”நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிறீர்கள்? அங்கே என்ன நடக்கிறது? இது இன்னும் எத்தனை நாளுக்குத் தொடரும்?” - மகனிடம் தொலைபேசியில் விசாரித்தார், செனகொண்டா பாலசாமி. "எல்லை மீறிப் போய்விட்டதுதானே? ஊருக்குள் போலீசு இருக்கிறதா? நம் மக்கள் ( கூலி உழவர்கள்) வேலைக்குப் போகவில்லையா? - என அடுக்கினார்.
தெலுங்கானாவின் வனபர்தி மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊரான கெத்தெபள்ளியில் இருந்து கடந்த நவம்பரில் புறப்பட்டார், பாலசாமி. அவருடன் வேறு நான்கு இடையர்களும் சேர்ந்துகொண்டனர். கிட்டத்தட்ட வெள்ளாடும் செம்மறியாடுமாக 1,000 ஆடுகளை இவரே பராமரித்துக்கொள்ள வேண்டும் (ஒரு ஆடுகூட அவருக்குச் சொந்தமானது இல்லை). எல்லா ஆடுகளுக்கும் தீவனம்தேடியபடி அவற்றுடன் அவர் பயணித்துக்கொண்டு வருகிறார்.
அவரும் மற்ற மந்தைக்காரர்களும் தெலுங்கானாவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள கால்நடை மேய்க்கும் யாதவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கெத்தெபள்ளியிலிருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள கோப்போளி கிராமத்தை மார்ச் 23 அன்று அடைந்திருந்தனர். அதாவது, ஒட்டுமொத்த நாடே முடக்கத்துக்குள் போனதற்கு சரியாக இரண்டு நாள்களுக்கு முந்தைய நாள் அது!
நலகொண்டா மாவட்டத்தின் குரும்போடு மண்டலத்தில் உள்ள கோப்போளியில், நாடு முடக்கத்துக்குப் பிறகு, உணவுப்பொருள்களை வாங்குவது கடினமாகிவிட்டது. அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் மற்றும் பிற மளிகைப் பொருள்களை அவர்கள் சில நாள்களுக்கு ஒரு முறை ஓரளவுக்கு மட்டும் வாங்கிவைத்துக்கொள்வார்கள்.
பொதுப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாலும் மாறிமாறி வரும் நாடுமுடக்க நிலைமைகளாலும் இந்த மந்தைக்காரர்கள் பாடு திண்டாட்டமாகிவிட்டது. ஆடுகளுக்கு வேண்டிய மருந்துகளை வாங்குவது, வழக்கம்போல அவ்வப்போது அவரவர் கிராமங்களுக்குப் போய் குடும்பத்தினரைக் கண்டுவருவது, செல்பேசிக் கட்டணம் ஆட்டுமந்தைக்கான புது மேய்ச்சல் பகுதியைப் பார்த்துவைப்பது என எதையுமே செய்யமுடியாமல் போய்விட்டது.
”ஊரில் இருப்பவர்கள் இந்த தனிமைப்படுதலைச் சமாளித்துவிட முடியும். எங்களைப் போல அலைந்து திரிபவர்கள் இதை எப்படி எதிர்கொள்வது?” - புலம்புகிறார், 40-களின் கடைசியில் உள்ள பாலசாமி.
” இந்த ஊருக்குள் போய் காய்கறி வாங்க எங்களை விடமறுக்கிறார்கள்” என்கிறார், பாலசாமியின் சகோதரரான செனகொண்டா திருப்பதிய்யா.
நல்வாய்ப்பாக, இவர்களின் ஆட்டுமந்தை மேய்ந்து, அடைந்துகிடக்கும் நிலத்தின் சொந்தக்காரர், சிறிது அரிசி, பருப்பு, காய்கறிகளுடன் இவர்களுக்கு உதவிசெய்து வருகிறார்.
ஆனால், இவர்கள் உடனே அடுத்த மேய்ச்சல் நிலத்தை நோக்கிப் போயாகவேண்டும். ” நான்கு நாள்களுக்கு முன்னர் நாங்கள் இங்கே வந்தோம். இங்கு அவ்வளவாக தீவனம் இல்லை. புது மேய்ச்சல் நிலத்தைத் தேடியாகவேண்டும்.” என்கிறார், திருப்பதிய்யா.
இந்த இடையர்களின் நீண்ட கால்நடைப் பயணங்கள் எப்போதுமே கடினமானவை. இப்போது இன்னும் கடினமாக ஆகிவிட்டன. நல்ல மேய்ச்சல் புல்வெளியைக் கண்டறிவதற்காக அவர்கள் எத்தனையோ கி.மீ. நடக்கிறார்கள்; பிறகு, அந்த நிலச் சொந்தக்காரர்களிடம் பேரத்தைப் பேசிமுடிக்கிறார்கள். வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் அடைப்பதற்கான நிலப்பகுதி மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கையில், இது ஒரு மலைப்பான காரியம் ஆகும். இப்போதோ போக்குவரத்தும் இல்லாமல் பயணக் கட்டுப்பாடுகளும் உள்ளநிலையில் மந்தைக்காரர்களின் தீவனத் தேடல் வழக்கத்தைவிட மிகவும் கடினமாக இருக்கிறது.
”பைக்கில்கூட எங்களால் இப்போது போகமுடியாது” என விசனப்படுகிறார், பாலசாமி. இப்போது சில நேரங்களில், ஊரிலிருந்து இவர்கள் இருக்குமிடத்துக்கு பைக்கில் வந்து, ஊருக்குக் கூட்டிசெல்வதற்கோ அல்லது அடுத்த மேய்ச்சல் நிலத்தைக் கண்டறிய இவர்களைக் கொண்டுபோய் விடுவதற்கோ பைக்கில் ஊரார் வர முயல்கின்றனர். “ எங்கள் மக்களை அவர்கள் தடியால் மோசமாக அடிக்கிறார்கள்” என்கிறார், பாலசாமி, அது தொடர்பாக தனக்கு செல்பேசியில் வந்த காணொலிக் காட்சிகளைக் காட்டியபடி.
பங்கல் மண்டலத்தில் உள்ள சொந்த ஊரான கெத்தெபள்ளிக்கு இந்த வாரம் போவதென பாலசாமி திட்டமிட்டுக்கொண்டு இருந்தார். மந்தைக்காரர் வேலைக்காக சில ஆட்டு உரிமையாளர்களிடம் ஆண்டு வருமானமாக மொத்தம் 1,20,000 ரூபாய் வாங்கியிருந்தார். ஊருக்கு வந்துபோவதன் நோக்கம் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு மட்டுமில்லை, அவருக்கான சம்பளத் தொகையை வசூலிப்பதற்காகவும்தான். இப்போது ஊருக்குப் பயணிக்க முடியாத நிலையில், பாலசாமிக்கும் மற்ற சகாக்களுக்கும் விரைவில் பணம் தீர்ந்துவிடக்கூடிய நிலைமை. ”எப்படி என் இணையரையும் பிள்ளைகளையும் அம்மாவையும் போய் நான் பார்க்கமுடியும்? உப்பையும் ப(ரு)ப்பையும் நான் எப்படி வாங்குவது? இந்த பேருந்துகள் மறுபடியும் எப்படி ஓடும் என உங்களுக்குத் தெரியுமா?“ என்பது பாலசாமியின் கேள்வி.
சில நேரங்களில் ஆட்டுமந்தைக்காரர்கள் கைச்செலவுக்காக ஒன்றிரண்டு ஆடுகளை விலைக்கு விற்பதும் உண்டு. முடக்கம் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் இவர்களை ஒருவர்கூட ஆடுகேட்டு அணுகவில்லை.
ஊருக்குத் திரும்புவதற்கு முன்னர், எப்போதும் இவர்கள் மிர்யலகுடா நகருக்குச் செல்வார்கள். அது, இப்போது இவர்கள் தங்கியுள்ள கோப்போளி கிராமத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏப்ரலில் நெல் அறுவடை முடிந்து ஏராளமான தீவனம் காணப்படும். பயணக் கட்டுப்பாடுகளுடன் உணவு இல்லாமல் இந்த மந்தைக்காரர்களின் தடத்தில் கடைசி நிறுத்தத்துக்கான பயணமானது இப்போதைக்கு தெளிவானதாக இல்லை.
மேலும், ஆடுகளுக்கு தீனி போட்டாகவேண்டும் என்பதால், தீவனத்தைத் தேடும் வேலையையும் விட்டுவிட முடியாது. பருவமழை தொடங்கும் முன் ஜூன் மாதத்தில் ஊருக்குத் திரும்புவது என்பது ஒரு தெரிவாகவும் இருக்கவில்லை; ஏனென்றால், அங்குள்ள கால்நடைகளுக்கு போதுமான அளவு மேய்ச்சல் நிலம் இல்லை. ” எங்கள் பகுதியில் நிறைய கரடுகளும் குன்றுகளும் இருக்கின்றன. அவை அக்டோபர் கடைசியில் பொதுவாக வறண்டுவிடும். ஆனால் அந்தப் பகுதியில் ஏராளமான கால்நடைகள் இருக்கின்றன. எங்கள் ஊரில் மட்டும் வெள்ளாடுகளும் செம்மறியாடுகளுமாகச் சேர்த்து 20 ஆயிரம் உருப்படிகள் இருக்கின்றன. ஆகையால் எங்களுக்கு இந்தப் பயணம் தவிர்க்கமுடியாதது” என்கிறார் திருப்பதையா.
இவர்களின் நலம் குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிப்பதற்கு பாலசாமி ஒவ்வொரு முயற்சியையும் செய்துகொண்டு வருகிறார். “ தொலை(செல்)பேசிகளையும் அவர்கள் முடக்கிவிடப் போகிறார்களா? அப்படி செய்தால் சனம் உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று நாங்கள் தெரிந்துகொள்ளவே முடியாதே.. இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்த முடக்கம் நீட்டிக்கப்படலாம் என மக்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையாகவே அது நடந்துவிட்டால், நோவால் சாவதைவிட அதிகமானவர்கள் முடக்கத்தால் உயிரிழந்துபோவார்கள்.” என்று கவலைப்படுகிறார், பாலசாமி.
தமிழில்: தமிழ்கனல்