அஹர்வானியில் ராம் அவதார் குஷ்வஹா நுழைந்ததும், அந்த மண் சாலைகளில் ஓட்டுவதற்காக மோட்டார் சைக்கிளை நிதானிக்கிறார். குக்கிராமத்தின் பகுதியை அவர் அடைந்ததும், 150 சிசி பைக்கை நிறுத்துகிறார்.
ஐந்து நிமிடங்களில் குழந்தைகள், நடுநிலை பள்ளி படிப்பவர்கள், பதின்வயதினர் அவரை சுற்றி கூடத் தொடங்குகின்றனர். கையில் நாணயங்களும் 10 ரூபாய் தாள்களையும் வைத்துக் கொண்டு தங்களுக்குள் பேசியபடி அந்த சஹாரியா பழங்குடி குழந்தைகள் பொறுமையாக காத்திருக்கின்றன. வறுத்த நூடுல்ஸ் மற்றும் காய்கறியை கலந்து செய்யப்படும் சவ் மெய்ன் என்கிற உணவு ஒரு தட்டு வாங்குவதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்
தற்போது நன்றாக நடந்து கொண்டிருக்கும் பசியோடு கூடிய அந்த வாடிக்கையாளர்கள் விரைவிலேயே பொறுமை இழந்து விடுவார்கள் எனத் தெரிந்து அந்த மோட்டார் வாகன விற்பனையாளர், வேகமாக பையை திறக்கிறார். அதிகமாக இல்லை. இரண்டு பிளாஸ்டிக் குடுவைகளை வெளியே எடுக்கிறார். ‘ஒன்று மிளகாய் சாஸ், இன்னொன்று சோயா சாஸ்,” என விளக்குகிறார். பிறகு முட்டைக்கோஸ், உரிக்கப்பட்ட வெங்காயம், குடை மிளகாய் மற்றும் வேக வைக்கப்பட்ட நூடுல்ஸ் ஆகியவற்றை எடுக்கிறார். “எனக்கான பொருட்களை நான் விஜய்பூரில் (டவுன்) வாங்குகிறேன்.”
கிட்டத்தட்ட மாலை ஆறு மணி. இன்று ராம் அவதார் வரும் நான்காவது கிராமம் இது. வழக்கமாக அவர் செல்லும் பிற குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களை பட்டியலிடுகிறார் - லதார், பண்ட்ரி, கஜுரி கலான், சில்பரா, பரோண்ட் - எல்லாமும் விஜய்பூர் தாலுகாவின் கோபால்புரா கிராமத்தில் அவர் வசிக்கும் சுட்டாய்புரா வீட்டிலிருந்து 30 கிமீ சுற்றளவில் இருக்கிறது. இந்த கிராமங்களில் கிடைக்கக் கூடிய பிற தின்பண்டங்கள் சிப்ஸ் பாக்கெட்டும் பிஸ்கெட்டுகள் மட்டும்தான்.
பழங்குடி அதிகம் வசிக்கும் 500 பேர் கொண்ட அஹர்வானிக்கு அவர் வாரத்தில் 2-3 முறை வருகிறார். அஹர்வானி சமீபமாக உருவான வசிப்பிடம். சிங்கங்களுக்கான இரண்டாம் வசிப்பிடமாக உருவாக்கப்படவென குனோ தேசியப் பூங்காவிலிருந்து 1999ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்கள்தான் இங்கு வசிப்பவர்கள். வாசிக்க: வேங்கை உள்ளே, பழங்குடிகள் வெளியே. சிங்கங்கள் வரவில்லை. ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைப்புலிகள்தான் அப்பூங்காவுக்கு செப்டம்பர் 2022-ல் கொண்டு வரப்பட்டன.






