சிராஜ் மோமின் ஒரு பிழை கூட செய்ய முடியாது. ஒரே ஒரு பிழை செய்தாலும், அவர் ஒரு மீட்டர் துணிக்கு பெரும் 28 ரூபாயை அவர் இழக்க நேரிடும். அவர் நீளவாக்கில் உள்ள நூல் இழைகள் மற்றும் ஊடு இழை நூல்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக பராமரிக்க வேண்டும். அதனால் அவர் நெசவினை ஆய்வு செய்ய இப்போது ஒரு பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தி அதன் வழியாகப் பார்க்கிறார். மேலும் இந்த ஆறு மணி நேரத்தில் கைத்தறியின் இரண்டு பெடல்களையும் அவர் ஒரு நிமிடத்திற்கு 90 முறை மிதிக்கிறார் - அதாவது ஒரு நாளுக்கு 32,400 முறை. அவரது கால் அசைவுகள் 3,500 (இந்த எண்ணிக்கை ஒவ்வொரு இயந்திரதிற்கு இயந்திரம் மாறுபடும்) கம்பிகள் அல்லது பாவு நூல் செலுத்திகளுடன் கூடிய செவ்வக சட்டகத்தை அது மூடி மூடி திறக்கிறது. உலோகக் கற்றையின் மீது சுற்றப்பட்ட நீளவாக்கு நூல் இழை இந்த கம்பிகளின் வழியே செல்லும் போது அவரது பாதம் சீராக அசைந்து கொண்டிருக்கிறது. இந்த செய்கையில் இருந்து ஒரு அங்குலத்திற்கு 80 நீளவாக்கு நூல் இழைகள் மற்றும் 80 ஊடு இழை நூல்கள் கொண்ட ஒரு மீட்டர் துணி - ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தயாரிக்கப்படுகிறது.

இப்போது 72 வயதாகும் சிராஜ் தனது 15 வயதில் இருந்தே, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இத் தொழிலைச் செய்து வருகிறார். அவரது கைத்தறி கிட்டத்தட்ட அவரை விட இரு மடங்கு பழமையானது, அது ஒரு நூற்றாண்டு பழமையான தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஒரு குடும்ப குலதனம். அதில், 57 ஆண்டுகளாக, சிராஜ்  துணிகளை வடிவமைத்து வந்துள்ளார் - கைத்தறிக்கு, ஒரே நேரத்தில் நுட்பமாக சோதிப்பதற்கும், ஒருங்கிணைந்த கை கால் அசைவுகளுக்கும், துணிக்குத் தேவையான நீளவாக்கு நூல் இழைகள் மற்றும் ஊடு இழை நூல்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இவரை போன்ற திறமையான ஒரு நெசவாளரே தேவைப்படுகிறார்.

ஏறக்குறைய ஏழு அடி உயரமுள்ள இரண்டு கைத்தறிகள் மட்டுமே இப்போது சிராஜின் வீட்டில் இருக்கிறது. இதற்கு முன்னால் அவர் ஏழு கைத்தறிகள் வைத்திருந்து இருக்கிறார் மேலும் அவற்றை இயக்க தொழிலாளர்கள் சிலரை கூட வேலைக்கு வைத்து இருந்திருக்கிறார். "1980 களின் பிற்பகுதி வரை எங்களுக்கு நிறைய வேலைகள் கிடைத்தன", என்று அவர் கூறுகிறார். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, அவர் தனது மூன்று தறிகளை மற்ற கிராமத்திலிருந்து வந்த வாங்குபவர்களிடம் தலா 1,000 ரூபாய்க்கு விற்றுவிட்டார் மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு கோல்ஹாபூர் நகரத்தில் உள்ள ஒரு அரசு சாரா நிறுவனத்திற்கு மற்ற இரண்டு கைத்தறிகளை நன்கொடையாக வழங்கிவிட்டார்.

கோல்ஹாபூர் மாவட்டத்தின் ஹட்கானங்கள் தாலுகாவில் உள்ள அவரது கிராமமான ரெண்டலில் (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) 19,674 பேர் வசித்து வருகின்றனர், சிராஜின் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக கைத்தறியில் அமர்ந்து துணிகளை நெய்து கொண்டு இருக்கின்றனர். 1962 ஆம் ஆண்டில் 8 ஆம் வகுப்பு முடித்த பிறகு, சிராஜும் தனது தந்தையின் சகோதரியான ஹலீமாவிடமிருந்து கைத்தறி நெசவு செய்யும் கலையைக் கற்றுக் கொண்டார். ரெண்டலில் இருந்த ஒரு சில பெண் நெசவாளர்களுள் அவரும் ஒருவராக இருந்திருக்கிறார். அந்த கிராமத்தில் இருந்த மற்ற பெண்கள் எல்லோரும் ஊடு இழைக்கான நூல்களை நூற்தனர், பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைப் போலவே சிராஜின் மனைவியும் அதையே செய்தார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

சிராஜ் மோமின் அவரது குடும்பத்தில் மூன்றாவது மற்றும் கடைசி தலைமுறை நெசவாளர், 72 வயதிலும் அவர் இன்னமும் மிகுந்த சிரத்தையுடன் கைத்தறி துணிகளை உருவாக்குகிறார் நெசவாளரின் கற்றை மீது நீளவாக்கில் உள்ள நூல் இழைகள் (இடது) பொருத்தி வைக்கப்பட்டிருக்கிறது அதன் ஊடாக தறி ஊடிழை நூல் செல்கிறது.

ஆனால் மற்ற இடங்களைப் போலவே ரெண்டல் கிராமத்திலும் கைத்தறி மெதுவாக விசைத்தறிகளுக்கு வழிவகுத்துவிட்டது - விரைவாகவும் இடைவிடாதும் இயங்கும் இயந்திரங்கள் கைத்தறியை விட மலிவான விலையில் துணியை உற்பத்தி செய்கின்றன. "அதே துணியை ஒரு விசைத்தறியில்  ஒரு மீட்டருக்கு மூன்று ரூபாய்க்கும் குறைவான விலையில் தயாரிக்க முடியும்",  என்று  ரெண்டலின் விசைத்தறி சங்கத்தின் தலைவரான ராவ்ஷாகிப் தாம்பே கூறுகிறார். 2000 ஆம் ஆண்டில் ரெண்டலில் 2,000 - 3,000 விசைத்தறிகள் இருந்தது, இப்போது 7,000 - 7,500 விசைத்தறிகள் இருக்கும் என அவர் மதிப்பிடுகிறார்.

வாடிக்கையாளர்கள் இப்போது மலிவான விலைத் துணியைத் தான் விரும்புகிறார்கள் என்பது சிராஜுக்குத் தெரியும். "அதே துணியை விசைத்தறியில் நெய்திருந்தால் யாரும் மீீீட்டருக்கு 4 ரூபாய்க்கு மேல் தர மாட்டார்கள். நாங்கள் 28 ரூபாய் பெறுகிறோம்", என்று அவர் கூறுகிறார். நெசவாளரின் திறமை மற்றும் முயற்சி மற்றும் துணியின் தரம் காரணமாக கைத்தறித் துணியின் விலை அதிகமாக இருக்கிறது. மேலும், "கைகளால் நெய்யப்பட்ட துணிகளின் மதிப்பு மற்றும் அதன் தரத்தைப் பற்றி மக்களுக்குப் புரியவில்லை", என்று  சிராஜ் கூறுகிறார். ஒரே தொழிலாளி குறைந்தது எட்டு விசைத்தறியை ஒரு நேரத்தில் கையாள முடியும், அதே சமயம் ஒரு கைத்தறி நெசவாளர் ஒரே கைத்தறியிலேயே வேலை செய்கிறார், அதனால் ஒவ்வொரு நூலிலும் அவரால் கவனம் செலுத்த முடிகிறது. இதுவே கையால் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு துணியையும் தனித்துவமானதாக ஆக்குகிறது, என்று அவர் நம்புகிறார்.

ஆண்டுகள் பல கடந்தும் மேலும் விசைத்தறிகளின் வருகையாலும், ரெண்டலில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மாற்றங்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொண்டு செயல்பட முயற்சிக்கின்றனர். பாரம்பரியமாக, இங்குள்ள நெசவாளர்கள் நௌவாரி சேலைகளை (8 மீட்டர் நீளத்திற்கும் சற்று அதிகமானது) உற்பத்தி செய்தனர். 1950 களில் அவர்கள் நான்கு மணி நேரத்தில் ஒரு சேலையை நெய்து இருக்கின்றனர், அவை ஒவ்வொன்றிற்கும் அவர்கள் 1.25 ரூபாய் கூலியாகப் பெற்றிருக்கின்றனர் - 1960 களில் இந்த விலை 2.5 ரூபாயாக உயர்ந்தது. இன்று, சிராஜ் சந்தை தேவைக்கு ஏற்றவாறு சட்டைத் துணியை நெய்கிறார். இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்ட பின்னர் துவங்கியது", என்று அவர் கூறுகிறார்.

தானியங்கி கைத்தறி கூட்டுறவு விங்கர் சங்கம் மற்றும் ஹாத்மக் விங்கர் கூட்டுறவு சங்கம் ஆகிய இரண்டும் தான் ரெண்டலின் நெசவாளர்களுக்கும், அவர்களின் தயாரிப்பை வாங்கும் நிறுவனமான சோலாப்பூர் நகரத்தில் இருக்கும் பஸ்சிம் மஹாராஷ்டிரா ஹாத்மக் விகாஷ் மகாமண்டலுக்கும் இடையில், இடைத் தரகர்களாக செயல்பட்டு வந்தன. கைத்தறி புடவைகளுக்கான தேவை குறைந்து கொண்டே வந்ததால், 1997 ஆம் ஆண்டில் இச்சங்கங்கள் மூடப்பட்டன, என்று சிராஜ் நினைவு கூர்கிறார்.

தொடர்ந்து மூலப்பொருட்களை பெறுவதற்கும், தனது நெய்த துணிகளை விற்பனை செய்வதற்கும், சிராஜ் கர்நாடகாவில் உள்ள பெல்காம் (இப்போது பெலகாவி) மாவட்டத்தின் சிகோடி தாலுகாவினைச் சேர்ந்த கோகனோலி கிராமத்தில் உள்ள கர்நாடகா கைத்தறி மேம்பாட்டு கழகத்தின் (KHDC) துணை மையத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி தான் அக்கழகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்த ரசீதை அவர் எனக்கு காட்டுகிறார், மேலும் ரெண்டலில் இருந்து 29 நெசவாளர்கள், திரும்பப் பெறக் கூடிய வைப்புத் தொகையான  இரண்டாயிரம் ரூபாயைச் செலுத்தி அக்கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தனர், என்று அவர் நினைவு கூர்கிறார். இப்போது அக்கிராமத்தில் நான்கு பேர் மட்டுமே கைத்தறியில் வேலை செய்கின்றனர் - சிராஜ், பாபாலால் மோமின், பாலு பரீீத் மற்றும் வசந்த் தாம்பே ஆகிய அந்த நால்வர் மட்டுமே. (காண்க மீட்டரிலும் முழத்திலும் அளக்கப்படும் வாழ்க்கை). "சிலர் இறந்துவிட்டனர், சிலர் நெசவு செய்வதை நிறுத்திவிட்டனர் மற்றும் சிலர் தங்களது கைத்தறிகளையே விற்றுவிட்டனர்", என்று சிராஜ் கூறுகிறார்.

PHOTO • Sanket Jain

கையால் ஒரு பிர்னில் நூலைச் நூற்துக் கொண்டிருக்கும், மைமூனா மோமின், இப்போதைய இளைய தலைமுறையைச் சேர்ந்த யாரும் இந்த வேலையைச் செய்ய மாட்டார்கள், என்று கூறுகிறார்.

சிராஜின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள, மண் சாலையுடன் கூடிய ஒரு குறுகிய பாதை கொண்ட கொட்டகையில், 70 வயதான பாபாலால் மோமின், 57 ஆண்டுகளாக நெசவுத் தொழில் செய்து வருகிறார். 1962 ஆம் ஆண்டில் அவரது தந்தை குத்புதீனிடமிருந்து அவர் 22 கைத்தறிகளை குலதனமாகப் பெற்றார். 2 தசாப்தங்களுக்கு பிறகு, அதில் 21 தறிகளை பாபாலால் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து வாங்கியவர்களிடம் தலா 1,200 ரூபாய்க்கு அவற்றை விற்க வேண்டியதாகி விட்டது.

பாபாலாலின் கொட்டகைக்கு அடுத்ததாக கை - நெசவு உபகரணங்கள் சில கடந்தன, அதில் சில பயன்பாட்டில் இல்லை, சில உடைந்த நிலையில் கிடந்தது. இவற்றுள் ஒரு மரக் கற்றை மற்றும் டோபி (அல்லது மராத்தியில் தாபி) ஆகியவை தறியின் மேற்புறத்தில் இணைக்கப்பட்டு கீழே உள்ள துணியில் நுணுக்கமான வடிவமைப்புகளையும் மற்றும் வடிவங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப் படுகின்றன. "அதை வைத்துக் கொண்டு இப்போது நான் என்ன செய்வது? நெசவாளர்கள் யாரும் அதைப் பயன்படுத்துவது கிடையாது. அடுத்த தலைமுறையினர் அதை விறகுகளாக எறிக்கத்தான் பயன்படுத்துவர்", என்று பாபாலால் கூறுகிறார்.

மேலும் அவர், 1970 களில் விசைத்தறிகள் பெருகத் துவங்கிய காலத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கான தேவை குறைந்தது, என்று கூறுகிறார். "முதலில், நாங்கள் நான்கு மணி நேரமே வேலை செய்தோம் மேலும் அதிலேயே எங்களுக்குப் போதுமான பணத்தை சம்பாதித்தோம். ஆனால் இன்று, நாங்கள் 20 மணி நேரம் வேலை செய்தாலும் கூட, பிழைப்பு நடத்துவதற்கு கூட போதுமான பணத்தை எங்களால் சம்பாதிக்க முடிவதில்லை", என்று அவர் கூறுகிறார்.

பாபாலால், ஒரு அங்குலத்திற்கு 50 நீளவாக்கில் உள்ள நூல் இழைகள் மற்றும் 50 ஊடு இழை நூல்களைக் கொண்ட துணியை நெசவு செய்கிறார். ஒவ்வொரு மீட்டர் துணிக்கும், அவர் KHDC இடமிருந்து 19 ரூபாயை சன்மானமாகப் பெறுகிறார். அவர் 45 நாட்களில் 250 மீட்டர் துணியை நெசவு செய்கிறார், இது அவருக்கு 4,750 ரூபாயைப் பெற்றுத் தருகிறது. நெய்த துணிகளின் விலை பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது, அதில் ஒரு அங்குலத்திற்கு எத்தனை நீளவாக்கு நூல் இழைகள் மற்றும் ஊடு இழை நூல்கள் இருக்கின்றன என்பதும், மேலும் துணியின் வகை மற்றும் துணியின் தரம் ஆகியவையும் அடங்கும்.

கூட்டுறவு சங்கங்களும், சந்தையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள முயற்சித்து, கைத்தறி துணியை முடிந்த வரை மலிவாக வைத்திருக்க முயற்சிகள் மேற்கொண்டன. இதைச் செய்வதற்கான ஒரு வழி, பருத்தியை பாலியஸ்டருடன் கலப்பது. KHDC இடமிருந்து பாபாலால் பெரும் நூல் 35 சதவிகிதம் பருத்தி மற்றும் 65 சதவிகிதம் பாலியஸ்டரையும் கொண்டிருக்கும். "ஒரு தசாப்தத்திற்கு முன்னரே நாங்கள் 100 சதவிகிதம் பருத்தியை மட்டுமே கொண்ட நூலைப் பயன்படுத்துவதை நாங்கள் நிறுத்தி விட்டோம், ஏனெனில் அதுவே விலையை உயர்த்துகிறது", என்று அவர் கூறுகிறார்.

நெசவாளர்களை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்று 68 வயதாகும், பாபாலாலின் மனைவியான, ரஸியா கூறுகிறார். சில வருடங்களுக்கு ஒரு முறை அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எங்களைப் பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டு, கைத்தறியில் சுண்ணக்கட்டிகளால் எதையோ எழுதிவிட்டுச் செல்கின்றனர் (கைத்தறி கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இது செய்யப்படுகிறது). எங்களது துணிக்கு ஒரு நல்ல விலையைக் கூட அவர்களால் கொடுக்க முடியாவிட்டால் அவர்கள் இதைச் செய்து தான் என்ன பயன்?", என்று அவர் கேட்கிறார். ரஸியா, பாபாலாலுடன் இணைந்து பணிபுரிந்து வந்தார், ஒரு பிர்னில் நூலை நூற்பது அல்லது பிர்ன் - முறுக்கு இயந்திரத்தைப் (சர்கா போன்ற இயந்திரம்) பயன்படுத்தி நூலை நூற்பது ஆகியவற்றைச் செய்து வந்தார். சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, அவருக்கு ஏற்பட்ட கடுமையான முதுகு வலி அவரை ஓய்வு பெற நிர்ப்பந்தித்து இருக்கிறது. ( இப்படித் தீவிரமான உடல் உழைப்பைக் கொண்ட முறுக்குதல் மற்றும் நூற்தல் ஆகிய வேலைகளில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுத்தப்பட்டு வந்திருக்கின்றனர், அது அவர்களுக்கு முதுகு வலி, தோள்பட்டை வலி, மற்றும் பிற வலிகளுக்கு வழிவகுத்திருக்கிறது).

2009 - 2010 ஆண்டில் நடைபெற்ற இந்தியாவின் மூன்றாவது கைத்தறி கணக்கெடுப்பை, புது தில்லியைச் சேர்ந்த தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில், ஜவுளி அமைச்சகத்திற்காக நடத்தியது, அதில் கிராமப்புறத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டு கைத்தறி, ஒரு ஆண்டிற்கு சராசரியாக 38,260 ரூபாய் அல்லது மாதம் 3,188.33 ரூபாயை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறது என்று கண்டறிந்து இருக்கிறது. 1995 ஆம் ஆண்டில் இந்தியாவில் 34.71 லட்சம் நெசவாளர்கள் இருந்திருக்கின்றனர், இப்போது, 2010 ஆம் ஆண்டு கணக்கின்படி அந்த எண்ணிக்கை 29.09 லட்சமாக குறைந்து இருக்கிறது, என்று இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

PHOTO • Sanket Jain

மறைந்து வரும் இந்த செயல்முறையில் எஞ்சி இருப்பவை. மேல் இடது: பாலு பரீத்தின் பட்டறையில் இருக்கும் ஒரு பழைய மரச் நூற்பு இயந்திரம். இவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் நூற்புகளால் மாற்றப்பட்டுவிட்டன, அதிலேயே ஊடு இழைக்கான நூல் நூற்கப்படுகிறது. மேல் வலது: கைத்தறியின் பாவு நூல் செலுத்தி வழியாகச் செல்லும் ஊடு நூல் இழை. கீழ் இடது: பாலுவின் தறிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள சில கை - நெசவு பிர்ன்கள். கீழ் வலது: ஊடு இழையை ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மரக் கட்டைகள்.

அவர்களில் ரெண்டலின் நான்காவது நெசவாளர், 76 வயதாகும் பாலு பரீத். அவர் தனது கிராமத்தில் ஒரு காலத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த, ஒரு கைத்தறி தொழிற்சாலையில் - பல தறிகளைக் கொண்ட பட்டறையில், தொழிலாளியாக வேலை செய்யத் துவங்கினார். கைத்தறியை இயக்குவதில் தான் பயிற்சி பெற்ற பிறகு, 1962 ஆம் ஆண்டில், பாலு நெசவாளராக வேலை செய்யத் துவங்கினார். "நான்கு வருடங்களுக்கு, நான் நூலை நூற்கும் மற்றும் முறுக்கும் பணியில் தான் ஈடுபட்டேன். மெதுவாக, நான் கைத்தறியை பயன்படுத்தத் துவங்கினேன், மேலும் நெசவு செய்வது எப்படி என்பதை அப்படித் தான் கற்றுக் கொண்டேன்", என்று அவர் கூறுகிறார். 300 பிர்ன்களில் நூலை முறுக்கிய பிறகு, எங்களுக்கு ஒரு ரூபாய் கொடுப்பார்கள் (1950 களின் பிற்பகுதியில்)", என்று அவர் சிரித்துக் கொண்டே கூறுகிறார். இந்த வேலையைச் செய்வதற்கு அவருக்கு நான்கு நாட்கள் பிடித்திருக்கிறது.

1960 ஆம் ஆண்டு, பாலு ரெண்டலில் உள்ள ஒரு நெசவாளர் இடமிருந்து ஒரு பழைய கைத்தறியை 1,000 ரூபாய்க்கு வாங்கினார். "நான் இன்றும் அதே தறியைத் தான் பயன்படுத்துகிறேன்", என்று அவர் கூறுகிறார். "வெறுமனே இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் நான் வேலை செய்கிறேன்", என்று அவர் கூறுகிறார். தனது 60 களின் முற்பகுதியில் இருக்கும், பாலுவின் மனைவியான விமல், ஒரு இல்லத்தரசி, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வருமானத்திற்காக அவர் துணிகளை சலவை செய்து கொடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். 40 களின் பிற்பகுதியில் இருக்கும் அவர்களின் மகன் குமார், துணிகளை தேய்த்துக் கொடுக்கும் வேலைச் செய்து வருகிறார்.

சிராஜ் மற்றும் மைமூனாவின் மூத்த மகனான, 43 வயதாகும் சர்தார், கோல்ஹாபூர் மாவட்டத்தின் ஹுபாரி நகரில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் தொழிலாளராகப் பணியாற்றி வருகிறார், மேலும் அவர்களது இளைய மகனான, 41 வயதாகும், சத்தார், ரெண்டலில் தொழிலதிபராக இருக்கிறார். அவர்களது மகளான, 41 வயதாகும், பாபிஜானுக்கு திருமணம் முடிந்துவிட்டது மேலும் அவர் ஒரு இல்லத்தரசியாக இருக்கிறார். "கைத்தறித் துணிகளுக்கு சந்தையை இல்லை. எனவே, இந்தக் கலையை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தோம்", என்று கூறுகிறார் சத்தார்.

பாபாலாலின் குடும்பமும் நெசவுத் தொழிலை தவிர வேறு வேலையைத் தான் நாடியுள்ளது. அவரது மூத்த மகனான, 41 வயதாகும் முனீர், ரெண்டலில் ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது இரண்டாவது மகனான, 39 வயதாகும் ஜமீர், விவசாயக் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது இளைய மகனான, 36 வயதாகும் சமீர், அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கறிக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். பாபாலால் மட்டுமே இப்போது கைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

கர்நாடகாவில் (எங்களது எல்லைக்கு சற்று அருகில் இருக்கும்) இன்றும் ஆயிரக்கணக்கான கைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா அரசாங்கத்தால் மட்டும் கைத்தறி தொழிலை ஏன் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியவில்லை?", என்று பாபாலால் கொதிக்கிறார். கைத்தறி கணக்கெடுப்பில் கர்நாடகாவில் 34,606 கைத்தறிகள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன என்றும், அதே வேளையில், 2009 - 10 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 3,257 தறிகளே செயல்பட்டுக் கொண்டு இருந்தன என்றும் தெரியவந்துள்ளது. இதில் ரெண்டலில் எஞ்சி இருப்பது நாங்கள் நால்வர் மட்டும் தான். "நாங்கள் நால்வரும் இறந்த பிறகு, எங்களோடு சேர்ந்து இந்தத் தொழிலும் இறந்துவிடும்", என்று பாபாலால் மோமின் கூறிவிட்டு, தனது தறிக்குத் திரும்பிச் செல்கிறார்.

PHOTO • Sanket Jain

ரெண்டல் கிராமத்தில் அழிந்து வரும் தொழிலான கைத்தறித் தொழில், மைமூனா மோமின் தன் கையினால் இந்த சர்கா போன்ற நூற்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு பிர்னில் நூலை நூற்கிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

பணியில் இருக்கும் பாபாலால் மோமின்: அறுந்த ஊடு இழை நூலினைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டு இருக்கிறார் (கைத்தறியில் ஊடு இழை நூல் அடிக்கடி அறுந்துவிடும்) மேலும் ஒரு ஊடு இழை நூலினை மிக கவனமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (வலது).

PHOTO • Sanket Jain

ரெண்டலின் நெசவாளர்கள் தங்களின் மிகவும் திறமையான வேலைக்குக் கிடைக்கும் குறைந்த ஊதியத்தைப் பற்றி பேசும் போது, 'இப்போது நான்கு நெசவாளர்கள் மட்டும் சேர்ந்து கொண்டு எப்படிப் போராடுவது?', என்று பாபாலால் கேட்கிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

பாலு பரீத் ஊடு இழை நூலினை ஆய்வு செய்கிறார் - தொடர்ந்து கண்காணித்துப் பரிசோதிக்கவில்லை என்றால் துணியின் தரம் குறைந்துவிடும் என்று கூறுகிறார்.

PHOTO • Sanket Jain

பாலு தான் தனது குடும்பத்தில் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொண்ட முதல் நபர் - மேலும் அவர் இப்போது ரெண்டல் கிராமத்தில் கடைசியாக எஞ்சி இருக்கும் நான்கு நெசவாளர்களுள் ஒருவராக இருக்கிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இந்த சர்கா போன்ற இயந்திரம் (இடது) இப்போது அரிதாகவே பயன்படுத்தப் படுகிறது மற்றும் ரெண்டலில் நூற்றாண்டு பழமையான நெசவாளர்களின் இந்ந மரச் சட்டங்கள் மற்றும் பிற உபகரணங்கள் (வலது) இப்போது பயன்படுத்தப்படாமல் தூசி படிந்து கிடக்கிறது மேலும் அது அவ்வூரில் கைத்தறித் தொழில் செழித்து விளங்கிய காலத்தைப் பற்றி பறைசாற்றுகிறது.

தமிழில்: சோனியா போஸ்

Sanket Jain

ସାଙ୍କେତ ଜୈନ ମହାରାଷ୍ଟ୍ରର କୋହ୍ଲାପୁରରେ ଅବସ୍ଥାପିତ ଜଣେ ନିରପେକ୍ଷ ସାମ୍ବାଦିକ । ସେ ୨୦୨୨ର ଜଣେ ବରିଷ୍ଠ ପରୀ ସଦସ୍ୟ ଏବଂ ୨୦୧୯ର ଜଣେ ପରୀ ସଦସ୍ୟ ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Sanket Jain
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Soniya Bose