விளிம்புநிலை மக்களுக்கு எப்போதும் புகைப்படத் தொழில் அணுகவியலாத ஒன்றாகத்தான் இருந்து வந்துள்ளது. அவர்களால் கேமரா வாங்க முடியாது என்பது மட்டும் காரணம் அல்ல. இந்தப் போராட்டத்தைப் புரிந்துகொண்டு, இந்த இடைவெளியை நிரப்பி, விளிம்புநிலை இளைஞர்களுக்கு – குறிப்பாக தலித்துகள், மீனவர்கள், மாற்றுப் பாலின சமூகத்தவர், சிறுபான்மை முஸ்லிம்கள் போன்ற பல தலைமுறைகளாக ஒடுக்குமுறைகளை சந்திக்கும் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களிடம் புகைப்படக் கலையை கொண்டு செல்ல விரும்பினேன்.
பரவலாக அறியப்படாத தங்களின் கதைகளை, என் மாணவர்கள் சொல்லவேண்டும் என விரும்பினேன். இந்த பயிலரங்கின் மூலம் தங்கள் தினசரி வாழ்வை அவர்கள் படமாக்குகிறார்கள். இவை அவர்களின் சொந்தக் கதைகள். அவர்களின் மனங்களுக்கு நெருக்கமான கதைகள். கேமரா வைத்துக் கொள்வதையும், படமெடுப்பதையும் அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். முதலில் அவர்களுக்கு அந்த விருப்பத்தை உருவாக்க வேண்டும். கோணம், ஃப்ரேமிங் போன்றவற்றை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
அவர்களின் வாழ்க்கைகளிலிருந்து அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் வித்தியாசமாக இருக்கின்றன.
அவர்கள் என்னிடம் புகைப்படங்களைக் காட்டும்போது, புகைப்படத்தின் அரசியலையும் அது கொண்டிருக்கும் சூழ்நிலையைப் பற்றியும் பேசுவேன். பயிலரங்குக்குப் பிறகு, சமூக அரசியல் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு கிடைத்தது.
பெரும்பாலான புகைப்படங்கள் குளோஸ் அப் படங்களே. அவற்றில் இருப்பது அவர்களின் குடும்பம், வீடு என்பதால் அவர்கள் மட்டுமே அவ்வளவு நெருக்கத்தில் குளோஸ் அப் படங்களை எடுக்க முடியும். வெளியாள் யாராக இருந்தாலும் ஒரு தொலைவில் இருந்துதான் படம் எடுக்க முடியும். ஆனால் அவர்களுக்கு பிரச்சினை இல்ல. ஏனெனில் புகைப்படத்தில் இடம்பெறுவோருக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருப்பதால், அவர்கள் தூரத்தில் நிற்கவேண்டியதில்லை.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, ஒத்த சிந்தனை உடையவர்களின் உதவியில் நான் கேமராக்கள் வாங்கினேன். டிஜிடல் எஸ்.எல்.ஆர். கேமராவை அவர்களே கையாளுவது, அவர்களுக்கு தொழில்முறையில் உதவி செய்யும்.
‘Reframed - North Chennai through the lens of Young Residents’ என்ற தலைப்பில் சில புகைப்படங்களை எடுத்தார்கள்.வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தொழிற்பேட்டையாக மட்டுமே தோன்றும் வட சென்னையில் எடுக்கப்பட்ட இப்படங்கள் அத்தகைய பார்வையை உடைத்து மீளாய்வு செய்ய உதவுகின்றன.
மதுரை மஞ்சமேட்டைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் 12 பேர் (16-21 வயது) என்னுடன் 10 நாள் பயிலரங்கில் பங்கேற்றார்கள். விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், இது போன்ற பயிலரங்கில் பங்கேற்பது இதுதான் முதல் முறை. பயிலரங்கில் பங்கேற்றபோது, தங்கள் பெற்றோர் வேலை செய்யும் சூழ்நிலையை முதன்முறையாக அவர்கள் பார்த்தார்கள். தங்கள் கதையை உலகத்துக்கு சொல்லும் உந்துதலை அவர்கள் பெற்றார்கள்.
ஒடிஷா மாநிலம் கஞ்சம் என்ற இடத்தில் ஏழு மீனவப் பெண்களுக்காகவும், தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில் உள்ள 8 மீனவப் பெண்களுக்காகவும் மூன்று மாதப் பயிலரங்கம் ஒன்றை நடத்தினேன். தொடர் கடல் அரிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதி கஞ்சம். நிறைய புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ள நாகப்பட்டினம், அடிக்கடி இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகிற பகுதி ஆகும்.
தங்களைச் சுற்றியுள்ள தனித்துவமான சவால்களைப் புகைப்படங்கள் எடுக்க, அவர்களுக்கு இப்பயிலரங்கு வழிகாட்டியது.
பிரதிமா, 22
தக்ஷின் அறக்கட்டளையின் களப் பணியாளர்
போடம்பேட்டா, கஞ்சம், ஒடிஷா
புகைப்படம் எடுப்பது என்னுடைய சமூகம் செய்யும் வேலையை மதிக்கவும், என்னை சுற்றியுள்ள மக்களுக்கு நெருக்கமாகவும் எனக்கு உதவியது.
கழிமுகத்தில் விளையாட்டாக ஒரு படகை குழந்தைகள் தள்ளும் படம் எனக்கு மிகவும் பிடித்த படம். காலத்தில் ஒரு குறிப்பிட்ட தருணத்தை உறைய வைக்கும் ஆற்றல் புகைப்படத்துக்கு இருப்பதை நான் புரிந்துகொண்டேன்.
நான் சார்ந்திருக்கும் மீனவ சமூகத்தை சேர்ந்த மீனவர் ஒருவர், கடல் அரிப்பால் சேதமடைந்த தனது வீட்டில் இருந்து பொருட்களை வெளியே எடுப்பதைக் காட்டும் ஒரு புகைப்படத்தை நான் எடுத்தேன். காலநிலை மாற்றத்தால் விளிம்புநிலை சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை காட்டும் அந்தப் படம் எடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
முதன்முதலாக கேமராவை நான் கையில் வாங்கியபோது, என்னால் அதைக் கையாள முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ பெரிய இயந்திரத்தை கையில் பிடித்திருப்பதைப் போல இருந்தது. அது முழுமையாக ஒரு புது அனுபவம். என் மொபைலில் நினைத்தபடி பல படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், மக்களுடன் பழகி, புகைப்படங்களின் வழியாக அவர்களின் கதை சொல்லும் கலையை நோக்கி என் கண்களைத் திறந்தது இந்தப் பயிலரங்கம். தொடக்கத்தில் புகைப்படக்கலையைப் பற்றிய கோட்பாடுகள் கொஞ்சம் குழப்பின. ஆனால், களப் பயிலரங்கத்துக்குப் பிறகு, கேமராவைக் கையாண்ட நடைமுறை அனுபவத்துக்குப் பிறகு, எல்லாமே பிடிபடத் தொடங்கியது. வகுப்பில் சொல்லப்பட்ட கோட்பாடுகளை நிஜ உலகில் என்னால் செயல்படுத்த முடிந்தது.
*****
பா. இந்திரா, 22
பி.எஸ்சி. இயற்பியல் மாணவி, டாக்டர் அம்பேத்கர் மாலை
நேர இலவச படிப்பகம்,
ஆரப்பாளையம், மதுரை, தமிழ்நாடு
“உங்களையும் உங்களைச் சுற்றி உள்ளவற்றையும் மக்களையும் அவர்களின் வேலைகளையும் பற்றிய புகைப்படங்கள் எடுத்து வாருங்கள்.”
என் கையில் கேமராவைத் தரும்போது பழனி அண்ணா இப்படித்தான் சொன்னார். முதலில் என் தந்தை இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு அனுமதி தரவில்லை. கொஞ்சம் வற்புறுத்திதான் அவரிடம் அனுமதி வாங்க முடிந்தது. எனவே பயிற்சிக்கு வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கடைசியில் என் தந்தையைத்தான் புகைப்படம் எடுத்தேன்.
நான் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நடுவில் வாழ்கிறேன். என் தந்தையைப் போலவே இங்குள்ள அனைவரும், சாதி அமைப்பின் ஒடுக்குமுறையால் குலத்தொழில் என்ற சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். என் தந்தையே ஒரு துப்புரவுத் தொழிலாளி என்றாலும், இந்த வகுப்புக்கு வருவதற்கு முன்பு அவர்களது வேலை பற்றியும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. படித்து நல்ல ஒரு அதிகார வேலைக்கு மட்டும்தான் போகவேண்டும் என்றும் குலத்தொழிலாக துப்புரவு வேலைக்கு மட்டும் போககூடாது என்று எங்கள் படிப்பக ஆசிரியர் அடிக்கடி கூறுவார்.
என் அப்பா வேலைக்கு செல்லும்போது கடந்த இரண்டு மூன்று நாள்களாக அவரோடு பயணித்து அவரது வேலை என்னவென்பதைத் தெரிந்துகொண்டேன். அவரைப் பற்றிப் புகைப்படம் எடுத்தேன். எவ்வளவு மோசமான நிலையில் அவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதை கண்டேன். கையுறை, காலுறை இல்லாமல் வீட்டுக் குப்பைகளை, நச்சுக் குப்பைகளை அவர்கள் கையாளும் நிலையையும் பார்த்தேன். அவர்கள் சரியாக காலை 6 மணிக்கு வேலைக்கு செல்லவேண்டும். ஒரு நொடி தாமதமானாலும், அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் அவர்களை மனிதாபிமானம் இல்லாமல் நடத்துகிறார்கள்.
என் சொந்த வாழ்கையைப் பற்றி, என் இரண்டு கண்களால் பார்க்கும்போது தெரியாமல் போனவற்றை மூன்றாவது கண்ணான எனது கேமரா காட்டியது. என் தந்தையை நான் புகைப்படம் எடுத்தபோது, அவர் தனது தினசரி இடர்ப்பாடுகளைப் பற்றியும் சிறுவயதிலிருந்து இந்த வேலையில் எப்படி சிக்கிக் கொண்டார் என்பதைப் பற்றியும் என்னிடம் கூறினார். அந்த உரையாடல்கள் எனக்கும் என் அப்பாவுக்கு இடையில் இருந்த பிணைப்பை வலுவாக்கியது.
இந்த பயிலரங்கம் எங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையானது.
*****
சுகந்தி மாணிக்கவேல்,
27
மீனவப் பெண்,
நாகப்பட்டினம், தமிழ்நாடு
கேமரா என் பார்வையை மாற்றியது. கேமராவை கையில் எடுக்கும்போது தன்னம்பிக்கையுடனும், சுதந்திரமாகவும் உணர்ந்தேன்.நிறைய மக்களை சந்தித்து அவர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. எப்போதுமே நாகப்பட்டினத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். இருந்தாலும் நாகப்பட்டினம் துறைமுகத்தை அப்போதுதான் நான் முதல்முறையாக பார்த்தேன். அதுவும் கேமராவுடன் சென்று பார்த்தேன்.
ஐந்து வயது முதல் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் என் தந்தை மாணிக்கவேலை (60 வயது) ஆவணப்படுத்தினேன். நீண்ட காலம் கடல் நீரில் புழங்கியதால் அவர் கால் விரல்கள் மரத்துப் போய், ரத்த ஓட்டம் தடைபட்ட நிலையிலும், தினமும் மாத்திரை போட்டுக் கொண்டு எங்கள் குடும்பத்துக்காக இன்று வரை மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்.
வெள்ளப்பள்ளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் 56 வயது பூபதி அம்மா. 2002-ம் ஆண்டு இவரது கணவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது. அதன் பிறகு, மீன் ஏலம் எடுத்து, பேருந்தில் வெளியூர் சென்று விற்பனை செய்யும் வேலையை தன் குடும்பத்துக்காக செய்து வருகிறார் அவர்.
நான் மீனவ கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் நான் கடற்கரைக்கு செல்வது அரிதாகிவிட்டது. நான் போட்டோ எடுக்கத் தொடங்கிய பிறகுதான் எனது சமூகத்தையும் அவர்கள் சந்திக்கும் தினசரி பிரச்சனைகளையும் பற்றிய ஆழமான புரிதல் ஏற்பட்டது.
இந்தப் புகைப்படப் பயிலரங்கை என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்புகளில் ஒன்றாகப் பார்க்கிறேன்.
*****
லட்சுமி எம்., 42
மீனவப் பெண்
திருமுல்லைவாசல், நாகப்பட்டினம், தமிழ்நாடு
மீனவப் பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக புகைப்படக் கலைஞர் பழனி, திருமுல்லைவாசல் வந்தபோது எதைப் படம் எடுக்கப்போகிறோம், எப்படிப் படம் எடுக்கப்போகிறோம் என்று தெரியாமல் எங்களுகு பதற்றமாக இருந்தது. ஆனால், கையில் கேமராவைப் பிடித்தவுடன் இந்தக் கவலைகள் எல்லாம் காணாமல் போய், எங்களுக்குத் தன்னம்பிக்கை பிறந்தது.
முதல் நாள் நாங்கள் வானம், கடற்கரை, சுற்றியுள்ள பிற பொருட்களைப் படமெடுக்க கடற்கரைக்குச் சென்றபோது, ஊர்த் தலைவர் தலையிட்டு நாங்கள் என்ன செய்கிறோம் என்று கேட்டார். நாங்கள் சொல்வதைக் கேட்க மறுத்த அவர், படம் எடுக்காமல் எங்களைத் தடுப்பதிலேயே குறியாக இருந்தார். அடுத்தபடியாக நாங்கள் சின்னக்குட்டி கிராமத்துக்குச் சென்றபோது, அந்த மாதிரித் தடைகள் வராமல் பார்த்துக்கொள்வதற்காக, ஊர்த் தலைவரிடம் முன் அனுமதி கோரினோம்.
மங்கலான படங்கள் எடுத்தால் மீண்டும் சரியாக எடுக்கும்படி வலியுறுத்துவார் பழனி. தவறுகளைப் புரிந்துகொண்டு சரி செய்துகொள்ள இது எங்களுக்கு உதவியது. அவசரத்தில் முடிவெடுக்கவோ, செயல்படவோ கூடாது என்று நான் கற்றுக்கொண்டேன். அது நல்ல அறிவூட்டும் அனுபவம்
*****
நூர் நிஷா கே.., 17
B.Voc
டிஜிடல் ஜர்னலிசம், லயோலா
கல்லூரி
திருவொற்றியூர், வட சென்னை, தமிழ்நாடு.
என் கையில் முதன்முதலாக கேமரா தரப்பட்டபோது, அது கொண்டுவரப்போகும் பெரிய மாற்றங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையை போட்டோகிரஃபிக்கு முன்பு, போட்டோகிரஃபிக்குப் பின்பு என்று இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். என் சின்ன வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டேன். அதில் இருந்து எங்களைக் காப்பாற்ற அம்மா போராடி வருகிறார்.
கேமரா லென்ஸ் மூலமாக பழனி அண்ணா எங்களுக்கு ஒரு உலகத்தைக் காட்டினார். அந்த உலகம் வித்தியாசமாகவும், புதிதாகவும் இருந்தது எனக்கு. நாம் எடுக்கும் புகைப்படங்கள் வெறும் புகைப்படங்கள் அல்ல; அவை ஆவணங்கள். அவற்றின் மூலமாக நாம் அநீதியை கேள்வி கேட்கமுடியும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
“நீ ஃபோட்டோகிரஃபியை நம்பு. உனக்குத் தேவையானதை ஃபோட்டோகிரஃபி பண்ணிக் கொடுக்கும்,” என்று அடிக்கடி சொல்வார் பழனி அண்ணா. அவர் கூறியதில் இருக்கும் உண்மையை புரிந்துகொண்டேன். இப்போது அம்மா வேலைக்குப் போகமுடியாத சூழ்நிலைகளில், நான் அவரை பார்த்துக் கொள்ள முடிகிறது.
*****
எஸ்.நந்தினி, 17
இதழியல் மாணவி, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி,
வியாசர்பாடி, வட சென்னை, தமிழ்நாடு.
என் வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைத்தான் முதன்முதலாகப் புகைப்படம் எடுத்தேன். அவர்கள் விளையாடும்போது அவர்களது மகிழ்ச்சியான முகங்களைப் புகைப்படம் எடுத்தேன். கேமரா மூலமாக உலகை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நான் கற்றுக்கொண்டேன். காட்சி மொழி என்பது எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியது என்பதை அறிந்துகொண்டேன்.
சில நேரங்களில் புகைப்படத்துக்காக ஒரு நடை செல்லும்போது நீங்கள் எதிர்பாராத ஒன்றை எதிர்கொள்வீர்கள். அந்த மாதிரி நேரத்தில் அங்கிருந்து நகர என் மனம் விரும்பாது. புகைப்படக் கலை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அது குடும்பத்தில் கிடைக்கும் கதகதப்புக்கு ஒப்பானது.
நான், டாக்டர் அம்பேத்கர் பகுத்தறிவுப் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் எங்களை டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த புகைப்படங்கள் பேசுவதைப் போல இருந்தன. துப்புரவுத் தொழிலாளி ஒருவர் மலக்குழியில் விழுந்து இறந்துபோனதையும், துன்பப்படும் அவரது குடும்பத்தையும் பழனி அண்ணா ஆவணப்படுத்தியிருந்தார். அந்தக் குடும்பத்தினரின் புகைப்படங்கள், சொற்களில் துல்லியமாக வெளிப்படுத்த முடியாத ஏக்கத்தையும், இழப்பையும், துயரத்தையும் வெளிப்படுத்தியிருந்தன. அங்கே அவரை சந்தித்தபோது, நாங்களும் இதைப் போன்ற புகைப்படங்களை எடுக்க முடியும் என்று கூறி எங்களை ஊக்கப்படுத்தினார்.
அவர் புகைப்பட வகுப்புகள் எடுக்கத் தொடங்கியபோது என்னால் போக முடியவில்லை. காரணம், நான் அப்போது பள்ளி சுற்றுலா ஒன்றுக்கு சென்றிருந்தேன். ஆனால், நான் திரும்பிவந்தபோது, எனக்கு அவர் தனியாக வகுப்பு நடத்தியதுடன், புகைப்படம் எடுக்கும்படி என்னை ஊக்குவித்தார். அதற்கு முன்பு, கேமரா எப்படி வேலை செய்யும் என்று எனக்குத் தெரியாது. பழனி அண்ணா அதை சொல்லிக் கொடுத்தார். புகைப்படம் எடுப்பதற்கான கருப்பொருளை கண்டறியவும் எங்களுக்கு அவர் வழிகாட்டினார். இந்தப் பயணத்தில் நான் புதியப் பார்வைகளையும் அனுபவங்களையும் பெற்றேன்.
என்னுடைய புகைப்பட அனுபவமே என்னை இதழியல் படிப்பை எடுக்கத் தூண்டியது
*****
வி. வினோதினி, 19
பேச்சிலர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மாணவி,
வியாசர்பாடி, வட சென்னை, தமிழ்நாடு
எங்கள் பகுதியை இவ்வளவு நாளும் பல ரூபங்களில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், கேமரா மூலம் அதைப் பார்த்தபோது எனக்கு ஒரு புதுப் பார்வை கிடைத்தது. “உங்கள் புகைப்படம், நீங்கள் படம் எடுக்கும் பொருளின் வாழ்க்கைக் கதையை சொல்வதுபோல இருக்கவேண்டும்,” என்று பழனி அண்ணா சொல்வார். அவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது, புகைப்படங்கள் மீதான, கதைகளின் மீதான, மக்களின் மீதான அவரது காதலைப் புரிந்துகொள்ள முடியும். அவர் கூறிய நினைவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது ஒரு மீனவப் பெண்ணான தனது தாயை ஒரு பட்டன் ஃபோனில் அவர் பிடித்த படம் பற்றிய நினைவுகள்தான்.
தீபாவளி அன்று, எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த குடும்பத்தை எடுத்ததுதான் நான் எடுத்த முதல் புகைப்படம். அது அழகாக இருந்தது. அதன் பிறகு இந்த ஊரை, மக்களின் அனுபவங்கள் வழியாகவும் அவர்களின் கதைகள் வழியாகவும் ஆவணப்படுத்தினேன்.
புகைப்படக் கலை இல்லாமல் என்னை நான் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்காது.
*****
பி.பூங்கொடி
மீனவப் பெண்,
செருத்தூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு
எனக்குத் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதிருந்து என் சொந்த ஊரிலுள்ள கடற்கரைக்குக் கூட நான் சென்றதில்லை. ஆனால், என்னுடைய கேமரா என்னை கடற்கரைக்கு இட்டுச் சென்றது. படகுகளை எப்படி கடலுக்குள் தள்ளுகிறார்கள் என்பதையும் எப்படி மீன் பிடிக்கிறார்கள் என்பதையும் இந்த சமுதாயத்துக்கு பெண்கள் அளிக்கும் பங்கையும் நான் ஆவணப்படுத்தினேன்.
ஒருவருக்கு சும்மா படங்களை கிளிக் செய்வதற்குப் பயிற்சி தருவது எளிது. ஆனால், படங்களின் மூலமாக கதைகளைச் சொல்ல பயிற்றுவிப்பது சின்ன விஷயம் அல்ல. பழனி அதை எங்களுக்குச் செய்தார். மக்களைப் படம் எடுப்பதற்கு முன்பாக அவர்களிடம் எப்படி தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பயிற்சியின்போது அவர் சொல்லிக் கொடுத்தார். (அதன் பிறகு) மக்களைப் படம் பிடிப்பதற்கான நம்பிக்கை எனக்குக் வந்தது.
மீன்களை விற்பது, சுத்தம் செய்வது, ஏலம் விடுவது என மீனவ சமுதாயத்தின் வெவ்வேறு தொழில்களை நான் ஆவணப்படுத்தினேன். இந்த சமுதாயப் பெண்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் இந்த வாய்ப்பு எனக்கு உதவியது. இந்த வேலையில் அவர்கள், மீன்கள் நிறைந்த கூடையை தங்கள் தலைகளில் சுமந்துசெல்ல வேண்டியிருக்கிறது.
குப்புசாமி பற்றிய புகைப்படக் கட்டுரையில் அவரது வாழ்க்கையைப் பற்றி – அவர் எப்படி எல்லையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சுடப்பட்டார் என்பதைப் பற்றி - தெரிந்துகொண்டேன். இதனால், அவர் தனது கையையும் காலையும், பேச்சையும் இழந்தார்.
துணி துவைப்பது, தோட்ட வேலை செய்வது, சுத்தம் செய்வது என்று அவர் தனது தினசரி வேலைகளை செய்வார். அவரை சென்று பார்த்து அவரது வேலைகளில் உடனிருந்தேன். கையையும் காலையும் பயன்படுத்த முடியாத நிலையில், அவர் எதிர்கொள்ளவேண்டிய சிரமங்களை நான் புரிந்துகொண்டேன். சுவாரசியமில்லாத, சலிப்பூட்டும் தினசரி வேலைகளை செய்வதன் மூலம் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை அவர் காட்டினார். அவரது உடல் குறைபாடு, வெளியுலகுக்கு செல்லும் வாய்ப்பை அவருக்கு மறுப்பது குறித்து அவருக்குக் கவலை ஏதுமில்லை. சில நேரங்களில் தனக்குத் தோன்றும் வெறுமை, செத்துப்போகலாம் என்று கருதவைக்கும் என்கிறார் அவர்.
மீனவர்கள், மத்தி மீன்கள் பிடிப்பதைப் பற்றி ஒரு புகைப்படத் தொடர் செய்தேன். மத்தி மீன்கள் பொதுவாக நூற்றுக் கணக்கில் பிடிபடும் என்பதால் அவற்றை சமாளிப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும். எப்படி ஆண்களும், பெண்களும் சேர்ந்து உழைத்து, இந்த மீன்களை வலைகளில் இருந்து வெளியே எடுத்து அவற்றை ஐஸ் பெட்டிகளில் சேமிக்கிறார்கள் என்பதை நான் ஆவணப்படுத்தினேன்.
பெண் புகைப்படக் கலைஞராக இருப்பது சவாலானது. இதே சமூகத்தில் இருந்து வந்திருந்தாலும்கூட ‘ஏன் அதைப் படம் எடுக்கிறாய்? ஏன் பெண்கள் புகைப்படம் எடுக்கவேண்டும்?’ என்பது போன்ற கேள்விகளை நாங்கள் எதிர்கொள்கிறோம்.
தன்னைப் புகைப்படக் கலைஞர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த மீனவப் பெண்ணுக்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய சக்தி, பழனி அண்ணா.
*****
பழனி ஸ்டுடியோ ஒவ்வோர் ஆண்டும் தலா 10 பங்கேற்பாளர்களுடன் இரண்டு புகைப்படப் பயிலரங்குகளை நடத்த விழைகிறது. பயிலரங்குக்குப் பிறகு பங்கேற்பாளர்களுக்கு ஒரு மானியம் வழங்கப்படும். அதைக் கொண்டு அவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு தங்கள் கதைகளை உருவாக்கலாம். அனுபவமுள்ள புகைப்படக் கலைஞர்களும், இதழாளர்களும், பயிலரங்கு நடத்தவும், அவர்களின் புகைப்படங்களை மதிப்பீடு செய்யவும் அழைக்கப்படுவார்கள். அந்தப் படங்கள் பிறகு காட்சியில் வைக்கப்படும்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்