குடிநீர் பெறுவதற்கு கங்குபாய் சவான் மன்றாட வேண்டும். “சர்கார்! வாட்ச் மேன் அய்யா! தயவுசெய்து எங்களுக்கு குடிநீர் கொடுங்கள். நான் இங்குதான் வசிக்கிறேன், அய்யா.”
மன்றாடுதல் மட்டும் போதாது. அவர் அவர்களுக்கு வாக்குறுதியும் அளிக்க வேண்டும். “உங்களின் பாத்திரங்களை நான் தொட மாட்டேன்.”
நீருக்கு கங்குபாய் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) தனியார் குழாய்களையும் டீக்கடைகளையும் திருமண மண்டபங்களையும் சார்ந்திருக்கிறார். அவரின் வீடாக இருக்கும் கோகுல் நகர் பகுதியின் நடைபாதைக்கு எதிரே இருக்கும் ஹோட்டல் போன்ற கட்டடங்களின் காவலாளிகளிடம் கெஞ்சி நீர் பெறுகிறார். ஒவ்வொரு முறை அவருக்கு நீர் தேவைப்படும் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் அவர் நீர் பெறுகிறார்.
நீர் கண்டறிவது தினசரி வேலை. அவரின் தேடல், ஒரு காலத்தில் குற்றப் பழங்குடியாக வரையறுக்கப்பட்டிருந்த பான்சே பார்தி சமூகத்தை சேர்ந்தவர் அவர் என்கிற உண்மையால் பன்மடங்கு கஷ்டமாகிறது. காலனியாதிக்க காலத்தில் சூட்டப்பட்ட அப்பெயர், இந்திய அரசாங்கத்தால் 1952ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. ஆனால் 70 வருடங்கள் ஆகியும் கங்குபாய் போன்றவர் இன்னும் அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டியிருக்கிறது. திருடப் போவதில்லை என அவர் பிறரிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போதுதான் ஒரு ட்ரம் நீர் அவருக்குக் கிடைக்கிறது.
“’இங்கு நீங்கள் வைத்திருக்கும் எந்தப் பொருளையும் நாங்கள் தொட மாட்டோம்,’ என சொன்னால் மட்டும்தான் அவர்கள் எங்களுக்கு கொஞ்சம் நீரை கொடுப்பார்கள்,” என்கிறார் கங்குபாய். அனுமதி கொடுக்கப்பட்டதும், சிறு பாத்திரங்களிலும் ப்ளாஸ்டிக் ட்ரம்களிலும் குடிநீர் குடுவைகளிலும் எவ்வளவு பிடிக்க முடியுமோ அவ்வளவு நீர் பிடித்துக் கொள்வார். ஒரு ஹோட்டலில் மறுக்கப்பட்டால், அடுத்த ஹோட்டலை அணுகுவார். அவமதிக்கும் உரிமையாளர்களை பொருட்படுத்த மாட்டார். குடிக்கவும் சமைக்கவும் வீட்டுக்கும் தேவையான நீர் பெற, கிட்டத்தட்ட நான்கைந்து இடங்கள் அவர் கேட்க வேண்டும்.
கங்குபாய் போன்ற புலம்பெயர் தொழிலாளர்கள், மகாராஷ்டிராவின் கிராமங்களிலிருந்து பிற மாவட்டங்களிலிருந்தும் நன்டெடுக்கு வந்து சேருகின்றனர். “இங்கு நாங்கள் எட்டு மாதங்களாக இருக்கிறோம். மழைக்காலம் தொடங்கியதும் ஊர் திரும்பி விடுவோம்,” என விளக்குகிறார். திறந்தவெளியிலும் நடைபாதைகளிலும் நீர் தொட்டிகளுக்குக் கீழுள்ள இடங்களிலும் குடும்பங்கள், தற்காலிக வசிப்பிடங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இங்கிருந்து கிளம்பும் காலம் வரை ஒரு நல்ல வேலையைப் பெறுவதுதான் அவர்களின் நோக்கம்.
நகரத்தின் எந்தப் பகுதியிலும் புலம்பெயர் தொழிலாளருக்கும் இடம்பெயரும் தொழில் செய்வோருக்கும் நிரந்தரக் குடிநீர் வசதியென எதுவும் செய்யப்படவில்லை. நீரை தேடி பெறுவதில் குழந்தைகள், பெண்கள், குறிப்பாக இளம்பெண்கள் அவமதிப்பையும் வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
அடுத்த நகரத்துக்கு இடம்பெயரும் வரையோ சொந்த ஊருக்கு திரும்பும் வரையோ பார்ப்பதற்கென ஒரு வேலையை தேடுபவர்கள் பெரும்பாலும் கோகுல் நகர், தெக்லூரி நாகா, வஜேகாவோன், சிட்கோ சாலை மற்றும் ஹுஜுர் சாஹிப் ரயில் நிலையம் போன்ற இடங்களில்தான் சென்று சேருகின்றனர்.
இங்கிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஃபான்சே பர்தி, கிசாடி மற்றும் வடார் சமூகத்தை சேர்ந்தவர்கள். உத்தரப்பிரதேசத்தின் லக்நவிலிருந்தும் கர்நாடகாவின் பிதாரிலிருந்தும் வருகிறார்கள். தெலங்கானாவிலிருந்து இஸ்லாமியர்களும் சமார்களும் ஜோகிகளும் கூட இங்கு புலம்பெயர்கின்றனர். பாரம்பரிய குலத் தொழில்களை செய்யும் அவர்கள், புது வேலைவாய்ப்பையும் தேடுகின்றனர். கையால் செய்த இரும்பு உபகரணங்கள், பேனாக்கள், பலூன்கள், விரிப்புகள், கண்ணாடி பொருட்கள், பொம்மைகள் போன்றவற்றை செய்கிறார்கள். சில நேரம் பிச்சை எடுக்கிறார்கள். கட்டுமானத் தொழிலாளராகவும் பணி செய்கிறார்கள். பிழைப்புக்காக எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
SIDCO MIDC சாலையில் வசிக்கும் கிசாடி குடும்பத்தை சேர்ந்த காஜல் சவான், எப்போதும் தண்ணீர் தேடுவதாக சொல்கிறார். “சில நேரங்களில் சாலைகளில் வரும் தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கேட்போம். பதிலுக்கு அவர்களுக்கு நாங்கள் வேலை செய்வோம்,” என்கிறார். அவர் மட்டுமல்ல. நகராட்சி மைதானங்களில் வசிப்போரும் தனியார் குழாய் உரிமையாளர்களிடம் தண்ணீர் பெற வேலை செய்து தர வேண்டுமென கூறுகின்றனர்.
குழாய் குடிநீர் கிடைக்கவில்லை எனில் வேறு வழிகள் பார்க்க வேண்டும். கோகுல் நகரின் நடைபாதையில், நகராட்சி குழாயின் ஒரு பகுதி இருக்கிறது. அதிலிருந்து வழியும் தண்ணீர் அடியில் இருக்கும் குழியில் தேங்கும். “வாரத்தில் இருமுறை அக்குழாயின் பகுதிக்கு நீர் வரும். அதில் நீர் வரும் நாள் கொண்டாட்டமாக இருக்கும்,” என்கிறார் கோகுல் நகரில் கரும்புச் சாறு விற்பவர்.
குழிக்குள் இறங்கி தண்ணீரை எடுக்க சிறு குழந்தைகளால் முடியும். மண் மற்றும் பக்கத்து ஹோட்டல்களின் கழிவு நீர், குழி நீரை அசுத்தப்படுத்தும். ஆனால் தேவையிருக்கும் குடும்பங்கள் எப்படியிருந்தாலும் அதை குளிக்கவும் துவைக்கவும் பயன்படுத்த வேண்டும். இந்தக் குழாய்ப் பகுதியை நம்பி குறைந்தபட்சம் 50 குடும்பங்கள் நடைபாதையில் இருக்கின்றன. அதிகமாக கூட இருக்கலாம்.
2021ம் அறிக்கை யின்படி நன்டெட் நகரத்தில் வசிக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் 120 லிட்டர் நீர் கிடைக்கிறது. மொத்தமாக 80 MLD நீர் அன்றாடம் அந்த நகரத்துக்கு கிடைக்கிறது. ஆனால் அது சாலைகளில் வசிப்பவர்களை எட்டுவதில்லை.
*****
கான் குடும்பம், தெக்லுர் நகாவின் நீர் தொட்டிக்கடியில் வசிக்கிறது. பீட் மாவட்டத்தை சேர்ந்த பார்லியை சேர்ந்த அவர்கள், வருடத்தில் சில முறை, குறிப்பாக ரம்ஜான் சமயத்தில் நன்டெடுக்கு வந்து இரு வாரங்களுக்கு தங்குவார்கள்.
உயரமாக இருக்கும் நீர் தொட்டி அவர்களுக்கு தங்குமிடம் வழங்குகிறது. அருகாமை ஹோட்டல்களிலிருந்து நீர் பெறுகிறார்கள். குடிநீர் வடிகட்டியை தூர இருக்கும் அரசாங்க மருத்துவ மையத்திலிருந்து பெறுகிறார்கள். மருத்துவ மையம் மூடப்பட்டால், சுத்திகரிப்புப் பெற முடியாது. 45 வயது ஜாவெத் கான் சொல்கையில், “குழாயோ கிணறோ எங்களுக்குக் கிடைக்கும் எல்லா நீரையும் குடிக்கிறோம். நீர் தொட்டிக் குழாயிலிருந்து கசியும் கழிவு நீரையும் நாங்கள் குடிக்கிறோம்.”
புலம்பெயர் தொழிலாளர்கள் நீருக்கு போராடும் சூழலில் தனியார் நீர் வடிகட்டிகள் எங்கும் கிடைக்கின்றன. 10 ரூபாய்க்கு 5 லிட்டர் நீர் கிடைக்கும். குளிர் நீர் பத்து ரூபாய்க்கும் சாதாரண நீர் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கும்.
சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளரான 32 வயது நாயன கலே, மும்பை - நாசிக் - புனே நகரங்கள் வழியாக பயணித்து நன்டெடுக்கு வந்து சேர்ந்தார். “10 ரூபாய்க்கு வாங்கும் ஐந்து லிட்டர் நீர் குடுவை கொண்டு நாங்கள் சமாளிக்கிறோம்,” என்கிறார் அவர்.
தினசரி நீர் வாங்கும் வசதி இல்லாததால், வீணான நீரை வாங்குகின்றனர். வடிகட்டும் (RO) போது வடிகட்டியிலிருந்து வீணாய் போகும் நீர் அது. மனித பயன்பாட்டுக்கு தகுதியற்ற இந்த நீரை அவர்கள் குடிக்கவும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
“ஹோட்டல்களிலிருந்து நீர் கேட்டால், அதை நாங்கள் வாங்க வேண்டும். ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கே நீரில்லை சொல்லும் ஹோட்டல் மேலாளர்கள் எங்களுக்கு எப்படி கொடுப்பார்கள்?” எனக் கேட்கிறார் காதுன் படேல். 30 வயதாகும் அவர் நன்டெட் ரயில் நிலையத்துக்கு அருகே வசிக்கிறார்.
கோகுல் நகரை சேர்ந்த ஒரு காவலாளி சொல்கையில், ”எங்களிடம் நீர் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு கொடுக்க மாட்டோம். தண்ணீர் இல்லை என சொல்லி விரட்டி விடுவோம்,” என்கிறார்.
திருமண மண்டபத்தின் உரிமையாளர் ஒருவர் (பெயர் சொல்ல அவர் விரும்பவில்லை) சொல்கையில், “இரண்டு கேன் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம் என சொல்லி விட்டோம். ஆனாலும் அவர்கள் அதிகம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நீருக்கு நாங்கள் மீட்டர் வைத்திருக்கிறோம். அந்த அளவை தாண்டி கொடுக்க முடியாது,” என்கிறார்.
*****
நீர் சேகரிப்பு வேலையை பெண்களும் இளம்பெண்களும்தான் அதிகம் செய்கின்றனர். நிராகரிப்பை அவர்கள்தான் எதிர்கொள்கின்றனர். ஆனால் அது மட்டுமில்லை. நடைபாதையில் எப்போதும் மக்கள் இருப்பார்கள். பொது குளியலறைகளுக்கு வாய்ப்பு இருக்காது. “துணி உடுத்தியபடியே நாங்கள் குளிக்க வேண்டும். வேகமாக குளிப்போம். சுற்றி நிறைய ஆண்கள் இருப்பார்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருப்பது கூச்சத்தை தரும். வேகமாக குளித்து விட்டு, துணிகளை அவிழ்த்துவிட்டு, அவற்றை துவைப்போம்,” என்கிறார் சமிரா ஜோகி. 35 வயதாகும் அவர் லக்நவ்வை சேர்ந்தவர். உத்தரப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியென வகைப்படுத்தப்பட்டிருக்கும் ஜோகி சமூகத்தை சேர்ந்தவர்.
தெக்லூர் நாகாவில் வசிக்கும் பார்தி குடும்பங்கள், இருட்டிய பிறகு குளிப்பதாக சொல்கிறார்கள். நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலும் புடவை திரையாகக் கட்டியும் அவர்கள் குளிக்கிறார்கள்.
CIDCO சாலை வசிப்பிடத்தில் வசிக்கும் காஜல் சவான் சொல்கையில்,”நாங்கள் சாலையில் வாழ்கிறோம். வழிபோக்கர்கள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அதனால்தான் குளிக்க இப்படி ஒரு திரை கட்டுகிறோம். என்னுடன் ஓர் இளம்பெண் இருக்கிறார். எனவே நான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.”
கோகுல் நகரில் வசிக்கும் நாயன கலே சீக்கிரமாகவும் வேகமாகவும் குளிக்க வேண்டியிருக்கிறது. யாரேனும் பார்த்து விடுவாரோ என்கிற பயம் அவருக்கு. தெக்லூர் நாகாவில் வசிக்கும் நாற்பது வயது இர்ஃபானா ஷேக், “நீரும் இல்லை, குளிக்க சரியான இடமும் இல்லை. எனவே நான் வாரத்துக்கு இருமுறைதான் குளிக்கிறேன்,” என்கிறார்.
”பொது இடங்களில் குளிக்க, ஒவ்வொரு முறையும் நாங்கள் 20 ரூபாய் கொடுக்க வேண்டும். குறைந்த வருமானத்தில் வாழும் எங்களுக்கு அது எப்படி சாத்தியம்?” எனக் கேட்கிறார் கங்குபாய். “அவ்வளவு பணம் இல்லையென்றால் நாங்கள் குளிப்பதை தவிர்த்துவிடுவோம்.” ரயில் நிலையத்துக்கு அருகே வாழும் காதுன் படேல், “பணம் இல்லையெனில் அருகே உள்ள ஆற்றில் குளிக்க செல்வோம். அங்கும் நிறைய ஆண்கள் இருப்பார்கள் என்ப்தால் கஷ்டமாக இருக்கும்,” என்கிறார்.
கோகுல் நகர் குழாய்ப் பகுதிக்கு நீர் வந்தால், குழந்தைகள் குளிக்க அதை சுற்றி கூடு விடுவார்கள். பதின்வயது பெண்கள் உடை உடுத்தியபடியே நடைபாதையில் அமர்ந்து தங்களை கழுவிக் கொண்டிருப்பார்கள். பெண்கள் தங்கள் மீது தண்ணீரை ஊற்றும்போது புடவையை சுற்றிக் கொள்வார்கள். வேறேங்கும் சென்று மூடியிருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்கு பதில் உடையுடன் குளிப்பதே பாதுகாப்பு என கருதியிருக்கலாம்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கான சவால் பன்மடங்காகிறது. “மாதவிடாய் நேரத்தில், கழிவறைக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டு சென்று நாப்கின் மாற்ற வேண்டும். ஏழாம் நாளன்று நாங்கள் குளிக்க வேண்டும். 20 ரூபாய் செலவழித்து பொது குளியலறையை பயன்படுத்தி குளிப்பேன்,” என்கிறார் இர்ஃபானா.
”இந்த பையாக்கள் (பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்) ‘உங்கள் மக்கள் இங்கு கழிவறைகளை பயன்படுத்த வேண்டாமென சொல்’ என எங்களை நோக்கிக் கத்திக் கொண்டே இருப்பார்கள். மேற்கத்திய கழிப்பறை எங்கள் ஆட்களுக்கு பழக்கமில்லை. எனவே சில நேரங்களில் அதை அவர்கள் அசுத்தப்படுத்தி விடுவார்கள். அதனால்தான் எங்களை பயன்படுத்தக் கூடாதென்கிறார்கள்,’ என்கிறார் கங்குபாய்.
பொதுக் கழிவறை ஒரு முறை பயன்படுத்த 10 ரூபாய் ஆகும். ஒரு பெரிய குடும்பத்துக்கு அதை பயன்படுத்தும் வசதி இருக்காது. திறந்தவெளியில் போவது மலிவு. “இரவு 10 மணிக்கு பொதுக் கழிவறை மூடப்பட்டுவிடும். பிறகு திறந்தவெளியில்தான் போக வேண்டும். வேறென்ன வழி இருக்கிறது? என்கிறார் நகராட்சி மைதானங்களில் வசிக்கும் 50 வயது ரமேஷ் படோடே.
“திறந்தவெளியில் கழிப்போம். இரவில் செல்ல பயமாக இருக்கும். எனவே இரண்டு, மூன்று இளம்பெண்களை துணைக்கு அழைத்து செல்வோம்,” என்கிறார் கோகுல் நகரின் நகராட்சி மைதானத்தருகே இருக்கும் நடைபாதையில் வசிக்கும் நாயன கலே. “திறந்தவெளிக்கு செல்லும்போது, ஆண்கள் தொந்தரவு செய்வார்கள். சில நேரங்களில் எங்களை பின்தொடர்ந்தும் வருவார்கள். நூற்றுக்கணக்கான தடவை காவலர்களிடம் நாங்கள் புகார் செய்துவிட்டோம்.”
அதற்கான தீர்வாக, “சாலை முனைகளில் செல்ல வேண்டும்,” என்கிறார் CIDCO சாலைப் பகுதியில் வசிக்கும் காஜல் சவான்.
2011-12ல் நன்டெடின் மொத்த சுகாதாரப் பிரசாரத்தின் பகுதியாக நகர சுகாதாரத் திட்டம் உருவாக்கப்பட்டது. அச்சமயத்தில் நகரத்தின் 20 சதவிகிதம் பேர் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக கணக்கு சொன்னது. 2014-15ல், நன்டெட் நகரத்தில் 214 பேர் செல்லக் கூடிய 23 பொதுக் கழிப்பிடங்கள் இருந்தன. 4100 பேருக்கு பற்றாக்குறை என்கிறது அறிக்கை . அப்போது நகராட்சி ஆணையராக இருந்த நிபுன் வினாயக், சுகாதார மேம்பாடு மற்றும் கழிவு நீர் மேலாண்மை ஆகியவற்றுக்கான திட்டத்தை அமல்படுத்தினார். 2021-ல் வாகலா நகராட்சி திறந்தவெளியற்ற பகுதிக்கான ODF+ மற்றும் ODF++ (Open Defecation Free) சான்றிதழ்களை பெற்றது.
ஆனால் இடம்பெயரும் விளிம்புநிலை சமூகங்களுக்கு நகரத்தில் குடிநீரும் சுகாதாரமும் இன்னுமே எட்டாக் கனியாகதான் இருக்கிறது. ஜாவெத் கான், “நல்ல குடிநீர் கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லை,” என்கிறார்.
புனேவின் SOPPECOM அமைப்பை சேர்ந்த சீமா குல்கர்னி, பல்லவி ஹர்ஷே, அனிதா காட்பொலே மற்றும் டாக்டர் போஸ் ஆகியோருக்கு செய்தியாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார். அவர்களின் ஆய்வு 'Towards Brown Gold Re-imagining off-grid sanitation in rapidly urbanising areas in Asia and Africa’ என்கிற ஆய்வை அடிப்படையாகக் கொண்டு மேம்பாட்டு கல்வி நிறுவனத்துடன் (IDS) இணைந்து நடத்தப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்.