவருக்கும் எங்கள் ஓட்டு கிடைக்கும்" என்று கூறுகிறார்.
கிரணின் தெளிவு அவரது கணவரும் ஒரு போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற உண்மையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. மூன்று வயது மகள், ஆறு மாத ஆண் குழந்தைக்கு தாயான அவர் கூறுகையில், "எனது கணவர் ஒரு சாதாரண தொழிலாளியாக வேலை செய்கிறார். கடந்த மூன்று வருடங்களாக அவர் அப்படித்தான். அவர் சம்பாதிப்பதை போதைப்பொருளுக்கு செலவழிக்கிறார்.
எட்டு பேர் கொண்ட தனது குடும்பத்தின் வீட்டுச் சுவர்களில் விழுந்துள்ள பெரிய விரிசல்களைப் பார்த்து, "அவற்றை சரிசெய்ய பணம் எங்கிருந்து வரும்?" என்று அவர் கேட்கிறார்.
ஃபரித்கோட் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் மோகா மாவட்டம் நங்கல் கிராமத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
ஆறு மாதங்களுக்கு முன்பு, நங்கலில் 24 வயது இளைஞர் ஒருவர் அதிகப்படியான போதைமருந்து எடுத்துக்கொண்டதால் உயிரிழந்தார். ஒரு இளைஞனின் மறைவு கிராம மக்களின் நினைவில் இருந்து நீங்கவில்லை. "பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி இருப்பதால் மோசமான சகவாசத்தில் சிக்கிவிடுகிறார்கள்", என்று 2008 முதல் நங்கல் கிராமத்தில் ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்) ஆக பணியாற்றி வரும் பரம்ஜித் கோர் கூறினார்.
"இந்த [போதைப்பொருள்] நிலைமையை அரசால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்" என்று அவர் மேலும் கூறுகிறார். 2022ஆம் ஆண்டில், பஞ்சாபில் 144 பேர் (அனைவரும் ஆண்கள்) அதிகப்படியான போதைப்பொருளால் இறந்தனர் (தேசிய குற்ற ஆவணக் காப்பகம்).
2022 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதங்களுக்குள் பஞ்சாபில் போதைப்பொருட்களை ஒழிப்பதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் பகவந்த் மான் 2023 ஆகஸ்ட் 15, அன்று பாட்டியாலாவில் சுதந்திர தின உரையில் ஓராண்டிற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதாக அறிவித்தார்.
மாநில அரசுகள், கலால் துறைகள் மூலம், சில போதைப்பொருட்களின் விற்பனை, பயன்பாடு, நுகர்வு மற்றும் இயக்கத்தை கட்டுப்படுத்துகின்றன . ஆனால் போதைப்பொருள் விற்பனை மற்றும் வர்த்தகம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியா என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். "மோகா, லூதியானா, பர்னாலா மற்றும் பிற இடங்களில் இருந்து எங்கள் கிராமத்திற்கு கொண்டு வருகிறார்கள்", என்று நங்கலில் உள்ள கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழுவின் உறுப்பினரான புட்டா நங்கல் கூறுகிறார்.
போதை மருந்துகள் மற்றும் சைக்கோடிரோபிக் பொருட்கள் (NDPS) சட்டம் , 1985 இன் படி, இந்தியாவில் போதைப்பொருள் உட்கொள்வது மற்றும் வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். "ஆனால் போலீசார் கூட எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்ற அழுத்தத்தில் உள்ளனர்", என்று குழு உறுப்பினர் சுக்சைன் சிங் சுட்டிக்காட்டுகிறார். "எம்.எல்.ஏ [சட்டமன்ற உறுப்பினர்] விரும்பினால் அவர்கள் எங்கள் கிராமத்திற்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க முடியும்", என்று அவர் மேலும் கூறுகிறார். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், லக்வீர் சிங், இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார், "அரசு தலையிட்டால் மட்டுமே இதை நிறுத்த முடியும்" என்கிறார்.
ஆனால் அரசியல்வாதிகள் இந்த பிரச்னையை கண்டுகொள்வதில்லை என்று நங்கல் கிராமவாசி கமல்ஜித் கோர் கூறுகிறார். ஃபரித்கோட் தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் கரம்ஜித் அன்மோல் தனது பேரணியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து பேசவில்லை என்று அவர் கூறுகிறார். "பெண் வாக்காளர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்று உறுதியளித்து அவர் எங்களை வாக்களிக்கச் சொன்னார்", என்று தலித் மசாபி சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 40 வயதான அவர் கூறுகிறார். "துரதிர்ஷ்டவசமாக, எந்த [அரசியல்] கட்சியும் இதைப் பற்றி பேசவில்லை", என்று அவர் தனது கிராமத்தில் மே மாதம் காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் அழைப்பு விடுத்திருந்த திறந்த கூட்டத்தை நோக்கி நடந்து கொண்டே கூறுகிறார்.
*****
கணவரின் போதைப் பழக்கம் குறையாத நிலையில், குடும்பச் செலவுகளை நிர்வகிக்கும் சுமை நில உரிமையாளர்களின் வயல்களில் வேலை செய்யும் கிரண் மீது விழுகிறது. 23 வயதான அவர் கடைசியாக பிப்ரவரி 2024 இல், அவரது பச்சிளங் குழந்தையை மரத்தின் நிழலில் ஒரு பிளாஸ்டிக் சாக்கில் கிடத்திவிட்டு உருளைக்கிழங்கு பறிக்க கூலிப் பெற்றார். 20 நாட்கள் நீடித்த இந்த வேலைக்கு ஒரு நாளுக்கு ரூ.400 என்று பேசப்பட்டு இறுதியாக ரூ.300 வழங்கப்பட்டது.
அவரது தோழியும், அண்டை வீட்டாருமான அமன்தீப் கோர் விவசாயிகள் [உயர் சாதியினர்] போராட்டத்திற்கு எங்களை அழைத்துச் செல்கின்றனர், ஆனால் சரியான கூலி தருவதில்லை என்று குறிப்பிடுகிறார். “எங்களுக்காக யார் நிற்கிறார்? யாருமில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்பதால் பின்னால் நிற்க சொல்கிறார்கள், ஒரு தொழிலாளியாக நாங்கள் யாரையும் விட அதிகம் உழைக்கிறோம்.”Tamil translation.
கிரண் மற்றும் அமன்தீப் போன்ற தலித்துகள் பஞ்சாபின் மக்கள்தொகையில் 31.94 சதவீதமாக உள்ளனர் - இது நாட்டின் எந்த மாநிலத்தையும் விட மிக அதிகம் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011). தினக்கூலியை குறைந்தபட்சம் ரூ.700 முதல் ரூ.1,000 வரை உயர்த்த வேண்டும் என்பது போராட்டக் களத்தில் உள்ள தலித் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கை.
பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கான அடுத்த வேலைவாய்ப்பு ஜூன் மாதத்தில் கரீப் பருவம் தொடங்கியதும் கிடைக்கும் என்று அமன்தீப் கூறுகிறார். அப்போது அவர்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.4,000க்கு நெல் நடவு செய்ய பணியமர்த்தப்படுவார்கள். இதனால் இதில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு நாளுக்கு ரூ.400 கூலியாக கிடைக்கிறது. "அதன் பிறகு, குளிர்காலம் முழுவதும் நாங்கள் வேலையின்றி இருப்போம்", என்று அவர் மேலும் கூறுகிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம் (MGNREGA) திட்டம் மற்றொரு வாய்ப்பாகும். இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்கிறது. இருப்பினும், கிரணின் மாமியாரான 50 வயதாகும் பல்ஜித் கோர், தங்கள் கிராமத்தில் இந்த திட்டத்தின் கீழ் 10 நாட்களுக்கு மேல் வேலை கிடைப்பதில்லை என்று கூறுகிறார்.
தினசரி செலவுகளுக்கு உதவ, பல்ஜித் ஒரு உயர் சாதி வீட்டில் ஒரு நாளைக்கு ரூ.200 சம்பளத்திற்கு வேலை செய்கிறார். பிளாஸ்டிக்கால் மூடும் ஒவ்வொரு பாடப் புத்தகத்திற்கும் அமன்தீப் ரூ.20 பெறுகிறார். 2022 சட்டமன்றத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி அரசு உறுதியளித்த மாதத்திற்கு ரூ.1,000 கூடுதல் வருமானம் உண்மையில் உதவும் என்று பெண்கள் கூறுகின்றனர். "நாங்கள் கடுமையாக உழைத்து ரூ.200 கொடுத்து படிவத்தை நிரப்பினோம், ஆனால் எந்த பயனும் இல்லை", என்று பல்ஜித் கோர் கூறுகிறார்.
இப்போது மன உளைச்சலுக்கு ஆளான பல்ஜித் தனது இளைய மகள் சரப்ஜித் கோர் (24) என்பவரை தனது கார், மோட்டார் சைக்கிளை விற்று கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி திரட்டிய ரூ.13 லட்சத்தை கொண்டு வேலை தேடி இங்கிலாந்துக்கு அனுப்ப தயாராகி வருகிறார்..
சரப்ஜித் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால் அன்றிலிருந்து வேலை இல்லாமல் இருக்கிறார். "வேலை இல்லாததால் பஞ்சாபில் எங்கள் நேரத்தை வீணடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. போதைப்பொருள் பயன்பாடு மட்டுமே இங்கு உள்ளது," என்று அவர் கூறுகிறார்.
24 வயதான அவர் வேலை கிடைக்கும் வரை நண்பர்களுடன் இருப்பார்: "வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எனது குழந்தை பருவ கனவு. இப்போது அந்தக் கனவு அவசியமாகிவிட்டது" என்றார். இக்குடும்பம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு நாளுக்கு இருமுறை பால் விநியோகம் செய்து ஒரு நாளுக்கு சுமார் ரூ.1,000 சம்பாதிக்கிறது. இது கடனை திருப்பிச் செலுத்துவதற்கும், வீட்டு செலவுகளை சமாளிப்பதற்கும் உதவுகிறது.
"பெற்றோர்களாக, நாங்கள் அவளை திருமணம் செய்து அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நாங்கள் அவளை வெளிநாட்டிற்கு அனுப்புகிறோம். குறைந்த பட்சம் அவள் ஏதேனும் சம்பாதித்து பின்னர் பிடித்த ஒருவனை திருமணம் செய்து கொள்வாள்" என்கிறார் பல்ஜித் கே.
தமிழில்: சவிதா