இமாச்சலப் பிரதேசம் பனி போர்த்திய மலைகள் இருக்கும் இடமாக அறியப்படும் மாநிலம். ஆனால் கங்க்ரா மாவட்ட பலம்பூர் டவுனில், குப்பை மலைதான் இருக்கிறது.
சுற்றுலாத்தளமான அங்கு 2019ம் ஆண்டில் மட்டும் 172 லட்சம் பேர் வருகை தந்திருக்கின்றனர். 2011ம் ஆண்டில் வந்தோரை விட 149 லட்சம் அதிகம் என்கிறது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த அறிக்கை . இப்பகுதியின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்காற்றுகிறது. கங்க்ரா மாவட்டத்தில் மட்டும் 1,000 ஹோட்டல்களும் வீட்டு வசிப்பிடங்களும் இருக்கின்றன. சுற்றுலா பயணிகளின் அபரிமித எண்ணிக்கைதான் பெருகும் குப்பைகளுக்கான பிரதானக் காரணம். மாசற்ற நிலத்திலும் ஆற்றங்கரைகளிலும் அவை கொட்டப்படுவதால், இம்மலைப்பகுதியின் மென்மையான சூழலியல் பாதிப்படைகிறது.
“இது குழந்தைகள் விளையாடும் திறந்தவெளி மைதானமாக இருந்தது,” என நினைவுகூருகிறார் 72 வயது கலோரா ராம். இந்த குப்பைக்கிடங்கிலிருந்து சில நிமிட தூரத்தில்தான் அவர் வசிக்கிறார்.
“இந்த மொத்தப் பகுதியிலும் ஒரு காலத்தில் பசுமையாக மரங்கள் அடர்ந்திருந்தது,” என்கிறார் ஷிஷு பரத்வாஜ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). டீக்கடையிலிருந்து தெரியும் பரந்து விரிந்த குப்பை மைதானத்தை சுட்டிக் காட்டுகிறார். “குப்பை அதிகமாக இங்கு வர வர அவர்கள் (நகராட்சி) மரங்களை வெட்டி மேலும் அதிகமாக இடத்தை உருவாக்குகின்றனர்,” என்கிறார் அந்த 32 வயதுக்காரர்.
அவரின் கடை பலம்பூர் குப்பை கிடங்குக்கருகே இருக்கிறது. கிட்டத்தட்ட ஐந்து ஹெக்டேர் அளவுக்கு குப்பைக் கிடங்கு இருக்கிறது. துணி, பிளாஸ்டிக், உடைந்த பொம்மைகள், பயன்படுத்தப்படாத துணி, வீட்டுப் பொருட்கள், சமையலறைக் கழிவு, தொழிற்சாலைக் கழிவு, மருத்துவக் கழிவு மற்றும் பல குப்பைகள் குவியல் குவியலாக கிடக்கின்றன. மழை இருந்தாலும் பூச்சிகளும் ஈக்களும் அங்கு நிரம்பியிருக்கின்றன.
2019ம் ஆண்டில் முதன்முதலாக ஷிஷி கடை வைத்தபோது, மறுசுழற்சி ஆலை ஒன்று அப்பகுதியில் இருந்தது. மூன்று பஞ்சாயத்துகளிலிருந்து வரும் கழிவுகள் வகைப்படுத்தப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும். கோவிட் தொற்று வந்த பிறகு, எல்லா பகுதிகளிலிருந்தும் குப்பைகள் இங்கு வரத் தொடங்கியது. வகைப்படுத்த மனிதர்கள்தான் பயன்படுத்தப்படுகின்றனர்.
சமீபத்தில் குப்பை வகைப்படுத்தும் இயந்திரங்களை நிறுவிய நகராட்சி ஆணையர், மறுசுழற்சி சீக்கிரமே தொடங்குமெனவும் கூறியிருக்கிறார்.
அங்கு குவிக்கப்படும் குப்பையை பற்றி உள்ளூர் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை என உள்ளூர்வாசிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அறிவியல்பூர்வமான தீர்வு யோசிக்கப்படவில்லை என்கிறார்கள். தற்போதைய குப்பைக் கிடங்கு ஆபத்தான வகையில் நியுகல் ஆற்றுக்கருகே அமைந்திருக்கிறது. அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் பீஸுடன் இணையும் ஆறு அது.
ஆகஸ்ட் 2023-ல் இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த 720 மிமீ மழை அளவுக்கு 1,000-லிருந்து 1500 மீட்டர் உயரத்தில் இருக்கும் சிறு டவுனான பலம்பூரில் பெய்யவில்லை. என்றாலும் கொஞ்ச நாட்களில் அப்பகுதியிலும் நிலை மாறும் என பலரும் அஞ்சுகின்றனர்.
“இந்தளவு தீவிர மழை, ஆற்றிலும் மண்ணிலும் குப்பையின் மாசு கலக்குமளவை அதிகப்படுத்தக் கூடும்,” என சுட்டிக் காட்டுகிறார் ஃபாதெமா சப்பல்வாலா. கங்க்ரா குடிமக்கள் உரிமை அமைப்பின் உறுப்பினரான அவர், மும்பையிலிருந்து அப்பகுதிக்கு இடம்பெயர்ந்து, 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கந்த்பாரி கிராமத்தில் வசிக்கிறார். ஃபாதெமா மற்றும் அவரின் கணவர் முகமது ஆகியோர் பல வருடங்களாக குப்பைக் கிடங்கு பிரச்சினையில் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்.
“எல்லா அழுக்கும் குப்பையும் இங்கு கொட்டப்படுகிறது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன், அதிக குப்பையை கொட்ட ஆரம்பித்தார்கள்,” என்கிறார் குப்பைக் கிடங்கிலிருந்து 350 மீட்டர் தூரத்தில் இருக்கும் குக்கிராமமான உவார்னாவில் வசிக்கும் கலோரா ராம். “நாங்கள் நோய்வாய்ப்படுகிறோம். குழந்தைகள் நாற்றத்தால் வாந்தி எடுக்கின்றன,” என்கிறார் 72 வயதாகும் அவர். குப்பைக் கிடங்கு விரிவுபடுத்தப்பட்டதிலிருந்து மக்கள் தொடர்ந்து நோய்வாய்ப்படுவதாக சொல்கிறர். “பள்ளிக்கு செல்ல குழந்தைகள் இந்த குப்பைக் கிடங்கை கடந்து செல்ல வேண்டியிருந்ததால், அவர்கள் பள்ளியே மாற்றி விட்டனர்.”
*****
பெரிய பேரிடர்களுக்கு அதிக கவனம் கிடைக்கும். ஆனால் அன்றாடப் பேரிடர்களை நாம் சாதாரணமாக்கி விட்டோம். ஆற்றங்கரையில் கிடக்கும் குப்பைகளை சுட்டிக் காட்டுகிறார் மன்ஷி அஷெர். உள்ளூர் சுற்றுச்சூழல் நிறுவனமான ஹிம்தாராவின் ஆய்வாளரான அவர் சொல்கையில், “ஆறுகளுக்கு அருகே கழிவு மேலாண்மை ஆலைகளை வைத்திருந்தால், அக்கழிவின் மிச்சம் ஆற்றில்தான் கலக்கப்படும். ஆறு மாசுபடும்,” என்கிறார்.
“கிராமப்புற மலைப்பகுதியில், நகரக் கழிவுகள் ஆற்றங்கரைகளையும் காடுகளையும் மேய்ச்சல் நிலங்களையும் சென்று சேரும்,” என்கிறார் அவர். மாசுபட்ட கலப்பட கழிவு மண்ணில் புதைந்து நீராதாரத்தில் கலக்கும். பெரும்பாலான மக்கள் தங்களுக்கான குடிநீரை நிலத்தடி நீரிலிருந்து பெறுகின்றனர். பஞ்சாப் வரையான பயிர்களுக்கும் அந்த நீர்தான் பயன்படுகிறது.
ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2021ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, இமாச்சலப் பிரதேசத்தில் 57 குப்பைக் கிடங்குகள் இருக்கின்றன. ஒன்று கூட சுகாதாரப்பூர்வமானதாக இல்லை. குப்பைக் கிடங்கை போல் சுகாதாரமான கிடங்கு இருக்காது. சுகாதாரமான கிடங்குக்கு என ஒரு மேல்மூடி இருக்கும். கசிவை சேகரிக்கும் அமைப்பு ஒன்றிருக்கும். இதனால் நிலத்தடி நீர் மாசுபடாது. இன்னும் பல பாதுகாப்பு வழிகள் இருக்கும். மேலும் அதை மூடுவதற்கான திட்டமும் மூடிய பின் செயல்படுத்துவதற்கான திட்டமும் இருக்கும். அதே அறிக்கையின்படி, கழிவு மேலாண்மை ஆய்வில் 35-ல் அம்மாநிலம் 18வதாக இருக்கிறது. அக்டோபர் 2020-ல் 14 பஞ்சாயத்துகள் 15 வார்டுகள் கொண்ட புதிய பலம்பூர் நகராட்சி வாரியத்துக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. முகமது சப்பல்வாலா, கங்க்ரா குடிமக்கள் உரிமை அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். அவர் சொல்கையில், “பலம்பூர் நகராட்சி வாரியமாவதற்கு முன், பெரும்பாலான பஞ்சாயத்துகள் அவற்றின் கழிவை அவையே கையாண்டு கொண்டிருந்தன. ஆனால் நகராட்சி வாரியமாக ஆன பிறகு, குப்பையின் அளவு கடுமையாக அதிகரித்து, அவை எல்லாமும் ஓரிடத்தை நோக்கி சென்றது. மருத்துவக் கழிவும் கூட,” என்கிறார்.
நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் 2016ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை வரைவின்படி, ஒரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சுகாதார குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டுமெனில் பின்வரும் விதிகளை பின்பற்ற வேண்டும்: “சுகாதார குப்பைக் கிடங்குகள், ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் விதிகளை பின்பற்றி அமைக்கப்பட வேண்டும். ஆற்றிலிருந்து 100 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும். குளத்திலிருந்து 200 மீட்டர் தள்ளியும் நெடுஞ்சாலை, வசிப்பிடங்கள், பூங்காக்கள், கிணறுகள் போன்றவற்றிலிருந்தும் 200 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும்.”
கடந்த வருடம், உள்ளூர்வாசிகள் நடவடிக்கை கோரும் அவர்களின் இயக்கத்தில் எங்களையும் இணைய ஊக்குவித்தனர். உதவி கேட்டனர். எனவே நாங்கள் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு மனுவை அனுப்பினோம். முகமதை பொறுத்தவரை, ஆணையரின் அலுவலகம் மார்ச் 14, 2023 அன்று மனுவை பெற்றுவிட்டது. ஏப்ரல் 19ம் தேதி பதிலும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த பதிலில் ஒன்றுமில்லை. “எங்களின் கேள்விகள் பலவற்றுக்குக் கீழ் வெற்றிடங்கள் விடப்பட்டிருந்தன,” என்கிறார் அவர்.
எவ்வளவு குப்பை உருவாகிறது என எவருக்கும் தெரியவில்லை. “ஒவ்வொரு முறை நான் வந்து பார்க்கும்போதும், குப்பைக் கிடங்கு பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இப்போது அது நியுகல் ஆற்றை நெருங்கிவிட்டது. ஆற்றுக்குள் குப்பை கலக்கத் தொடங்கிவிட்டது,” என்கிறார் முகமது.
சமீபத்தில் கழிவு வகைப்படுத்தும் இயந்திரங்கள் ஏழு, குப்பைக் கிடங்கில் நிறுவப்பட்டிருக்கின்றன. உள்ளூர் பத்திரிகையாளர் ரவிந்தர் சூடை பொறுத்தவரை, அதில் ஐந்து செயல்படுகிறது. மக்காத குப்பைகளை பிரிக்கும் இயந்திரமும் இருக்கிறது.
ஆனால் டீக்கடையிலிருந்து எல்லாவற்றையும் பார்க்கும் பரத்வாஜ் சொல்கையில், “இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆனால் மழையால், எதுவும் வேலை பார்க்கவில்லை. எனவே நிலைமை அப்படியேதான் இருக்கிறது. நாற்றமும் தாக்கமும் அதே போல்தான் தொடருகிறது,” என்கிறார். அவரின் பக்கத்து வீட்டுக்காரர் ராம் சொல்கையில், “எங்களின் வாழ்க்கைகளுக்கும் குழந்தைகளின் வாழ்க்கைகளுக்கும் உதவிட, இந்த குப்பைக் கிடங்குகளை வேறிடங்களுக்கு அவர்கள் கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம்,” என்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்