"பசி உட்பட பல விஷயங்களை மது அருந்தினால் மறந்துவிடலாம்," என்கிறார் சிங்துய் கிராமத்தை சேர்ந்த ரொபிந்திர புய்யா.
ஐம்பது வயதுகளில் இருக்கும் புய்யா ஒரு ஷபோர் பழங்குடியினத்தவர் (மேற்கு வங்கத்தில் ஷவோர் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் சமூகம்). முண்டா பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஷபோர்கள் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றனர். சவுரா, சுரா, ஷபோர், சுரிகள் போன்ற பெயர்களிலும் குறிப்பிடப்படுகின்றனர். லோதா ஷவோர் மேற்கு (பிரிக்கப்படாத) மெதினிபூரில் அதிகம். கடியா ஷவோர் அதிகமாக புருலியா, பாங்குடா மற்றும் மேற்கு (பிரிக்கப்படாத) மெதினிபூரில் வசிக்கின்றனர்.
மகாஸ்வெதா தேவியின் The Book of the Hunter (முதன்முதலாக வங்காளியில் 1994-ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது) இச்சமூகத்தின் வறுமையையும் விளிம்புநிலையில் வாழும் நிலையையும் எடுத்துக் காட்டியது. பல ஆண்டுகளாகியும் 2020ம் ஆண்டின் அறிக்கையின்படி பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை எனத் தெரிகிறது. Living World of the Adivasis of West Bengal என்ற அறிக்கை, “கணக்கெடுக்கப்பட்ட கிராமங்களில் 67 சதவிகிதம் பட்டினியால் வாடுகின்றன,” எனக் குறிப்பிடுகிறது.
18ம் நூற்றாண்டியின் பிற்பகுதியில் இச்சமூகத்தினர் ‘குற்றப்பரம்பரை’ என பிரிட்டிஷாரால் வரையறுக்கப்பட்டனர். 1952ம் ஆண்டில்தான் அந்த அடையாளம் நீக்கப்பட்டது. பாரம்பரிய வேடர்களான அவர்கள், பழங்கள் பறிப்பார்கள். இலை மற்றும் வேர்களை சேகரிப்பார்கள். வனவிலங்குகளை வேட்டையாடுவார்கள். சுதந்திரத்துக்கு பின் சிலருக்கு விவசாயம் பார்க்க நிலம் வழங்கப்பட்டது. ஆனால் அதில் பெரும்பாலான நிலம் பாறையும் பொட்டலும்தான். எனவே அவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாகி பணி செய்யத் தொடங்கினர். குற்றப்பரம்பரை வகைமை நீக்கப்பட்டபிறகும், களங்கம் தொடர்ந்தது. உள்ளூர் காவல்துறை மற்றும் வனத்துறையினரின் கருணையில்தான் அவர்கள் வாழ முடிந்தது. இல்லையெனில் அவர்களின் நடமாட்டம் முடக்கப்படும்.
குறைவான பணமீட்டும் வாய்ப்புகளை கொண்டிருப்பதால் மேற்கு மெதினிபூர் மற்றும் ஜாடுகிராம் மாவட்டங்களில் வாழும் ஷபோர் சமூகத்துக்கு பசிதான் கதி. புய்யா போன்ற பலரும் தங்களின் பசியை மதுவில் மறக்கின்றனர். அல்லது, “மூன்று வேளையும் பழைய சோற்றை சாப்பிட்டு வாழ்வோம்,” என்கிறார் பங்கிம் மல்லிக். தபோபான் கிராமத்தின் 55 வயது நிரம்பியவரான மல்லிக், மாதந்தோறும் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ அரிசி கொடுக்கப்படும் பொது விநியோகத் திட்டத்தை குறிப்பிடுகிறார். “உப்போ எண்ணெயோ பெருஞ்செலவு.” தன் பாழடைந்த வீட்டுக்கு முன் அமர்ந்து அவர் பழைய சோற்றை சாப்பிடுகிறார்.
குறைவான உணவை ஈடு செய்ய வருடம் முழுக்க ஷபோர்கள் காடுகளின் விளைபொருட்களை சார்ந்திருக்கின்றனர். கோடைக்கால மாதங்களிலும் மழைக்காலத்திலும் காட்டுப் பழங்களையும் வேர்களையும் அவர்கள் சேகரிக்கிறார்கள். பறவைக் குஞ்சுகளையும் பாம்புகளையும் பல்லிகளையும் தவளைகளையும் நத்தைகளையும் வேட்டையாடி உண்ணுகின்றனர். வயல் தவளைகளையும் பெரிய நத்தைகளையும் சிறு மீன்களையும் நண்டுகளையும் கூட உண்ணுகின்றனர்.
பிறகு மழைக்காலத்தில் ஆற்றுப்படுகைகளில் மீன்கள் பிடிப்பார்கள். அதற்கடுத்த மாதங்களில் வயல் எலிகள் தம் வளைகளில் சேமித்து வைக்கும் அரிசிகளை, முதலில் எலிகளை பிடித்துவிட்டு, பிறகு எடுத்துக் கொள்வார்கள். குளிர்காலத்திலும் அதற்கு பிந்தைய மாதங்களிலும் சிறு விலங்குகளை வேட்டையாடுகின்றனர். பழங்களையும் தேனையும் சேகரிக்கின்றனர்.
ஆனால் பிற பழங்குடி சமூகங்களை போல, அவர்களும் காடுகளுக்கு செல்வது கடினமாக இருப்பதாக சொல்கின்றனர். உணவுக்காக வன உயிர்கள் கடுமையாக அலைவதால், தங்களின் உயிர்களுக்கு அவர்கள் அஞ்சுகின்றனர்.
“பொழுது சாய்ந்தபிறகு, உடம்பு முடியாமல் போனால் கூட நாங்கள் கிராமத்தை நீங்குவதில்லை. சில யானை மந்தைகள் அசையக் கூட செய்யாது. இங்கு ஆதார் அட்டைகள் வாங்கியிருப்பது போல அவை இயங்குகின்றன,” என்கிறார் 52 வயது ஜோகா மல்லிக் நக்கலாக.
தபோபான் கிராமத்தை சேர்ந்த ஷபோரான சுக்ரா நாயக் அறுபது வயதுகளில் இருக்கிறார். யானைகளின் நடமாட்டம், “இங்கு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. எல்லா இடங்களிலும் அவை சுற்றுகின்றன. ஆவேசமாகவும் இருக்கின்றன. மக்களை தாக்குவது மட்டுமின்றி, நெல் வயல்களையும் வாழை மரங்களையும் எங்களின் வீடுகளையும் அவை அழிக்கின்றன.”
பெனாஷுலியில் வாழும் அவரின் அண்டைவீட்டுக்காரரான ஜதின் பக்தா, “காட்டுக்கு நாங்கள் செல்லாவிட்டால், என்ன சாப்பிடுவது? பல நாட்கள் நாங்கள் ஒருவேளை பழைய சோற்றை உண்டு ஜீவிக்கிறோம்,” எனச் சுட்டிக் காட்டுகிறார்.
குறைவாக உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதால், ஷபோர்கள் காச நோய் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். காச நோயால் பாதிக்கப்பட்டவரி சாரதி மல்லிக். மருத்துவ முகாம்களுக்கு சென்ற அவர் இனி எந்த முகாமுக்கும் செல்லப் போவதில்லை எனக் கூறுகிறார். பெனாஷுலி கிராமத்தை சேர்ந்த 30 வயது நிறைந்த அவர் காரணத்தை விளக்குகிறார்: “என் குடும்பத்தில் நான் மட்டும்தான் பெண். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டால், வீட்டு வேலையை யார் பார்ப்பது? கணவருடன் காட்டுக்கு சென்று யார் இலைகளை சேகரிப்பது?” மேலும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு பயணிப்பது அதிக செலவை கோருகிறது. “ஒவ்வொரு முறையும் செல்லவே 50லிருந்து 80 ரூபாய் வரை ஆகிறது. அந்தளவுக்கு எங்களிடம் வசதி இல்லை.”
ஷபோர் குடும்பங்களின் பிரதான வருமானம் குங்கிலிய மர இலைகளை சேகரித்து விற்பதில்தான் வருகிறது. அது கடினமான வேலை. குங்கிலிய மரம், இந்தியாவின் மரக்கட்டைகளுக்கான பிரதான மூலம். குங்கிலிய இலைகளை வாங்குபவரும் அடிக்கடி சந்தைக்கு செல்பவரும் ஒடிசாவை சேர்ந்தவருமான திலிப் மொஹந்தி சொல்கையில், “இந்த வருடத்துக்கான இலைகளின் அளவு கடுமையாக குறைந்து விட்டது. யானை பயத்தால் ஷபோர் சமூகத்தினரும் காட்டுக்குள் செல்வதில்லை,” என்கிறார்.
ஜதினின் அண்டைவீட்டுக்காரரான கொண்டா பக்தா ஒப்புக் கொள்கிறார். ஆபத்து அதிகம் என்கிறார். “எப்போதும் நாங்கள் ஒரு குழுவாகத்தான் செல்வோம். ஆபத்து நிறைந்த விஷயம் அது. பாம்புகளும் யானைகளும் இருக்கும். அதிகாலை 6 மணிக்கு சென்று பிற்பகலில் திரும்பிவிடுவோம்.”
“இலைகள் சேகரிக்கப்பட்டு காயவைக்கப்பட்ட பிறகு, “சைக்கிளில் அவற்றை நாங்கள், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடத்தப்படும் அருகாமை சந்தைக்கு கொண்டு செல்வோம். ஒடிசாவிலிருந்து வாங்குபவர்கள் வருவார்கள். 1,000 இலை கொண்ட ஒரு கட்டுக்கு 60 ரூபாய் கொடுப்பார்கள். வாரத்தில் நான்கு கட்டுகளை விற்றால், ரூ.240 கிடைக்கும்,” என்கிறார் ஜதின் போக்தா. “இங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில் வருமானம் அதுதான்.”
அம்மக்களுக்காக அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PMAY) கீழ் வீடுகள் கொடுக்கும் பணியை தொடங்கியிருக்கிறது. ஆனால் 40 வயது சாபித்ரி மல்லிக், “இங்கு நாங்கள் வாழ முடியாது,” என்கிறார். ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடிய கல் வீடுகள், கோடை மாதங்களில் தட்பவெப்பம் 43 டிகிரி செல்சியஸ்ஸை எட்டும்போது சகிக்க முடியாதபடிக்கு இருக்கும். “மார்ச்சிலிருந்து ஜூன் மாதம் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது எப்படி நாங்கள் வாழ்வது?”
பெனாஷுலியிலும் தபோபானிலும் சில தனியார் ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன. சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இயங்கும் கஜ்லா ஜனகல்யாண் சமிதி (KJKS) என்கிற தொண்டு நிறுவனம் அப்பள்ளிகளை நடத்துகிறது. கற்றறிவு 40 சதவிகிதம்தான். மாநில, தேசிய சராசரிகளை விடக் குறைவு. இப்பகுதியின் இளம் பழங்குடியினரின் மூன்றில் ஒருவர் (நடுநிலை மற்றும் உயர்நிலை) பள்ளிகளில் படிப்பதில்லை என்கிறது 2020ம் ஆண்டு அறிக்கை . மேலும் சாதிய தாக்குதல், பள்ளியின் தூரம், கல்விச்செலவு, வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் மாணவர்களின் இடைநிற்றல் இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
“சமூகத்துக்கு நல்ல வருமானம் இல்லாதபோது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சொகுசான விஷயம்,” என்கிறார் KJKS-ன் தலைவர்.
மருத்துவச் சேவையைப் பெறுவதும் கடினம் என்கிறார் பல்லவி சென்குப்தா. “ஆரம்ப சுகாதார மையங்கள் அருகே இல்லாததால் எக்ஸ் ரே எடுப்பதும் அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. எனவே அவர்கள் பாரம்பரிய மருத்துவர்களை சார்ந்திருக்கின்றனர்,” என்கிறார் இப்பகுதியின் பழங்குடிகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்கும் தொண்டு நிறுவனமான ஜெர்மன் டாக்டர்ஸில் பணிபுரியும் சென் குப்தா. இப்பகுதியில் பாம்புக் கடிகள் சாதாரணம். இதிலும் கூட, போதிய மருத்துவ வசதி இல்லாததால் பாரம்பரிய மருத்துவ முறை செய்பவர்களே முன்னணியில் இருக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் 40,000-க்கும் மேல் ஷபோர்கள் வசித்தாலும் ( Profile of Scheduled Tribes புள்ளிவிவரம், 2013) பசியின் விளிம்பில்தான் அவர்கள் வாழ்கின்றனர்.
2004ம் ஆண்டில் தற்போது ஜாடுகிராம் மாவட்டமாக இருக்கும் மெதினிபூர் மாவட்டத்தின் ஷபோர் கிராமத்தை சேர்ந்த ஐவர் பசியில் உயிரிழந்த சம்பவம் தேசிய ஊடகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இருபது வருடங்கள் ஓடிய பின்னும் பெரிய மாற்றம் ஏதுமில்லை. அளவுக்கதிகமான பசி இருக்கிறது. கல்வி, மருத்துவம் போன்றவற்றை அணுக முடியவில்லை. அடர்காடுகளின் அருகே குக்கிராமங்கள் இருப்பதால் மனித - விலங்கு மோதல் அடிக்கடி நேர்கின்றன.
இத்தகைய கொடுமையான சூழலில், அங்கு வசிப்பவர்கள் உணவுக்கு பதிலாக மதுவை எடுத்துக் கொண்டு, ரொபிந்திரா புய்யாவை போல் கேட்கும் கேள்வியை எளிமையாக கடந்து சென்றுவிட முடியாது, “என்னுடைய மூச்சில் மது வாசனை வந்தால், என்னை நீங்கள் திட்டுவீர்களா?”
தமிழில்: ராஜசங்கீதன்