நான் பிரிக்கப்படாத காலஹந்தி மாவட்டத்தில் பிறந்தேன். பஞ்சம், பசியால் நேரும் இறப்புகளாலும் துயரத்தாலும் புலம்பெயர்வது போன்றவை இங்கு மக்களின் வாழ்க்கையில் ஒன்றாக கலந்துள்ளது. சிறுவனாகவும் வளர்ந்த பிண் ஒரு ஊடகவியலாளனாகவும் இதுபோன்ற சம்பவங்களை தெளிவாக பார்த்துள்ளதோடு இதுகுறித்து செய்தியும் வெளியிட்டுள்ளேன். ஆகையால், இந்த மக்கள் ஏன் புலம்பெயர்கிறார்கள், யாரெல்லாம் புலம்பெயர்கிறார்கள், எந்த காரணங்களால் புலம்பெயர்கிறார்கள் என்ற புரிதல் எனக்குள்ளது. இவர்கள் தங்களின் உடல் வலிமையை விட அதிகமாக வேலை செய்கிறார்கள்.
அரசாங்க உதவியை அதிகமாக நம்பியுள்ளவர்கள் கைவிடப்பட்டுள்ளது தற்போது ‘புதிய இயல்பாக’ மாறியுள்ளது. உணவு, தண்ணீர், போக்குவரத்து எதுவுமில்லாமல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடக்க தள்ளப்பட்டுள்ளார்கள், அதுவும் காலில் செருப்பு இல்லாமல்.
இது எனக்கு கடும் வேதனையை தருகிறது. ஏனென்றால் இங்குள்ள மக்களிடம் எனக்கு உணர்வுரீதியான நெருக்கம் உள்ளது, நானும் அவர்களில் ஒருவனே. என்னைப் பொருத்தவரை அவர்கள் என்னுடைய மக்கள். இதே மக்கள், இதே சமூகம் மற்றுமொரு பேரிடியை சந்திப்பதை பார்த்தும் எந்த உதவியும் செய்ய முடியாமல் தொந்தரவுக்கு உள்ளாகிறேன். இதுவே என்னை கவிதை – நான் கவிஞன் அல்ல - எழுத தூண்டியது
நான் கவிஞன் அல்ல
நான் ஒரு புகைப்படக் கலைஞன்
தலைப்பாகையும் கழுத்தில் சலங்கை
மாலையும் அணிந்திருக்கும் சிறுவர்களை
நான் புகைப்படம் எடுத்தேன்
இதே சாலையில்
மகிழ்ச்சி துள்ளலோடு சைக்கிளில்
பறந்த சிறுவர்களை நான் பார்த்துள்ளேன்
இப்போதோ அவர்கள் வேகமாக வீட்டிற்கு நடக்கிறார்கள்.
வயிற்றில் நெருப்பு
அவர்கள் காலடியில் நெருப்பு
அவர்கள் கண்களில் நெருப்பு
தங்கள் கால்களை பதம் பார்க்கும்
நெருப்பு தணலில் அவர்கள் நடந்து செல்கிறார்கள்.
தங்கள் தலையில் பூச்சூடிய
சிறுமிகளை நான் புகைப்படம் எடுத்துள்ளேன்
அவர்களின் கண்கள் நீரைப் போல் புன்னகைக்கிறது
என் மகளுடையது போல்
அவர்களின் கண்களும் உள்ளது
அதே சிறுமிகள்
இப்போது தண்ணீருக்காக அழுகிறார்கள்
அவர்களின் சிரிப்புகள்
கண்ணீரில் மூழ்குகின்றன
என் வீட்டிற்கு அருகில்
சாலையோரத்தில் யார் இறக்கிறார்கள்?
ஜாம்லா-வா?
நான் பார்த்தது ஜாம்லா தானா
வெறும் காலில்
மிளகாய் வயல்களில் துள்ளிக் குதித்து
எண்களைப் போல் மிளகாயை
பறித்து எண்ணியவளா?
பசியால் வாடும் இந்த குழந்தை யாருடையது?
இந்த சாலையோரத்தில் உருகி, வாடுவது
யாருடைய உடல்?
நான் பெண்களை புகைப்படம் எடுக்கிறேன்
இளைஞர்களை, வயதானவரை
டோங்கிரியா கோந்த் பெண்ணை
பஞ்சாரா பெண்ணை
தலையில் பித்தளை பாணைகளோடு
நடணமாடும் பெண்கள்
சந்தோஷத்தில் துள்ளி
நடணமாடும் பெண்கள்
இவர்கள் அந்தப் பெண்கள் போல் இல்லை
அவர்களின் தோள்கள் இறங்கியுள்ளன
சுமைகளை தூக்கியதால்
இல்லை, இல்லவே இல்லை
தலையில் விறகுக் கட்டையோடு
கம்பீரமாக நெடுஞ்சாலையில் நடந்து செல்லும்
கோந்த் பெண்களா இவர்கள்?
இது அரைகுறை உயிரோடு, பசியால் வாடும் பெண்கள்
மெலிந்த குழந்தை ஒன்று அவளுடைய இடுப்பிலும்
மற்றொன்று எந்த நம்பிக்கையும் அற்று அவளுக்குள்ளும் இருக்கிறது
ஆமாம், எனக்கு தெரியும்
இவர்கள் என் தாய், தங்கை போல் இருக்கிறார்கள்
ஆனால் இவர்கள் சத்து குறைவான, சுரண்டப்பட்ட பெண்கள்,
இந்தப் பெண்கள் இறப்பிற்காக காத்திருக்கிறார்கள்
இவர்கள் அந்தப் பெண்கள் போல் இல்லை
அவர்கள் போல் இருந்தாலும்
நான் புகைப்படம் எடுத்தது
அவர்கள் இல்லை
நான் ஆண்களை புகைப்படம் எடுத்துள்ளேன்
துணிச்சலான ஆண்களை
திங்கியாவின் மீனவரை, தொழிலாளரை
பெரிய நிறுவனங்களை துரத்தக்கூடிய
அவரின் பாடல்களை நான் கேட்டுள்ளேன்
இப்போது அழுவது அவர் இல்லை தானே?
இந்த இளைஞனை எனக்கு தெரியுமா
அந்த வயதானவரை?
மைல் கணக்காக நடந்து
தங்களை துயரம் துரத்துவதையும் மறுத்து
பெருகும் தனிமையை மீறி
இருளிலிருந்து தப்பிக்க
யார் இவ்வுளவு தொலைவு நடப்பார்கள்?
பொங்கி எழும் அழுகையை எதிர்க்க
யார் இவ்வுளவு கடுமையாக நடப்பார்கள்?
இந்த ஆண்கள் எனக்கு உறவினர்களா?
தேகு-வா இது
இறுதியில் செங்கல் சூழையிலிருந்து தப்பித்து
வீட்டிற்குச் செல்கிறானா?
நான் அவர்களை புகைப்படம் எடுத்தேனா?
நான் அவர்களை பாடுமாறு கூறினேனா?
இல்லை, நான் கவிஞன் அல்ல
என்னால் பாடல் எழுத முடியாது
நான் புகைப்படக் கலைஞன்
ஆனால் நான் புகைப்படம் எடுத்தது
இவர்கள் இல்லை
இவர்கள் தானா?
கவிதையை செப்பனிடுவதற்கு ஆலோசனை கூறிய பிரதிஷ்டா பாண்டியாவிற்கு கட்டுரையாசிரியர் நன்றி கூறிக்கொள்கிறார்
ஆடியோ: சுதன்வா தேஷ்பாண்டே, ஜன நாட்டிய மன்ச்-ல் நடிகராகவும் இயக்குநராகவும் இருப்பதோடு லெஃப்ட்வேர்ட் புக்ஸில் எடிட்டராகவும் இருக்கிறார்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா