“பிஜு (புத்தாண்டு விழா) சமயத்தில், சீக்கிரமாக நாங்கள் விழித்தெழுந்து பூக்கள் பறிக்க செல்வோம். பிறகு பூக்களை ஆற்றில் மிதக்கவிட்டு முக்கி எடுப்போம். கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, அனைவரையும் சந்தித்து வாழ்த்துவோம்,” என்கிறார் ஜெயா. அரை நூற்றாண்டு கடந்து விட்டாலும், அந்த நாள் குறித்த அவரது நினைவு மங்கவில்லை.
“கைப்பிடி அரிசியை நாங்கள் (நற்காலத்துக்கு அடையாளமாக) பரிசளிப்போம். பதிலுக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் லங்கி (அரிசி மது) கொடுப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சில மடக்குகள்தான் குடிப்போம். ஆனால் பல வீடுகளுக்கு செல்வதால், எல்லாம் முடியும்போது நாங்கள் போதையில் இருப்போம்,” என்கிறார் அவர். மேலும், “அந்நாளில் கிராமத்தின் இளைஞர்கள், மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக பெரியவர்களை ஆற்றுநீரில் குளிப்பாட்டுவார்கள்.” ஜெயாவின் முகம், வருடாந்திர கொண்டாட்டங்களின் நினைவுகளில் ஜொலிக்கிறது.
தற்போது சர்வதேச எல்லையைக் கடந்து, அந்த வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் மிஞ்சியிருப்பது லங்கி மட்டும்தான். சக்மா சமூகத்தை சேர்ந்த பல அகதிகளை தம் சடங்குகளோடும் பண்பாடோடும் இணைத்திருப்பது அந்த ஒற்றை சரடுதான். “அது எங்களது பண்பாட்டின் அங்கம்,” என்கிறார் வங்க தேசத்தின் ரங்கமதியில் வளர்ந்த ஜெயா. இப்பகுதியை சேர்ந்த பிற பழங்குடிகளும் லங்கியை சடங்குகளிலும் வேண்டுதல்களிலும் பயன்படுத்துகின்றனர்.
”பெற்றோரை பார்த்து நான் இதை (லங்கி) செய்யக் கற்றுக் கொண்டேன். மணம் முடித்த பிறகு, என் கணவர் சுரேனும் நானும் ஒன்றாக இதை செய்யத் தொடங்கினோம்,” என்கிறார். அவர்கள் இருவருக்கும் மூன்று வகை மதுக்களை செய்யத் தெரியும் - லங்கி, மாட், ஜொகோரா
ஜொகோரா வகையும் அரிசியில்தான் செய்யப்படுகிறது. சைத்ரா (வங்க நாட்காட்டியின் கடைசி) மாதத்தின் முதல் நாள் தயாரிப்பு தொடங்கும். “நாங்கள் பிரோய்ன் சல்லை (ஒட்டரிசியில் தரம் வாய்ந்த வகை) மூங்கில் கொண்டு வாரக்கணக்கில் நொதிக்க வைத்து பிறகு காய்ச்சுவோம். இப்போதெல்லாம் அடிக்கடி நாங்கள் ஜோகோரா தயாரிப்பதில்லை,” என்கிறார் ஜெயா. ஏனெனில் அந்த வகையை செய்ய குறைந்தது ஒரு மாதம் ஆகும். அரிசியின் விலையும் அதிகமாகி விட்டது. “முன்பெல்லாம் இந்த அரிசியை நாங்கள் ஜும்மில் (மலை விவசாயம்) விளைவிப்போம். ஆனால் இப்போது அந்தளவுக்கு நிலம் இல்லை.”
















