”கொரொனா பற்றி எங்களுக்கு தெரியும். ஆனால் வேலை பார்ப்பதை நிறுத்த முடியாது. விவசாயிகளுக்கு நாங்கள் வேலை பார்க்க வேண்டும். எங்களுக்கும் விவசாயிக்கும் விவசாயம் மட்டுமே வாழ்க்கை. நாங்கள் வேலை செய்யாவிட்டால், எப்படி உயிர்வாழ்வது?” என கேட்கிறார் ஷுபத்ரா சாகு.
ஷுபத்ரா ஒப்பந்தக்காரராக இருக்கிறார். சட்டீஸ்கரின் தம்தரி டவுனிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பலியாரா கிராமத்திலிருந்து 30 விவசாயப் பெண் தொழிலாளர்களுக்கு தலைமை பொறுப்பில் இருக்கிறார்.
அவர்களை ஜூலை 20ம் தேதி வாக்கில் ஒரு பிற்பகல் சந்தித்தோம். ஒரு ட்ராக்டர் அவர்களை அப்போதுதான் நெல்வயல்களுக்கு நடுவே இருந்த சாலையில் இறக்கி விட்டுச் சென்றிருந்தது. வேலைக்காக ஒரு நிலத்திலிருந்து அடுத்த நிலத்துக்கு வேகமாக சென்று கொண்டிருந்தனர். சூரிய அஸ்தமனத்துக்குள் விதை நெல் நட வேண்டும்.
“நாங்கள் ஒரு ஏக்கருக்கு 4000 ரூபாய் சம்பாதிக்கிறோம்” என்கிறார் சுபத்ரா. “எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ஏக்கர் நிலத்தில் நாட்டு நடுவோம். அதாவது குழுவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளருக்கும் நாள் ஒன்றுக்கு 260 ரூபாய் சம்பளம்”.
ஜூலை மாதத்தின் ஒருநாளில் தம்தாரி டவுனிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொலியாரி-கரெங்கா கிராமத்து சாலையில் இன்னொரு விவசாயத் தொழிலாளர் குழுவை நாங்கள் சந்தித்தோம். “நாங்கள் வேலை பார்க்கவில்லை என்றால் இறந்துவிடுவோம். கொரொனாவை சொல்லி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை,” என்கிறார் தம்தார் ஒன்றியத்தின் கரெங்கா கிராமத்தை சேர்ந்த புக்ஷின் சாகு. அக்குழுவுக்கு அவர்தான் தலைவர் மற்றும் ஒப்பந்தக்காரர். வயது 24. ”நாங்கள் தொழிலாளர்கள். எங்களுக்கு கைகால்களும் மட்டுமே மூலதனம். வேலை பார்க்கும்போது நாங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறோம்….”
அவரும் மற்றவர்களும் சாலையின் இருபக்கங்களிலும் அமர்ந்து, வீட்டிலிருந்து கொண்டு வந்த மதிய உணவான அரிசி, பருப்பு, கூட்டு ஆகியவற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிட்டனர். சமைத்து, வீட்டுவேலைகள் முடித்து, காலை உணவை சாப்பிட்டுவிட்டு அதிகாலை 6 மணிக்கு நிலத்தை அடைவார்கள். 12 மணி நேரங்கள் கழித்து மாலை 6 மணிக்கு வீடு திரும்புவார்கள். பிறகு மீண்டும் சமைத்து மற்ற வேலைகளை செய்ய வேண்டும் என பிற பெண்களின் அன்றாட வேலைகளையும் சேர்ந்து சொல்கிறார் புக்கின்.
”ஒவ்வொரு நாளும் இரண்டு ஏக்கர்களுக்கு விதைக்கிறோம். ஒரு ஏக்கருக்கு 3500 ரூபாய் பெறுகிறோம்,” என்கிறார் புக்கின். ஒரு ஏக்கர் விதைப்புக்கான கூலி 3500 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரை இருக்கும். குழுவில் இருக்கும் எண்ணிக்கை மற்றும் அவர்கள் நடத்தும் பேரத்தை பொறுத்து மாறும்.
புக்கினின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் போபாலில் தொழிலாளராக பணிபுரிய சென்றவர் பின்னர் திரும்பவே இல்லை. “எங்களை இந்த கிராமத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். எங்களோடு தொடர்பில் கூட இல்லை,” என்கிறார் அவர். மகன் கல்லூரியில் படிக்கிறார். புக்கினின் வருமானம் மட்டும்தான் இரண்டு பேருக்கும் ஆதாரம்.
அதே சாலையில் நாங்கள் இன்னொரு தொழிலாளர் குழுவை சந்தித்தோம். பல பெண்களும் சில ஆண்களும் கொண்ட குழு. விதைப்புக்கான விதை நெல் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். “எங்கள் வாழ்க்கைக்கான ஆதாரம் இதுதான். ஆகவே நாங்கள் வேலை பார்த்தாக வேண்டும். நாங்கள் வேலை செய்யவில்லை எனில் யார் அறுவடை செய்வது? எல்லாருக்கும் சாப்பிட உணவு வேண்டும்,” என்கிறார் டர்ரி கிராமத்தின் ஒப்பந்தக்காரரான சபிதா சாகு. “கொரோனாவுக்கு நாங்கள் அஞ்சினால், எங்களால் வேலை பார்க்க முடியாது. எங்கள் குழந்தைகளுக்கு யார் சாப்பாடு போடுவார்? நிலங்களில் நாங்கள் சமூக இடைவெளியைத்தான் கடைப்பிடிக்கிறோம்.” ஜூலை மாதத்தின் மத்தியில் அவர்களை நான் சந்தித்தபோது, சபிதாவும் 30 பேர் கொண்ட அவரின் குழுவும் 25 ஏக்கர்களில் விதைப்பை முடித்திருந்தனர். ஒரு ஏக்கர் விதைப்புக்கு கூலி 3600 ரூபாய்.
“வேலையே கிடைக்கவில்லை (முழு ஊரடங்கு காலத்தில்). எல்லாமே அடைக்கப்பட்டிருந்தது. பிறகு சம்பா சாகுபடி நேரம் வந்தது. நாங்களும் வேலைக்கு திரும்பிவிட்டோம்,” என்கிறார் கரெங்கா கிராமத்தை சார்ந்த விவசாயத் தொழிலாளர் ஹிரவுந்தி சாகு.
ஜூலை 20 வரை கிட்டத்தட்ட 1700 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தம்தரி மாவட்டத்துக்கு ஊரடங்கு நேரத்தில் திரும்பியதாக சொல்கிறார் தம்தாரியின் தொழிலாளர் துறை அதிகாரி ஒருவர். மாணவர்களும் வேலைகளில் இருந்தவர்களும் 700 புலம்பெயர் தொழிலாளர்களும் அங்கு இருந்தனர். இதுவரை சட்டீஸ்கரில் 10500 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. தம்தாரியின் தலைமை சுகாதார அதிகாரியான டாக்டர் கே.டுரே, மாவட்டத்தில் இதுவரை 48 தொற்றுகள் தெரிய வந்திருக்கின்றன என்கிறார்.
ஹிராவுந்தியை போலவே டர்ரி கிராமத்தை சேர்ந்த இன்னொருவரும் அக்குழுவில் இருந்தார். அவரின் பெயர் சந்திரிகா சாகு. இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். ஒருவர் கல்லூரியிலும் இருவர் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கின்றனர். “என்னுடைய கணவரும் ஒரு தொழிலாளர்தான். ஆனால் ஒருநாள் விபத்தில் சிக்கி, காலை உடைத்துக் கொண்டார்,” என்கிறார் அவர். ”அதற்கு பிறகு அவரால் வேலை பார்க்க முடியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.” சந்திரிகாவும் அவரின் குழந்தைகளும் அவரின் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பியிருக்கின்றனர். விதவை பென்சனாக 350 ரூபாய் ஒவ்வொரு மாதமும் கிடைக்கிறது. வறுமை கோட்டுக்கு கீழிருக்கும் மக்களுக்கான குடும்ப அட்டையும் அவர்களிடம் இருக்கிறது.
நாங்கள் பேசிய எல்லா தொழிலாளர்களுக்கும் கொரோனாவை பற்றி தெரிகிறது. சிலர் அதை பற்றி கவலைப்படவில்லை என்றனர். சிலர் நிலத்தில் வேலை பார்க்கும்போது சமூக இடைவெளி விட்டு வேலை பார்ப்பதால் பிரச்சினை இல்லை என்றனர். “வெயிலில் நாங்கள் வேலை பார்க்கிறோம். அதனால் கொரோனா வருவதற்கான வாய்ப்பு குறைவுதான்,” என்கிறார் சபிதா குழுவை சேர்ந்த ஆண் தொழிலாளி புஜ்பால் சாகு. “உங்களுக்கு அது வந்துவிட்டால், அது உங்களை கொன்றுவிடும்,” என்றும் சொல்கிறார். “ஆனால் எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் நாங்கள் தொழிலாளர்கள்.”
நெல் விதைப்பு 15 நாட்கள் வரை நடக்கும் என்கிறார் அவர். “அதற்கு பிறகு வேலை இருக்காது.” தம்தாரி மற்றும் குருத் ஒன்றியங்களில் மட்டுமே கொஞ்சம் பாசன வசதி இருக்கிறது. ஆகவே இங்கிருக்கும் விவசாயிகள் இரண்டு தரம் நெல் பயிரிடுகிறார்கள். விவசாய வேலை இரண்டு பருவங்களில் கிடைக்கிறது. “எங்களுக்கு அதிக வேலை வேண்டும்,” என்கிறார் புஜ்பால்.
தமிழில்: ராஜசங்கீதன்