ப்ளாஸ்டிக் பையை கீழே வைத்துவிட்டு, ஊன்றி சற்று மூச்சு விட்டுக்கொள்கிறார் ஷங்கர் வாகரே. பிறகு மண்டியிட்டு கண்களை கொஞ்சம் மூடிக்கொள்கிறார். 15நிமிடங்களுக்கு கண்களை மூடியபடியே இருந்தார். அந்த 65 வயது மனிதருக்கு அது அத்தனை பெரிய நடை. அவரைச்சுற்றி அந்த இருட்டில் 25000 விவசாயிகள் இருந்தார்கள்.
இகாத்புரியின் ரைகாத்நகர் பகுதியில் நாசிக்-ஆக்ரா சாலையில் உட்கார்ந்தபடி அவர் சொல்கிறார்: ’நாம் நமது உரிமைகளுக்காக போராட வேண்டும்’. அந்த பரபரப்பான செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரத்தில், மார்ச் 6இல் தொடங்கிய மோர்ச்சா பேரணி முதன்முறையாக கொஞ்சம் ஓய்வெடுத்தது. மார்ச் 11ம் தேதி மும்பையை அடைந்து, சட்டமன்ற பேரவை கட்டடத்தை முற்றுகையிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு தோல்வியடைந்ததை எதிர்த்து போராடுவதுதான் அவர்களுடைய திட்டம். (பார்க்க: Long March: Blistered feet unbroken spirit மற்றும் பேரணிக்குப் பிறகு)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய முன்னணியான அகில பாரதீய கிசான் சபாதான் இந்த நீண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தாது. பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிசான் சபாவின் பொது செயலாளர் அஜீத் நவாலே அரசு வெற்று வார்த்தைளைச் சொல்லி ஏமாற்ற முடியாது என்கிறார். ’2015-இல், வன நிலத்தின் உரிமைக்கும், பயிர்களின் நல்ல விலைக்கும், கடன் தள்ளுபடி போன்றவற்றுக்கும் போராடினோம்’ என்றார் அவர். ’அரசு, அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவதாக நடிக்கிறது. இம்முறை இப்படியான நடிப்பை நம்பமுடியாது’ என்றார்.









