சனிக்கிழமை மதியம் பெடானாவின் ராமலக்ஷ்மி நெசவாளர்கள் காலனிக்குள் நுழைந்தால் ‘டக் டக்’ என்று கைத்தறி சத்தத்தை தெளிவாக நீங்கள் கேட்க முடியும்.140க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பகுதியை சுற்றி வாழ்ந்து வருகிறார்கள். அதுவும் இங்கு வாழும் பெரும்பாலான நெசவாளர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அதில் பலரும் நான் ஏதோ அவர்களின் 1000 ரூபாய் அரசு பென்ஷன் பணத்தை கொடுக்க வந்த அரசு அதிகாரி என்று தவறாக நினைத்து கொண்டனர். நான் ஒரு செய்தியாளர் என்று தெரிய வந்ததும் அவர்கள் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டனர்.
”பெரும்பாலும் இந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் எல்லாரும் வாழ்வாதாரம் தேடி வேறு நகரத்திற்கு சென்று விட்டார்கள்,” என்று ஒற்றைக் கைத்தறியில் வேலை செய்துகொண்டே கூறுகிறார் 73 வயதான விடுமட்ல கோட்ட பைலய்யா. ஏன் எல்லா நெசவாளர்களும் வயதானவர்களாகவே இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்டபோது , இளைஞர்கள் பலரும் இந்த மாவட்டத்தின் தலைநகரான பெடானா மற்றும் மச்சிலிபட்டணம் ஆகிய பகுதிகளுக்கு விவசாயம் மற்றும் கட்டிடத் தொழிலாளர்களாக சென்று விட்டார்கள் என பதிலளித்தார்.
பைலய்யாயின் முதியோர் ஓய்வூதியம் குறைவாக இருந்தாலும், அவரது மனைவியின் ஓய்வூதியத்தையும் சேர்த்து குடும்பத்தை ஓரளவுக்கு நடத்த முடிகிறது. நெசவுத் தொழிலின் மூலம் தினசரி கிடைக்கும் 100 ருபாய் இவரது குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை. “மூன்று நாட்களுக்கு 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்து ஒரு முழுப் புடவையை முடித்துக் கொடுத்தால் எனக்கு 300 முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும். அந்தப் புடவைகளை, பெடானாவில் உள்ள பெரிய நெசவாளர்களின் கடைகளுக்கு விற்று விடுவேன். அவர்கள் அதையே 600 முதல் 700 ரூபாய் வரை விலை வைத்து விற்பார்கள். இனிவரும் காலங்களில் நெசவுத்தொழில் செய்து மட்டுமே நாங்கள் பிழைக்க முடியாது” என்று கூறுகிறார் பைலய்யா.
விசைத்தறி துணிகளின் வரவால் கைத்தறியால் நெய்யப்படும் துணிகளுக்கான சந்தை குறைந்துவிட்டது, “ இதனால் இளம் வயதினர் அவர்கள் குடும்பத்தை நடத்தும் அளவிற்கான வருமானம் எங்கு வருகிறதோ அந்த பணிகளை நோக்கி தள்ள படுகின்றனர். எனக்கும் வயது இருந்திருந்தால் நானும் கூட வேறு வேலையை தேடி சென்றிருப்பேன். ஆனால், எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது என்று கூறினார் பைலய்யா…”
பெடானா நகரம் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சிலிபட்டணத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கைத்தறி நெசவு மற்றும் கலம்காரி தொகுதி அச்சிடுதல் ஆகிய இரண்டு தொழில்களுக்கு இது தாயகமாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி பருத்தி புடவைகள் அவற்றின் நீண்ட ஆயுள் மற்றும் வடிவத்துக்கு பெயர் பெற்றவை. அதே நேரத்தில் விசைத்தறியில் செய்யப்பட்ட காட்டன் புடவைகளில் உள்ள கலம்காரி அச்சுகள் அவற்றின் தனித்துவமான வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்றவை.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள
3,60,000
கைத்தறி
நெசவாளர்களில் சுமார் 5,000-லிருந்து 10,000 பேர் வரை (மாநிலக் கைத்தறி மற்றும் ஜவுளித்
துறையின்படி) பெடானாவில் வாழ்கின்றனர். அவர்களில் 85 வயதான கொத்தப்பள்ளி யெல்லா ராவ்,
இன்னும் அச்சு தறியில் பணிபுரியும் மிகச் சிலரில்
ஒருவர். அச்சு என்பது இழைகளை ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து ஒரு துணியை உருவாக்கும் செயல்முறையாகும்.
இது பின்னர் ஒற்றைத்தறி வழியாக சென்று துணி ஆகிறது. இங்குள்ள பலரைப் போலவே, யெல்லா
ராவ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 1960 களில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்
இருந்து பெடானாவுக்கு குடிபெயர்ந்தார். இந்த குடும்பத்தில் இத்திறனைக் கொண்டு வருமானம்
ஈட்டி வரும் கடைசி நபர் இவர்தான். இவரது மகன்கள் கட்டிடத் தொழிலாளிகளாகவும், பேரன்கள்
எலெக்ட்ரீஷியன்களாகவும் பணிபுரிகின்றனர்.
எனது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் புத்திசாலித்தனமானவை. அவற்றில் பெரும்பாலானவை 17 ஆம் நூற்றாண்டின் தெலுங்கு கவிஞரான வேமனாவின் வசனங்களுடன் தொடங்குகின்றன. “நான் 1970-ல் இந்த சிறிய நிலத்தை 300 ரூபாய்க்கு வாங்கினேன். நான் வீட்டு வரியாக அந்தக் காலத்தில் 1 ரூபாய் செலுத்தினேன்,” என்று அவர் கூறுகிறார். “இப்போது, நான் ரூ. 840 செலுத்துகிறேன். நான் 1970ல் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு குறைவாகவே சம்பாதித்தேன். இப்போது ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறேன். கணக்கிட்டு பாருங்கள்,”என்கிறார்
கைத்தறி தொழில் நலிவடைந்து வருவதால், நெசவுத் தொழிலை கைவிடும் தொழிலாளர்களின் விரும்பத்தக்க தேர்வாக கலம்காரி மாறியுள்ளது. பெடனாவில் உள்ள பெரும்பாலான பழைய கலம்காரி தொழிலாளர்கள், முன்னாள் நெசவாளர்கள். நெசவு மற்றும் கலம்காரி ஆகியவற்றின் பெருமை காரணமாக விவசாயம் மற்றும் கட்டுமானத்தை விட கலம்காரியை பலர் விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.
ஆந்திரப்பிரதேசத்தில் இவ்வகையான அச்சிடலின் இரண்டு மையங்களில் பெடனாவும் ஒன்றாகும். மற்றொன்று சித்தூர்
மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ளது. பெடனாவில் சுமார் 15,000-20,000 கலம்காரி
தொழிலாளர்கள் வாழ்கின்றனர். நகரத்தின் நெசவாளர்களிடமும் அச்சுத் தொழிலாளர்களிடமும்
இன்னும் மாநில அரசு வழங்கிய கலைஞர்களுக்கான
அடையாள அட்டைகள் இல்லாததால், சரியான எண்ணிக்கையை கணிப்பது கடினம். இந்த அட்டைகள்
அவர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கவும், கடன்களைப் பெறவும், அரசாங்க திட்டங்கள் மற்றும்
நிதிகள் எளிதாகப் பெறவும் உதவும்.
பெடானாவில் கலம்காரி மற்றும் கைத்தறி தொழில்கள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருப்பதாக இங்குள்ள தொழிலாளர்கள் கூறுகின்றனர். 2013 ஆம் ஆண்டில், கலம்காரிக்கு அரசாங்கத்தால் ‘புவியியல் குறியீடு’ வழங்கப்பட்டது - ஒரு பொருளின் மீது GI குறியீடானது, அது ஒரு குறிப்பிட்ட தோற்றம் மற்றும் குணங்கள் அல்லது அந்த தோற்றத்திற்குக் காரணமான நற்பெயரைக் குறிக்கிறது. (GI குறியீடு இருந்தாலும் போலியான கலம்காரி புடவைகளை சிலர் உருவாக்கியுள்ளது மட்டுமின்றி, உண்மையான புடவைகளின் நற்பெயரையும் மோசமாக பாதித்துள்ளது)
பெடனாவில் உள்ள கலம்காரி கொட்டகையின் உரிமையாளர்கள், அருகிலுள்ள மச்சிலிப்பட்டினத்தில் உள்ள மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பெரிய அளவிலான விசைத்தறி புடவைகளை கொண்டு வருகிறார்கள். அவர்கள் பணியமர்த்தும் தொழிலாளர்கள் மரத் தொகுதிகள், இயற்கை சாயங்கள் மற்றும் வண்ணங்களைக் கொண்டு மலர்கள் முதல் புராணக்கதைகள் வரை பலவிதமான அச்சுகளை உருவாக்குகிறார்கள். இந்த தனித்துவமான விசைத்தறியில் அச்சிடப்பட்ட புடவைகள் பெடனாவின் அதிக உழைப்பு மிகுந்த கைத்தறிப் புடவைகளை விட மலிவானவை. நெசவாளர்களுக்கு சொந்தமான உள்ளூர் கடைகளில் ஒவ்வொரு புடவையும் ரூ.500க்கு விற்கப்படுகிறது .
தெய்வபு கோட்டேஸ்வர ராவ், 53, தேவாங்கி - இங்குள்ள ஆதிக்க சாதி - மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து பெடானாவிற்கு குடிபெயர்ந்தவர். இவர் 1974 முதல் நெசவு செய்து வருகிறார். ஆனால் அவர் சம்பாதித்த பணத்தை தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கு போதுமான அளவு கொடுக்க முடியவில்லை. 1988ல் நெசவுத் தொழிலை கைவிட்டு, மற்றொரு தேவாங்கிக்கு சொந்தமான கலம்காரி கொட்டகையில், தினக்கூலியாக ரூ.10 சம்பளத்திற்கு வேலைக்கு சென்றார். அந்த ஊதியம் இப்போது 300 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.
இங்குள்ள ஆண்களில் பலர் வேலைக்காக வேறு ஊர்களுக்கும் நகரங்களுக்கும் இடம்பெயர்வதால், கலம்காரி பட்டறைகளில் ஆண்களை விட பெண்களே அதிகம். 30 வயது பத்மலட்சுமி, ஐந்து மற்றும் ஆறு வயதுடைய இரண்டு பள்ளி செல்லும் மகள்களின் விதவைத் தாயாவார். இனிப்புகள், சிகரெட், பான் மற்றும் பிற பொருட்களை விற்கும் ஒரு சிறிய கடையை நடத்தி வரும் இவர், தனது தாயுடன் இங்கு வசித்து வருகிறார்.
லட்சுமியின் பெற்றோர், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு புலம்பெயர்ந்தவர்கள். லட்சுமி தனது 12 வயதிலிருந்தே கலம்காரியில் பணிபுரிகிறார். “அப்போது தினசரி ஊதியம் 40 ரூபாய். 18 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இப்போதும் 200 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார். “என்னை விட குறைவான அனுபவம் உள்ள ஆண்களுக்கு 300 ரூபாய் அல்லது அதற்கு மேல் சம்பளம் கிடைக்கும். நாங்கள் உரிமையாளர்களை இதுகுறித்து கேட்கும்போது, பெண்கள் ஆண்களை விட குறைவான வேலை செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இணையாக கடினமாக உழைக்கிறோம். மாதம் 3500-4000 ரூபாய்க்கு மேல் நான் சம்பாதிப்பதில்லை. இதனால் எங்களில் பெரும்பாலோர் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்,” என்கிறார்.
பெடானாவில் உள்ள கலம்காரி தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் இல்லை. (கைத்தறி நெசவாளர்களுக்கு ஒன்று உள்ளது, ஆனால் ஒன்றிணைக்கப்படாத உறுப்பினர்களுடன் இருக்கிறது). தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான அவர்களின் முயற்சிகளை சில சமயங்களில் வன்முறை மற்றும் பணத்தைப் பயன்படுத்தி, கலம்காரி கொட்டகை உரிமையாளர்கள் எதிர்த்துள்ளனர். ”அனைத்து கலம்காரி தொழிலாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கும் கலைஞர் அடையாள அட்டைகளையாவது அரசாங்கம் வழங்க வேண்டும்," என்கிறார் எப்போதாவது தனது துணை வருமானத்திற்காக நெசவு செய்யும் 40 வயதான கலம்காரி தொழிலாளி ருத்ராக்ஷுலா கனகராஜு. ”அந்த அடையாள அட்டை எங்களை ஒருங்கிணைக்கவும் எங்கள் உரிமைகளுக்காக போராடவும் உதவும்,” என்கிறார் அவர்.
மாநில அரசு, நெசவாளர்களுக்கு அவர்களின் பாரம்பரியக் கலையை மீட்டெடுப்பது குறித்து வாக்குறுதிகளை அளித்துள்ளது. மே 2014-ன் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று, கைத்தறி கடன் தள்ளுபடி. ஆனால், பெடனாவை சேர்ந்த நெசவாளர்களின் ஒட்டுமொத்த கடனான 111 கோடி ரூபாயில் வெறும் 2.5 கோடி ரூபாய் மட்டுமே ஆந்திரப்பிரதேச அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது.
2014-ம் ஆண்டில், பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் SFURTI (பாரம்பரிய தொழில்களின் மறுசீரமைப்புக்கான நிதித் திட்டம்) என்ற திட்டத்தை பெடனாவில் கைத்தறித் தொழிலுக்காக (மாவட்டத்திற்கு இரண்டு குழுக்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு) அமைத்தது. பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் திட்ட அளவிலேயே தேங்கிக் கிடக்கிறது.
பெடானா கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கலம்காரி கலைஞர்கள் நலச் சங்கத்தின் முன்னாள் அலுவலரும் , மூத்த நெசவாளருமான 73 வயது பிச்சுகா பீமலிங்கம் கூறும்போது, “மூத்த நெசவாளர்கள் தற்போது நல்ல நிலையில் இருக்கின்றனர். தற்போது கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களைத்தான் அரசு கவனிக்க வேண்டும். கைத்தறி நிறுவனம் அமைத்து, தேவையான எல்லா நிதியையும் விடுவிப்பதன் மூலம் எல்லா வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்குவதன் மூலம் இதைத்தொடங்கலாம். இது, முதலாளிகளுடன் பேரம் பேசும் ஆற்றலை அவர்களுக்கு வழங்கும்,” என்கிறார்.
அதுவரை, கலம்காரி கலைஞர்கள் தங்கள் மர அச்சுத் தொகுதிகளுடன் நிலைத்து நிற்க போராடிக்கொண்டிருப்பார்கள். பெடானாவில் உள்ள தறித்தொழில் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும்.
தமிழாக்கம்: சுபாஷ் சந்திர போஸ்