“எங்கள் முன்னோர்களின் ஆன்மாக்கள் இங்கு வசிக்கின்றன,” என்கிறார் மோஞ்சித் ரிசாங், சமையலறையின் நடுவே ஒரு கனமான மண் தளத்தை சுட்டிக் காட்டி. கூரையும் சுவர்களும் தரையும் அங்கு மூங்கிலால் செய்யப்பட்டிருந்தன.
வெளிறிய செவ்வக வடிவம் ஒரு அடி உயரம் இருந்தது. அதன் மேல் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்குதான் உணவு சமைக்கப்படும். ”மேரோம் என அதற்கு பெயர். எங்களின் வழிபாட்டு அரங்கம் அதுதான். மைசிங் சமூகத்தில் முக்கியமான விஷயம் அது,” என்கிறார் அவர்.
மோஞ்சித் மற்றும் அவரது மனைவி நாயன்மோனி ரிசாங் ஆகியோர் மைசிங் வகை உணவுகள் கொண்ட விருந்தை இன்று இரவு அளிக்கின்றனர். இருவரும் மைசிங் (அசாமின் பட்டியல் பழங்குடி) சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் சேர்ந்து அசாமின் மஜுலி ஆற்றுத்தீவின் டவுனான கராமுரிலுள்ள வீட்டில் ரிசாங் கிச்சன் உணவகத்தை நடத்துகின்றனர்.
பிரம்மபுத்திராவின் 352 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் மஜுலி, இந்தியாவின் பெரும் ஆற்றுத் தீவாகும். முடிவிலா பசுமையான நெல்வயல்களும் சிறு ஏரிகளும் காட்டு மூங்கில் மற்றும் புதர்களும் நிறைந்த பரப்பை கொண்ட தீவு அது. கடும் மழைகளையும் வெள்ளத்தையும் தாங்கிக் கொள்ள வீடுகள் கழிகள் மீது அமைக்கப்பட்ட தளத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. நாரை, மீன்கொத்தி மற்றும் தாழைக் கோழி போன்ற புலம்பெயர் பறவைகளுக்கும் அத்தீவு பெயர் பெற்றது. வருடந்தோறும் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாவாசிகளை இந்த அழகான தீவு ஈர்ப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது.
















