காலனியாதிக்கம் மற்றும் இந்தியத் துணைக்கண்ட பிரிவினை ஆகியவற்றின் நீண்ட நிழல்களின் இருப்பு இன்றும் அசாமில் எண்ணற்ற வழிகளில் வெளிப்படுகிறது. குறிப்பாக, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) எனப்படும் குடியுரிமை அடையாளப்படுத்தும் செயல்பாட்டில் அழுத்தந்திருத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. அச்செயல்பாட்டின் விளைவாக 19 லட்சம் பேர் மாநிலமற்றவர்களாக மாற்றப்படுவார்கள். ‘சந்தேகத்துக்குரிய வாக்காளர்’ என ஒரு வகைமை உருவாக்கப்பட்டு, அவ்வகைமைக்குள் வருபவர்கள் முகாம்களில் அடைக்கப்படுவது அச்செயல்பாட்டின் ஒரு பரிமாணம். வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயங்கள் 1990களிலிருந்து முளைத்து வருவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ம் ஆண்டின் டிசம்பரில் நிறைவேற்றப்பட்டதும் அம்மாநிலத்திலுள்ள குடியுரிமை பிரச்சினையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இந்த நெருக்கடி எழுப்பியிருக்கும் சூறாவளியால் தனிநபர் வாழ்க்கைகளிலும் வரலாறுகளிலும் ஏற்பட்டிருக்கும் பேரழிவு விளைவுகளை ஆறு பேரின் வாக்குமூலங்கள் நமக்குக் காட்டுகின்றன. எட்டு வயதாக இருக்கும்போது நேர்ந்த நெல்லி படுகொலையில் உயிர் பிழைத்த ரஷிதா பேகத்தின் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இடம்பெறவில்லை. அவரின் குடும்பத்தின் பிற உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. ஷாஜகான் அலி அகமதின் பெயரும் அவரது குடும்பத்தை சேர்ந்த பலரின் பெயர்களும் கூட பட்டியலில் இடம்பெறவில்லை. தற்போது அவர் அசாமில் குடியுரிமை சார்ந்த பிரச்சினைகளில் இயங்கும் செயற்பாட்டாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.


