“கடல் அரசன் திமிங்கிலம் ஆனாலும், நம்முடைய, மீனவர்களின் அரசன் மத்தி தான்.”
கேரள மாநிலம் வடகர நகரின் சோம்பால் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமைப் பணியாளராக இருப்பவர் பாபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெரும்பாலும் நெய் மத்தி மீன்களை வண்டியில் ஏற்றுவது, இறக்குவது என இந்த சுமை தூக்கும் பணியை சில பத்தாண்டுகளாக செய்துவருகிறார் இவர்.
காலை 7 மணிக்கு துறைமுகத்துக்கு வரும் 49 வயது சுமைப் பணியாளரான பாபு, வேலைக்கு என தனியாக வைத்துள்ள ஆடையை – ஊதா நிற முண்டு, டி-சர்ட், செருப்பு – அணிகிறார். பிறகு கடலை நோக்கிச் சென்று முழங்கால் ஆழமுள்ள கலங்கிய நீரில் நடந்து சென்று படகில் ஏறுகிறார். “தண்ணீர் வாடை அடிப்பதால், நாங்கள் (சுமைப் பணியாளர்கள்) எல்லோரும் வேலைக்கு என தனியாக செருப்பு, துணிகள் வைத்துள்ளோம்,” என்கிறார் அவர். துறைமுகத்தின் பரபரப்பெல்லாம் அடங்கி அமைதி திரும்பும் மாலை வேளையில் அவர் அங்கிருந்து கிளம்புவார்.
குளுமையான டிசம்பர் மாதத்தில், ஏற்கெனவே பரபரப்பாக வேலை நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் துறைமுகத்துக்கு வேலைக்கு வந்த பாபுவிடம் பேசினார் இந்த செய்தியாளர். கழுத்து நீண்ட வெள்ளை நிற கூழைக்கடாக்கள் தாழ்வாகப் பறந்துகொண்டும், படகில் இறங்கி மீன்கள் இருந்த மூங்கில் கூடை அருகே தத்திச் சென்றுகொண்டும் இருந்தன. கூடையில் இருந்த மீன்கள் சிலவற்றை கொத்திச் செல்ல அவை முயன்றன. மீன்கள் நிரம்பிய வலைகள் தரையில் கிடந்தன. மீன்களுக்காக பேரம் பேசும் மனிதர்களின் அரவம், துறைமுகம் முழுவதும் இருந்தது.
பெரியதும் சிறியதுமாக பல வகை படகுகள் அந்த துறைமுகத்தின் உள்ளே வருவதும், வெளியே கிளம்புவதுமாக இருந்தன. வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், முகவர்கள் ஆகியோர் படகுகளில் இருந்து மீன்களை இறக்கி சென்று கொண்டிருந்தனர். டெம்போ வேன்களில் மீன் ஏற்றும் பாபு போன்ற தொழிலாளர்கள் 200 பேர் அந்த துறைமுகத்தில் வேலை செய்வதாக கணக்கிடுகிறார் பாபு.
ஒவ்வொரு நாளும் துறைமுகத்துக்கு வந்தவுடன் பாபு செய்யும் முதல் வேலை, தன் தொழில் உபகரணங்களான இளஞ்சிவப்பு நிற கூடை, தண்ணீர் பாட்டில், செருப்பு, தலைச் சும்மாடு ஆகியவற்றை அங்குள்ள பாதாம் மர நிழலில் வைப்பதுதான். வட்டமாக சுற்றப்பட்ட துணி அல்லது பிளாஸ்டிக் தாள் சுற்றப்பட்ட கயிறுதான் சும்மாடாகப் பயன்படுகிறது. கூடை தூக்கும்போது தலைக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக கூடைக்கும் தலைக்கும் இடையில் வைக்கும் இந்த சும்மாடு, இங்கே ‘தெருவா’ என அழைக்கப்படுகிறது.
வெளிப்புறம் எஞ்சின் வைத்த, நான்கு பேர் பயணிக்கும் படகில் இருந்து இன்று மீன்களை இறக்குகிறார் பாபு. இந்த துறைமுகத்தில் உள்ள மிகச் சிறிய படகுகளில் ஒன்று இது. வணிகமுறை இழுவலைப் படகுகளுக்கென சொந்தமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருப்பர். எனவே, பாபு இழுவலைப் படகுகள் தவிர்த்த பிற படகுகளில்தான் வேலை எடுக்கிறார். “ஒரு முறை மீன் பிடிக்க சென்றால், ஒரு வாரம் அல்லது அதைவிட அதிக நாட்கள் கடலிலேயே இருந்து மீன்பிடிக்கும் இந்த மீனவர்கள் பெரிய படகுகளில்தான் செல்வார்கள். அந்தப் படகுகள் இந்த துறைமுகத்துக்குள் வர முடியாது. அவை, கடலுக்குள் தொலைவிலேயே நங்கூரமிட்டு நிற்கும். அங்கிருந்து சிறிய படகுகளில் மீன்களை ஏற்றிக்கொண்டு மீனவர்கள் துறைமுகத்துக்கு வருவார்கள்.”
‘மால்’ எனப்படும் சிறிய வலைகளைக் கொண்டு மீன்களை தன் கூடையில் அள்ளிப் போடுகிறார் பாபு. துறைமுகத்துக்கு நாங்கள் திரும்பிச் செல்லும்போது அந்தக் கூடையின் சிறு துளைகளில் இருந்து தண்ணீர் ஒழுகுகிறது. “இந்த மாதம், (2022 டிசம்பர்) நிறைய மத்தி மீன்கள் பிடிபட்டன,” என்றார் அவர். ஒரு கூடை மீன் சுமந்து சென்றால் அவருக்கு 40 ரூபாய் தருவார்கள். மீன் வாங்கிச் சென்று உள்ளூர் சந்தையில் விற்கும் படகு உரிமையாளர்களோ முகவர்களோ கூலியைக் கொடுப்பார்கள்.
“ஒரு நாளைக்கு எத்தனை கூடை சுமை எடுத்துச் செல்வேன் என்று உறுதியாக கூறமுடியாது. அது மீன்கள் வரும் அளவைப் பொறுத்தது,” என்கிறார் பாபு. ஒரே நாளில் 2 ஆயிரம் ரூபாய் சம்பாதித்த சந்தர்ப்பங்கள் உண்டு என்கிறார் அவர். “நிறைய நெய் மத்தி மீன்கள் வந்தால்தான் என்னால் அவ்வளவு சம்பாதிக்க முடியும்.”
*****
பதின் பருவத்திலேயே மீன் தொழிலில் ஈடுபடத் தொடங்கியவர் பாபு. முதலில் மீனவராக இருந்த அவர், சில ஆண்டுகளில் துறைமுகத்தில் சுமை தூக்கும் வேலைக்கு மாறிவிட்டார். கோழிக்கோடு மாவட்டத்தில் அரபிக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகுகள் திரும்பி வரத் தொடங்கும்போது அவரது சுமைதூக்கும் கூலி வேலை தொடங்கும்.
கடந்த பத்தாண்டுகளில் நெய் மத்தி மீன்கள் கிடைப்பதில் ஒரு நிலையில்லாத போக்கு ஏற்பட்டதை அவர் கவனித்தார்.
“மத்தி மீன்கள் குறைவாகக் கிடைக்கும் காலங்களில் எங்களுக்குள் சுமை தூக்கும் வேலையை பிரித்துக்கொள்வோம்,” என்கிறார் அவர். “நிறைய படகுகள் காலியாகத் திரும்பிவந்தால் எங்கள் அனைவருக்குமே கொஞ்சம் வேலை கிடைக்கும்படியாக பார்த்துக்கொள்ளவேண்டும் என எங்களுக்குள் முடிவு செய்துகொள்வோம்.”
மீன்கள் எவ்வளவு கிடைக்கும் என்பதில் ஏற்பட்ட நிச்சயமில்லாத நிலை துறைமுகத்தின் கூலித் தொழிலாளர்கள் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்ததாக கூறுகிறார் பாபு. தாய், மனைவி, இரண்டு மகன்கள் என ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் இவர்.
2021ல் கேரளாவில் மொத்தம் 3,297 டன் நெய் மத்தி மீன் பிடிபட்டது என்றும் 1995ம் ஆண்டு முதல் மிகக் குறைவாக நெய் மத்தி கிடைத்த ஆண்டு இதுதான் என்றும் கூறுகிறது Marine Fish Landings in India 2021 அறிக்கை. மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI), கொச்சி வெளியிட்ட அறிக்கை இது.
இந்தியாவின் மேற்கு கடற்கரையோரம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலேயே அதிகபட்சமாக 0.45 லட்சம் டன் நெய் மத்தி மீன்களைப் பிடித்த மாநிலமாக கேரளா இருந்தது என்கிறது மீன்வளப் புள்ளிவிவரக் கையேடு 2020 .
கேரளாவில் பரவலாக கிடைக்கும், ஊட்டச் சத்து மிகுந்த, விலை மலிவான மீன் வகைகளில் ஒன்று நெய் மத்தி என்கிறார் பாபு. முன்பு, இங்கே பிடிபடும் நெய் மத்தி மீன்கள் காயவைத்து கருவாடு தயாரிக்கப்பட்டதாகவும் கூறுகிறார் அவர். மங்களூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோழித்தீவனம் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்தி செய்யும் மீன் பதன ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும் நெய் மத்தி மீன்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதைப் பார்ப்பதாகவும் கூறுகிறார் பாபு. “இங்கே பிற மீன்களைவிட நெய் மத்தி மீன்கள் கிடைப்பது அதிகம். எனவே எங்களால் அதிக கூடைகளை நிரப்ப முடிகிறது.”
தமிழில்: அ.தா.பாலசுப்ரமணியன்