விஜயவாடா ரயில்வே சந்திப்பில் நடைமேடை எண் 10ல்,ஏறத்தாழ 10 தொழிலாளர்கள் பெங்களுருவில் இருந்து பாட்னா செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்காகக் காத்திருக்கின்றனர். ஆந்திரா பிரதேச மாநிலத்தில் அமராவதி பகுதியில் புதிய தலைநகர் உருவாக்கப் பணிகளில் பல மாதங்கள் ஈடுபட்ட பிறகு ,பீகாரில் உள்ள அவர்களது கிராமமான பெல்கச்ஹி பகுதிக்கு இந்த ரயிலில் பயணிக்கின்றனர்.
“கடந்த அரைமணி நேரத்தில் மூன்று முறை வெவ்வேறு ரயில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் எங்கள் பயணச்சீட்டை காண்பிக்கச் சொல்லி கூறினார்” என்றார் 24 வயதான முஹம்மது அலாம். அந்த நடைமேடையில் எண்ணற்ற பயணச்சீட்டு பரிசோதகர்கள் இருந்தனர். அதில் ஒருவர் கூறுகையில்,”இந்த ‘கூலிக்கார மக்கள்’ பயணச்சீட்டு பெறுவதில்லை, எனவே தான் சில ரயில்களில் அதிகளவிலான பயணச்சீட்டு பரிசோதகர்களை நிறுத்தியுள்ளோம். இவர்கள் செல்லக்கூடிய வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு செல்லக்கூடியவர்களிடம் கூடுதல் விசாரணையை மேற்கொள்கிறோம்” என்றார்.
இந்தத் தொழிலாளர்கள் அமராவதி நகரின் நீதித்துறை நகரம்(உயர்நீதிமன்ற வளாகம்),சட்டமன்ற உறுப்பினர் இல்லங்கள், ஆட்சிப்பணியாளர் குடியிருப்புகள் மற்றும் இதரக்குடியிருப்புகள் கட்டுவதற்காக லார்சென் & தௌர்போ(எல்&டி)மற்றும் ஷபூர்ஜி பல்லோஞ்சி கட்டுமான நிறுவனம் போன்ற பெரிய நிறுவங்களில் பணிபுரிந்தனர். தற்போது அந்தப் பணிகள் முடிந்து புர்னியா மாவட்டம் தகருவா பகுதியில் உள்ள அவர்களது கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.














