குனோவின் சிறுத்தைப் புலிகள் பற்றிய தகவல்கள் தேசிய பாதுகாப்பு சம்பந்தமானவை. அதை மீறுவது வெளிநாடுகளுடனான நம் உறவை கடுமையாக பாதிக்கும்.
ஜூலை 2024-ல் சிறுத்தைப் புலிகள் மேலாண்மை குறித்த தகவல்களை கேட்டு அனுப்பப்பட்டிருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டதின் கீழான மனுவுக்கு, மத்தியப் பிரதேச அரசாங்கம் கொடுத்த பதில் அதுதான். மனுவை அனுப்பிய போபாலின் செயற்பாட்டாளர் அஜய் துபே, “புலிகள் பற்றிய எல்லா தகவல்களும் வெளிப்படையாக இருக்கிறது. ஆனால் ஏன் சிறுத்தைப் புலிகளுக்கு மட்டும் அப்படி இல்லை? வன உயிர் மேலாண்மையில் வெளிப்படைத்தன்மைதான் அடிப்படை விதி,” என்கிறார்.
குனோ பூங்காவுக்கு அருகே இருக்கும் அகாரா கிராமத்தில் வாழும் ராம் கோபாலுக்கு, தேசிய பாதுகாப்புக்கும் வெளிநாட்டு உறவுகளுக்கும் அவரின் வாழ்க்கை கொடுக்கும் அச்சுறுத்தலை பற்றி தெரியாது. அவரும் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான பழங்குடிகளுக்கும் கவலைப்பட வேறு பல விஷயங்கள் இருக்கின்றன.
சமீபத்தில் அவரொரு ட்ராக்டர் வாங்கினார். வசதியால் அல்ல, வேறு காரணத்தால்.
“மோடிஜி எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். எங்களின் மாடுகளை கைவிடக் கூடாது என சொல்லியிருக்கிறார். ஆனால் இங்கு மேய்ச்சல் நிலமாக இருப்பது காடு மட்டும்தான். அங்கு சென்றால் வனத்துறையினர் எங்களை பிடித்து, சிறையில் அடைத்து விடுவார்கள். எனவே அவற்றுக்கு பதிலாக ஒரு ட்ராக்டரை வாடகைக்கு எடுக்க முடிவெடுத்தோம்.”
ராம் கோபாலும் அவரது குடும்பமும் சமாளிக்க முடியாத செலவு அது. குடும்ப வருமானம் அவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் வைத்திருக்கிறது. குனோ தேசியப் பூங்கா சிறுத்தைப் புலிகளுக்கான இடமாக மாற்றப்பட்ட பிறகு, காடு சார்ந்த அவர்களின் வாழ்க்கைகளில் பெரும் இழப்பு நேர்ந்தது.






















