எங்களின் இந்த FACES திட்டம், நமது நாட்டின் முகங்களையும், தொழில்சார் பன்முகத்தன்மையையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மிகக் கவனமாக சேகரிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இந்த தரவுத்தளம், மாவட்ட மற்றும் கிராம அளவிலான மக்களின் முகங்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் விவரங்களை அடக்கியுள்ளது. தற்போது இந்த தளம் ஆயிரக்கணக்கான தரவுகளை கடந்து வருகிறது.
இந்த வருடம் FACES, 53 புதிய தொகுதிகளை இணைத்துள்ளது. புதிய இணைப்பில், மேற்கு வங்காள பிர்பூம் மாவட்ட துப்ராஜ்பூர் தொகுதியின், ஓய்வுபெற்ற தபால்காரரான சமீர் பதக்கை எங்கள் நிருபர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், காணிக்கர், மல்ஹர், கோலி, பணியன், காட்டுநாயக்கன், மலை அரையன், அடியன் மற்றும் போடோ போன்ற ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் இணைத்துள்ளோம்.
ஆரம்பத்தில், பல மாணவர்கள் புகைப்படங்கள் மூலம் கிராமப்புற இந்தியாவை அறிந்து கொள்வதற்கும் ஆவணப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக இந்தத் திட்டத்தில் பணியாற்றினர். பெரும்பாலும் மாணவர்கள்தான் எங்கள் பங்களிப்பாளர்களாக இருக்கின்றனர். பல வருடங்களாக நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள வெவ்வேறு தொகுதிகளைச் சேர்ந்த மக்களை புகைப்படம் எடுத்துக் கொடுத்து பங்களித்துள்ளனர்.
ஒரு மாநிலத்தின், ஒவ்வொரு மாவட்டத்தின், ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் குறைந்தபட்சமாக, பெரியவர்களில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை அல்லது இளம் பருவத்தினரின் புகைப்படங்களை எடுத்து ஆவணப்படுத்துவது FACES-ன் நோக்கம் ஆகும். இதன் தொடர்ச்சியாக, கிராமப்புற இந்தியாவைத் தாண்டி, நகர்ப்புற பின்னணியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முகங்களையும் இந்தத் திட்டம் தற்போது ஆவணப்படுத்துகிறது.
கேரளா ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிபாட் தொகுதியைச் சேர்ந்த நான்கு தென்னை நார்த் தொழிலாளர்களில் ஒருவரான சுமங்கலாவைச் சந்திப்போம். இந்த வருடம் FACES-ல் இணைந்த புதிய தொழில்களில் இதுவும் ஒன்று. கிராமப்புற இந்தியாவில், பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்பவர்கள் என்பதைக் கடந்து, வயல்களில் வேலை செய்பவர்கள், மீன் மற்றும் காய்கறிகள் விற்பவர்கள், தையல் தொழில், நெசவு செய்பவர்கள் மற்றும் ஆடை பின்னுபவர்கள் என பல பணிகள் செய்யும் திறமையாளர்களாக இருப்பதை நாம் அறிந்துள்ளோம்.
இடது: சுமங்கலா, கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்த ஒரு தென்னை நார்த் தொழிலாளி. இடது: மேகாலயாவைச் சேர்ந்த மாணவி, நோபிகா காசைன், ஒரு பாரம்பரிய காசி நடனக் கலைஞரும் ஆவார்
பாரியின் பங்களிப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவர்கள் இருப்பதால், இந்த வருடம், மாணவர்கள்தான் Faces-ல் அதிகம் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வருடம் இணைக்கப்பட்ட மற்றொரு புதிய தொகுதியான, மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் உள்ள, மவ்ப்லாங் தொகுதியைச் சார்ந்த, 9-ம் வகுப்பு மாணவியும் பாரம்பரிய காசி நடனக் கலைஞருமான நோபிகா காசைனை நாங்கள் சந்தித்தோம். "எங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்துகொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும்," என்று நோபிகா கூறுகிறார், "ஒவ்வொரு நடனத்திற்கும் [நிகழ்ச்சிக்கு] முன்பாக இதனை அணிந்து தயாராக நேரம் எடுத்தாலும், இது எனக்கு மிகவும் பிடிக்கும்," என்கிறார்.
எங்கள் பணி, உங்கள் ஆர்வத்தை தூண்டியிருந்தால் மற்றும் நீங்கள் பாரிக்கு பங்களிக்க விரும்பினால், தயவுசெய்து எங்களை [email protected]ல் தொடர்பு கொள்ளவும். எங்களுடன் இணைந்து பணியாற்ற சுயாதீன எழுத்தாளர்கள், நிருபர்கள், புகைப்படக்காரர்கள், திரைப்பட இயக்குநர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தொகுப்பாளர்கள், விளக்கப்பட ஓவியர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என அனைவரையும் வரவேற்கிறோம்.
தமிழில்: அகமது ஷ்யாம்