விவசாய நிலத்தில் குடும்பத்துக்காக கட்டப்பட்டிருந்த வீட்டின் மிச்சத்திலிருந்து 70 வயது பல்தேவ் கவுர் வருகிறார். இடியாத சுவர்களில் விரிசல்கள் இருந்தன.
“ஆலங்கட்டி மழை கூரையை அடித்துக் கொண்டிருந்த முழு இரவும், நாங்கள் தூங்கவில்லை,” என்கிறார் நரை கூடிய தலையில் துப்பட்டா போட்டு, பருத்தியிலான சல்வார் கமீஸ் அணிந்திருக்கும் பல்தேவ். “காலையில், நீர் கூரையிலிருந்து ஒழுகத் தொடங்கியதும், நாங்கள் வெளியே ஓடினோம்.”
சூரியன் உதித்ததும் எங்களின் வீடு நொறுங்கத் தொடங்கியது, என்கிறார் பல்தேவின் இளம் மருமகளான 26 வயது அமன்தீப் கவுர். “எங்களை சுற்றியிருந்து வீடு இடிந்து விழுந்தது,” என்கிறார் பல்தேவின் மூத்த மகனான 35 வயது பல்ஜிந்தெர் சிங்.
பல்தேவ் கவுரும் மூன்று குழந்தைகளை உள்ளடக்கிய ஏழு உறுப்பினர் கொண்ட அவரது குடும்பமும் இத்தகைய பேரழிவை இதற்கு முன் பார்த்ததில்லை. மார்ச் 2023-ம் ஆண்டுக்கு பிறகு நேர்ந்த எதிர்பாரா மழையும் ஆலங்கட்டி மழையும் ஸ்ரீமுக்த்சார் சாஹிப் மாவட்டத்தின் கித்தெர்பஹா ஒன்றியத்திலுள்ள பலாயானா கிராமத்தின் வீடுகளையும் பயிர்களையும் அழித்தன. பஞ்சாபின் தென் மேற்கு பகுதியிலுள்ள இந்த பகுதியின் தெற்கு எல்லை ராஜஸ்தானிலும் கிழக்கு எல்லை ஹரியானாவிலும் அமைந்திருக்கிறது.
ஆலங்கட்டி மழை மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்ததில், பல்ஜிந்தெர் பாதிப்பை அடைந்தார். குடும்பத்துக்கு இருந்த 5 ஏக்கர் நிலத்துடன் சேர்த்து 10 ஏக்கர் நிலத்தையும் குத்தகைக்கு எடுக்க அர்தியா விடமிருந்து ( விவசாய விளைச்சல் ஏஜெண்ட்) 6.5 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார்கள். கோதுமை விளையாமல் குடும்பமும் பிழைக்க முடியாது. கடனையும் அடைக்க முடியாது.
“அறுவடைக்கு பயிர் தயாரான போது ஆலங்கட்டி மழை வந்து அழித்தது. பிறகு கனமழை பெய்து மொத்த வயலையும் பல நாட்களுக்கு மூழ்கடித்தது. நீர் வெளியேற வழியில்லை. பயிர் நாசமானது,” என்கிறார் பல்ஜிந்தெர். “இப்போது கூட 15 ஏக்கர் நிலத்திலும் பயிர் நாசமாகிதான் கிடக்கிறது,” என்றார் ஏப்ரல் மாத நடுவே பல்ஜிந்தெர்.
இப்பகுதிகளில் குறுவை பயிராக கோதுமை அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் விதைக்கப்படுகிறது. பயிர் விளைவதற்கு அவசியமான மாச்சத்தும் புரதமும் விதையின் உட்பகுதியில் உருவாகும் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் மிக முக்கியமான காலக்கட்டம்.
மார்ச் 24 தொடங்கி 30 வரை, பஞ்சாபில் 33.8 மிமீ மழை பெய்தது. சண்டிகரின் இந்திய வானிலை மையத்தின்படி மார்ச் மாத சராசரி மழை 22.2 மிமீ மட்டும்தான். மார்ச் 24 அன்று மட்டும் 30 மிமீ மழை பதிவானதாக லூதியானாவின் பஞ்சாப் விவசாயக் கல்லூரியின் தரவுகள் குறிப்பிடுகிறது.
பருவம் தப்பி பெய்த மழையால் பயிர் பாதிக்கப்பட்டதை பல்ஜிந்தெர் புரிந்து கொண்ட சமயத்தில் பல வருடங்களுக்கு முன் குடும்பம் கட்டிய வீடும் பாதிப்படைந்தது கூடுதல் துயரம்.
“வெளியே சென்று வரும்போதெல்லாம், வீட்டை பார்த்தாலே மனம் முழுக்க கவலை நிரம்பிக் கொள்ளும். எனக்கு பதற்றம் வந்துவிடும்,” என்கிறார் பல்தேவ் கவுர்.
6 லட்ச ரூபாய்க்கும் மேல் விவசாயத்தில் நஷ்டம் என்கிற குடும்பம். ஒரு ஏக்கரில் 60 மன் (ஒரு மன் 37 கிலோ) கோதுமை கிடைக்கும். இப்போது அவர்கள் வெறும் 20 மன் மட்டுமே ஒரு ஏக்கரில் பெறுகிறார்கள். வீட்டை சரி செய்வது இன்னொரு செலவு. கோடை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சீக்கிரமே செய்ய வேண்டிய செலவு அது.
“இயற்கையால்தான் எல்லாமும்,” என்கிறார் பல்ஜிந்தெர்.
நிச்சயமற்ற காலநிலைகள், விவசாயிகளுக்கு அச்சமளிப்பதாக சொல்கிறார் 64 வயது குர்பக்த் சிங். பலாயானா கிராமத்தை சேர்ந்த அவர் பார்திய கிசான் யூனியனில் (ஏக்தா - உக்ரஹான்) செயற்பாட்டாளர் ஆவார். “அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் இவை நேர்கின்றன. பிற பயிர்களுக்கு அரசாங்கம் விலை கொடுத்தால், நீர் அதிகம் தேவைப்படும் நெல் மட்டுமின்றி பிற பயிர்களையும் நாங்கள் வளர்ப்போம்,” என்கிறார் அவர்.
விவசாய சங்க கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் பிரதான கோரிக்கைகளில், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிபடுத்தும் சட்டத்துக்கான கோரிக்கையும் ஒன்று. அத்தகைய சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென பஞ்சாபிலிருக்கும் விவசாய சங்கங்கள் தில்லியில் கடந்த மார்ச் 2023-ல் ஆர்ப்பாட்டம் நடத்தின.
குர்பக்த்தின் இளைய மகனான லக்விந்தர் சிங் சொல்கையில், பயிர்களுடன் சேர்த்து, கால்நடை தீவனமான வைக்கோலும் பாதிப்பு கண்டதாக கூறுகிறார். கிட்டத்தட்ட 6-லிருந்து 7 லட்சம் ரூபாய் வரை குர்பக்த் சிங்கின் குடும்பத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களும் அர்த்தியா விடமிருந்து, ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 1.5 ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றிருக்கின்றனர். அதற்கு முன்பு நிலத்தை வைத்து 9 சதவிகித வட்டியில் 12 லட்ச ரூபாய் வங்கிக் கடனும் பெற்றிருக்கிறார்கள்.
குறுவை சாகுபடி வருமானத்தை கொண்டு, கொஞ்சம் கடனை அடைக்கலாம் என நினைத்திருந்தார்கள். இப்போது அதற்கும் வழியில்லை. “ஒவ்வொரு ஆலங்கட்டியும் இலந்தை பழ அளவில் இருந்தது,” என்கிறார் குர்பக்த்.
*****
ஏப்ரல் 2023-ல் புத்தார் பாகுவா கிராமத்தின் 28 வயது பூதா சிங்கை பாரி சந்தித்தபோது, பருவம் தப்பிய கனமழைகள் ஏற்படுத்திய தூக்கமின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஸ்ரீ முக்த்சார் சாஹிப் மாவட்டத்தின் கித்தெர்பாஹா ஒன்றியத்தை சேர்ந்த விவசாயியான அவர், குடும்பச் சொத்தாக ஏழு ஏக்கர் நிலத்தை வைத்திருக்கிறார். கூடுதலாக 38 ஏக்கர் நிலத்தை கோதுமை பயிரிட குத்தகைக்கு எடுத்திருக்கிறார். மொத்த 45 ஏக்கரும் கிராமத்தின் தாழ்வான பகுதிகளில் இருக்கும் 200 ஏக்கர் நிலத்தை போல தற்போது நீரில் மூழ்கியிருக்கிறது. அர்த்தியா விடம் பூதா சிங், 100 ரூபாய்க்கு 1.5 ரூபாய் வட்டிக்கு 18 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்.
பெற்றோர், மனைவி, இரு குழந்தைகள் உள்ளடக்கிய ஆறு உறுப்பினர்கள் கொண்ட குடும்பம், விவசாய வருமானத்தைதான் சார்ந்திருக்கிறது.
“வெயில் அதிகரிக்கத் தொடங்கியதும், வயல்கள் காய்ந்து விடும் என நம்பினோம். அறுவடையும் செய்யத் தொடங்கலாம் என நினைத்தோம்,” என்கிறார் அவர். சகதி நிலத்துக்குள் அறுவடை எந்திரத்தை பயன்படுத்த முடியாது. ஆனால் நிலம் காய்ந்தபோது, பயிர் அழிந்திருந்தது.
மேலும் நேராக நிற்கும் பயிரை அறுவடை செய்ய அறுவடை எந்திர வாடகை ஒரு ஏக்கருக்கு ரூ.1,300. வளைந்த பயிரை அறுவடை செய்ய ரூ.2000 வாடகை.
இந்த விஷயங்கள் கொடுக்கும் அழுத்தத்தால் பூதா, இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை. ஏப்ரல் 17ம் தேதி, அவர் கித்தெர்பாஹாவிலுள்ள மருத்துவரிடம் சென்றார். உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக சொல்லி, மருந்துகள் கொடுக்கப்பட்டன.
இப்பகுதி விவசாயிகளுக்கு மத்தியில் ‘பதற்றம்’ மற்றும் ‘அழுத்தம்’ ஆகிய வார்த்தைகள் இயல்பாக இருக்கின்றன.
“அழுத்தமாகி கவலை கொள்வது இங்கு வாடிக்கை,” என்கிறார் 40 வயது குர்பால் சிங். புத்தார் பர்க்குவா கிராமத்தை சேர்ந்த அவர், தன்னுடைய ஆறு ஏக்கர் விவசாய நிலத்திலிருந்து நீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார். ஆறு மாத விவசாயப் பருவத்துக்கு பிறகும் அவர்களால் ஒன்றும் சேமிக்க முடியவில்லை எனில், மனநல சிக்கல்கள் நேருவதே இயல்பு, என்கிறார் குர்பால்.
27 வயது கிரன்ஜித் கவுர், கிசான் மஸ்தூர் குட்குஷி பீதித் பரிவார் கமிட்டியை நிறுவிய செயற்பாட்டாளர் ஆவார். பஞ்சாபில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவும் அமைப்பு அது. அவர் சொல்கையில், பதற்றம் மற்றும் கவலையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார். “ஒரு ஐந்து ஏக்கருக்கும் குறைவான அளவில் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிக்கு, பயிர் விளையவில்லை எனில் பெரு நஷ்டம் ஏற்படும். வட்டி கட்ட வேண்டிய நிர்பந்தத்தில், விவசாயிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மனநல சிக்கல்கள் ஏற்படும். அதனால்தான் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள்,” என்கிறார். மேலும் அவர், விவசாயிகள் மற்றும் அவர்தம் குடும்பங்களின் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்துகிறார். போதை பழக்கத்துக்கோ தீவிர முடிவுகளுக்கோ ஆட்படாமல் அவர்களை காக்க வேண்டும் என்கிறார்.
கடந்த அறுவடைக் காலங்களிலும் கூட காலநிலை மாறுபாடுகளை அனுபவித்ததாக சில விவசாயிகள் கூறுகின்றனர். செப்டம்பர் 2022-ல் பெய்த பருவம் தப்பிய மழையால் சிரமப்பட்டுதான் நெல் அறுவடை செய்ய முடிந்ததாக பூதா கூறுகிறார். அதற்கு முந்தைய குறுவை பருவம் கடும் கோடையை கொண்டிருந்தது. கோதுமை சுருங்கி வந்தது.
தற்போதைய பருவத்தை பொறுத்தவரை, “பயிர் அறுவடைக்கான சாத்தியம் குறைவு. வரும் நாட்களில் அறுவடை செய்ய முடிந்தாலும், பயிர் கறுத்துவிடும் என்பதால் யாரும் வாங்க மாட்டார்,” என்கிறார்.
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் முதன்மை அறிவியலாளரான (வேளாண் வானிலையியல்) டாக்டர் பிராபிஜாத் கவுர் சிது, கோதுமைப் பயிருக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களின் வெப்பநிலை உகந்தது என்கிறார்.
2022ம் ஆண்டின் இந்த மாதங்கள் கொண்டிருந்த உயர் வெப்பநிலைகளால் கோதுமை உற்பத்தி சரிவைக் கண்டது. மார்ச் மற்றும் ஏப்ரல் 2023-ல் மணி நேரத்துக்கு 30 லிருந்து 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றுடன் பெய்த மழையால் மீண்டும் உற்பத்தி சரிந்தது. “வேகமான காற்றுடன் மழை பெய்யும்போது, கோதுமை பயிர்கள் சாய்ந்து விடும். மீண்டும் வெப்பநிலை உயரும்போதுதான் பயிர் மீண்டும் நேராகும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் அது நேரவில்லை,” என்கிறார் டாக்டர் சிது. “அதனால்தான் பயிர் வளர முடியவில்லை. அறுவடையும் ஏப்ரலில் நடக்க முடியவில்லை. மீண்டும் கோதுமை உற்பத்தி குறைந்தது. பஞ்சாபின் சில மாவட்டங்களில் வேகமான காற்று இன்றி மழை பெய்ததால் உற்பத்தி ஓரளவுக்கு மேம்பட்டு இருந்தது.”
மார்ச் மாத பிற்பகுதியில் பருவம் தப்பி பெய்த மழை, தீவிர காலநிலையின் விளைவாக பார்க்கப்பட வேண்டுமென்கிறார் டாக்டர் சிது.
மே மாதத்தில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு 20 மன் (அல்லது 7.4 குவிண்டால்) வரை பூதா அறுவடை செய்ய முடிந்தது. வழக்கமாக 20 -25 குவிண்டால் கோதுமை கிடைக்கும். குர்பக்த் சிங் ஒவ்வொரு ஏக்கரிலும் 20-லிருந்து 40 மன் வரை விளைவித்தார். பல்ஜிந்தெர் சிங் 25-லிருந்து 28 மன் வரை விளைவித்தார்.
பயிரின் தரத்தை பொறுத்து குவிண்டாலுக்கு ரூ.1,400 முதல் ரூ.2,000 வரை பூதா பெற்றார். ஆனால் இந்திய உணவு வாரியத்தைப் பொறுத்தவரை 2023ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக கோதுமைக்கு ரூ.2,125 விதிக்கப்பட்டிருந்தது. குர்பக்த் மற்றும் பல்ஜிந்தெர் ஆகியோர் குறைந்தபட்ச ஆதார விலையில் தம் கோதுமை விளைச்சலை விற்றனர்.
உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வுத்துறை அமைச்சகம், மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கான இழப்பீட்டுத் தொகைக்கு நிர்ணயித்த ’மதிப்பு குறைப்பு’ விதியின்படி, இத்தொகை தீர்மானிக்கப்படுகிறது. தானியம் சுருங்கியது மற்றும் உடைந்ததை பொறுத்து இந்த மதிப்பு ரூ.5.31-லிருந்து ரூ.31.87 வரை ஒரு குவிண்டாலுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. பளபளப்பை இழந்த தானியங்களுக்கு கூடுதலாக ரூ.5.31 குறைக்கப்படுகிறது.
75% பயிர் சேதம் கொண்டவர்களின் ஒவ்வொரு ஏக்கருக்கும் 15,000 ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறது பஞ்சாப் அரசாங்கம். 33%-க்கும் 75%-க்கும் இடையிலான சேதமெனில் ஏக்கருக்கு ரூ.6,800 அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பூதா 2 லட்ச ரூபாய் நிவாரணம் பெற்றார். “மிகவும் தாமதமாகிறது. இன்னும் முழு நிவாரணம் எனக்கு வந்து சேரவில்லை,” என்கிறார். அவரைப் பொறுத்தவரை, கடன் அடைப்பதற்கும் சேர்த்து 7 லட்ச ரூபாய் நிவாரணம் வர வேண்டும்.
குர்பக்த் மற்றும் பல்ஜிந்தெர் ஆகியோருக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.
புத்தார் பக்குவா கிராமத்தில், 15 ஏக்கர் நிலம் கொண்டிருக்கும் 64 வயது பல்தேவ் சிங், 9 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுக்கவென அர்த்தி யாவிடமிருந்து 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 15 லிட்டர் டீசல் தினமும் செலவழித்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீரை வயலிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்.
அதிக நாட்களாக, நீர் தேங்கியிருந்ததால் பல்தேவ் சிங்கின் கோதுமை வயல்கள் கறுப்பாகி பயிர் கெட்டுப் போய்விட்டது. நிலத்தை உழுதால் நாற்றம் ஏற்பட்டு மக்கள் நோய்வாய்ப்படுவார்கள் என்கிறார் அவர்.
”வீட்டுச் சூழல் மரணம் நேர்ந்தது போல் இருக்கிறது,” என்கிறார் 10 பேரை கொண்ட குடும்பத்தை குறித்து பல்தேவ். வருடப்பிறப்பை குறிக்கும் பைசாக்கி அறுவடை விழா எந்த கொண்டாட்டமுமின்றி கடந்து போனது.
பல்தேவை பொறுத்தவரை, அவரே பறிக்கப்பட்டது போன்ற உணர்வை பயிர் சேதம் வழங்கியிருக்கிறது. “இந்த நிலத்தை இப்படியே நான் விட்டுவிட முடியாது,” என்கிறார் அவர். “நம் குழந்தைகள் படித்து முடித்தும் வேலை கிடைக்காமல் அலைவதை போன்ற விஷயம் இது.” இத்தகைய சூழல், விவசாயிகளை நாட்டை விட்டும் உலகத்தை விட்டும் விரட்டுகிறது என்கிறார் அவர்.
தற்போதைய நிலையில் சொந்தத்தில் இருக்கும் விவசாயிகளிடம் உதவி கேட்டிருக்கிறார் பல்தேவ் சிங். கால்நடைகளுக்கான தீவனத்தையும் குடும்பத்துக்கான தானியங்களையும் அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார்.
“பெயரளவில்தான் நாங்கள் ஜமீந்தார்கள்,” என்கிறார் அவர்.
தமிழில் : ராஜசங்கீதன்