தாம்தாரி மாவட்டம் நாக்ரி தாலுகாவில் சாலையின் ஓரத்தில், 10 பேர் கொண்ட ஒரு குழு ஏதோ செய்துகொண்டிருந்தது. அங்கிருந்து வந்த சலசலப்பை அடுத்து, நான் நின்று, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக நான், அவர்களை நோக்கி சென்றேன்.
அங்குள்ள உள்ளூர் அரசு மருத்துவமனையின் மேற்கூரையில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து தேனைப்பிரித்தெடுத்து அவற்றை அங்கு சில இளைஞர்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். அம்மருத்துவமனை நிர்வாகத்தினர் அந்த தேன்கூட்டை அகற்றித்தருமாறு அவர்களிடம் கேட்டிருந்தார்கள்.
நான் அவர்களிடம் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்டேன். “மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா“ என்று ஆதாரத்துடன் சைபால் கூறினார். நான் கொல்கத்தா நகரில் இருந்தா என்று மீண்டும் கேட்டேன்? “உங்களுக்கு சுந்தர்பன்ஸ் தெரியுமா? என்று அவர் என்னிடம் கேட்டார். தெரியும் என்று நான் கூறினேன். இங்கு தேன் சேகரித்துவிட்டு அவர்களால் சுந்தர்பன்சுக்கு திரும்பி செல்ல முடியுமா என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“தேன் சேகரிப்பது எங்கள் தொழில் கிடையாது. நாங்கள் வீடுகளுக்கு வர்ணம் பூசுபவர்கள். யாரேனும் கேட்டால் இதுபோன்ற வேலைகளை அவர்களுக்காக செய்துகொடுப்போம். எங்கள் கிராமத்தில் தேனீ வளர்ப்பவர்களாக எங்களுக்கு தேனை அதன் கூட்டிலிருந்து எவ்வாறு பிரித்து எடுக்க வேண்டும் என்பது தெரியும். இது எங்கள் பாரம்பரிய திறமை. எங்கள் தாத்தா மற்றும் அவரின் தாத்தாவும் இதை செய்துள்ளார்கள்“ என்று அவர் கூறுகிறார்.
பறந்து வந்து ரீங்காரமிடும் தேனீக்களை எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்கு தெரியும் என்று சைபால் என்னிடம் கூறினார். வைக்கோலை எடுத்து பந்தங்கள் செய்து, அதில் தீயிட்டு, தேன்கூட்டில் உள்ள தேனீக்களை சூடுகாட்டி விரட்ட வேண்டும். “நாங்கள் ராணி தேனீயை புகை மூட்டத்தின் உதவியால் பிடித்துவிடுவோம்“ என்று அவர் கூறுகிறார். நாங்கள் தேனீக்களை கொன்றுவிடுவோம் அல்லது எரித்துவிடுவோம். ராணி தேனீயை பிடித்த பின்னர், அவற்றை பையில் வைத்துவிடுவோம். ராணி தேனீ பிடிபட்ட பின்னர், மற்ற தேனீக்கள் நம்மை தொந்தரவு செய்யாது. தேனீக்கள் பறந்து சென்றுவிடும், பின்னர் நாங்கள் தேனடையை கத்தரித்து தேனை பிரித்து எடுத்துவிடுவோம். “பின்னர் நாங்கள் ராணி தேனியை காடுகளில் பறக்கவிட்டு விடுவோம். இதன் மூலம் அவை தனது அடுத்த கூட்டை உருவாக்கும்“ என்று அவர் நம்மிடம் தேனெடுக்கும் விதத்தை விளக்குகிறார்.
நக்ரியில் சாலையோரத்தில், அவர்கள் கிலோ ரூ.300க்கு தேனை விற்கிறார்கள். (தேனில் ஊறிய தேன் கூட்டையும் விற்கிறார்கள்) அவர்களுக்கு மருத்துவமனை அதிகாரிகளின் கட்டணமாக 25 கிலோ தேன் கிடைத்தது. அவர்கள் தேன் கூட்டின் மெழுகையும் கிலோ ரூ.400க்கு விற்கிறார்கள். சட்டிஸ்கரில், காத்வா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மெழுகை பயன்படுத்தி கலை பொருட்கள் செய்கிறார்கள்.
இதுபோல் எத்தனை முறை இதற்கு முன் தேன் எடுத்திருக்கிறீர்கள் என்று ரஞ்சித் மண்டலிடம் நான் கேட்டபோது, “ஜக்தல்பூர், பிஜாப்பூர், தந்தேவாடா, சிக்கிம், ஜார்கண்ட போன்ற பல்வேறு இடங்களில் இதுவரை நான் 300க்கும் மேற்பட்ட முறை தேன்கூட்டிலிருந்து தேன் எடுத்திருக்கிறேன் என்று அவர் கூறினார். அந்த குழுவிலே அவர்தான் இளைஞர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், வறட்சி குறித்து செய்தி சேகரிக்க சென்றபோது, நான் தாம்தாரி மாவட்டத்தில் உள்ள இதே தாலுகாவில் ஜபாரா கிராமத்தின் அருகே உள்ள காடுகள் வழியாக பயணம் செய்திருக்கிறேன். அங்கு நான் அஞ்சுரா ராம் சூரியை சந்தித்தேன். அவர் கம்மார் என்னும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். அவர் காடுகளிலிருந்து பெறப்படும் பொருட்களை விற்று தன் வாழ்கையை வாழ்ந்து வருபவர். “காட்டில் வறட்சி ஏற்படும்போது, தேனீக்கள் அந்த காட்டில் இருந்து சென்றுவிடும்“ என்று அவர் கூறினார். மக்களை வெளியேற வேண்டி வற்புறுத்தினால், தேனீக்களும் பசுமையான இடங்களை தேடி வெளியேறிவிடும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
தமிழில்: பிரியதர்சினி. R.