பிரகாஷ் பாகத், குனிந்து ஒரு பெரிய அலுமினிய பாத்திரத்தில் உள்ள உருளைக்கிழங்கு, பட்டாணி மசாலாவை பெரிய கரண்டியை வைத்து கிளறுகிறார். அவர் தனது இடது காலில் உடலின் எடையை தாங்கிக்கொள்கிறார். வலது காலை காற்றில் தொங்கவிட்டு ஒரு மர குச்சியின் ஆதரவுடன் நிற்கிறார்.
“எனது பத்து வயதில் இருந்து நான் குச்சியுடன் நடந்து கொண்டிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். குழந்தையாக இருந்தபோதிலிருந்தே எனது காலை பிடித்துக்கொண்டு நடக்க பழகிவிட்டேன். நான் நரம்பை இழுத்துவிட்டதால், இவ்வாறு ஏற்பட்டது என்று எனது பெற்றோர்கள் கூறினர்“ என்று 52 வயதான பிரகாஷ் பாகத் கூறுகிறார்.
ஆனால் அது அவரது கொள்கை உறுதியை குலைக்கவில்லை. மஹாராஷ்ட்ரா மாநிலம் ராஜ்காட் மாவட்டம் பன்வெல் தாலுகாவில் உள்ள பார்கான் கிராமத்தில் உள்ள பலர் டெல்லி நோக்கி வாகன பேரணி செல்ல முடிவெடுத்தபோது, பேரணியில் தானும் கலந்தகொள்வது குறித்து அவர் யோசிக்கவேயில்லை. உடனே கலந்துகொள்ள முடிவெடுத்துவிட்டார். “நான் இங்கு ஒரு காரணத்திற்காக வந்திருக்கிறேன்“ என்று தயாராகிவிட்ட மசாலாவை சுவைத்துக்கொண்டே கூறுகிறார்.
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, தேசத்தின் தலைநகரான டெல்லியின் எல்லையில் 3 வெவ்வேறு இடங்களில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, டிசம்பர் 21ம் தேதி மஹாராஷ்ட்டிராவில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நாசிக்கில் ஒன்றுகூடி, 1,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பார்கான் கிராமத்தில் இருந்து 39 பேர் கலந்துகொள்ள முடிவெடுத்தனர். “இந்நாட்டின் விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள்“ என்று பாகத் கூறுகிறார். “அவர்களின் விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். இந்த வேளாண் திருத்த சட்டங்கள் அவர்களை மேலும் கடனில் ஆழ்த்தும். பெரு நிறுவனங்களின் பிடியில் விவசாயிகள் சிக்கிக்கொள்வார்கள். அவர்களை பின்னாளில் அந்நிறுவனங்கள் அழிக்கும். இந்த வேளாண் திருத்த சட்டங்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச்சேர்ந்த விவசாயிகளை முதலில் பாதிக்கும். எனவேதான் அவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதனால், நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளை அது தண்டிக்காது என்பது கிடையாது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
பாகத் ஒரு மீனவர், “விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க விவசாயியாகதான் இருக்க வேண்டுமா என்ன?“ என்று அவர் கேட்கிறார். கிராமப்புற பொருளாதாரத்தை வேளாண் தொழில்கள்தான் இயக்குகிறது என்பது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டால், எனது மீனை யார் வாங்குவார்கள்? என்று அவர் மேலும் கேட்கிறார்.
பாகத், நண்டு மற்றும் இறால்களைப் பிடித்து, பன்வெல் சந்தையில் விற்பதன் மூலம் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கிறார். “என்னிடம் தானியங்கி பெரிய படகு இல்லை. நான் மீன்பிடிக்கச் செல்லும்போது கைகளாலே இவற்றைப்பிடிப்பேன். மற்ற மீனவர்கள் நின்றுகொண்டு தூண்டில் போட்டு பிடிப்பார்கள். எனது பிரச்னையால் என்னால் நின்றுகொண்டு மீன்பிடிக்க இயலாது. அதனால் அமர்ந்துகொண்டு மீன் பிடிப்பேன்“ என்று அவர் கூறுகிறார்.
அவர் மீனவராக இருந்தபோதும் கூட ஆட்டிறைச்சி சமைப்பதையே மிகவும் விரும்புகிறார். “கிராமத்து பாணியிலான இறைச்சி சமையல்“ என்று நம்மிடம் தெளிவுபடுத்துகிறார். “எனக்கும் எப்போதும் சமைப்பது பிடிக்கும்“ என்று அவர் மேலும் கூறுகிறார். “நான் எனது கிராமத்தில் நடக்கும் திருமண விருந்துகளுக்கு நிறைய பதார்த்தங்களை செய்துகொடுப்பேன். அதற்கு நான் பணம் வாங்க மாட்டேன். ஏனெனில் அதை நான் விரும்பி செய்கிறேன். எனது கிராமத்திற்கு வெளியே யாரேனும் திருமணம் அல்லது விருந்து நிகழ்வுகளுக்கு அழைத்தால் அவர்களிடமும் நான் வெறும் பயணச்செலவுக்கான தொகையை மட்டும் பெறுவேன். இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள எனது கிராமமக்கள் முடிவெடுத்தபோது, நான் சமையல் வேலைகளை செய்வதற்கு ஒப்புக்கொண்டேன்“ என்று அவர் கூறுகிறார். இந்த போராட்டத்தில் கலந்தகொள்ளும் 40க்கும் மேற்பட்டோருக்கு அவர் உணவு சமைக்கிறார்.
இதில் கலந்துகொள்வதற்காக பார்கானில் குடியிருப்பவர்கள் ஒரு பஸ்சை வாடகைக்கு எடுத்துள்ளனர். இது மார்க்சிஸ்ட் கட்சியின் அங்கமான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. பெரும்பாலும் டெம்போ மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் நிரம்பி வழியும் அந்த குழுவில் ஒரு ஆரஞ்சு நிற பஸ் மட்டும் தனித்து தெரிகிறது. இந்த பேருந்தில் 6 கிலோ வெங்காயம், 10 கிலோ உருளை கிழங்கு, 5 கிலோ தக்காளி மற்றும் 50 கிலோ அரிசியும், மற்ற பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. போராளிகள் போராட்ட களத்திற்கு சென்றவுடன் பாகத்தும், அவருடன் வேலை செய்யும் இரண்டு பேரும் தங்கள் சமையலை தொடங்குவார்கள்.
பாகத், அவரது மரக்குச்சியை எடுத்துக்கொண்டு, பேருந்தின் ‘சரக்கு அறைக்கு’ செல்கிறார். அவருடன் சமையல் செய்பவர், அதிகன காஸ் சிலிண்டர் மற்றும் சாப்பாட்டுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்கிறார். டிசம்பர் 22ம் தேதி மதியம் அவர்களின் சாப்பாடு, சாதம் மற்றும் உருளை பட்டாணி மசாலா. “மூன்று நாட்களுக்கு போதிய உணவு எங்களுக்கு உள்ளது“ என்று பேருந்துக்கு அருகில் தரையில் போடப்பட்டுள்ள விரிப்பில் நன்றாக அமர்ந்துகொண்டு வெங்காயம் நறுக்கிக்கொண்டே நம்மிடம், பாகத் கூறுகிறார். “மத்திய பிரதேசத்தின் எல்லையில் இருந்து பெரும்பாலானோர் வீடு திரும்புகிறார்கள். சிலர் டெல்லி வரை செல்கிறார்கள். வேலை செய்யாமல் நீண்ட நாட்களுக்கு இருக்க முடியாது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
அவரது பார்கான் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர், கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழில் செய்பவர்கள். “நாங்கள் மாதத்தில் 15 நாட்கள் கடலுக்கு செல்வோம். அலை குறைவாக இருக்கும்போது மீன்பிடிக்க முடியாது“ என்று பாகத் கூறுகிறார். இந்த வாரம் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை பார்கான் திரும்ப விரும்புகிறார். அப்போது உயரமான அலைகள் இருக்கும் என்பதால், “எங்களால் அதை இழக்க முடியாது“ என்கிறார். “நாங்கள் ஊரடங்கு துவங்கியது முதல் அதிகம் பாதிக்கப்பட்டோம். எங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் மீன்பிடிப்பதை நிறுத்தவிட்டோம். நாங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட விரும்பவில்லை. காவல் துறையினர் எங்களை சந்தையில் விற்கவும் அனுமதிக்கவில்லை. நாங்கள் தற்போது எங்கள் சொந்த காலிலே எழுந்து மீண்டு வருகிறோம். மீண்டும் ஒரு பிரச்னையை எங்களால் சமாளிக்க முடியாது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஊரடங்கு போடப்பட்ட துவக்க காலத்தில் பார்கானில் வசிப்பவர்கள் அவர்கள் ஊர் முழுவதையும் யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்பு அமைத்து பாதைகளை அடைத்துவிட்டார்கள். “மாநில அரசு சில தடைகளை அகற்றியபோதும் கூட நாங்கள் திறக்கவில்லை. வைரசிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, யாரும், அவர்களின் உறவினர்களை கூட ஊருக்குள் வருவதற்கு அனுமதிக்கவில்லை.
ஊரடங்கு காலத்தில் ஒருவரை கூட எல்லை தாண்டி செல்வதற்கு கிராமத்தினர் அனுமதிக்கவில்லை. தற்போது 39 பேர், மாநிலம் முழுவதிலும் உள்ள விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்வந்துள்ளனர். “விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன் இரண்டு முறை யோசிக்கக்கூடாது. யோசிக்காமல் உடனே கலந்துகொள்ள வேண்டும்“ என்று பாகத் கூறுகிறார்.
எழுத்து:
எம்.என்.பார்த்
புகைப்படங்கள்:
ஷ்ரத்தா அகர்வால்
தமிழில்: பிரியதர்சினி. R.