கொல்ஹாப்பூர் மாவட்டத்தின் ராஜாராம் சர்க்கரை ஆலையில், பிப்ரவரி மாதத்தின் வெயில் நிறைந்த அமைதியான ஒரு மதிய வேளை. ஆலையின் வளாகத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான குடிசைகளில் பெரும்பாலானவை காலியாக இருக்கின்றன. ஒருமணி நேர நடை தூரத்தில் இருக்கும் வந்தனாகே கிராமத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பாத்திரங்கள் பயன்படுத்தப்படும் சத்தம், சில தொழிலாளர்கள் வீட்டில் இருப்பதை உணர்த்துகிறது. அச்சத்தம், குடும்பத்துக்கான இரவுணவு செய்ய தயாராகும் 12 வயது ஸ்வாதி மகர்னோரிடம் கொண்டு செல்கிறது. வெளுத்துப் போய் சோர்வுடன் காணப்படும் அவர் குடிசையின் வெளியே தனியாக அமர்ந்திருக்கிறார். சமையல் பாத்திரங்கள் அவரைச் சுற்றிக் கிடக்கின்றன.
“அதிகாலை 3 மணியிலிருந்து நான் விழித்திருக்கிறேன்,” என்கிறார் கொட்டாவியை கட்டுப்படுத்திக் கொண்டு.
அதிகாலையில் பெற்றோர், தம்பி மற்றும் தாத்தாவுடன் மகாராஷ்டிராவின் பாவ்தா தாலுகாவில் கரும்பு வெட்ட மாட்டுவண்டியில் இச்சிறுமி சென்றார். ஐவர் கொண்ட குடும்பம் ஒரு நாளில் 25 கட்டுகள் வெட்ட வேண்டும். எல்லாரும் சேர்ந்து இந்த இலக்கை எட்ட வேண்டும். முதல் நாள் இரவு சமைத்த பக்ரியும் கத்திரிக்காய் கறியும் மதிய உணவுக்காக கட்டியிருக்கின்றனர்.
ஸ்வாதி மட்டும் ஆறு கிலோமீட்டர் நடந்து ஆலை வளாகத்துக்குள் இருக்கும் அவர்களின் வீடடைந்தார். “என்னை கொண்டு வந்து விட்ட பிறகு தாத்தா மீண்டும் சென்றுவிட்டார்.” 15 மணி நேரம் கரும்பு வெட்டி சோர்வுடன் வீடு திரும்பும் குடும்பத்தினருக்கு இரவுணவு சமைத்து வைக்கவென அவர் முன்பே வீட்டுக்கு வந்துவிட்டார். “காலையிலிருந்து நாங்கள் (குடும்பம்) ஒரு கப் தேநீர்தான் குடித்தோம்,” என்கிறார் ஸ்வாதி.
வயல்களுக்கும் வீட்டுக்கும் தினமும் சென்று வரும் இந்த பயணமும் கரும்பு வெட்டுதல் மற்றும் சமையலும்தான் கடந்த ஐந்து மாதங்களுக்கு ஸ்வாதியின் வாழ்க்கையாக இருக்கிறது. நவம்பர் 2022-ல் பீட் மாவட்ட சகுந்த்வாடி கிராம வீட்டிலிருந்து கொல்ஹாப்பூர் மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள் அவர்கள். இங்கு, ஆலை வளாகத்தில் அவர்கள் வசிக்கின்றனர். ஆக்ஸ்ஃபாம் 2020ம் ஆண்டு வெளியிட்ட சர்க்கரைக்கான மனித விலை என்கிற அறிக்கையில், மகாராஷ்டிராவின் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெரிய காலனிகளாக தார்ப்பாய் குடிசைகளில் வாழ்கிறார்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு குடிநீர், மின்சாரம், கழிவிட வசதிகள் இருப்பதில்லை.
“கரும்பு வெட்டுவது எனக்கு பிடிக்காது,” என்கிறார் ஸ்வாதி. “என் கிராமத்தில் இருக்கவே விரும்புகிறேன். ஏனெனில் அங்கு நான் பள்ளிக்கு செல்ல முடியும்.” படோடா தாலுகாவிலுள்ள சகுந்த்வாடி கிராமத்து நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு அவர் படிக்கிறார். அவரது தம்பி கிருஷ்ணா, அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார்.
ஸ்வாதியின் பெற்றோர் மற்றும் தாத்தா போல, கிட்டத்தட்ட 500 புலம்பெயர் தொழிலாளர்கள் ராஜாராம் சர்க்கரை ஆலையில் ஒப்பந்த ஊழியர்களாக கரும்பு அறுவடைக் காலத்தில் பணிபுரிகின்றனர். “மார்ச்சில் (2022) நாங்கள் சங்க்லியில் இருந்தோம்,” என்கிறார் ஸ்வாதி. அவரும் கிருஷ்ணாவும் வருடத்தில் ஐந்து மாதங்களுக்கு பள்ளி செல்ல முடியாது.
“ஒவ்வொரு வருட மார்ச் மாதமும் நாங்கள் தேர்வுகள் எழுதவென தாத்தா எங்களை கிராமத்துக்கு அழைத்து செல்வார். பெற்றோருக்கு உதவ உடனே நாங்கள் திரும்பிவிடுவோம்,” என்கிறார் ஸ்வாதி, மாநிலப் பள்ளியில் தொடர்ந்து எப்படி கல்வியை தொடர்கிறார்கள் என்பதை விளக்கி.
நவம்பரிலிருந்து மார்ச் வரை பள்ளி செல்லாதது இறுதித் தேர்வில் தேர்ச்சி அடைவதை கடினமாக்கும். “மராத்தி, வரலாறு போன்ற பாடங்களை நாங்கள் எதிர்கொண்டு விட முடிகிறது. கணக்குதான் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது,” என்கிறார் ஸ்வாதி. ஊரில் இருக்கும் சில நண்பர்கள் அவருக்கு உதவ முயலுவார்கள். ஆனால் பயனிருக்காது.
“என்ன செய்வது? என் பெற்றோர் வேலைக்கு செல்ல வேண்டும்,” என்கிறார் ஸ்வாதி.
புலம்பெயராத (ஜூன் - அக்டோபர்) மாதங்களில் ஸ்வாதியின் பெற்றோரான 35 வயது வர்ஷாவும் 45 வயது பாவ்சாகெபும் சகுந்த்வாடியை சுற்றியுள்ள வயல்களில் விவசாயக் கூலி வேலை பார்ப்பார்கள். “மழைக்காலம் தொடங்கி அறுவடை வரை, ஊரிலேயே எங்களுக்கு வாரத்துக்கு 4-5 நாட்கள் வேலை கிடைத்துவிடும்,” என்கிறார் வர்ஷா.
குடும்பம், மகாராஷ்டிராவில் நாடோடி பழங்குடியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் தங்கர் சமூகத்தை சேர்ந்தது. இருவரும் நாளொன்றுக்கு 350 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். வர்ஷா ரூ.150-ம் பாவ்சாகெப் ரூ.200ம் ஈட்டுகின்றனர். கிராமத்தருகே வேலைகள் இல்லாமலாகும்போது, கரும்பு வேலை செய்ய அவர்கள் இடம்பெயருகின்றனர்.
*****
“ஆறிலிருந்து 14 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி கண்டிப்பாக தரப்பட வேண்டும்,” என்கிறது குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டம் 2009. ஆனால் ஸ்வாதி மற்றும் கிருஷ்ணா போன்ற கரும்புத் தொழிலாளர்களின் 0.13 மில்லியன் குழந்தைகள் (6-14 வயது) பெற்றோருடன் இடம்பெயரும்போது பள்ளிக் கல்வி எட்ட முடியாத சூழல் நிலவுகிறது.
இடைநிற்றலை தடுக்கும் முயற்சியாக, மகாராஷ்டிர அரசாங்கம் ‘கல்வி உத்தரவாத அட்டைகள்’ (EGC) அறிமுகப்படுத்தியது. கல்வியுரிமை சட்டத்துக்காக 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவுதான் EGC. புது இடத்திலும் படிப்பை தொடர வைக்கவே இந்த அட்டை முறை. மாணவரின் கல்வி தொடர்பான எல்லா தகவல்களையும் அந்த அட்டை கொண்டிருக்கும். சொந்த ஊரிலுள்ள பள்ளி ஆசிரியர்களால் அந்த அட்டைகள் கொடுக்கப்படும்.
”புலம்பெயரும் மாவட்டத்துக்கு குழந்தை அந்த அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும்,” என விளக்குகிறார் பீட் மாவட்டத்தை சேர்ந்த செயற்பாட்டாளரான அஷோக் தங்க்டே. புதிய பள்ளியில் அட்டையை அதிகாரிகளிடம் கொடுக்கும்போது, “பெற்றோர் செல்ல வேண்டியதில்லை. குழந்தை அதே வகுப்பில் கல்வியை தொடரலாம்,” என்கிறார் அவர்.
ஆனால் யதார்த்தத்தில், “ஒரு அட்டை கூட எந்த குழந்தைக்கு இன்று வரை கொடுக்கப்படவில்லை,” என்கிறார் அஷோக். எங்கு குழந்தை படிக்கிறதோ அந்த பள்ளியால்தான் அட்டை இடம்பெயரும் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும்.
”நடுநிலை பள்ளி ஆசிரியர் எனக்கோ என் நண்பர்களுக்கோ அத்தகைய அட்டை எதையும் வழங்கவில்லை,” என்கிறார் பல மாதங்கள் பள்ளிக்கு செல்ல முடியாத ஸ்வாதி.
சொல்லப்போனால், சர்க்கரை ஆலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் நடுநிலைப் பள்ளி இருக்கிறது. ஆனால் அட்டை ஏதும் இல்லை. எனவே ஸ்வாதி மற்றும் கிருஷ்ணா அங்கு செல்ல முடியாது.
கரும்புத் தொழிலாளர்களின் 0.13 மில்லியன் குழந்தைகள் கட்டாயக் கல்வி சட்டம் இருந்தும் இடம்பெயருகையில் கல்வி பெற முடியாத சூழல் இருக்கிறது
புனேவில்
பள்ளிக்கல்வி இயக்குநரக அதிகாரி சொல்கையில், “இத்திட்டம் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
பள்ளி அதிகாரிகள் இடம்பெயரும் மாணவர்களுக்கு அட்டைகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்,”
என்கிறார். ஆனால் இதுவரை அட்டைகள் வழங்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை கேட்கும்போது,
அவர், “இது தொடர்ந்து நடத்தப்படும் கணக்கெடுப்பு. நாங்கள் தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.
அவை தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன,” என்கிறார்.
*****
“இங்கிருக்கவே எனக்கு பிடிக்கவில்லை,” என்கிறார் அர்ஜுன் ராஜ்புத். 14 வயது நிறைந்த அவர், கொல்ஹாப்பூர் மாவட்ட ஜாதவ்வாடியின் இரண்டு ஏக்கர் செங்கல் சூளையில் பணிபுரியும் தன் குடும்பத்துடன் வசிக்கிறார்.
ஏழு பேர் கொண்ட அவரின் குடும்பம், கொல்ஹாப்பூர் - பெங்களூர் நெடுஞ்சாலையில் இருக்கும் செங்கல் சூளையில் பணிபுரிய அவரங்காபாத் மாவட்டத்தின் வட்காவோன் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து இயங்கும் சூளை, ஒரு நாளுக்கு 25,000 செங்கற்கள் வரை உற்பத்தி செய்கிறது. உடல்ரீதியாக வருத்தி உச்ச வெப்பநிலையில் இயங்கும் பாதுகாப்பற்ற சூழல் கொண்ட வேலைகளில் செங்கல் சூளையும் ஒன்று. அவற்றில் பணிபுரியும் 10-23 மில்லியன் மக்களில் அர்ஜுன் குடும்பமும் அடக்கம். மிகக் குறைந்த கூலிகளை கொண்ட செங்கல் சூளைகள், வருமானத்துக்காக எவரும் தஞ்சமடையும் கடைசி புகலிடம் ஆகும்.
பெற்றோருடன் சேர்ந்து வசிக்கும் அர்ஜுன் நவம்பரிலிருந்து மே மாதம் வரை பள்ளிக்கு செல்ல முடியாது. “ஊர் பள்ளியில் நான் 8ம் வகுப்பு படிக்கிறேன்,” என்கிறார் அர்ஜுன், கடந்து செல்லும் JCB இயந்திரம் கிளப்பும் புழுதிக்கூடாக.
வட்காவோனில் அர்ஜுனின் பெற்றோரான சுமனும் அபாசாகெபும் கங்காப்பூர் தாலுகாவுக்குள்ளிருக்கும் நிலங்களில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிகின்றனர். நடவு காலத்திலும் அறுவடை காலத்திலும் மாதத்துக்கு 20 நாட்கள் வேலை கிடைக்கும். நாளொன்றுக்கு 250-300 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். அம்மாதங்களில் அர்ஜுன் ஊரிலுள்ள பள்ளிக்கு செல்ல முடியும்.
கடந்த வருடம், குடிசைக்கு அருகே கல் வீடு கட்ட அவரின் பெற்றோர் முன்பணம் பெற்றனர். “1.5 லட்ச ரூபாய் முன்பணம் வாங்கி வீட்டுக்கு அடித்தளம் கட்டினோம்,” என்கிறார் சுமன். “இந்த வருடம் இன்னொரு லட்சம் ரூபாய் சுவர்கள் கட்ட முன்பணம் வாங்கியிருக்கிறோம்.”
இடப்பெயர்வை விளக்குகையில் அவர், “ஒரு வருடத்தில் ஒரு லட்ச ரூபாயை வேறு எந்த வழியிலும் நாங்கள் ஈட்ட முடியாது. “இதுதான் (செங்கல் சூளைப் பணிக்கு இடம்பெயருதல்) ஒரே வழி,” என்கிறார். அநேகமாக அடுத்த வருடம் “வீட்டு சுவர்களுக்கு அரைச்சாந்து அடிக்க பணத்துக்காக” திரும்ப வர வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.
இதுவரை வீடு கட்டுவதில் இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. இன்னும் இரண்டு வருங்கள் தேவைப்படும். இவற்றுக்கிடையில் அர்ஜுனின் கல்வி தடைப்படும். சுமனின் ஐந்து குழந்தைகளில் நால்வர் பள்ளிப்படிப்பை நிறுத்தி, 20 வயதுக்கு முன்னே மணமுடித்துக் கொண்டனர். குழந்தையின் எதிர்காலம் குறித்த கவலையுடன் அவர், “என் தாத்தா பாட்டி செங்கல் சூளைகளில் பணிபுரிந்தார்கள். பிறகு என் பெற்றோர். இப்போது நான். இந்த இடப்பெயர்வு சுற்று எப்போது முடியுமென எனக்கு தெரியவில்லை,” என்கிறார்.
அர்ஜுன் மட்டும்தான் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் சொல்கையில், “ஆறு மாதங்கள் பள்ளிக்கு செல்லாமல், இனி ஊருக்கு திரும்பினாலும் படிப்பதற்கான விருப்பம் தோன்றவில்லை,” என்கிறார்.
ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் அர்ஜுனும் அனிதாவும் (உறவினர்), சூளையருகே ஆவனி என்கிற தொண்டு நிறுவனம் நடத்தும் பகல் நேரக் காப்பகத்தில் இருக்கின்றனர். கொல்ஹாப்பூர் மற்றும் சங்க்லி ஆகிய பகுதிகளின் 20 சூளைகளிலும் சில கரும்பு விவசாயத் தளங்களிலும் ஆவனி பகல் நேரக் காப்பகங்களை நடத்துகிறது. ஆவனியிலிருக்கும் பல மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களில் (PVTGs) ஒன்றான கட்காரி சமூகம் அல்லது மேய்ச்சல் பழங்குடியான பெல்தார் சமூகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 800 பதிவு செய்யப்பட்ட செங்கல் சூளைகளை கொண்ட கொல்ஹாப்பூர், வேலை தேடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஈர்ப்பு கொடுக்கும் பகுதி என விளக்குகிறார் ஆவனியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சட்டப்பா மொஹைத்.
“இங்கு (காப்பகத்தில்) 4ம் வகுப்பு புத்தகங்களை நான் படிப்பதில்லை. சாப்பிடுவோம், விளையாடுவோம்,” என்கிறார் அனிதா புன்னகையோடு. 3லிருந்து 14 வயது வரை இருக்கும் கிட்டத்தட்ட 25 புலம்பெயர் குழந்தைகள் இம்மையத்தில் நாளை கழிக்கின்றனர். மதிய உணவையும் தாண்டி, குழந்தைகள் விளையாடுகின்றனர். கதைகள் கேட்கின்றனர்.
நாள் முடிந்தபிறகு, “செங்கற்களை வடிவமைக்க உதவுவோம்,” என அர்ஜுன் அசிரத்தையுடன் சொல்கிறார்.
ஏழு வயது ராஜேஷ்வரி நேய்னெகெலி மையத்திலுள்ள குழந்தைகளில் ஒருவர். அவர் சொல்கையில், “இரவில் சில நேரங்களில் அம்மாவுடன் நான் செங்கற்கள் செய்வேன்,” என்கிறார். கர்நாடகாவிலுள்ள ஊர் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் சிறுமி ராஜேஷ்வரி வேலையை கவனமாக செய்பவர். “அப்பாவும் அம்மாவும் மதியம் மண்ணை தயார் செய்வார்கள். பிறகு இரவு அவர்கள் செங்கற்கள் செய்வார்கள். அவர்கள் செய்வதை நானும் செய்வேன்.” செங்கல் அச்சில் அவர் களிமண்ணை ஊற்றி, தொடர்ந்து தட்டி வடிவம் கொள்ளச் செய்வார். பிறகு அவரின் தாயோ தந்தையோ அச்சில் இருந்து அதை எடுப்பார்கள். ஏனெனில் குழந்தையால் தூக்க முடியாது.
“எத்தனை செங்கற்கள் செய்வேனென எனக்கு தெரியாது. ஆனால் அலுப்பானால் தூங்கிவிடுவேன். அம்மாவும் அப்பாவும் தொடர்ந்து செய்வார்கள்,” என்கிறார் ராஜேஷ்வரி.
ஆவனியின் 25 குழந்தைகளில் பெரும்பாலானோர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இடம்பெயர்ந்து கல்வி கற்பதற்கான அட்டை இல்லை. மேலும் சூளைக்கு அருகே உள்ள பள்ளியே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
“பள்ளி தூரத்தில் இருக்கிறது. யார் எங்களை அழைத்து செல்வார்?” என அர்ஜுன் கேட்கிறார்.
”உள்ளூர் கல்வித்துறை, அருகாமை பள்ளி ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்தால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வகுப்பறை மற்றும் போக்குவரத்து வசதிகளை அளிப்பதை,” அட்டை உறுதிப்படுத்துகிறது.
ஆனால் 20 வருடங்களாக இயங்கி வரும் ஆவனியின் நிறுவன இயக்குநரான அனுராதா போசலே, “இவை யாவும் எழுத்தளவில்தான் இருக்கின்றன,” என்கிறார்.
அகமதுநகர் மாவட்டத்தின் ஆர்த்தி பவார் கொல்ஹாப்பூர் சூளையில் பணிபுரிகிறார். “என் பெற்றோர் என்னை 2018ம் ஆண்டில் மணம் முடித்துக் கொடுத்தனர்,” என்கிறார் 23 வயதான அவர். 7ம் வகுப்போடு படிப்பை இடைநிறுத்தியவர் அவர்.
“பள்ளிக்கு ஒரு காலத்தில் சென்று கொண்டிருந்தேன். இப்போது செங்கல் சூளைகளில் பணிபுரிகிறேன்,” என்கிறார் ஆர்த்தி.
*****
“இரண்டு வருடங்களுக்கு நான் எதையும் படிக்கவில்லை. ஸ்மார்ட்ஃபோன் எங்களிடம் இல்லை,” என்கிறார் அர்ஜுன் கல்வி முற்றிலுமாக இணையவழியில் வழங்கப்பட்ட மார்ச் 2020 - ஜூன் 2021 காலக்கட்டத்தை குறிப்பிட்டு.
“தொற்றுக்கும் முன்னால் கூட, தேர்ச்சி அடைவது எனக்கு சிரமம்தான். ஏனெனில் பல மாதங்கள் பள்ளிக் கல்வி தடைப்படும். ஐந்தாம் வகுப்பை திரும்பப் படிக்க வேண்டியிருந்தது,” என்கிறார் தற்போது 8ம் வகுப்பு படிக்கும் அர்ஜுன். மகாராஷ்டிராவின் பல மாணவர்களை போல, தொற்றுக்காலத்தில் அர்ஜுனும் இரு வகுப்புகள் (6 மற்றும் 7) பள்ளிக்கு செல்லாமலேயே அரசின் உத்தரவுப்படி தேர்ச்சி பெற்றார்.
இந்திய மக்கள்தொகையில் நாட்டுக்குள் இடம்பெயர்பவர்களின் அளவு 37 சதவிகிதம் (450 மில்லியன்). அவர்களில் பலர் குழந்தைகள். இந்த பெரும் எண்ணிக்கை சரியான கொள்கைகளும் அவற்றை அமல்படுத்துவதும் அவசர அவசியமென உணர்த்துகிறது. 2020ம் ஆண்டு வெளியான ILO அறிக்கை யின் பரிந்துரையான, புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகள் தடையின்றி கல்வி பயிலுவதற்கு அவசியமான கொள்கை நடவடிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
”மாநில அளவிலோ ஒன்றிய அளவிலோ புலம்பெயர் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வைக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை,” என்கிறார் அஷோக் டாங்க்டே. இந்த இடைவெளி, புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வியுரிமையை தடுப்பதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பற்ற சூழல்களில் அவர்கள் வாழும் கட்டாயத்தையும் உருவாக்குகிறது.
ஒடிசாவின் பர்கர் மாவட்ட சுனலரம்பா கிராமத்தை சேர்ந்த சிறுமி கீதாஞ்சலி சுனா, பெரும் பயணம் செய்து நவம்பர் 2022-ல் பெற்றோருடனும் சகோதரியுடனும் கொல்ஹாப்பூர் செங்கல் சூளைக்கு வந்தார். சத்தமிடும் இயந்திரங்களுக்கு நடுவே 10 வயது கீதாஞ்சலி ஆவனியின் குழந்தைகளுடன் விளையாடுகிறார். அவ்வப்போது குழந்தைகளின் சிரிப்பும் கொல்ஹாப்பூர் செங்கல் சூளையை சுற்றி எழும் காற்றை நிரப்புகிறது.
தமிழில்: ராஜசங்கீதன்