“இடம் நாற்றமடிப்பதாகவும் அசுத்தமாக இருப்பதாகவும் குப்பைகள் கிடப்பதாகவும் சொல்கிறார்கள்,” என்கிறார் கோபத்துடன் என்.கீதா, சாலையின் இரு பக்கமும் இருக்கும் மீன் பெட்டிகள் மற்றும் வியாபாரிகளை காட்டி. “இந்த குப்பைதான் எங்களின் சொத்து; இந்த நாற்றம்தான் எங்களுக்கு வாழ்க்கை. இவற்றை விட்டுவிட்டு நாங்கள் எங்கே செல்வது?” எனக் கேட்கிறார் 42 வயதாகும் அவர்.
நாம் நொச்சிக்குப்பத்தின் லூப் சாலையின் மெரினா கடற்கரையில் இருக்கும் 2.5 கிலோமீட்டர் நீள மீன் சந்தையில் நின்று கொண்டிருக்கிறோம். நகரை அழகாக்குவதாக சொல்லிக் கொண்டு வியாபாரிகளை விரட்டும் ‘அவர்கள்’, மாநகராட்சி அதிகாரிகளும் மேட்டுக்குடி அரசியல்வாதிகளும்தான். கீதா போன்ற மீனவர்களுக்கு நொச்சிக்குப்பம்தான் ஊர். சுனாமி வந்தபோதும் புயல் வந்தபோதும் அவர்கள் இருந்த இடம் அதுதான்.
சந்தை இயங்கத் தொடங்குவதற்கு முன்னதாக அதிகாலையிலேயே கீதா, கடையை திறந்து தயார் செய்கிறார். சில பெட்டிகள் கவிழ்த்து வைக்கப்பட்டு மேஜை போல அமைக்கப்பட்டு ஒரு பிளாஸ்டிக் பலகை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் தண்ணீர் தெளிக்கிறார். பிற்பகல் 2 மணி வரை அவர் கடையில் இருப்பார். இருபது வருடங்களுக்கு முன் மணம் முடித்ததிலிருந்து அவர் இங்கு மீன் விற்று வருகிறார்.
ஆனால் ஒரு வருடத்துக்கு முன் ஏப்ரல் 11, 2023 அன்று, அவருக்கும் லூப் சாலையில் இருக்கும் வியாபாரிகளுக்கும் மாநகராட்சியிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான நோட்டீஸ் வந்தது. ஒரு வாரத்துக்குள் சாலையை சுத்தப்படுத்த வேண்டுமென்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அது.
“சென்னை மாநகராட்சி, லூப் சாலையில் இருக்கும் எல்லா ஆக்கிரமிப்புகளையும் (மீன் வியாபாரிகள், கடைகள், வாகனங்கள்) சட்டப்படி அகற்ற வேண்டும். மொத்த சாலைப்பகுதியிலும் நடைபாதையிலும் ஆக்கிரமிப்பு இல்லாமல் இருக்க மாநகராட்சிக்கு காவல்துறை உதவ வேண்டு. பாதசாரிகளும் வாகனங்களும் அங்கு தடையின்றி செல்வதற்கு வேண்டியவற்றை செய்ய வேண்டும்” என நீதிமன்ற உத்தரவு குறிப்பிட்டது.






















