தூஃபானி மற்றும் அவரது குழு நெசவாளர்கள், காலை 6:30 மணி முதலே வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 12 அங்குலம் வரை பின்னும் இவர்கள் நால்வரும், தாங்கள் வேலை செய்யும் 23x6 அடி கலிச்சாவை (கம்பளம்) முடிக்க 40 நாட்கள் எடுக்கும்.

பனிரெண்டரை மணியளவில், தூஃபானி பிந்த், ஒரு மர பெஞ்சில் ஓய்வெடுக்க அமர்கிறார். அவருக்குப் பின்னால், அவர் வேலை செய்யும் தகரக் கொட்டகை உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பூர்ஜாகிர் முஜேஹாரா கிராமத்தில் உள்ள அவரது இந்த பட்டறையில் ஒரு மரச் சட்டத்தில் வெள்ளை பருத்தி நூல்கள் தொங்குகின்றன. இது இம்மாநிலத்தின் கம்பள நெசவுத் தொழிலின் இதயம் ஆகும். இங்கு முகலாயர்களால் மிர்சாபூரில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆங்கிலேயர்களால் தொழில்மயமாக்கப்பட்டது. விரிப்புகள், பாய்கள் மற்றும் கம்பளங்களின் உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் ஆதிக்கம் செலுத்துகிறது. இவர்களின் உற்பத்தி, தேசிய உற்பத்தியில் பாதி (47 சதவீதம்) என்று 2020 ஆம் ஆண்டு அகில இந்திய கைத்தறி மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

மிர்சாபூர் நகர  நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே செல்லும்போது, புர்ஜாகிர் முஜேஹாரா கிராமத்திற்குச் செல்லும் சாலை சற்றே குறுகலாகிறது. இருபுறமும் பக்கா , பெரும்பாலும் ஒற்றை மாடி வீடுகள், அதே போல் ஓலைக் கூரையுடன் கூடிய கச்சா வீடுகள்; வறட்டி பிண்ணாக்குகளிலிருந்து வரும் புகை, காற்றில் கலக்கிறது. பெரும்பாலும் பகலில், ஆண்களைக் காண முடிவதில்லை. ஆனால் அடிகுழாயின் கீழ் துணி துவைப்பது, உள்ளூர் காய்கறிகள் அல்லது ஃபேஷன் பாகங்கள் விற்பனையாளரிடம் பேசுவது என வீட்டு வேலைகள் செய்யும் பெண்களைக் காணமுடிகிறது.

இது நெசவாளர்களின் இடம் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இங்கு இல்லை - உள்ளூர்வாசிகள் குறிப்பிடுவது போல் கம்பளங்கள் அல்லது கலிச்சா எதுவும் வெளியில் தொங்கவிடப்பட்டோ அடுக்கி வைக்கப்பட்டோ இல்லை. வீடுகளில் கம்பள நெசவு செய்வதற்கு கூடுதல் இடம் அல்லது அறை ஒதுக்கப்பட்டிருந்தாலும், தயாரானதும், இடைத்தரகர்கள் அதை துவைத்து சுத்தம் செய்ய எடுத்துச் செல்கின்றனர்.

ஓய்வின் போது பாரியிடம் பேசிய, தூஃபானி, "நான் அந்த கலையை [பின்னல் நெசவு] என் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன், மேலும் எனது 12-13 வயதிலிருந்தே இதைச் செய்து வருகிறேன்." என்கிறார். அவரது குடும்பம் பந்த் சமூகத்தைச் சேர்ந்தது (மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது). உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான நெசவாளர்கள் ஓபிசியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

PHOTO • Akanksha Kumar

தறிக்கு முன்னால் ஒரு மர பெஞ்சில் அமர்ந்திருக்கும், புர்ஜாகிர் முஜேஹாரா கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர் தூபானி பிந்த்

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

இடது: கம்பளப் பட்டறையின் உள்ளே, அறையின் இருபுறமும் அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் தறி வைக்கப்பட்டுள்ளது. வலது: புர்ஜாகிர் கிராமத்தில் செங்கல் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட ஒரு பட்டறை

அவர்களின் வீட்டுப் பட்டறைகள், மண் தரையிலான ஒடுங்கிய இடங்கள்; காற்றோட்டத்திற்காக திறந்திருக்கும் ஒற்றை ஜன்னல் மற்றும் கதவு, மற்றும் தறி அதிக இடத்தை எடுத்துக்கொள்கிறது. தூஃபானி போன்றோரது பட்டறைகள், ஒரே நேரத்தில் பல நெசவாளர்கள் வேலை செய்யக்கூடியதாகவும், இரும்புத் தறிக்கு இடமளிக்கும் வகையில் நீளமாகவும், குறுகியதாகவும் இருக்கும். மற்றவர்கள் வீட்டிற்குள்ளே வைத்திருக்கிறார்கள்,  இரும்பு அல்லது மரக் கம்பியில் பொருத்தப்பட்ட சிறிய அளவிலான தறியைப் பயன்படுத்துகிறார்கள்; முழு குடும்பமும் நெசவுக்கு உதவுகிறது.

தூஃபானி ஒரு பருத்தி சட்டத்தில், கம்பளி நூல்களைக் கொண்டு தையல் போடுகிறார் - இது பின்னல் (அல்லது டப்கா ) நெசவு என்று அழைக்கப்படுகிறது, டப்கா என்பது கம்பளத்தின் ஒரு சதுர அங்குலத்திற்கு எத்தனை தையல்கள் என்ற எண்ணிக்கையைக் குறிக்கிறது. கைவினைஞர்கள், தையல்களை கைகளால் போட வேண்டியுள்ளதால், மற்ற வகையான நெசவுகளை விட வேலை அதிக உடல் உழைப்பு தேவை. இதைச் செய்ய, டம்ப் (மூங்கில் லீவர்) பயன்படுத்தி சுட் (பருத்தி) சட்டத்தை சரிசெய்ய தூஃபானி ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் எழுந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக உட்கார்ந்து எழுவது, அவரை பாடுபடுத்துகிறது.

பின்னல் நெசவு போலல்லாமல், கம்பளங்களின் கற்றை நெசவு என்பது ஒப்பீட்டளவில் புதிய வடிவமாகும். இது எம்பிராய்டரிக்கு கையடக்க இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது. பின்னல் நெசவு கடினமாக உள்ளதோடு கூலியும் குறைவாக உள்ளது. எனவே பல நெசவாளர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் பின்னல் முறைகளில் இருந்து, கற்றை நெசவுகளுக்கு மாறியுள்ளனர். ஒரு நாளைக்கு ரூ.200-350 மட்டும் போதாது என்பதால் பலர் முற்றிலுமாக இத்தொழிலை விட்டு விலகிவிட்டனர். மே 2024-ல், மாநிலத்தின் தொழிலாளர் துறை, அரை திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான தினசரி ஊதியத்தை ரூ.451 என அறிவித்தது , ஆனால் இங்குள்ள நெசவாளர்கள் தங்களுக்கு அந்தத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

புர்ஜாகிர் நெசவாளர்களுக்கும் போட்டி உள்ளதாக, மிர்சாபூரின் தொழில்துறை துணை ஆணையர் அசோக் குமார் கூறுகிறார். உத்தரப்பிரதேசத்தில், சீதாபூர், பதோஹி மற்றும் பானிபட் மாவட்டங்களிலும் கம்பளங்கள் நெய்யப்படுகின்றன. "தேவையில் சரிவு உள்ளதால்,  விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

இது தவிர, மற்ற பிரச்சனைகளும் உள்ளன. 2000-களின் முற்பகுதியில், கம்பளத் தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய குற்றச்சாட்டுகள், அத்தொழிலின் பெயரைக் கெடுத்தன. யூரோவின் வருகையால், துருக்கியின் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட கம்பளங்களுக்கு சிறந்த விலையை அளித்ததில் மெதுவாக ஐரோப்பிய சந்தை பறிபோனது என்று மிர்சாபூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் சித் நாத் சிங் கூறுகிறார். மேலும், முன்னதாக 10-20 சதவீதமாக இருந்த மாநில மானியம் 3-5 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

"10-12 மணிநேர ஷிப்டுக்கு ஒரு நாளைக்கு 350 [ரூபாய்] சம்பாதிப்பதற்குப் பதிலாக, ஒரு நகரத்தில் 550 தினசரி ஊதியத்திற்கு வேலை செய்யலாமே," என்று கம்பள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் (CEPC) முன்னாள் தலைவரான சிங் சுட்டிக்காட்டுகிறார்.

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

பருத்தி நூல், தறியின் இரும்புக் குழாய்களில் (இடது) பொருத்தப்பட்டுள்ளது மற்றும் நூலின் சட்டத்தை மாற்றுவதற்காக ஒரு மூங்கில் லிவர், தறியுடன் (வலது) இணைக்கப்பட்டுள்ளது

தூபானி ஒரு காலத்தில் 5-10 வண்ண நூல்களை ஒரே நேரத்தில் நெசவு செய்யும் அளவிற்கு கலையில் தேர்ச்சி உள்ளவர். ஆனால் குறைந்த ஊதியம் அவரது உற்சாகத்தை குறைத்து விட்டது. “அவர்கள் [இடைத்தரகர்கள்] வேலையைக் கொண்டு வருகிறார்கள். நாங்கள் இரவும் பகலும் நெசவு செய்து கொண்டே இருந்தாலும், ​​அவர்கள் எங்களை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள்,” என்று வருத்தத்துடன் கூறுகிறார்.

அவரால் எவ்வளவு நெசவு செய்ய முடிகிறது என்பதை பொறுத்து, இன்று அவர் 10-12 மணி நேர ஷிஃப்டுக்கு ரூ.350 சம்பாதிக்கிறார். அதுவும் மாத இறுதியில் தான் அவருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அவர் செலவு செய்யும் பல மணிநேரங்களை இது கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், இந்த முறை மாற வேண்டும் என்று அவர் கூறுகிறார். தங்களின் திறனுக்கு ஒரு நாளைக்கு 700 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

ஒப்பந்தங்களைப் பெறும் இடைத்தரகருக்கு காஜ் (ஒரு காஜ் சுமார் 36 அங்குலம்) கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. ஒரு சராசரி கம்பளத்தின் நீளம் கொண்ட நான்கு முதல் ஐந்து காஜ்களுக்கு, ஒப்பந்ததாரருக்கு சுமார் ரூ. 2,200 கிடைக்கும். ஆனால் நெசவாளருக்கு சுமார் ரூ.1,200 மட்டுமே கிடைக்கும். ஆனால், ஒப்பந்ததாரர்கள் மூலப்பொருளான கடி (கம்பளி நூல்) மற்றும் சுட் (பருத்தி நூல்) ஆகியவற்றிற்கு பணம் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூஃபானிக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் இன்னும் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் அவரது குழந்தைகள், தனது அடிச்சுவடுகளைப் பின்பற்ற அவர் விரும்பவில்லை. “அவர்களின் அப்பாவும் தாத்தாவும், வாழ்நாளைக் கழித்த அதே வேலையை அவர்களும் செய்ய வேண்டுமா? அவர்கள் படித்து ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டாமா?”

*****

வருடத்திற்கு, தூஃபானி மற்றும் அவரது குழுவினர், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்து, 10-12 கம்பளங்களை நெசவு செய்கிறார்கள். அவருடன் பணிபுரியும் ராஜேந்திர மௌரியா மற்றும் லால்ஜி பிந்த் இருவரும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். காற்றோட்டத்திற்கு ஆதாரமாக ஒரே ஒரு ஜன்னல் மற்றும் கதவு கொண்ட ஒரு சிறிய அறையில் அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். கோடைக்காலம் சற்று கடினமானது. வெப்பநிலை உயரும்போது, ​​இந்த அரை- பக்கா கட்டமைப்பின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையால், அறைகள் சூடாகின்றன.

" கலிச்சா [கம்பளம்] தயாரிப்பதில் முதல் படி தானா அல்லது தனன்னா ஆகும்," என்று தூஃபானி கூறுகிறார். பருத்தி நூலின் சட்டத்தை தறியில் பொருத்துவது இதில் அடங்கும்.

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

இடது: தூஃபானியின் சக தொழிலாளி மற்றும் சக நெசவாளரான, ராஜேந்திர மௌரியா, கம்பளி நூலை பிரித்து நேராக்குகிறார். வலது: நீண்ட நேரம் நெசவு செய்ததால் அவரது கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சக ஊழியர் லால்ஜி பிந்த் கூறுகிறார்

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

இடது: தறியின் இரும்புக் கற்றை மீது இருக்கும் கொக்கி, பருத்தி நூலின் சட்டத்தை நழுவ விடாமல் தடுக்கிறது. வலது: நெசவாளர்கள் தையல்களைத் முடிக்க பஞ்சாவை (இரும்பு சீப்பு) பயன்படுத்துகின்றனர்

25x11 அடி அளவிலான செவ்வக அறையில், தறி வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருபுறமும் குழிகள் உள்ளன. கம்பளத்தின் சட்டகத்தை உயர்த்திப் பிடிக்க ஒரு பக்கத்தில் கயிறுகள் இணைக்கப்பட்ட இரும்பினால், இந்த தறி செய்யப்பட்டுள்ளது. இதனை ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தூஃபானி கடனில் வாங்கி, மாதாந்திர தவணைகளில் ரூ.70,000 செலுத்தியுள்ளார். "என் தந்தையின் காலத்தில், அவர்கள் கல் தூண்களில் வைக்கப்பட்ட மரத்தறிகளைப் பயன்படுத்தினர்," என்று அவர் கூறுகிறார்.

கம்பளத்தின் ஒவ்வொரு பின்னலும் சார்ரியை (கோடு தையல்) கொண்டுள்ளது. இதற்கு, நெசவாளர்கள் கம்பளி நூலைப் பயன்படுத்துகின்றனர். அதை அப்படியே வைத்திருக்க, தூஃபானி பருத்தி நூலைப் பயன்படுத்தி லாச்சி (பருத்தி நூலைச் சுற்றி U- வடிவ சுழல்கள்) வரிசையை உருவாக்குகிறார். அவர் அதை கம்பளி நூலின் தளர்வான முனையின் முன் கொண்டு வந்து ஒரு சுராவினால் - ஒரு சிறிய கத்தியால் வெட்டுகிறார். பின்னர், ஒரு பஞ்சாவை (இரும்பு சீப்பு) பயன்படுத்தி, அவர் தையல்களின் முழு வரிசையையும் சரி செய்கிறார். " காட்னா ஔர் தோக்னா [வெட்டு மற்றும் தட்டுதல்], அது தான் பின்னல் நெசவு," என்று சுருக்கமாகக் கூறுகிறார்.

நெசவு கைவினைஞரின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. 35 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் லால்ஜி பிந்த் கூறுகையில், “பல ஆண்டுகளாக வேலை செய்வதால், இது என் கண்பார்வையை பாதித்துள்ளது. எனவே அவர் வேலை செய்யும் போது கண்ணாடி அணிய வேண்டியுள்ளது. மற்ற நெசவாளர்கள் முதுகுவலி மற்றும் சியாட்டிகா பிரச்சினை உள்ளதாக கூறுகின்றனர். வேறு வழியில்லாமல் இந்தத் தொழிலை மேற்கொள்வதாக அவர்கள் கூறுகிறார்கள். "எங்களுக்கு விருப்பங்கள் குறைவாகவே உள்ளன," என்று தூஃபானி கூறுகிறார். கிராமப்புற உ.பி.யில், நெசவாளர்களில் 75 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

"15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 800 குடும்பங்கள் பின்னல் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தன," என்று புர்ஜாகிரைச் சேர்ந்த நெசவாளர் அரவிந்த் குமார் பிந்த் நினைவு கூர்ந்தார், "இன்று அந்த எண்ணிக்கை 100 ஆகக் குறைந்துள்ளது." இது புர்ஜாகிர் முஜேஹாராவின் 1,107 மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011).

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

இடது: பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு பின்னல் போடப்பட்ட கம்பள நெசவு நடந்து வருகிறது. தறியின் நீளத்திற்கு இணையான வடிவமைப்பு உருவாகிறது. வலது: நெசவாளர்கள் சார்ரி அல்லது லைன் தையல்களுக்கு கம்பளி நூலைப் பயன்படுத்துகின்றனர்

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

இடது: பருத்தி நூல் கொண்டு U-வடிவ சுழல்கள் அல்லது லாச்சி தைக்கப்படுகிறது. வலது: தளர்வான கம்பளி நூலை வெட்டுவதற்கு ஒரு சுரா (கத்தி) பயன்படுத்தப்படுகிறது. இது கம்பளத்தை உரோமமாக மாற்றுகிறது

அருகிலுள்ள மற்றொரு பட்டறையில், பால்ஜி பிந்தும் அவரது மனைவி தாரா தேவியும் சௌமக் எனப்படும் பின்னல் கம்பளத்தில், முழு கவனமாக அமைதியாக வேலை செய்கிறார்கள். எப்போதாவது கத்தியால் நூல்களை வெட்டும் சத்தம் மட்டும் கேட்கிறது. ஒரு சௌமக் என்பது ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்ட ஒற்றை நிற கலிச்சா ஆகும். சிறிய தறிகளைக் கொண்ட நெசவாளர்களுக்கு, அதைத் தயாரிப்பது விருப்பம். "ஒரு மாதத்திற்குள் முடித்துவிட்டால், இதற்கு 8,000 ரூபாய் கிடைக்கும்," என்கிறார் பால்ஜி.

புர்ஜாகிர் மற்றும் பாக் குஞ்சல்கீர் ஆகிய இரு பகுதிகளிலும் - நெசவுக்கான இடங்கள் - பால்ஜியின் மனைவி தாரா போன்ற பெண்கள் இணைந்து பணிபுரிந்தாலும், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி நெசவாளர்களாக இருந்தாலும், அவர்களது உழைப்பு, அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவதில்லை. குழந்தைகளும், பள்ளிக்கு இடையிலும், கோடை கால விடுமுறைகளிலும் உதவுகிறார்கள். இது வேலைகளை துரிதப்படுத்துகிறது.

ஹஜாரி பிந்தும் அவரது மனைவி ஷியாம் துலாரியும் சரியான நேரத்தில் கம்பளத்தை முடிக்க அயராது வேலை செய்கிறார்கள். உதவி செய்து வந்த, தனது இரண்டு மகன்களின் இன்மையை அவர் உணர்கிறார். அவர்கள் தற்போது கூலி வேலைக்காக சூரத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். " பச்சோன் நே ஹம்ஸே போலா கி ஹம் லோக் இஸ்மே நஹி ஃபஸேங்கே, பாபா [நாங்கள் இதில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை அப்பா, என்று என் குழந்தைகள் என்னிடம் சொன்னார்கள்]."

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

இடது: பால்ஜி தனது மனைவி தாரா தேவியுடன் சௌமக் எனப்படும் பின்னல் கம்பளத்தை நெய்கிறார். இது ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்ட ஒற்றை நிற கம்பளம். வலது: ஷா-இ-ஆலம், பயன்படுத்தாமல் துருப்பிடித்துக்கொண்டிருக்கும் தனது கற்றை  துப்பாக்கிகளைக் காட்டுகிறார்

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

இடது: ஹஜாரி பிந்த் தனது வீட்டில் ஒரு தறி வைத்துள்ளார். அதில் அவர் சௌமாக்களை நெய்கிறார். வலது: ஹஜாரியின் மனைவி ஷியாம் துலாரி, பருத்தி நூலுக்கு அருகில் நிற்கிறார். புர்ஜாகிர் போன்ற நெசவுக்கான இடங்களில், பெண்களும் நெசவு செய்வதில் பங்கேற்கிறார்கள். இருப்பினும் அவர்களின் உழைப்பு அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் அங்கீகரிக்கப்படுவதில்லை

குறையும் வருமானம் மற்றும் கடின உழைப்பு இளைஞர்களை மட்டுமல்ல, ஷா-இ-ஆலமையும் விட்டுவிடச் செய்துள்ளது. 39 வயதான இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நெசவுத் தொழிலை விட்டுவிட்டு இப்போது இ-ரிக்‌ஷா ஓட்டுகிறார். புர்ஜாகிரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நட்வாவில் வசிக்கும் இவர் தனது 15 வயதில் இருந்து கம்பளங்களை நெய்யத் தொடங்கினார். பின்னர் 12 ஆண்டுகளில் அவர் பின்னல் நெசவுத் தொழிலில் இருந்து மாறி, கற்றை நெசவு இடைத்தரகம் செய்யத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது தறியை விற்றுவிட்டார்.

"போசா நஹி ரஹா தா [எங்களுக்கு இது பத்தாது]," என்று அவர் தனது இரண்டு அறைகள் கொண்ட புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் அமர்ந்து கூறுகிறார். 2014 முதல் 2022 வரை, அவர் துபாயில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்தார். அதன் மூலம் அவருக்கு ரூ. 22,000 மாத ஊதியம் கிடைத்தது. "கூடு மாதிரியான இந்த வீட்டைக் கட்ட இது எனக்கு உதவியது," என்று அவர் டைல்ஸ் தரையை சுட்டிக்காட்டுகிறார். “ஒரு நெசவாளராக ஒரு நாளைக்கு எனக்கு வெறும் ரூ.150 ரூபாய் தான் கிடைத்தது. ஆனால் ஒரு ஓட்டுநராக குறைந்தபட்சம் என்னால் தினசரி ரூ.250-300 சம்பாதிக்க முடிகிறது.”

மாநில அரசின், ’ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம்’ கம்பள நெசவாளர்களுக்கு நிதி உதவி அளிக்கிறது, அதே சமயம் ஒன்றிய அரசின் முத்ரா யோஜனா சலுகை விலையில் கடன்களை பெற உதவுகிறது. ஆனால், ஷா-இ-ஆலம் போன்ற நெசவாளர்களுக்கு, தொகுதி அளவில் பிரச்சாரங்கள் நடந்தாலும், அவற்றை பற்றிய விழிப்புணர்வு இல்லை.

புர்ஜாகிர் முஜேஹாராவிலிருந்து ஒரு குறுகிய பயணத்தில், பாக் குஞ்சல் கீரின் அருகில் உள்ள ஜாஹிருதீன் குல்தாராஷ் எனும் கைவினையில் ஈடுபட்டுள்ளார் - இதன் மூலம் கற்றை கம்பளத்தின் மீது வடிவமைப்புகளை நன்றாகச் சரிசெய்கிறார். 80 வயதான அவர் முக்யமந்திரி ஹஸ்ட்சில்ப் பென்ஷன் யோஜனாவில் பதிவு செய்திருந்தார். 2018 இல் தொடங்கப்பட்ட மாநில அரசின் இந்த திட்டம், 60 வயதுக்கு மேற்பட்ட கைவினைஞர்களுக்கு ஓய்வூதியமாக  ரூ.500 வழங்குகிறது. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஜாஹிருதீனின் ஓய்வூதியம் திடீரென நிறுத்தப்பட்டதாக கூறுகிறார்.

ஆனால் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் அவர் பெறும் ரேஷன்களினால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். புர்ஜாகிர் கிராமத்தில் உள்ள நெசவாளர்கள் கூட " மோடி கா கல்லா " [பிரதமர் மோடியின் திட்டத்தின் ஒரு பகுதியாக உணவு தானியங்கள்] பெறுவது பற்றி பாரியிடம் தெரிவித்தனர்.

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

இடது: பாக் குஞ்சல் கீரில் வசிக்கும் ஜாஹிருதீன், குல்தாராஷ்- (இடது) கற்றை கம்பளத்தில் வடிவங்களுக்கு மெருகேற்றுகிறார். அவர் ஒரு வாசல் விரிப்பின் அளவிளான ஒரு முடிக்கப்பட்ட கற்றை கம்பளத்தை (வலது) காண்பிக்கிறார்

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

இடது: பத்மஸ்ரீ விருது பெற்ற கலீல் அகமது, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடனான தனது புகைப்படத்தை பாரியிடம் காட்டுகிறார். வலது: ஈரான், பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று கலீல் உருவாக்கிய வடிவமைப்புகள்

65 வயதான, ஷம்ஷு-நிசா தனது இரும்புச் சக்கரத்தில் நேராக்கும் ஒவ்வொரு கிலோ பருத்தி நூலுக்கும் ( சுட் ) ஏழு ரூபாய் சம்பாதிக்கிறார். இது தோராயமாக ஒரு நாளைக்கு ரூ.200 ஆகும். அவரது மறைந்த கணவர், ஹஸ்ருதீன் அன்சாரி, 2000 வருடத்தின் முற்பகுதியில்  கற்றைக்கு மாறுவதற்கு முன்பு பின்னல் கம்பளங்களை நெய்தார். அவரது மகன் சிராஜ் அன்சாரி, கற்றை நெசவிற்கும் மவுசு இல்லை என்பதால், நெசவுத் தொழிலில் எதிர்காலம் இல்லை என்கிறார்.

ஜாஹிருதீன் வசிக்கும் அதே பகுதியில், கலீல் அகமது தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2024 ஆம் ஆண்டில், 75 வயதான துர்ரிகளுக்கு அவர் செய்த பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். அவரது வடிவமைப்புகளை பார்வையிடும் அவர், உருது மொழியில் உள்ள ஒரு கல்வெட்டைச் சுட்டிக்காட்டுகிறார்: "இஸ் பர் ஜோ பைத்ஹேகா, வோ கிஸ்மத்வாலா ஹோகா [இந்த கம்பளத்தின் மீது அமர்ந்திருப்பவருக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும்]," என்று அவர் படிக்கிறார்.

ஆனால் அந்த நல்ல அதிர்ஷ்டம், அவற்றை நெய்தவர்களுக்கு கிடைப்பதில்லை.

தமிழில் : அஹமத் ஷ்யாம்

Akanksha Kumar

ଆକାଂକ୍ଷା କୁମାର ହେଉଛନ୍ତି ଦିଲ୍ଲୀରେ ବିବିଧ ଗଣମାଧ୍ୟମରେ କାର୍ଯ୍ୟରତ ସାମ୍ବାଦିକ। ମାନବାଧିକାର, ଗ୍ରାମାଞ୍ଚଳର ହାଲଚାଲ୍, ସଂଖ୍ୟାଲଘୁଭିତ୍ତିକ ସମସ୍ୟାଗୁଡ଼ିକ ଲିଙ୍ଗ ଭେଦ ଏବଂ ସରକାରୀ ଯୋଜନାର ପ୍ରଭାବ କ୍ଷେତ୍ରରେ ବିଶେଷ ଆଗ୍ରହ ରଖନ୍ତି। ସେ 2022 ମସିହାରେ ମାନବାଧିକାରୀ ଏବଂ ଧାର୍ମିକ ସ୍ୱାଧୀନତା ସାମ୍ବାଦିକତା ପୁରସ୍କାର ଲାଭ କରିଛନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Akanksha Kumar
Editor : Priti David

ପ୍ରୀତି ଡେଭିଡ୍‌ ପରୀର କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ସମ୍ପାଦିକା। ସେ ଜଣେ ସାମ୍ବାଦିକା ଓ ଶିକ୍ଷୟିତ୍ରୀ, ସେ ପରୀର ଶିକ୍ଷା ବିଭାଗର ମୁଖ୍ୟ ଅଛନ୍ତି ଏବଂ ଗ୍ରାମୀଣ ପ୍ରସଙ୍ଗଗୁଡ଼ିକୁ ପାଠ୍ୟକ୍ରମ ଓ ଶ୍ରେଣୀଗୃହକୁ ଆଣିବା ଲାଗି ସ୍କୁଲ ଓ କଲେଜ ସହିତ କାର୍ଯ୍ୟ କରିଥାନ୍ତି ତଥା ଆମ ସମୟର ପ୍ରସଙ୍ଗଗୁଡ଼ିକର ଦସ୍ତାବିଜ ପ୍ରସ୍ତୁତ କରିବା ଲାଗି ଯୁବପିଢ଼ିଙ୍କ ସହ ମିଶି କାମ କରୁଛନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Priti David
Editor : Sarbajaya Bhattacharya

ସର୍ବଜୟା ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟ ପରୀର ଜଣେ ବରିଷ୍ଠ ସହାୟିକା ସମ୍ପାଦିକା । ସେ ମଧ୍ୟ ଜଣେ ଅଭିଜ୍ଞ ବଙ୍ଗଳା ଅନୁବାଦିକା। କୋଲକାତାରେ ରହୁଥିବା ସର୍ବଜୟା, ସହରର ଇତିହାସ ଓ ଭ୍ରମଣ ସାହିତ୍ୟ ପ୍ରତି ଆଗ୍ରହୀ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Sarbajaya Bhattacharya
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Ahamed Shyam