"எங்களைப் போன்ற பெண்கள் தங்களது வீடுகளையும் நிலத்தையும் விட்டுவிட்டு நகரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வரும்போது, அவர்கள் தங்களது பாதத்திற்கு கீழே உள்ள நிலத்தை இழக்கிறார்கள் என்று அர்த்தம்", என்று அருணா மன்னா கூறினார். கடந்த சில மாதங்களில் நாங்கள் சாப்பிட எதுவுமே இல்லாத நாட்களும் இருந்தன. மற்ற நாட்களில் நாங்கள் ஒரு வேளை உணவில் உயிர் வாழ்ந்தோம். இந்தச் சட்டங்களை இயற்றுவதற்கு இதுதானா நேரம்? எங்களை கொள்வதற்கு இந்த மகாமாரி (கோவிட் 19 பெருந்தொற்று) போதாதது போல!", என்று கூறினார்.
மத்திய கொல்கத்தாவில் உள்ள ஒரு போராட்டக் களமான எஸ்பிளனேடு Y சேனலில் 42 வயதான அருணா பேசினார், அங்கு ஜனவரி 9 முதல் 22 வரை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அகில இந்திய கிஷான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் (AIKSCC) பதாகையின் கீழ் வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், கலாச்சார அமைப்புகள் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர் - 2020 செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதற்காக ஒன்று கூடி இருக்கின்றனர்.
ராஜுவகாக்கி கிராமத்தில் இருந்து வந்திருக்கும் அருணா சுமார் 1,500 பெண்களுடன் வந்திருந்தார், அவர்களில் பெரும்பாலானோர் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். ரயில்கள், பேருந்துகள் மற்றும் டெம்போகள் மூலம் ஜனவரி 18 ஆம் தேதி அவர்கள் கொல்கத்தா வந்தடைந்தனர், நாடு தழுவிய மகிலா கிசான் திவாஸைக் குறிக்கும் விதமாக அவர்கள் அவ்வாறு குழுமியிருந்தனர்- அது விவசாயப் பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் மேலும் அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான நாள். 40க்கும் மேற்பட்ட பெண் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் ஏ கே எஸ் சி சி ஆகியவை இந்த நிகழ்வினை மேற்குவங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தன.
அவர்களது குரல்களை பதிவு செய்வதற்கு நீண்ட நேர பயணத்துக்கு பின் கொல்கத்தா வந்து சோர்வாக இருந்தாலும் பெண்களின் ஆத்திரம் இன்னமும் தெளிவாக அப்படியே தெரிகிறது. "அப்படியானால், எங்களுக்காக யார் போராடுவது? நீதிபதிகளா? நாங்கள் வேண்டுவது கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்!" வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விட்டு பெண்கள் மற்றும் வயதானவர்கள் வெளியேறும்படி 'வலியுறுத்தப்பட' வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி அண்மையில் கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக 38 வயதாகும் சுபர்ணா ஹல்தார் கூறுகிறார், அவர் ஷர்மஜீவி மகிலா சமிதியின் உறுப்பினர்.
கொல்கத்தாவின் போராட்ட களத்தில் ஜனவரி 18 அன்று காலை 11:30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற மகிலா கிசான் மஜ்ஜூர் விதான் சபா கூட்டத்தில் சுபர்ணா பேசினார். மகிலா கிசான் திவாஸின் ஒரு பகுதியாக விவசாயத்தில் பெண்களின் சிக்கலான நிலை, அவர்களின் உழைப்பு, நிலம் மற்றும் பிற உரிமைகளுக்கான அவர்களது நீண்ட கால போராட்டம் மற்றும் புதிய வேளாண் சட்டங்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்த அமர்வு கவனம் செலுத்தி பேசியது.
ஜனவரி 18ஆம் தேதியன்று கொல்கத்தாவில் நடந்த மகிலா கிசான் மஜ்ஜூர் விதான் சபா அமர்வில் மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
தெற்கு 24 பர்கானா மாவட்டத்திலுள்ள ரைதிகி கிராம பஞ்சாயத்தில் உள்ள பகுர்தலா கிராமத்தில் இருந்து வந்திருக்கும் சுபர்ணா, அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் தொடர்ச்சியான புயல்கள் எவ்வாறு தங்களது பகுதியில் தற்சார்பு விவசாயத்தை நீட்டிக்க முடியாததாக ஆக்கி உள்ளது என்று பேசினார். இதன் விளைவாக, MGNREGA தலங்கள் (100 நாள் வேலை திட்டத்தில்) மற்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட மற்றும் பஞ்சாயத்து நடத்தும் பிற பணி நிலையங்களில் வேலை செய்வது விவசாய தொழிலாளர்கள் மற்றும் குறைந்தளவு நிலங்களை வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு முக்கியமான உயிர்நாடியாக மாறியுள்ளது.
கொல்கத்தா போராட்டக்களத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்துகிற அதே வேளையில் MGNREGA வேலை நாட்கள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்தில் கீழ் வேலை பற்றாக்குறை ஆகியவை குறித்தும் அப்பெண்கள் போராடுகின்றனர்.
"செல்லுபடியாகக் கூடிய வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை (பொதுவாக வேலை அட்டைகள் கணவன் அல்லது தந்தையின் பெயர்களில் வழங்கப்படுகின்றன இதுவும் பல பெண்களுக்கு ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சனையாக தான் இருக்கிறது). இருப்பினும் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை", என்று 100 நாள் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும், மதுராபூர் II வட்டத்தில் உள்ள ரைதிகி கிராம பஞ்சாயத்தில் உள்ள பலராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதாகும் சுசித்ரா ஹல்தார் கூறுகிறார்.
"எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் வெட்டியாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை", ராஜுவகாக்கி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதாகும் ரஞ்சிதா சமந்தா கூறுகிறார். "பல ஆண்கள் ஊரடங்கு காலத்தில் தாங்கள் வேலைக்குச் சென்ற இடத்தில் இருந்து திரும்பி வந்து விட்டனர். பெற்றோர்களும் பல மாதங்களாக வேலையில்லாமல் இருந்தனர் எனவே புதிய தலைமுறையினரும் அவதிப்படுகின்றனர். 100 நாள் வேலை கூட கிடைக்கவில்லை என்றால் நாங்கள் எப்படி வாழ்வது?", என்று கேட்கிறார்.
சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்த 80 வயதாகும் துர்கா நையா தனது தடிமனான கண்ணாடியை தனது வெள்ளை காட்டன் புடவையின் விளிம்பில் துடைத்துக் கொண்டிருந்தார். மதுராபூர் II வட்டத்தில் உள்ள கிலர்சாத் கிராமத்தைச் சேர்ந்த பல வயதான பெண்களுடன் அவரும் வந்திருந்தார். "எனது உடம்பில் தெம்பு இருந்த வரை நான் விவசாயத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன்", என்று அவர் கூறினார். "பாருங்கள், இப்போது எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. பல காலத்துக்கு முன்பே எனது கணவர் இறந்துவிட்டார். இப்பொழுது என்னால் வேலை பார்க்க முடியவில்லை. எனவே வயதான விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குமாறு சர்க்காரிடம் கோரிக்கை வைக்க நான் இங்கு வந்துள்ளேன்", என்று கூறினார்.
துர்கா நையா பல விவசாய போராட்டங்களை பார்த்தவர். மதுராபூர் II வட்டத்தில் உள்ள ராதாகந்தபூர் கிராமத்தைச் சேர்ந்த நிலமற்ற தொழிலாளியான பருள் ஹல்தார், "நாடு தழுவிய விவசாய போராட்டத்திற்காக 2018 ஆம் ஆண்டு நான் அவருடன் தில்லிக்கு சென்றேன்", என்றார். கிசான் முக்தி மோர்சா வுக்காக அவர்கள் 2018 ஆம் ஆண்டு நவம்பரில் புதுதில்லி ரயில் நிலையத்திலிருந்து ராம்லீலா மைதானம் வரை ஒன்றாக நடந்து சென்றனர்.
ரஞ்சிதா சமந்தா (இடது) அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்வைத்தார் நில உரிமைகள், பொது வினியோகத் திட்டம், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பெண் விவசாயிகளின் பிற கோரிக்கைகள் ஆகியவை. விவசாயிகள் (இடமிருந்து வலமாக) துர்கா நையா, மாலதி தாஸ், பிங்கலா புட்கை (பச்சை சேலை), ஊர்மிளா நையா.
போராட்ட களத்தில் வயதான பெண்களுடன் ஏன் சேர்ந்தார் என்று கேட்டபோது "நாங்கள் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறோம்", என்று பருள் கூறினார். "வயல்களிலும் எங்களுக்கு வேலைகள் அதிகமாக இல்லை. விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் சில வேலைகள் கிடைக்கும் அப்போது நாள் ஒன்றுக்கு தலா 270 ரூபாய் சம்பாதிக்க முடியும். ஆனால் அது எங்களுக்கு போதுமானது கிடையாது. நான் பீடி சுற்றுவது மற்றும் பிற வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன். மகாமாரி காலத்தில் நாங்கள் மிகவும் மோசமான நிலையை சந்தித்து விட்டோம் குறிப்பாக அம்பான் (2020 மே 20 அன்று மேற்கு வங்கத்தை தாக்கிய புயல்) வந்த பிறகு நிலைமை மேலும் மோசமடைந்துவிட்டது", என்றார்.
இந்தக் குழுவில் உள்ள வயதான பெண்கள் தங்களது முக கவசத்தை போட்டிருப்பதை குறித்து கவனமாக இருந்தனர், பெருந்தொற்று காலங்களின் போது அவர்கள் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்பதை அறிந்து வைத்திருந்தனர் - இருப்பினும் அவர்கள் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்திருக்கின்றனர். "நாங்கள் சீக்கிரம் எழுந்து வந்தோம். சுந்தரவனத்தில் உள்ள எங்களது கிராமத்தில் இருந்து கொல்கத்தாவை வந்து அடைவது எளிதல்ல", என்று கிலர்சாத் கிராமத்திலிருந்து வந்திருக்கும் 75 வயதான பிங்கலா புட்கை தெரிவித்தார். எங்கள் சமிதி (ஷர்மஜீவி மகிலா சமிதி) எங்களுக்கு ஒரு பேருந்து ஏற்பாடு செய்திருந்தது. எங்களுக்கு மதிய உணவு (சோறு, உருளைக்கிழங்கு, லட்டு மற்றும் மாம்பழச் சாறு) இங்கே வழங்கப்பட்டது. இது எங்களுக்கு ஒரு முக்கியமான நாள்", என்று கூறினார்.
அதே குழுவில் உள்ள 65 வயதாகும் மாலதி தாஸ் மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயான தனது விதவை ஓய்வூதியத்திற்காக காத்திருப்பதாகவும் - தான் அதை இன்னும் ஒரு முறை கூட பெறவில்லை என்றும் கூறினார். "வயதானவர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று நீதிபதி கூறியிருக்கிறார்", என்று அவர் கூறினார். "அவர்கள் வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் ஏதோ புலாவ் மற்றும் கறி குழம்பு சோறு போடுவதை போல அவ்வாறு கூறி இருக்கின்றனர்!", என்றார்.
இந்தக் குழுவில் உள்ள பல பெண்கள் விவசாய வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வயதான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு கண்ணியமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை வைத்தனர்.
இக்கூட்டத்தில் சுந்தரவனத்தில் இருந்து வந்திருக்கும் பெரும்பாலான நான் பேசிய பெண்கள் பலர் பல்வேறு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த பலரும் இருந்தனர். அவர்களுல் ஜமால்பூர் வட்டத்தில் இருக்கும் மோகன்பூர் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் பூமிஜ சமூகத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாயத் தொழிலாளியான 46 வயதாகும் மஞ்சு சிங் என்பவரும் அடங்குவார்.
"நீதிபதி எங்களுக்கு எல்லாவற்றையும் வீட்டிற்கே அனுப்பட்டும் - எங்கள் குழந்தைகளுக்கான உணவு, மருந்துகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை", என்று கூறினார். நாங்கள் வீடுகளிலேயே இருப்போம் நாங்கள் குறுக்கொடிய செய்யும் இந்த வேலையை யாரும் விரும்புவதில்லை. போராடாவிட்டால் நாங்கள் வேறு என்ன செய்வது?", என்று கேட்கிறார்.
பூர்பா பர்தாமன் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில், "100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வருடமொன்றுக்கு 25 நாட்கள் தான் வேலை பெற முடிகிறது. நாள் ஒன்றுக்கான சம்பளம் 204 ரூபாய். வேலை கிடைக்காமல் வேலை அட்டையை வைத்து என்ன பயன்? வெறுமனே 100 நாள் வேலைத்திட்டம் என்று அழைத்தால் போதுமா? நான் பெரும்பாலும் தனியார் நிலங்களில் வேலை செய்கிறேன். பெரும் போராட்டத்திற்கு பிறகு தினசரி ஊதியமாக (நில உரிமையாளர்களிடமிருந்து) 180 ரூபாய் மற்றும் இரண்டு கிலோ அரிசி எங்களுக்கு கிடைக்கிறது", என்று கூறினார்.
முப்பதுகளின் மத்தியில் இருக்கும் சாந்தால் ஆதிவாசியான நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளியான ஆரத்தி சோரனும் அதே கிராமமான மோகன்பூரிலிருந்து வந்திருக்கிறார். "ஊதியங்கள் மட்டுமல்ல, எங்களது போராட்டம் பலவற்றை குறித்து இருக்கிறது" என்று அவர் கூறினார். "மற்றவர்களைப் போல் அல்லாமல் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் நாங்கள் போராட வேண்டியிருக்கிறது. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்றுகூடி பி டி ஓ அலுவலகம் முன்பு மற்றும் பஞ்சாயத்துகளுக்கு முன்னால் நின்று கூச்சலிடும் போது தான் அவர்கள் கேட்கிறார்கள். இந்த சட்டங்கள் எங்களை பட்டினி போடும். எங்களை வீட்டுக்கு போகச் சொல்வதற்கு பதில் நீதிபதிகள் ஏன் இந்த சட்டங்களை திரும்பப் பெறக்கூடாது?", என்று கேட்கிறார்.
கொல்கத்தாவை சுற்றியுள்ள சிறிய தனியார் நிறுவனங்களில் வேலை இழந்த பின்னர் கடந்த 10 மாதங்களாக ஆரத்தி மற்றும் மஞ்சுவின் கணவர்கள் வீட்டில் தான் இருக்கின்றனர். அவர்களது குழந்தைகள் ஆன்லைன் கல்வி பயில அவர்களால் ஸ்மார்ட்போன் வாங்க முடியவில்லை. MGNREGA வின் கீழ் கடுமையான வேலை பற்றாக்குறை அவர்களின் பிரச்சனைகளை மேலும் அதிகரித்திருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பெண் விவசாய தொழிலாளர்களை கடன் கொடுப்பவர்களிடமிருந்து கடன் வாங்கி வாழ வைத்திருக்கிறது. "அரசாங்கம் வழங்கிய அரிசியில் தான் நாங்கள் உயர் வாழ்ந்தோம்", என்கிறார் மஞ்சு. "ஆனால் ஏழைகளுக்கு அரிசி மட்டுமே போதுமா?", என்று கேட்கிறார்.
"கிராமங்களில் உள்ள பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்", என்று தெற்கு 24 பர்கானாவில் உள்ள ரைதிகி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ரைதிகி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதாகும் நமிதா ஹல்தார் கூறுகிறார், மேலும் அவர் பச்சிம் பங்கா கேத்மஜூர் சமிதியில் உறுப்பினர். எங்களுக்கு தேவையானது நல்ல அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை எங்களால் பெரிய தனியார் மருத்துவமனைகளில் செலவு செய்ய முடியாது. இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் விவசாயத்திலும் அதுதான் நடக்கும்! பெரிய தனியார் நிறுவனங்களுக்காக சர்க்கார் எல்லாவற்றையும் செய்தால், ஏழைகள் இப்போது சமாளித்து பெரும் சிறிதளவு உணவை கூட பெற முடியாது. நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே புரிந்து கொள்ளும். நாங்கள் இறந்தால் அவர்கள் கவலைப்படுவதில்லை. நாங்கள் வளர்க்கும் உணவைக்கூட எங்களால் வாங்க முடியாது", என்று அவர் கூறினார்.
அவருக்கும் பெண்கள் போராட்ட களத்தில் ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்வி இல்லாமல் இல்லை. "நாகரிகத்தின் தொடக்க காலத்திலிருந்தே பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்", என்று அவர் கூறினார்.
இந்த மூன்று வேளாண் சட்டங்களும் பெண் விவசாயிகள், குத்தகை விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களை மிகவும் கடுமையாக பாதிக்கும் என்று நமீதா ஹல்தார் (இடது) நம்புகிறார்.
இந்த மூன்று வேளாண் சட்டங்களும் தன்னைப் போன்ற - பெண் குத்தகைதார விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல், காய்கறி மற்றும் பிற பயிர்களை விளைவிப்பவர்களுக்கு - பெண்களை மிகவும் கடுமையாக பாதிக்கும் என்று நமீதா நம்புகிறார். எங்களது பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்றால் சிறு குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் மற்றும் மாமனார் மாமியாருக்கு நாங்கள் எவ்வாறு உணவு கொடுப்பது?", என்று அவர் கேட்கிறார். பெருநிறுவன முதலாளிகள் எங்களிடமிருந்து பயிர்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை பதுக்கி வைத்து விலையை கட்டுப்படுத்துவார்கள்", என்று கூறினார்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
இந்த விதான் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பெண் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் பிரதிபலித்தன. அவை மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்வது; பெண் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக அவர்களின் நிலையை விவசாயிகள் என்று உயர்த்துவது; தேசிய விவசாயிகள் ஆணையத்தின் (சுவாமிநாதன் ஆணையம்) பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் அளிக்கும் சட்டம் இயற்றுவது மற்றும் ரேஷன்களுக்கான பொது விநியோகத் திட்டத்தினை வலுப்படுத்துவது ஆகியவை ஆகும்.
நாள் முடிவில் சுமார் 500 பெண்களைக் கொண்ட டார்ச் பேரணி நடைபெற்றது இதில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாங்கர் வட்டத்திலுள்ள முஸ்லிம் வீடுகளைச் சேர்ந்த பெண் விவசாயிகள் இருண்ட வானத்தின் கீழ் டார்ச் ஒளியில் மாலையை ஒளிரச் செய்தனர்.
படம்: மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தின் ஒரு சிறிய நகரைச் சேர்ந்த லபானி ஜங்கி கொல்கத்தாவின் சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் வங்காள தொழிலாளர் இடம்பெயர்வு குறித்த பிஎச்டி செய்து வருகிறார். இவர் ஒரு சுயமாக கற்றுக்கொண்ட ஓவியர் மற்றும் பயணத்தை விரும்புபவர் ஆவார்.
தமிழில்: சோனியா போஸ்