நம்முடம் பேசிக்கொண்டிருக்கும் போதும், முகமது அஸ்கரின் கைகள், இயந்திரம் போல, மிகத் துல்லியமாக வேலை செய்கின்றன.
“குச் பல் கே லியே பீ ஹாத் ருக் கயா தோ காம் கராப் ஹோ ஜாயேகா [நான் எனது கைகளை சிறிது நேரம் நிறுத்தினாலும் கூட, வேலை வீணாகி விடும்],” என்று மூன்று நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலையைத் தொடர்ந்து வரும் இந்த 40 வயது கைவினைஞர் கூறுகிறார்.
சாப்பா காரிகரான (கைகளால் வடிவங்களை அச்சிடும் கைவினைஞர்) அஸ்கர், ஒரு தசாப்தமாக இந்தக் கலையை செய்து வருகிறார். மர அச்சு கொண்டு அச்சிடும் மற்ற கைவினைஞர்கள் போல் அல்லாமல், அஸ்கர் மெல்லிய அலுமினியத் தகடுகளைக் கொண்டு உலோக பூக்களையும் மற்ற வடிவங்களையும் தனித்துவமாக ஆடைகளில் அச்சிடுகிறார்.
தபக் என்னும் இந்த மெல்லிய அலுமினியத் தகடை, பெண்களின் புடவைகள், ஷராராக்கள், லெஹங்காக்கள் போன்ற மற்ற ஆடைகளில் அச்சிடும் போது, ஒரு விழாக்கோல உணர்வை கொணர்கிறது. அஸ்கருக்கு பின்னால் இருக்கும் அலமாரியில், சாதாரான ஆடைகளை, விழாக்கால ஆடைகளாக மாற்றும் பல நுண்ணிய வடிவங்களைக் கொண்ட டசன் கணக்கான மர அச்சுகள் உள்ளன.
பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பிகார்ஷரிஃப் டவுனில் அரை டஜன் சாப்பா கடைகள் உள்ளன. இவர்களின் வாடிக்கையாளர்களைப் போலவே, பெரும்பாலான சாப்பா கைவினைஞர்கள் , முஸ்லிம்கள் மற்றும் ரங்க்ரேஸ் (சாயத் தொழிலாளி) சாதியைச் சார்ந்தவர்கள். இந்த சாதி, பிகாரில் பொருளாதாரத்தில் பிந்தங்கிய வகுப்பினராக (EBC) பட்டியலிடப்பட்டுள்ளது. பிகார் அரசால் சமீபத்தில் எடுக்கப்பட்ட சாதி கணக்கெடுப்பின் படி, இதில் 43,347 நபர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
“30 வருடத்திற்கு முன்பு, எனக்கு எதுவும் [எந்த வேலைவாய்ப்பும்] இல்லாததால், இந்த வேலையில் இணைந்தேன்," என்கிறார் பப்பு. “எனது தாய்வழி தாத்தா ஒரு சாப்பா கைவினைஞர் ஆவார். அவரிடத்தில் இருந்துதான் நான் இந்த கலையை கற்றேன். அவர் தன் வாழ்நாளை இதில் கழித்தது போல, நானும் இப்போது கழித்துக்கொண்டிருக்கிறேன்," எனும் 55 வயதான பப்பு, பிகாரின் தலைநகரமான பாட்னாவில், அதிகமாக மக்கள் வசிக்கும் சப்ஸிபாக் வட்டாரத்தில், 30 வருடமாக இந்த சாப்பா துணிக்கடையை நடத்தி வருகிறார்.
அவரின் கூற்றுப்படி, இந்த கலைக்கான மவுசு குறைந்து வருகிறதாம். “முன்பு 300 சாப்பா கடைகள் இருந்த இடத்தில் தற்போது 100 மட்டுமே இயங்கி வருகிறது," என வருந்துகிறார். அதுமட்டுமில்லாமல், முன்பிருந்த தங்க, வெள்ளி அச்சுகள் ஏதும் இன்று இல்லாமல், வெறும் அலுமினிய அச்சுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகக் கூறுகிறார்.
சப்ஸி பஸாரில் உள்ள ஒரு சிறிய பட்டறையில் பணிபுரியும் அஸ்கர், 20 வருடங்களுக்கு முன்பு, பிகார்ஷரிஃப் நகரிலேயே தபக் செய்யும் வழக்கம் இருந்ததாகக் கூறுகிறார். “முன்பெல்லாம் தபக் , இங்கு நகரத்திலேயே செய்யப்படும். ஆனால், தற்போது கைவினைக் கலைஞர்கள் அதிகம் இல்லாத காரணத்தால், செய்யப்படுவதில்லை. பாட்னாவில் இருந்து மட்டுமே வருகிறது," எனக் கூறுகிறார்.
சாப்பாவை பொறுத்த வரை, தபக் தான் நாயகன் என்றே கூறலாம், மிகவும் மெல்லியதாக இருக்கும் தபக் , சிறிது காற்றடித்தாலும் பறந்துவிடுகிறது. அஸ்கரின் முகத்திலும் ஆடைகளிலும் அவை ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். வேலை முடிந்ததும், அஸ்கர் தன் மீதிருந்து அவற்றை முழுவதுமாக அகற்ற வேண்டும. உள்ளங்கை முழுவதும் ஒட்டியிருக்கும் பசையையும் கழுவியாக வேண்டும். “இந்த பசையை அகற்றுவதற்கே எனக்கு இரண்டு மணி நேரம் ஆகும். சுடுதண்ணீரில் தான் இதை கழுவ முடியும்," என்கிறார் அஸ்கர்.
டின்னில் வைத்திருக்கும் பசையை தனது இடது உள்ளங்கையில் தடவியபடியே, “பசை வேகமாக காய்ந்து விடும் என்பதால், வேலையின் செயல்முறைகள் அனைத்தையும் துரிதமாக முடிக்க வேண்டும்,” என சாப்பா வேலையின் செயல்முறையை படிப்படியாக செய்து காண்பிக்கிறார் அஸ்கர். தனது இடது உள்ளங்கை முழுவதும் பசையால் தடவிய பின், மர அச்சை எடுத்து அந்த உள்ளங்கையில் கவிழ்க்கிறார். இதன் மூலம் பசை, மர அச்சில் நன்றாக ஒட்டிக் கொள்கிறது. பின்னர், ஊறிய அந்த மர அச்சை வைத்து ஆடைகளில் அழுத்துகிறார்.
துரிதமாக செயல்பட்டு, மிகக் கவனமாக பேப்பர் வெயிட்டின் கீழ் இருக்கும் மெல்லிய தாள்களில் இருக்கும் தகடை எடுத்து, அதை ஆடையில் பசை அழுத்தப்பட்ட இடத்தில் பதிக்கிறார். ஆடையில் உள்ள பசை அந்த தகடை ஒட்டவைத்துக் கொள்கிறது.
ஆடையில் தகடு ஒட்டிக் கொண்டதும், தடிமனாக மடிக்கப்பட்ட துணியை வைத்து அது நன்றாக ஒட்டிக் கொள்ளும் வரை அழுத்துகிறார். “இப்படி செய்தால் தான் தபக் , பசையுடன் நன்றாக ஒட்டியிருக்கும்,” என்கிறார்.
பயிற்சியால் மிகத் துரிதமாக செய்யும் இந்த நுட்பமான செயல்முறையின் விளைவாக ஆடையில் ஒரு அழகிய வட்ட வடிவிலான வடிவம் பூக்கிறது. புதிதாக அச்சிடப்பட்ட சாப்பா ஆடைகள், தகடுகள் நன்றாக ஒட்டிக்கொள்ள, குறைந்தது ஒரு மணி நேரமாவது வெயிலில் காய வேண்டும்.
இக்கைவினைஞர்கள், எந்தவித இடைவேளையும் இல்லாமல், இந்த வேலையை தொடர்ந்து செய்த வண்ணம் உள்ளனர். இவர் தற்போது அச்சிட்டுக் கொண்டிருக்கும் சிவப்பு துணியின் பெயர் டால்தக்கன். இது மூங்கில் கூடைகளை மூடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
10 முதல் 12 சதுர சென்டிமீட்டர் அளவிலான 400 அலுமினிய தகடுகளின் விலை 400 ரூபாய் ஆகும். ஒரு கிலோ பசையின் விலை 100 முதம் 150 ரூபாய் ஆகும். “ சாப்பா, ஆடையின் விலையை 700 முதல் 800 வரை அதிகரிக்கிறது,” என்கிறார் சாப்பா கடை உரிமையாளரான, பப்பு (இந்தப் பெயரைக் கொண்டே அவர் அழைக்கபட விரும்புகிறார்). “ஆனால் வாடிக்கையாளர்கள் அவ்வளவு விலை கொடுக்க விரும்புவதில்லை.”
பிகார் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள மகத் பகுதியில் உள்ள முஸ்லின் சமூக திருமணங்களில் மட்டுமே இந்த பாரம்பரிய சாப்பா ஆடைகள் அணியப்படுகின்றன. அவர்களின் சமூக அந்தஸ்த்தை கடந்து, மணப்பெண் மற்றும் அவர்களின் குடும்பம், சாப்பா புடவை அல்லது திருமண ஆடைகள் அணிவது, அவர்களின் சடங்குகளில் முக்கியமானதாகிறது.
கலாச்சார முக்கியத்துவம் இருப்பினும், சாப்பா ஆடைகள் அதிகமாக உடுத்தப்படுவதில்லை. “அச்சிடப் பயன்படுத்தும் பசையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அதோடு அந்த அச்சில் இருக்கும் அலுமினிய தகடும் ஒன்றிரண்டு முறை துவைத்ததுமே வந்துவிடுகிறது,” என்கிறார் பப்பு.
திருமண காலங்கள் முடிந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில், சாப்பா வேலைகள் முடங்கிவிடுகின்றன. எனவே கைவினைஞர்களும் வேறு வேலைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
“கடையில் நான் எட்டு முதல் பத்து மணி நேரம் வேலை செய்தால், மூன்று புடவைகளில் சாப்பா வேலைகளை முடிக்க முடியும்," என்கிறார் அஸ்கர். “இதன் மூலம் எனக்கு 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் இந்த வருவாய் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும். சாப்பா வேலை இல்லாத சமயங்களில், நான் கட்டுமான பணிகளில் வேலை செய்கிறேன்.”
அஸ்கர், பிகார்ஷரிஃப் நகரில் வசிக்கிறார். தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அவர் வேலை செய்யும் பட்டறை, அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. “பணத்தை சேமிக்க, எனது மகன் தினமும் எனக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்து வருகிறான்," என்கிறார்.
ஐந்து வருடங்களுக்கு தில்லியில் குடிபெயர்ந்து அங்கு கட்டுமான பணிகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது, மனைவி மற்றும் பள்ளி செல்லும் தனது 14 மற்றும் 16 வயதான இரண்டு மகன்களுடன் இங்கு வசிக்கிறார். பிகார்ஷரிஃபில் தனக்கு கிடைக்கும் வருமானம் தனக்கு திருப்திகரமாக இருப்பதாகவும், தனது குடும்பத்துடன் இணைந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறுகிறார். “ யஹான் பீ காம் ஹோயே ரஹா ஹை தோ காஹே லா பஹார் ஜாயேங்கே [இங்கேயே வேலை கிடைக்கும் போது, நான் எதற்கு குடிபெயர வேண்டும்]?” என்று நமது நிருபரிடம் பகிர்கிறார்.
முகமது ரியாஸ், பப்புவின் கடையில் சாப்பா கைவினைஞராக பணி புரிகிறார். 65 வயதான இவரும் மற்ற நேரங்களில் வருவாய் ஈட்டுவதற்காக சில திறன்களை கற்று வைத்துள்ளார்: “ சாப்பா வேலைகள் இல்லாதபோது, நான் ஒரு குழுவுடன் [இசைக்குழு] வேலை செய்கிறேன். இது தவிர எனக்கு பிளம்பிங் வேலையும் தெரியும். இவைகளால் எனக்கு வருடம் முழுவதும் வேலை கிடைக்கிறது.”
இந்த தொழிலில் இருந்து வரும் வருமானத்தை வைத்து, மனைவி, மற்றும் ஏழு முதல் பதினாறு வயது வரை உள்ள தனது மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை நடத்த முடிவதில்லை என பப்பு கூறுகிறார். “இந்த தொழிலில் பெரும்பாலும் நல்ல வருமானம் இருப்பதில்லை. இது வரை ஒரு சாப்பா ஆடையில் எனக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. இருந்த போதும் இதை வைத்து ஏதோ என்னால் என் குடும்பத்திற்கு உணவளிக்க முடிகிறது," என்கிறார் பப்பு.
ஆயினும், இங்த வேலையை தன் மகன்கள் தொடர இவர் விரும்பவில்லை. “ ஹம் பாகல் நஹி ஹை ஹேன் ஜோ சாஹேங்கே கி மேரே பேட்டே இஸ் லைன் மேன் ஆயேன் [எனது மகன்கள் இந்தத் தொழிலைத் தொடர விரும்ப நான் பைத்தியக்காரன் இல்லை].”
சாப்பாவை பொறுத்த வரை, தபக் (அலுமினிய தகடு) தான் நாயகன் என்றே கூறலாம், மிகவும் மெல்லியதாக இருப்பதால், சிறிது காற்றடித்தாலே இவை பறந்து கைவினைஞர்களின் முகத்திலும் ஆடைகளிலும் ஒட்டிக் கொள்கின்றன
*****
சாப்பாவின் பூர்விகமும், பிகாரி முஸ்லிம் கலாச்சாரத்தில் இதன் முக்கியத்துவம் பற்றியும் எந்த வரலாறும் கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவின் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சர்வேயரான, ஃபிரான்ஸிஸ் புக்கானன், கைகளைக் கொண்டு அச்சிடும் கைவினைஞர்களை, “சாப்பாகர்" என்ற வார்த்தையைக் கொண்டு குறிப்பிடுகிறார்.
“முஸ்லிம் திருமணங்களில், அச்சிடப்பட்ட இந்த ஆடைகளை அணியும் கலாச்சாரம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். ஆயினும், இந்த கலாச்சாரம், பிகாரின் மகத் பகுதி முஸ்லிம்களிடத்தில் மிகவும் பிரபலம் என்பதால், இங்கிருந்து தான் துவங்கியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது,” என பாட்னாவைச் சார்ந்த வரலாற்று ஆர்வலர், உமர் அஷ்ரஃப் கூறுகிறார்.
அவர், ஹெரிட்டேஜ் டைம்ஸ் எனும் வலைத்தளமும், ஒரு ஃபேஸ்புக் பக்கமும் வைத்திருக்கிறார். இதில் பிகார் முஸ்லிம்களின் தொலைந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றி எழுதுகிறார்.
12ம் நூற்றாண்டில் மகத் பகுதிக்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் மூலம் இந்த கலை வளர்ந்திருக்கலாம் என அறியப்படுகிறது. “ஒருவேளை அவர்கள் திருமணங்களில் சாப்பா ஆடை அணியும் வழக்கத்தை இங்கு கொணர்ந்திருக்கலாம். அப்படியே அதை மகத் பகுதியிலும் தொடர்ந்திருக்கலாம்,” என்கிறார் அஷ்ரஃப்.
சாப்பா ஆடைகள் உலகின் மற்ற பகுதிகளிலும் வர ஆரம்பித்துள்ளது. “ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற பிற நாடுகளில் வசிக்கும் பிகாரி முஸ்லிம்கள், திருமணங்களுக்கு இந்தியாவில் இருந்து சாப்பா ஆடைகளை வாங்கிச் செல்வதையும் நாங்கள் பார்க்கிறோம்,” என்கிறார்.
இக்கட்டுரை, பிகாரின் விளிம்புநிலை மக்களுக்காக போராடிய ஒரு தொழிற்சங்கவாதியின் நினைவில் வழங்கப்படும் மானியப்பணிக்காக எழுதப்பட்டது.
தமிழில்: அஹமத் ஷ்யாம்