டக்-டக்-டக்!
தாளம் மாறாத இந்த ஒலி, கொடவாட்டிப்புடியில் தார்பாயால் மூடப்பட்டிருக்கும் ஒரு குடிலில் இருந்து வருகிறது. செக்க சுத்தி எனப்படும், பானைகளை வட்டமாக வடிவமைக்க பயன்படும் துடுப்பு போன்ற மர சுத்தியால், முலம்பக பத்ரராஜு, ஒரு பானையை தட்டுவதால் ஏற்படும் ஒலி அது.
“பானையின் அடிப்பகுதியை வடிவமைக்க, தடிமனான செக்க சுத்தியும், அதனை சீராக்க, மற்ற பொதுவான சுத்திகளும் பயன்படுத்தப்படுகிறது. ஒல்லியான செக்க சுத்தி முழுப்பானையையும் சீரமைக்க பயன்படுத்தப்படுகிறது,” என தேவைக்கேற்ப சுத்தியலை மாற்றிக்கொண்டே 70 வயதான பத்ரராஜு நமக்கு விவரிக்கிறார். ஒல்லியான, வழக்கமான சுத்திகள், பனை மரக் (போராசஸ் ஃபிளாபெல்லிஃபர்) கிளைகளில் இருந்து செய்யப்படுவதாகவும், தடிமனானது, அர்ஜுன மரத்திலிருந்து (டெர்மினாலியா அர்ஜுனா) செய்யப்படுவதாகவும் அவர் கூறுகிறார். ஒல்லியான செக்க சுத்தியை எடுத்து அவர் அடிக்கும்போது, அதன் ஒலி மிகவும் குறைவாகவே கேட்கிறது.
20 அங்குல விட்டம் கொண்ட ஒரு பெரிய பானையை வடிவமைக்க அவருக்கு சுமார் 15 நிமிடம் ஆகிறது. வடிவமைக்கும்போது பக்கவாட்டில் உடைந்தால், உடனடியாக களிமண்ணை எடுத்து பூசி அதனை சரி செய்து, மீண்டும் பானையை தட்ட ஆரம்பிக்கிறார்.
15 வயது முதலாகவே குயவராக இருந்து வரும் பத்ரராஜு, அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள கொடவாட்டிபுடி கிராமத்தில் வாழ்ந்தும் பணியாற்றியும் வருகிறார். மேலும் இவர் ஆந்திராவில் பிற பிற்படுத்தப்பட்ட சாதியாக (OBC) பட்டியலிடப்பட்டுள்ள கும்மாரா சமூகத்தைச் சார்ந்தவர்.
எழுபது வயது குயவரான இவர், பானைகள் செய்வதற்கு தேவையான களிமண்ணை, 15 வருடங்களுக்கு முன்பு, ரூ.1,50,000-க்கு வாங்கிய அரை ஏக்கர் நிலத்திலிருந்து பெறுகிறார். இது மட்டுமில்லாமல், வருடம் முழுவதும் எர்ரா மிட்டி (சிவப்பு களிமண்) அவருக்குக் கிடைக்கிறது. பக்கத்து கிராமமான கோடாவூரட்லாவில் உள்ள மணல், மண் மற்றும் சரளை சப்ளையர் ஒருவரிடமிருந்து 400 கிலோகிராம் ரூ.1000 என்ற விலைக்கு அவரது நிலத்திற்கு அம்மண் டெலிவரி செய்யப்படுகிறது.
தென்னை இலைகளையும் தார்ப்பாய்களையும் கூரையாகக் கொண்டு, அவரது நிலத்தில் இரண்டு குடில்களை கட்டியுள்ளார். இது மழைக்காலத்திலும், தடையின்றி அவரது வேலையைத் தொடர உதவுகிறது. பானைகளை உருவாக்க மற்றும் வடிவமைக்க ஒரு குடிலையும் அவற்றை சுடுவதற்கு சிறிய குடிலையும் அவர் பயன்படுத்துகிறார். "எங்களிடம் 200-300 பானைகள் தயாராக இருக்கும்போது, அவற்றை [காய்ந்த மரக்கட்டைகளால் ஆன படுக்கைக்கு மேல்] சுடுகிறோம்," என்று அவர் கூறுகிறார். அருகிலுள்ள ஒரு திறந்தவெளியில் இருந்து அவர் தயாரான பனைகளை சேகரிக்கிறார். "அவை [பானைகள்] குடிசையிலேயே உலர்த்தப்படுகின்றன," என்று அவர் மேலும் கூறுகிறார்.
அவர் தனது சொந்த சேமிப்பில் இருந்து இந்த நிலத்தை வாங்கியுள்ளார். “அவர்கள் [உள்ளூர் வங்கிகள்] எனக்கு கடன் தரவில்லை. நானும் பலமுறை கேட்டுப் பார்த்துவிட்டேன். ஆனால் ஒருவரும் தருவதில்லை”. அவரது வருமானம் நிலையானது இல்லை என்பதால், கடன்காரர்களிடம் பணம் வாங்குவதை அவர் விரும்புவதில்லை. அதோடு அவர் செய்யும் 10 பானைகளில் 1-2 உடைந்து விடும். “எல்லா பானைகளும் சீராக உலருவதில்லை. பானைகளின் சில பகுதிகள் உலரும்போதே உடைந்து விடுகின்றன,” என குடிலில் ஓரத்தில் குவித்து வைத்திருக்கும் உடைந்த பனைகளை சுட்டிக் காட்டி விளக்குகிறார்.
பானை செய்யும் முழு செயல்முறையும், பொதுவாக ஒரு மாத காலம் எடுக்கும். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். “எனது மனைவி உதவினால், ஒரு நாளில் 20-30 பானைகள் வரை முடிக்க [வடிவமைக்க] முடியும்” என பேசிக்கோண்டே பானையை அடிக்கும் இடைவெளியில் நம்மிடம் சொல்கிறார். மாதக் கடைசியில் மொத்தமாக 200-300 பானைகள் செய்யப்படுகிறது.
மூன்று மகள்கள், ஒரு மகன் மற்றும் அவரது மனைவி என ஆறு பேர் கொண்ட அவரது குடும்பத்தின் ஒரே வருமானம் இதுதான். "இது மட்டும்தான்," என அவர் குறிப்பிடும் அந்த வருமானம்தான் அவரின் வீட்டுச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் திருமணங்களுக்கு உதவியுள்ளது.
கிராமத்திலிருக்கும் சுமார் 30 குயவர்களிடம் இருந்து, வாரந்தோறும் பானைகளை வாங்க வரும் விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரி மொத்த வியாபாரிகளிடம், பத்ரராஜு தனது பானைகளை விற்பனை செய்கிறார். “சமையலுக்கும் கன்றுகள் தண்ணீர் குடிக்கவும் என தேவை எதுவாக இருந்தாலும்," பானைகள், பல்வேறு நோக்கங்களுக்காக சந்தையில் விற்கப்படுகின்றன என இந்தக் குயவர் கூறுகிறார்.
”விசாகப்பட்டின மொத்த வியாபாரிகள் ஒரு பானையை 100 ரூபாய்க்கும், ராஜமுந்திரி மொத்த வியாபாரிகள் 120 ரூபாய்க்கு வாங்குகிறார்கள்,” என்று பத்ரராஜு கூறுகிறார். “எல்லாம் நல்லபடியாக நடந்தால், எனக்கு 30,000 ரூபாய் [மாதத்திற்கு] கிடைக்கும்.”
10 ஆண்டுகளுக்கு முன்பு, பத்ரராஜு கோவாவில் உள்ள கைவினைப் பொருட்கள் கடையில் குயவராக பணிபுரிந்து வந்துள்ளார். "பல மாநிலங்களில் இருந்தும் வந்த ஆட்கள் அங்கு வெவ்வேறு கைவினைகளில் ஈடுபட்டிருந்தனர்," என்று அவர் கூறுகிறார். ஒவ்வொரு பானைக்கும் ரூ. 200-250 கிடைக்கும். "ஆனால் அந்த இடத்தின் உணவு எனக்கு பொருந்தவில்லை. அதனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் வந்துவிட்டேன்," என்கிறார் அவர்.
'கடந்த 6-7 வருடங்களாக, என் வயிற்றில் அல்சர் உள்ளது' என்கிறார் மனேபள்ளி. கைகளால் சுற்றும் சக்கரத்தை, சுழற்றும்போது அவருக்கு வலி ஏற்பட்டதால், வலியற்ற தானியங்கி இயந்திர சக்கரத்திற்கு மாறிவிட்டார். கும்மாரா சமூகத்தைச் சார்ந்த, 46 வயதான மனேபள்ளி, இளவயதில் இருந்தே இந்த வேலையை செய்து வருகிறார்
சில மீட்டர் தூரத்திலேயே காமேஸ்வரராவ் மனேபள்ளியின் வீடு உள்ளது. இவரும் ஒரு குயவர் ஆவார். இங்கே செக்க சுத்தியின் அடிக்கும் சத்தத்திற்குப் பதிலாக, சக்கரத்திலேயே பானையை வடிவமைக்கும் இயந்திர சக்கரத்தின் மெதுவான, சுழலும் சத்தம் கேட்கிறது.
கிராமத்தில் உள்ள குயவர்கள் அனைவரும், இயந்திர-சக்கரங்களுக்கு மாறிய நிலையில், பத்ரராஜு மட்டும், அதில் துளியும் ஆர்வம் காட்டாமல், இன்னும் கைகளால் சக்கரத்தை இயக்குகிறார். "நான் 15 வயதிலிருந்தே இந்த வேலையைச் செய்து வருகிறேன்," என்று அவர் கூறுகிறார். அதோடு தனக்கு நீண்ட வேலை நேரம் மற்றும் கடுமையான உழைப்பு பழகிவிட்டது என்கிறார். அதோடு இந்த இயந்திர-சக்கரங்கள், மிகவும் சிறிய பானைகளை உருவாக்க வடிவமைக்கப்பட்டவை. அவர் செய்வது போல், பாரம்பரியமான 10 லிட்டர் பானைகள் இவற்றால் செய்ய முடியாது.
மனேபள்ளி, மற்ற வயதான குயவர்களைப் போல, உடல்நலக்குறைவு மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இயந்திர-சக்கரத்திற்கு மாறியுள்ளார், "கடந்த 6-7 வருடங்களாக என் வயிற்றில் அல்சர் உள்ளது," என்று அவர் கூறுகிறார். கைகளால் சக்கரத்தை சுழற்றும்போது அவருக்கு வலி ஏற்பட்டதால், வலியற்ற தானியங்கி இயந்திர-சக்கரத்திற்கு மாறியுள்ளார்.
“பானை செய்யும் இயந்திர-சக்கரத்தை 12,000 ரூபாய்க்கு வாங்கினேன். அது சேதமடைந்த பிறகு, காதி கிராமினா சொசைட்டியிலிருந்து, இலவசமாகப் பெற்ற இன்னொன்றில், நான் இப்போது பானைகள் செய்து வருகிறேன்.
"இந்த சாதாரண [சிறிய] பானையின் விலை 5 ரூபாய். டிசைன் போட்டால் 20 ரூபாய்க்கு விற்கலாம்,” என்று கூறும் அவர், அவை அலங்காரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக வலியுறுத்துகிறார். மேலும் கும்மாரா சமூகத்தைச் சார்ந்த 46 வயதான இவர், தனது தந்தையுடன் சேர்ந்து இளம்வயதிலிருந்து இந்த வேலையை செய்து வந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தை இறந்த பிறகு தொடர்ந்து தனியாக வேலை செய்து வருகிறார்.
மூன்று குழந்தைகள், மனைவி மற்றும் தாய் என ஆறு பேர் கொண்ட அவரது குடும்பத்திற்கு, மனேபள்ளியின் வருமானம் மட்டுமே வாழ்வாதாரம். "நான் தினமும் வேலை செய்தால், எனக்கு 10,000 [மாதத்திற்கு ரூபாய்] கிடைக்கும். பானைகளை சுடுவதற்கு தேவையான கரிக்கு ஆகும் செலவு, சுமார் 2,000 ரூபாய் போக மீதி 8,000 ரூபாய் மட்டுமே எனது வருமானம்.”
வயதான இவர், உடல்நலக்குறைவால், ஒழுங்கற்ற வேலை நேரத்தை கடைபிடிக்கிறார். அதோடு பெரும்பாலும் வேலை நாட்களை முழுவதுமாக தவிர்த்துவிடுகிறார். "நான் வேறு என்ன செய்ய முடியும்?" என்னும் அவரிடம், வேறு ஏதாவது வேலை செய்கிறீர்களா என்று கேட்டபோது, "இதுதான் எனக்கு இருக்கும் ஒரே வேலை," என்று கூறுகிறார்.
தமிழில்: அஹமத் ஷ்யாம்