ஒவ்வொரு மாதமும் ரத்னா பிஸ்வாசுக்கு 15 நாட்கள் தான் வேலை உள்ளது. நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலை இருக்கும். அதில் நான் 20 அறைகள் மற்றும் 4 கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தீமார்பூரில் உள்ள தனது கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் அவர் பணிபுரிகிறார். ரத்னா அங்கு வேலை செய்கிறாரா அல்லது முறைசாரா பணியாளரா என்பது கூட அவருக்கு தெரியாது. அவருக்கு ரூ.2 ஆயிரத்து 500 மட்டும் வழங்கப்படுகிறது. மாதத்தின் மற்ற 15 நாட்களும் மற்றொரு தூய்மை பணியாளர் அந்த வேலையை செய்கிறார்.
இந்த அரை மாத சம்பளமும் கிடைக்குமா என்பது 35 வயதான ரத்னாவுக்கு உறுதியாக தெரியவில்லை. ஓராண்டாக பள்ளி எனக்கு பணம் கொடுக்கவில்லை என்று அவர் கூறுகிறார். ஊராட்சி நிர்வாகம் அவர்களுக்கு நிதி வரவில்லை. அதனால் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று கூறுகிறது.
2018ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு பள்ளி பணியாளர்களுடன் டெல்லிக்கு வந்திருந்தார். அவர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உத்தர் டினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கரன்டிகி வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் விவசாயிகள் விடுதலை முன்னணியி ன் சிறப்புக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர்.அந்த குழுவில் இருந்த மற்றொருவர் 40 வயதான புல்மோனி கிஸ்கு, சான்டல் ஆதிவாசியினத்தைச் சார்ந்தவர். ரோஷான்கஞ்ச் கிராமத்தில் வசிப்பவர். அவரும் 15 ஆண்டுகளாக பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். தனது கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் உள்ள 10 அறைகள் மற்றும் 3 கழிவறைகளையும் அவர் சுத்தம் செய்து வருகிறார். 15 நாள் வேலைக்கு, நாளொன்றுக்கு ரூ.150 பெறுகிறார். எங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்.
அவர்களுடன் லுத்பா பேகம் என்பவரும் உள்ளார். மாதத்தில் 15 நாட்கள் கூலி பெறுவதற்கு பதிலாக, ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே ஊதியம் பெறுகிறார். 30 வயதான பேகம், பபானிப்பூர் கிராமத்தில் உள்ள எஸ்எஸ்கே அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவுத்திட்ட பணியாளராக, 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவருடன் பணியாற்றும் மற்ற இருவருடன் சேர்ந்து பள்ளியின் 200 குழந்தைகளுக்கு சமைப்பது உள்ளிட்ட பரிமாறுவது மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்து வைப்பது அவரது பணியாகும். இதற்கு அவர் 4 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டும்.
அவர்கள், எங்களுக்கு கோடை விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் துர்க்கா பூஜை விடுமுறை நாட்களுக்கு ஊதியம் தர மாட்டார்கள். ஆனால், இந்த நாட்களில் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார். எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது ஒன்றே எங்கள் கோரிக்கை. 2004ம் ஆண்டு ரூ.300 ஊதியத்திற்கு பேகம் பணி செய்ய துவங்கினார். தற்போது அத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு டெல்லியில் உள்ள பிஜ்வாசனில், விவசாயிகள் விடுதலை ஊர்வல தன்னார்வலர்களுக்காக போட்டிருந்த முகாமில் நான் சந்தித்த அனைத்து பள்ளி பணியாளர்களும், பணம் சம்பாதிப்பதற்காக அவர்கள் செய்யும் கூடுதல் பணி குறித்து பேசினர். பள்ளியில் 6 மணி நேர வேலையுடன் ரத்னா 7 மணி நேரம் வீட்டு உதவியாளராக பல்வேறு வீடுகளில் சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை காலை 6 மணி முதல் செய்கிறார். வீட்டு உதவியாளராக அவர் மாதம் ரூ.1,600 சம்பாதிக்கிறார். அவர் மூன்றாவது ஒரு வேலையும் செய்கிறார். அவரது கிராமத்தில் மாதத்தில் 10 நாட்கள் கதிரடிக்கும் பணி உள்ளிட்ட நெல் வயல்களில் உள்ள வேலைகளையும் செய்கிறார். அதற்கு அவர்கள் 5 கிலோ வரை அரிசி கொடுப்பதாக ரத்னா கூறுகிறார். 5 ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் ரத்னாவைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது ரத்னாவுக்கு தெரியவில்லை. அவரின் இருமகள்கள் சரஸ்வதி(14) மற்றும் பூமிகா (10) இருவரும் அந்த கிராமத்திலே படிக்கின்றனர்.
பபானிப்பூர கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான சபீனா பேபி, மாதத்தில் 15 நாட்கள் தூய்மை பணியாளராக 5 ஆண்டுகளாக, பேகம் பணிபுரியும் பள்ளியில் பணியாற்றுகிறார். இவர் கூடுதல் வருமானத்திற்காக பீடி சுற்றும் தொழில் செய்கிறார். அவர்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் 1000 பீடிகளுக்கு ரூ.145 கூலி பெறுகிறார். இதிலிருந்து மாதத்திற்கு ரூ.500 முதல் ரூ.600 வரை சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார். அவரின் மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள், 4 முதல் 12 வயது உள்ளவர்கள், அதே ஊரில் படிக்கின்றனர்.
புல்மோனியின் கணவர் தாபு மர்டி 4 ஆண்டுகளுக்கு முன்னர் காசநோயால் இறந்துவிட்டார். வயிற்றுப்போக்கால் 8 ஆண்டுகளுக்கு முன் எனது மகன் இறந்துவிட்டார். எனது கணவர் பெயரில் உள்ள ஒரு ஏக்கரும் குறைவான நிலத்தை நான் எனது பெயருக்கு எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். சில தொழிலாளர்களின் உதவியுடன் அந்த நிலத்தில் புல்மோனி நெல் விவசாயம் செய்கிறார்.
பஸ்சிம் பிப்லா கிராமத்தைச்சேர்ந்த 42 வயதான சோந்தா மண்டல், அவரது கணவருடன் சேர்ந்து அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில், விதைப்பது முதல் அறுவடை வரையான அனைத்து விவசாயப்பணிகளையும் செய்து வருகிறார். சோந்தாவும் தனது கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவுப்பணியாளராக உள்ளார். கடந்த நான்கு மாதங்களாக நான் எந்த ஊதியமும் பெறவில்லை. என்றால், நாங்கள் எவ்வாறு வாழ்வோம் என்று அவர் கேட்கிறார். ஒரு நாளில் நிறைய நேரம் வேலை செய்கிறீர்களே என்று அவரை நான் கேட்டபோது, வேலை செய்வதற்கு எங்களுக்கு 24 மணி நேரமும் கூட போதாது என்று புன்னகையுடன் கூறுகிறார்.
தமிழில்:
பிரியதர்சினி R.